السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 14 November 2023

அப்துல் கபூர் ஹாஜி இலங்கை


 அல் ஹாஜ் 

என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள்


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பெடல்பியா நகரில் சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி நடைபெறும் காலப் பகுதி 1925ம் ஆணடு அனைவரும் என் டீ எச் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.


மிகவும் பெருமதிவாய்ந்த மாணிக்கக் கல் அவரிடம் இருக்கிறதாம் என்று பேசிக்கொண்டார்கள். ஆமாம் விலைமதிப்பற்ற நீலநிற மாணிக்கல்லை Blue sapphire ஏலத்தில் விற்பனை செய்து தாய்நாட்டுக்கு பெரும் அண்ண்ணியச் செலாவணியுடன் திரும்புகிறார். இலங்கையின் அன்றைய ஆளுனர் Sir வில்லியம் ஹென்றி மன்னிங் அவர்கள் you have done a valuable work என்று பாராட்டினார். 


என் டீ எச் அப்துல் கபூர் இலங்கை வரலாற்றில் கல்வித்துறைக்கு மகத்தான சேவையை நிறைவேற்றியவராவர். கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் விஞ்ஞானப் பிரிவை சொந்த செலவில் நிர்மாணித்தார். மேலதிகமாக பதினாறு வகுப்பறைகளை கட்டிக்கொடுத்தார். ஸாஹிரா கல்லூரியின் விடுதியை Hostel நிர்மாணிக்க அன்று ஒரு லட்சம் ரூபாவை வழங்கினார். ஸாஹிராக் கல்லூரிக்கு ஸதகதுல் ஜாரியாவாக தனது 14ஏக்கர் ரப்பர் தோட்டத்தை (Rubber estate) வக்ப் செய்தார். அவரது நினைவாகவே ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபம் அமைககப்பட்டுள்ளது.


ரத்மலானையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (கண் மற்றும் செவிப்புலன் அற்ற) பாடசாலையை தனது காணியில் சொந்தச் செலவில் நிர்மாணிதார். 


நாட்டில் புகழ்பூத்த ஆலிம்களை உருவாக்கிய மஹரகமை கபூரிய்யா அரபுக்கல்லூரியை நிர்மாணித்து தீன் பணி செய்தார். அல்குர்ஆனை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சின் தலைவர் சிராஜூல் மில்லத் அப்துல ஸமது ஸாஹிப் அவர்களின் தந்தை கண்ணியத்திற்குரிய அப்துல் ஹமீத் பாகவி ஹஸ்ரத் உட்பட பல அறிஞர்களை வரவழைத்து கபூரியாவை நெறிப்படுந்தினார்கள். கபூரியாவுக்கு என 40 ஏக்கர் விசாலமான ரப்பர் காணியை (Rubber estate) வக்ப் செய்தார்கள். 1971ம் ஆண்டு பிரதமர் ஸ்ரீமாவோ அம்மையாரின் காலத்தில் இந்தக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு தற்சமயம் பத்து ஏக்கர் காணி மாத்திரமே கபூரியாவுக்குச் சொந்தமாகக் காணப்படுகிறது. 


1905ம் ஆண்டில் தொப்பி அணி அணிந்து நீதிமன்றத்தில் வாதிட முடியாது என்று உத்தரவை எதிர்த்து 1905ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ம் திகதி்  ஜனாப் அஸீஸ் தலைமையிலான முஸ்லிம் தலைவர்கள் மீண்டும் கூடி தொப்பி அணிந்து கொண்டு நீதி மன்றத்தில் வழக்கில் வாதாடும் உரிமையை சட்டமாக்க போராடும் நோக்கில் "துருக்கித் தொப்பி போராட்டக் குழு" என்ற பெயரில் 21 பேர் கொண்ட போராட்டக் குழுவை ஆரம்பித்தார்கள். இதில் என் டி எச் அப்துல் கபூர் அவர்கள் ஓர் உறுப்பினராக இருந்து போராடினார் . இறுதியில் நீதிமன்றத்தில் தொப்பியுடன் வாதட முடியும் என்று அனுமதி கிடைத்தது. 


என் டி எச் அவர்கள் அனைத்தையும் செய்துவிட்டு இது அல்லாஹ்வுக்காக செய்தது என்று திருப்தியடைந்துகொள்வார்கள். 


என் டீ எச் அப்துல் கபூர் அவர்கள் பற்றி இலங்கையின் முன்னாள் பிரதமர் 

S W R D பண்டாரநாயக்க கூறிய வார்த்தைகள் இவை.


Though he is perhaps best remembered for the contribution to the cause of Muslim education and religion, his generosity was not limited to the Muslim community alone. I regard him as one of the outstanding Ceylonese gentlemen of his age and appreciate this opportunity of paying this tribute to him".

Sunday, 12 November 2023

அபூதர் ரலியல்லாஹ்

 

ஹிஜ்ரீ 32ஆம் ஆண்டு. 


உடல் நலமின்றி வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்தார் அபூதர். அருகில் அவருடைய மனைவி விம்மியவாறு அமர்ந்திருந்தார். 


“மரணம் அனைவருக்கும் வந்தே தீரும். பிறகு எதற்கு அழுகிறாய்?” என்றார் அபூதர். 


“தனிமையில் யாருமற்ற பாலைவனத்தில் மரணத்தைத் தழுவ இருக்கின்றீர்கள்; உங்களுடைய இறுதிச் சடங்கை நிறைவேற்ற எந்தத் துணையும் உதவியும் இல்லை; உங்களது பிரேதத்தை மூடும் அளவிற்குக்கூட நம்மிடம் துணியில்லை. நான் எப்படி அழாமல் இருக்க முடியும்?” 


அதைக் கேட்டு அபூதர் புன்னகைத்தார். “உறுதிகொள். நானும் தோழர்களும் அமர்ந்திருந்தபோது அல்லாஹ்வின் தூதர் எங்களிடம் ‘உங்களுள் ஒருவர் பாலையில் தனிமையில் மரணமடைவார். அவரது இறுதிச் சடங்கு இறை நம்பிக்கையாளர்களின் குழு ஒன்றினால் நடத்தப்படும்’ என்று கூறியதை நான் செவியுற்றேன். அன்று அங்கு என்னுடன் அமர்ந்திருந்த அனைவரும் நகரிலோ, பெரும்பாலான மக்கள் வசிக்கும் பகுதியிலோ மரணமடைந்துவிட்டார்கள், என்னைத் தவிர. இதோ இங்கு நான் அரவமற்ற பாலையில். அல்லாஹ்வின்மீது ஆணையாக! நான் பொய் உரைத்ததே இல்லை. சென்று பாதையைக் கவனி. அத்தகைய இறை நம்பிக்கையாளர் குழு ஒன்று நிச்சயம் வரும்” 


(முஸ்னது அஹ்மத் 21373). 


நபியவர்களின் முன்னறிவிப்பை எவ்விதச் சந்தேகமும் இன்றி வெகு நிச்சயமாக நம்பும் மனம் அமைந்திருந்தது சரி. ஆனால் அந்த மரணத் தறுவாயிலும் அத்தகைய கடின சூழலிலும் தமக்கு அதைப் பொருத்தி உவகை கொள்வதற்கு எத்தகைய ஈமானிய உறுதி இருந்திருக்க வேண்டும்? 


“எத்தனையோ பாதைகள் கிடக்கின்றன. எதில் என்று நான் சென்று காத்திருப்பேன்?” 


அதெல்லாம் தெரியாது. “போ! போய்ப் பார்” என்று மட்டும் வற்புறுத்தினார் அபூதர். 


சிறு மலை முகட்டில் ஏறி நின்று பாதைகள் அனைத்திலும் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தார் உம்முதர். அங்குச் சிறிது நேரம் காத்திருந்து பார்ப்பது, வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் கிடக்கும் கணவரை கவனிப்பதற்காக வீட்டிற்கு ஓடி வருவது என்று அவருக்குக் கடினமான சோதனை. 


தம் மனைவிக்கும் அடிமைக்கும் அபூதர் கட்டளைகள் இட்டார். “நான் இறந்ததும் என்னைக் கழுவுங்கள், துணியால் சுற்றுங்கள், சாலையின் ஓரத்திற்குத் தூக்கிச்சென்று கிடத்துங்கள். கடந்து செல்லும் பயணிகளிடம் ‘இவர் அபூதர்’ என்று தெரிவியுங்கள். அவர்கள் என்னை நல்லடக்கம் புரிவார்கள்.” 


அபூதர்ரின் உயிர் பிரிந்தது. அவரைக் கழுவித் துணியால் சுற்றி மூடி, சாலையின் ஓரத்தில் கிடத்திவிட்டு யாரேனும் வருகிறார்களா என்று கன்னத்தில் கைவைத்து அமர்ந்து, கண்ணீருடன் காத்திருந்தார்கள். சற்று நேரம் கழித்துப் பயணிகளின் கூட்டம் ஒன்று எகிப்திய கழுகுகளைப்போல் தூரத்தில் ஒட்டகங்களில் வருவது தெரிந்தது. 


அந்தக் குழுவினர் வெகுதொலைவில் யாரோ சைகை புரிந்து தங்களது பயணக் குழுவின் கவனத்தைக் கவர முயல்வதைக் கவனித்தார்கள். யாருக்கோ அவசர உதவி தேவை என்பது புரிந்து அங்கு விரைந்தது குழு. ஒட்டகச் சவுக்கு அவர்களது கழுத்தில் தொங்க விரைந்து நெருங்கியவர்கள் 


“அல்லாஹ்வின் பெண் அடிமையே! என்ன விஷயம்?” என்று விசாரிக்க, 


“என் கணவர். இறந்துவிட்டார். நீங்கள் வருவீர்கள். அவரை நல்லடக்கம் செய்ய உதவி புரிவீர்கள் என்று கூறினார். தயவுசெய்து உதவுங்கள்” என்றார் அபூதர்ரின் மனைவி. 


“யார் அவர்?” 


“அபூதர்.” 


“அல்லாஹ்வின் தூதரின் தோழரா?” 


“ஆம்.” 


அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அந்தக் குழுவில் இருந்தார். விஷயத்தைக் கேட்டதும் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கேட்டிருக்கிறேன். ‘அல்லாஹ் அபூதர்ரின்மீது கருணை புரிவானாக. அவர் தனியாளாய் நடப்பார், தனியாளாய் இறப்பார், தனியாளாய் எழுப்பப்படுவார்’ என்று அன்றே அவர்கள் முன்னறிவித்தார்கள்”. 


வனாந்தரத்தில் தனிமையில் கிடந்த அபூதர் முஸ்லிம்களின் குழுவினால் சிறப்பாக நல்லடக்கம் செய்யப்பட்டார். எல்லாம் முடிந்து கிளம்பிச் செல்ல இருந்த குழுவை அபூதர்ரின் மகள் தடுத்தார். “என் தந்தை தங்களுக்கு ஸலாம் பகர்ந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு புரிந்த தங்களுக்கு ஓர் ஆட்டை அறுத்துச் சமைத்துத் தரச் சொல்லி எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். உணவு உண்டு செல்லுங்கள்.” அந்தக் குழுவுக்கு உணவு பரிமாறியது அபூதர்ரின் குடும்பம். 


வத்தான் பள்ளத்தாக்கிலிருந்து தனியாய்க் கிளம்பி வந்து, இஸ்லாத்தை ஏற்று, வரலாறு ஒன்றைப் படைத்து, தனியாளாய் நடந்து, தனியாளாய் இறந்து போனார் அபூதர் அல்கிஃபாரி, 


ரலியல்லாஹு அன்ஹு.

இஸ்லாமிய உச்சி மாநாடு


 இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையத்தின் உச்சி மாநாடு அரசியல் முக்கியத்துவமற்ற ஒரு கூடிக் கலைதல் மட்டுமா? 


காஸா இனப்படுகொலை மற்றும் இனச்சம்ஹாரம் குறித்து ஆராய்ந்து உடனடித் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஒன்றுகூடிய இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமையமும் அறபு லீக்கும் எந்த உருப்படியான தீர்மானமும் இல்லாமலேயே கலைந்து சென்றுள்ளமை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. காரணம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட அரசியல் ராஜதந்திர நோக்கம் கொண்ட நாடுகள் கூடி ஒரேவகைப்பட்ட தீர்மானத்தை அவை எடுக்க வாய்ப்பில்லை.


காஸா எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் படுகொலை 12 000 ஐ நெருங்குகின்றது. 35 நாட்களின் பின்னரே இந்நாடுகள் கூடியமை அவற்றின் இயலாமையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகின்றது. ஒரு சம்பிரதாயத்துக்கும் சடங்குக்குமே அவை ஒன்றுகூடின. ஸவூதி அறேபியாவே இப்போது அறபு லீக் ற்குத்தலைமை வகிக்கின்றது. அதை பயங்கரமான பொறியில் மாட்டி ஆட்டிப்படைக்கும் வொஷிங்டனும் வொஷிங்கடனின் உற்ற தோழன் இஸ்ரேலும் றியாதை வைத்தே காய் நகர்த்தி வரும் நிலையில் அறபு நாடுகளின் கூட்டமைப்போ இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்போ உச்சிமாநாட்டில் எதையும் சாதிக்கபபோவதில்லை.


ஒரு மாதத்திற்கு முன்னரே இது நடந்திருக்க வேண்டும். இஸ்ரேலும் அமெரிக்காவும் அதனை நடாத்தாமல் ரியாத் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. உண்மையில் இன்று தேவையானது உடனடி நடவடிக்கை. போரை அவசரமாக நிறுத்த வேண்டும். காஸாவுக்கான மனிதாபிமான கொரிடோரை விசாலப் படுத்த வேண்டும். நீண்ட காலத் தீர்வான 1967 எல்லையுடன் கூடிய சுதந்திர ஃபலஸ்தீன் பற்றிய பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட வேண்டும். இதை விடுத்து வெறும் கண்டன வார்த்தைகளோடு அனைத்தையும் சுருக்கிக் கொண்டார்கள் அவர்கள்.


இஸ்ரேலை வாழவைக்கும் சவூதி.  ஐக்கிய அரபு அமீரகம் ஜோர்தான் மற்றும் எகிப்து  என்பனவும் இங்கே உள்ளன.அவை எப்படி இஸ்ரேலுக்கு எதிராகத் தீர்மானம் எடுக்கும்? இஸ்ரேலுக்கு எதிராக சவூதி பெற்றோலியத்தை ஓர் ஆயுதமாகக் பயன்படுத்த மாட்டாது என்று மிகக்காட்டமாக தெரிவித்துள்ளார் முஹம்மத் பின் ஸல்மான். ஈரானிய ஜனாதிபதி இந்தப்பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் ஊடாகவே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் தொடர்ச்சியாக வினியோகிக்கப்படுவதால் அமெரிக்க தளங்களை அறபு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. இஸ்ரேலையும் அமெரிக்காவையும் துப்புவதா விழுங்குவதா என்ற திரிசங்கு நிலையிலுள்ள அராபிய மன்னர்கள் ஒருபோதும் இஸ்ரேலை எதிர்த்து எந்தத்தீர்மானதையும் எடுக்கப்போவதில்லை என்பதை இந்த உச்சிமாநாட்டில் உறுதி செய்துள்ளனர்.


முஸ்லிம் உம்மாவின் எதிர்பார்ப்பையும் அபிலாஷையையும் குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு தமது இருப்பை மட்டும் இலக்காகக் கொண்டு காய்நகர்த்தும் அரேபிய ஆட்சியாளர்கள் குறிப்பாக மேலே குறிப்பிட்ட நான்கு நாடுகளும் இஸ்ரேலைப்பகைப்பது தமது எஜமானரான அமெரிக்காவைப் பதைப்பதாகும் என்பதைத் தெளிவாக விளங்கி வைத்துள்ளன. ஆதலால் இவர்கள் கூடாமலேயே இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் இவர்கள் இஸ்ரேலில் கொண்டுள்ள தனிப்பட்ட செல்வாக்கைப்பயன்படுத்தியேனும் காஸா மக்கள் மீதான இனப்படுகொலையை ஆவது தடுத்து நிறுத்தியிருக்கலாம்.


எண்ணெய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துகின்றோம் என்று ஓர் அச்சுறுத்தலையேனும் விடுத்திருக்கலாம். அல்லது தமது எஜமானர்கள் அறியாவண்ணமேனும் பலஸ்தீனர்களுக்கு உதவியிருக்கலாம். எதுவுமே செய்யாமல் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பச்சை பச்சையாக ஆதரிக்கும் இந்த அதிகார வர்க்கத்தின் மனோபாவம் மிகவும் குரூரமானது. குமட்டலைத்தரக்கூடியது. கோபத்தைக் கொப்பளிக்க வைக்கக்கூடியது. நேர்மையான முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானத்தின் நூறில் ஒன்று கூட இவர்களுக்கு இல்லை என்பது மிகுந்த அவமானகரமான து. இழிவானது. 


இன்று தென்னாபிரிக்கா மிக தைரியமாகவும் வெளிப்படையாகவும் நெடன்யாஹூ என்ற போர்க்குற்றவாளியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உடனடியாக கைது வேண்டும் என்று கோரியுள்ளது.இப்படிக்கோருவதற்கு கூட ஒரு முஸ்லிம் நாட்டுத்தலைவருக்கு தில் இல்லை என்றால் இவர்கள் யார்? இவர்கள் இவ்வளவு கோழைகளாய் ஏன் இருக்கிறார்கள்? இவர்கள் யாருக்கு அஞ்சுகிறார்கள்? இவர்களை அமைதிப்படுத்தியுள்ள காரணி எது என்ற பல கேள்விகளை இது எழுப்புகின்றது. அர்தூகான் கூட அமைதியாக இருப்பதாகவே எனக்குத்தோன்றுகிறது.பல லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுடனான தமது ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ளது.


ஆனால் அருகிலுள்ள அறபு நாடுகள் இஸ்ரேலை இன்னும் விசுவாசமிக்க நண்பனாகவும் காதலனாகவுமே நடாத்துவதை என்னவென்று நாம் வர்ணிப்பது?. இந்தப்போர் எமது நட்பை பாதித்துவிடாது என்று இன்றைய தினம் ஐக்கிய அறபு அமீரகம் அறிவித்துள்ளது.அப்படியானால் எதற்கு உச்சி மாநாடு? காஸா மட்டும்தான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லை முழு அறபுலகமும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை இப்போதுதான் புரிந்து கொள்கிறேன் என்ற பலஸ்தீனரின் வார்த்தை எத்துணை உண்மை என்பதை மீளவும் ஒருமுறை அறபு களைக்கூத்தாடிகளின் காட்டுதர்பார் நிரூபித்துள்ளது.


வரலாறு கோழைகளையும் துரோகிகளையும் வாழவைத்த வரலாறில்லை. இந்தப்பாடத்தை நிச்சயம் ஒருநாள் இன்றுள்ள மீசை வைத்த அரேபிய பெட்டை மன்னர்களும் இராணுவ சர்வதிகாரிகளும் அறிந்தே ஆகுவார்கள்


Zain Rouff

Friday, 10 November 2023

கொழும்பு சாஹிரா கல்லூரி

 

கொழும்பு சாஹிரா கல்லூரி

 எந்த சூழ்நிலையில் எதற்காக அன்று உருவாக்கினார்கள் எமது முன்னோர்கள் என்பதை காணலாம் வாருங்கள்.


ஆமாம் 19 ஆம் நூற்றாண்டு காலம். அது . இலங்கை இந்தியாவை போர்த்துகீசியர்கள் ஒல்லாந்தர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து அவரவர் மதங்களை திணிப்பு செய்த காலம் அது. 


இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் நல்லூரில் டிசம்பர் 18 1822 ஆம் ஆண்டு ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் பிறந்தார். காலப்போக்கில் அவர்கள்.  சைவமும் தமிழும் என் இரண்டு கண்கள் அவை இரண்டும் ஒலி குன்றாமல் இறுதி வரை காத்து பயன் பெறச் செய்யும் நோக்கை தனது வாழ்நாளில் குறிக்கோளாக கொண்டு முதல் முதலில் வண்ணார் பண்ணை சைவ பிரகாச வித்தியா என்ற பாடசாலையை 1864 இல் ஆரம்பித்தார்.


இவரைத் தொடர்ந்து 1864 செப்டம்பர் 17 ஆம் திகதி கொழும்பில் பிறந்த அனகாரிக தர்மபாலா அவர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கை திருநாட்டில்  கிருஸ்தவ மதம் மேலோங்கி இருந்ததை கண்டு புத்த மத நெறிகளை பாதுகாக்க  பெளத்த தேசியத்தை நிலை நாட்ட  கொழும்பு ஆனந்தா கல்லூரியை உருவாக்கினார்.


இந்த சூழலில்  தமிழ் பேசும் முஸ்லிம்கள் தமிழ் சங்கங்கள் மூலம் நடக்கும் தமிழ் பாடசாலைகளிலும், சிங்கள மொழி பேசும் முஸ்லிம்கள் சிங்கள பாடசாலைகளும் கல்வி கற்கும் நிலை 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது.


 இந்த நிலையில் தமிழ் சங்கங்களில்  கட்டுண்டு கிடந்த முஸ்லிம்களின் கல்வியை மீட்டெடுக்க,

* ஓராபி பாஷா, 

* மு. கா. அறிஞர் சித்தி லெப்பை,  

* வாப்பிச்சி மரைக்கார், 

*  மாப்பிள்ளை லெப்பை ஆலிம்.

போன்றோர்கள் பல முயற்சிகளை செய்து கொண்டு இருக்கும் போது.


எகிப்து அல் அஸர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ,  அந்த பல்கலைக்கழகத்தின் எம் ஏ பட்டதாரியுமான ( சேக் அப்துல்லா பின் பாதிம்  அல் கொமனி )அவர்கள் மார்க்க நெறிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைக்க கேரளா  வந்தார்கள். பிறகு, இலங்கை வந்து இஸ்லாமிய மார்க்கத்தை மக்களுக்கு  எடுத்துரைத்து கொண்டு இருந்தார்கள்.


அப்போது, இவர்களின் மாணவராக இருந்த சேர் ராசிக் பரீட் அவர்களின் பாட்டனார்  பாபுஜி மரைக்கார் அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் கல்வி கலாச்சாரம் மற்றும்  தனித்துவம் என்பன பாதுகாக்க பட வேண்டும் என அறிவுரைகளையும், ஆலோசனைகளை எடுத்துரைக்க,


எல்லோரும் இணக்க பாட்டுக்கு வந்து  பாடசாலை அமைக்க இடம் தேடிய போது பாபுஜி மரைக்கார் மற்றும் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் போன்றவர்கள் 1840 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மருதானை ஜும்மா பள்ளிவாசல் அமைத்த  இடத்திற்கு அருகில் அமைக்கலாம் என ஆலோசனை முன் வைத்தார்கள். இன்றைய கொழும்பு கோட்டை எப்படி வியாபாரிகள் சந்தையாக இருக்கிறதோ! இதேபோல் தான் அன்று அரேபியர்களின் வியாபார சந்தையாக பிரசித்தி பெற்று விளங்கியது மருதானை.


இதன் பிரகாரம் 22 ஆகஸ்ட் மாதம் 1892 ஆம் ஆண்டு கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி உருவாக்கப்பட்டது. 


8000 மாணவர்கள் கற்கும் இட வசதிகளை கொண்ட சாஹீராவில் இன்று ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கற்பிப்பதால் சிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள்.


முன்னாள் அமைச்சர் ஏ எச் எம் பெளசி அவர்கள். மற்றும் பாக்கீர் மரைக்கார் அவர்கள் மற்றும் தமிழ் அறிஞர் கார்த்திக் கேசு சிவத்தம்பி மற்றும் தமிழ் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி ஆகியோர்கள்  இந்த கல்லூரியின் பழைய மாணவர்களாவார்கள்.


 மேலும், இந்த கல்லூரியானது, 

* இஸ்லாமிய சங்கம்.

* அறிவியல் சங்கம்.

* வர்த்தக சங்கம்.

* ஆங்கில இலக்கிய சங்கம்.

* சிங்கள இலக்கியச் சங்கம்.

* தமிழ் இலக்கிய சங்கம்.

* ஐக்கியநாடுகள் இளைஞர் சங்கம்.

* தகவல் தொழில்நுட்ப சங்கம்.

       போன்ற சங்கங்களின் வழி காட்டலின்  பிரகாரம் கொழும்பு மா நகரத்தில் வெற்றி நடை போடுகிறது.

FB Nadheem

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!





🔴நியூஸிலாந்தில்  500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

தமிழகத்தின் தொன்மைத்துறை முகமாம் நாகப்பட்டினத்திற்கும் நியூஸிலாந்துக்கும் என்ன உறவு? 

New Zeeland தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மணியில் தமிழ் எழுத்துகள்!!!

அதனை கைகளால் தொட்டுத் தூக்கிப் பார்க்க எமக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது அதுவும் கையுறை அணிந்து கொண்டு இந்த மணியின் வயது?-15ம் நூற்றுண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளார்கள்.

நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்குண்டு அக்கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கிய போது ஒரு மரத்தின் வேர்களுக்குள் சிக்குண்டிருந்த இந்த வெண்கலமணியைக் கண்டெடுத்த நியுஸிலாந்தின் ஆதிக்குடிகளான ‘மெளரி’ இனத்து மக்கள் இது என்னவென்று தெரியமால் உணவு தயாரிக்க இதனடியில் நெருப்பு மூட்டி உருளைக் கிழங்குகளை அவிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்களாம். 

நீண்ட காலத்தின் பின்னர் 1899ம் ஆண்டு இதனைக் கண்டெடுத்த  வரலாற்று ஆய்வாளர் திரு.William Colenso இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பதற்கு நடவடிக்கையை எடுத்துள்ளார். 

166mm உயரமும், 155mm   சுற்றளவும் கொண்ட இந்த மணியில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகள் எந்த மொழிக்குரியவை? எந்த நாடு எனக் கண்டுபிடிப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியில் இது தமிழ்மொழி என்பதுவும் அந்த நாளில் மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்பதுவும் தெரியவந்துள்ளது. 

இந்த மணியில் இப்போதும் தெளிவாகத் தெரியும் வகையில் பொறிக்கப்பட்டுள்ள வரி-
‘ முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி’ 

இஸ்லாமியராயினும் தம் தாய் மொழியாம் தமிழை தமது மொழி அடையாளமாய் மதிக்கும் ஒருவரது கப்பல் எனப்புரிந்தது. 

வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாளக் குறியீடாக தமிழ் எழுத்துகளைக் கண்ணுற்ற போது பெருமையால் நெஞ்சு நிமிர்ந்தது.

B.H.Abdul Hameed


 

Thursday, 9 November 2023

Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது


 Pension-ஓய்வூதியத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது ஜெர்மானியர்கள் அல்ல. மாறாக அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் தாம்.


ஒரு நாள் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான  தோல்சுருங்கிய ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள்.


உமர்(ரழி) அவர்கள் அவரிடம் சென்று நீங்கள் யார் என்று கேட்டார்கள்? 


அதற்கு அந்த வயதான மனிதர் சொன்னார், நான் வயதான ஒரு யூதகுடும்பத்தை சேர்ந்தவன்.  உங்களுக்கு வரி கட்டவும், மீதமுள்ளதை எனது குடும்பத்திற்குக் கொடுக்கவும் மக்களிடம் யாசகம் கேட்கிறேன் என்றார்.


உமர் (ரழி) அவர்கள் இரக்கப்பட்டு மனமுருகிச்

சொன்னார்கள், என்ன நீதி செலுத்துகிறோம் வயதானவர்களான உங்கள்மீது....?


நீங்கள் இளைஞராக இருந்தபோது உங்களிடம் வரியை வாங்கிக்கொள்கிறோம். வயதானபோது அப்படியே விட்டுவிடுகிறோமே...!? என்று சொல்லிவிட்டு

பின்னர் அந்த வயதான யூதரின் கையைப் பிடித்துக் கொண்டு தமது வீட்டிற்கு அழைத்துச் சென்று வேண்டுமளவு உணவளித்தார்கள்.


மேலும் அரசுக் கருவூலப்  (பைத்துல் மால்)  பொறுப்பாளரிடம் இவருக்கும், இவரைப் போன்ற வயோதிகர்களுக்கும் வரி வாங்கக் கூடாது என்றும் , மேலும் மாதம்தோறும் அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும்  குறிப்பிட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சட்டமியற்றி கட்டளை பிறப்பித்தார்கள் ...


அல்லாஹ் உமர் ரழி அவர்களை பொருந்திக்கொள்வானாக!


📚 கிதாப் அஹ்லு திம்மதில் இப்னு கய்யிம் ஜவ்ஸிய்யா


📚 கிதாபுல் அம்வால்- லிஅபீ அபீத் அல் காஸிம் இப்னு ஸலாம்..