السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 21 March 2015

மோதிரத்தில் ‘அல்லாஹ்’ என்ற அரபு எழுத்து…

சுவீடனின் 1000 ஆண்டுக்கு முந்தைய மோதிரத்தில் ‘அல்லாஹ்’ அரபு எழுத்து
ண்டெடுக்கப்பட்டிருக்கும் 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய மோதிரம் ஒன்றின் மூலம் ஸ்கண்டினேவியர்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையில் பண்டைய காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
சுவீடன் நாட்டில் 9 ஆம் நூற்றாண்டு பெண் ஒருவரது கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மோதிரம் ஒன்றில் ‘அல்லாஹ்வுக்காக’ என்ற அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வைகிங் காலத்து வர்த்தக மையமாக இருந்த ஸ்டொக்ஹோமுக்கு மேற்காக 15.5 மைல் தொலைவில் இருக்கும் மிர்கா பகுதியில் 1872-1895 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே வர்ண கல் பதிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது.
பெண் ஒருவரது அலங்கரிக்கப்பட்ட பலகையாளான சவப்பெட்டி ஒன்றில் இந்த மோதிரம் இருந்துள்ளது. அந்த சவப்பெட்டியில் இருந்த உடல் முற்றிலும் மக்கிய நிலையில் காணப்பட்டதோடு கி.பி. 850 ஆம் ஆண்டளவிலேயே அந்த உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் என டிஸ்கவரி செய்தி குறிப்பிட்டுள்ளது. அரபு எழுத்துகள் கொண்ட வேறு மோதிரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் ஸ்கன்டினேவியா பகுதியில் இவ்வாறான ஒன்று கண்டுபிடிக்கப்படுவது இது முதல் முறையாகும்.
அரம்பத்தில் இது ஒரு செவ்வந்திக்கல் என்றே ஆய்வாளர்கள் நம்பி வந்தனர். ஆனால் அண்மையில் ஸ்கேன் சோதனை செய்து பார்த்தபோது அது ஒரு வண்ணக் கண்ணாடி என்பதைக் கண்டறிந்துள்ளனர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் அது ஒரு கவர்ச்சிகரமான பொருளாக இருந்துள்ளது. ஸ்கண்டினேவியர்களுக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கும் இடையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தொடர்பு இருப்பதாக பண்டைய நூல்கள் குறிப்பிட்டபோதும் அதற்கு ஆதாரமான ஒரே தொல்பொருள் சான்றாக இந்த மோதிரம் மாத்திரமே காணப்படுகிறது.