السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 22 November 2026

பொதுச் சொத்தை திருடாதீர்


 யார் என்ன நினைத்தாலும் சரியே.. இதை சொல்லியே ஆகவேண்டும்.


கைபர் போரில் மித்அம் என்பவர் அம்பு பாய்ந்து மரணித்தார்.


தோழர்கள், "அவரது வீரமரணத்திற்கு வாழ்த்துகள்!" என்றனர்.


நபி (ஸல்): "எப்படிக் கூறுகிறீர்கள்? அல்லாஹ் மீதாணை! கைபர் போர்ச் செல்வத்தில் இருந்து அவர் ஓர் அங்கியை திருடிவிட்டார். அதுவே அவருக்கு நரகின் நெருப்பாக மாறும்!" (புகாரி, முஸ்லிம்)


அவர் இறைப் பாதையில் போரிடப் புறப்பட்டவர். போர்ச் செல்வத்தில் இருந்து, ​​ஓர் அங்கியைத் திருடினார். அது பொதுச் சொத்தாக இருந்தும், அதை அவர் தனக்காக வைத்துக்கொண்டார். அதனால் மறுமையில் அதுவே நெருப்பாக மாற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்.


பொது நிதி, பொதுச் சொத்து முதலியவற்றை தனிப்பட்ட ஆதாயத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்பது இதிலிருந்து தெரிகிறது.


பொது நிதியைத் திருடியவர், முறைகேடாகப் பயன்படுத்தியவருக்கு, அவர் திருடியவையே மறுமையில் நெருப்பாக மாற்றப்பட்டு சூடு போடப்படும்.


சாலைகளும் வீதிகளும் பொதுச் சொத்து. கடையையோ வீட்டையோ விரிவுபடுத்துவதற்காக அதில் ஒரு மீட்டர் எடுத்துக்கொள்பவர், நரகில் வாட்டுவதற்காக இப்போதே ஒரு மீட்டர் நெருப்பை எடுத்துக்கொள்கிறார்!


பொதுப் பூங்காக்களில் உள்ள நாற்காலிகளும் இருக்கைகளும் பொதுச் சொத்து. அவற்றைத் திருடி, வீட்டிற்கு எடுத்துச் செல்பவர், நரகில் அமர்வதற்கான நெருப்பு நாற்காலியை இப்போதே எடுத்துச் செல்கிறார்.


பொது நூலகங்களில் உள்ள புத்தகங்கள், அரசுத் துறைகளில் உள்ள தளபாடங்கள், கணினிகள், காகிதங்கள், பேனாக்கள்.. இவற்றை வீட்டிற்கு எடுத்துச் செல்ல யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு செய்தால், நரகில் வேதனை தரும் ஒன்றை எடுத்துச் செல்கிறார்.


சிறிய விஷயங்களுக்கே இவ்வாறெனில் பெரிய விஷயங்களைப் பற்றி என்ன சொல்ல?!


தரமற்ற சாலைகள், பாலங்கள், அரசாங்க கட்டிடங்கள் கட்டும்போது திருடப்பட்ட பணத்தைப் பற்றி என்ன சொல்ல?


திருடுவது அரசாங்கத்தின் பணம்தானே என்று கருத வேண்டாம். மாறாக; அது அந்தச் சாலையில் நடக்கும், அந்தப் பாலத்தைக் கடக்கும், அந்தக் கட்டிடத்திற்குள் நுழையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியது. ஆகவே மக்கள் பணத்தையே அவர்கள் திருடுகிறார்கள்.


அல்லாஹ் இரக்கமுள்ளவன்தான், மன்னிப்பவன்தான்! ஆனால் மக்கள் உரிமைகள், பொது நிதிகள் என்று வரும்போது, நீதியுடன்தான் அவன் தீர்ப்பு வழங்குவான்.


உரிமைகளை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீட்டுக் கொடுப்பது அவனுடைய நீதியின் ஒரு பகுதியாகும்.


எனவே இந்த விஷயத்தில் உச்சபட்ச எச்சரிக்கை தேவை!


✍️ நூஹ் மஹ்ழரி