சொர்க்கம் செல்பவர் யார்?
======================
புகாரி நபிமொழிகள்
யாரெல்லாம் சுவனம் செல்வார்கள் என்று அறிய புகாரி நபிமொழித்தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன். (சொர்க்கம் செல்ல எனக்கும் ஆசையிருக்காதா என்ன?!) முப்பது நபிமொழிகள் என் கவனத்தை ஈர்த்தன,
அவற்றில் சில எனக்கும் பொருந்தும்! இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள எண் குறிப்பிட்ட நபிமொழியின் எண்ணாகும்.
இதில் உங்களுக்கு எதெல்லாம் பொருந்துகிறது என்று நீங்களும் பார்த்துக்கொள்ளலாமே!
1. புனிதப்போர் செய்து இறந்தவர்கள் புகாரி, 36
2. தொழுகை, நோன்பு, ஜகாத் மூன்றையும் நிறைவேற்றியவர், 46
3. அல்லாஹ்வுக்கு இணை வைக்காமல் இருந்தவர், 129
4. ஒரு நாய் தாகத்தில் சேற்றை நக்கிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்த ஒருவர் தன் ஷூவில் நீர் நிரப்பி நாயின் வாயில் ஊற்றி தாகம் தீர்த்தார். அதனால் இறைவன் அவருக்கு சொர்க்கம் கொடுத்தான், 173 பெருமானார் (ஸல்) சொன்னதாக அபூஹுரைரா ரலி.
5. அல்லாஹ்வுடைய திருப்தியை விரும்பி பள்ளிவாசல் கட்டுபவருக்கு அதே மாதிரி இடத்தை அல்லாஹ் சொர்க்கத்தில் கட்டுவான், 450
6. யாரெல்லாம் இரண்டு குளிர்ந்த தொழுகைகளை (ஃபஜ்ர், அசர்) நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு சொர்க்கம், 574
7. ஃபஜ்ர், லுஹருக்குப் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுபவர்க்கு சொர்க்கத்தில் கண்ணியமான இடம், 662 (அப்ப மற்ற நேரங்களில் பள்ளிவாசலுக்குச் செல்லவேண்டியதில்லையா என்று கேட்கவோ நினைக்கவோ கூடாது. இது மினிமம் பாஸ் மார்க் என்று எடுத்துக்கொள்ளலாம்.)
8. குல்ஹுவல்லாஹு சூராவை விரும்புபவர்களுக்கு (அப்ப மற்ற சூராக்களுக்கு என்றும் யோசிக்கக்கூடாது. எல்லா சூராக்களுக்கும் உரிய பலன் உண்டு. இந்த நபிமொழி குல்ஹுவல்லாஹு சூரா பற்றியது), 774
9. லாயிலாஹ இல்லல்லாஹ் என்பது சுவனத்தின் சாவி, 1237
10. அல்லாஹ்வைத்தவிர வேறு எதையும் வணங்காதவர், 1237, 1238
11. பருவம் வருமுன் 3 குழந்தைகள் இறந்தால் பெற்றோருக்கு சுவனம், 1248 (குழந்தைகளை பாசத்துடன் வளர்க்க வேண்டும். எதிர்பாராத விதமாக அவர்கள் பருவம் வருமுன்னர் இறந்துவிட்டால் அவர்களைப் பாசமாக வளர்த்ததன் பொருட்டு அவர்களுக்கு அல்லாஹ் சுவனம் தருகிறான் என்று புரிந்துகொள்ளலாம்).
இரண்டு பெண் குழந்தைகளைப் பருவ வயதுவரை வளர்த்தவரும் நானும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று இரண்டு விரல்களைப் பெருமானார் நெருக்கிக்காட்டினார்கள் என்று முஸ்லிம் நபிமொழி கூறுகிறது. ஏனெனில் பருவ வயதுப் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்த சமுதாயம் அது.
12. பெருமானார் பற்றி சரியாக மண்ணறையில் பதில் சொன்னவருக்கு, 1338 (நிச்சயமாக எல்லா முஸ்லிமும் சரியாகத்தான் பதில் சொல்வார்கள் என்றே நம்புகிறேன்).
13. நன்மை செய்வது யாருக்கு எளிதாக உள்ளதோ அவன் அருள் பாலிக்கப்பட்டவன். தீமை செய்வது யாருக்கு எளிதோ அவன் சபிக்கப்பட்டவன். முன்னவருக்கு சுவனம், பின்னவருக்கு நரகம், 1362 (இந்த நபிமொழியில் முஸ்லிம், மூமின் போன்ற சொற்கள் இல்லை. எனவே இது மனிதகுலமனைத்துக்கும் பொருத்தமானது என்று எடுத்துக்கொள்ளலாம்).
14. தற்கொலை செய்பவருக்கு சுவனம் கிடையாது 1364
15. ஒரு ஜனாஸா பற்றி மக்கள் புகழ்ந்தால் இறந்தவருக்கு சுவனம், இகழ்ந்தால் நரகம், 1367, 2642 (ஏனெனில் நாம் எப்படிப்பட்டவராக வாழ்ந்தோம் என்று நம் சமுதாயத்தவருக்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்குத் தெரியும்தானே?!)
16. இறந்தவர் பற்றி இரண்டு பேர் நல்லவர் என்று சொன்னாலும் அவருக்கு சுவனம், 1368
17. பருவம் வருமுன் 3 குழந்தைகள் இறந்திருந்தால் பெற்றோருக்கு சுவனம்,1381 (அக்குழந்தைகள் இறந்தது காரணமல்ல. அவர்களை பாசத்துடன் வளர்த்ததுதான் காரணம்).
18. வாணிபத்தில் ஏழையை மன்னித்தவருக்கு சுவனம், 3451
19. அல்லாஹ்வுக்கு இணைவைக்காதவருக்கு சுவனம், 4497 (இது எல்லா முஸ்லிம்களுக்குமே பொருந்தும்).
20. அனாதையை ஆதரிப்பவர் பெருமானாரோடு நெருக்கமாக சுவனத்திலிருப்பார், 5304
21. லாயிலாஹ இல்லல்லாஹ் என்று நம்பி சொன்னவருக்கு சுவனம் உண்டு, அவர் முறையற்ற கலவியில் ஈடுபட்டிருந்தாலும் 5827 ( அவர் முறையற்ற கலவியில் ஈடுபட்டிருந்தாலுமா என்று அபூதர் ரலி கேட்டதற்கு, ஆமாம் என்று பெருமானார் பதில் சொன்னார்கள்).
22. உறவுகளை முறித்துக்கொள்பவர் சொர்க்கம் செல்லமாட்டார் (புகாரி, 5984)
23. அனாதைகளை கவனிப்பவர் சுவனத்தில் பெருமானாரோடு நெருக்கமாக இருப்பார், 6005
24. அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் இல்லாமல் நல்ல செயல்கள் மட்டும் ஒருவருக்கு சுவனம் தராது, 6467
25. பேச்சையும் மர்ம உறுப்புக்களையும் காப்பாற்றிக்கொள்பவருக்கு சுவனம் உறுதி, 644
26. இரண்டு தாடைகளுக்கு நடுவில் உள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு நடுவிலுள்ளதையும் காப்பாற்றிக்கொள்பவர்க்கு சுவனத்தை நான் உறுதி செய்கிறேன் என்றார்கள் பெருமானார் (6807)
27. சுவனத்திலுள்ள ஒரு மரத்தின் நிழலை நூறு ஆண்டுகளானாலும் தாண்டிக் கடந்து செல்ல முடியாது – அதாவது, இங்கே உள்ள மாதிரி சுவனம் இருக்காது. வித்தியாசமாக இருக்கும் என்று அர்த்தம் 6552
28. அஸ்மாவுல் ஹுஸ்னாவை ஓதுபவருக்கு சுவனம், 2736
29. அஸ்மாவுல் ஹுஸ்னாவை மனனம் செய்தவருக்கு சுவனம், 7392
30. அல்லாஹ்மீதும் தூதர் மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுது, ரமலானில் நோன்பு வைப்பவருக்கு சுவனம் தரவேண்டியது அல்லாஹ்வின் கடமையாகிறது 7423 =======