இலங்கைக்கு கி.பி. 1505ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகை முதல் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடையும் வரை, அதாவது ஏறத்தாள 443 வருடங்கள் மூன்று பலம்வாய்ந்த மேற்கத்தைய நாடுகளின் கலானித்துவத்தின் கீழ் இலங்கை இருந்தது. இலங்கையின் சுதந்திரப் போராட்டங்கள் பற்றி நோக்கும்போது போர்த்துக்கேயர் முதல் ஆங்கிலேயர் காலம் வரையில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும். இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகையினைத் தொடர்ந்து இலங்கைக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் முற்றாக பாதிப்படைந்தன. போர்த்துக்கேய காலனித்துவத்தின் போது முஸ்லிம்களின் மதரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டன. இலங்கையின் கரையோரப் பகுதிகளின் காணப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்களும், இஸ்லாமிய அடையாளச் சின்னங்களும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டன என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர், கோட்டே இராச்சியம் மூன்றாகப் பிரிந்தது. இது வரலாற்றில் 'விஜயபா கொள்ளய' என்று அறியப்படுகின்றது. கோட்டை இராச்சியத்துடன் நெருக்கமான தொடர்புகளை பேணிவந்த போர்த்துக்கேயரின் உத்தரவுக்கு அமைய கோட்டை இராச்சிய மன்னனால் அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இதுவே இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட முதலாவது நிகழ்வாகும். கோட்டை இராச்சியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு சீதாவக்கை இராச்சியத்தின் மன்னர் மாயாதுன்ன தனது இடங்களில் குடியேறுவதற்கு உதவிசெய்தார். மேலும், போர்த்துக்கேய காலனித்துவவாதிகளுடன் யுத்தம் செய்வதற்காக கேரளாவின் ஸமோரின் இராச்சியத்தின் கடற்படைத்தளபதியான குஞ்சாலி மரிக்கார் அவர்களின் படையின் உதவியை மாயதுன்னை அரசன் கோரினான். அதன் அடிப்படையில் முதலாவது குஞ்சாலி மரிக்காரான குட்டியலி மரிக்கார் அவர்களின் தலைமையிலான படை இலங்கைக்கு நான்கு தடவைகள் வந்து போர்த்துக்கேயருக்கு எதிரான யுத்தங்களில் ஈடுபட்டு போர்த்துக்கேய படையினருக்கு எதிராக பெருமளவான சேதங்களை ஏற்படுத்தியது. இறுதியாக புத்தளம் கடல் பகுதியில் இடம்பெற்ற போரின் போது போர்த்துக்கேயப்படையினரின் தாக்குதலால் முதலாவது குஞ்சாலி மரிக்கார் ஷஹீதாக்கப்பட்டார். அவர்களின் உடல் சிலாபம் மலே பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு வந்த காலப்பகுதியில் இலங்கையிலும், தென்னிந்தியாவில் இஸ்லாமிய பிரச்சாரங்களில் ஈடுபட்டு இஸ்லாத்தை பாதுகாத்தவர்களாக நாகூர் சாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அறியப்படுகின்றார். காதிரி வழியமைப்பைச் சேர்ந்த சாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவராக முதலாவது குஞ்சாலி மரிக்கார் (குட்டியலி மரிக்கார்) இருந்தார்கள். மேலும், சாஹுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களுக்கு 404 மாணவர்கள் காணப்பட்டார்கள் இவர்கள் போர்த்துக்கேய காலனித்துவத்திற்கு எதிராக போராடிய சுதந்திர வீரர்கள் ஆவார்கள். நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் காதிரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 404 சீடர்களில் ஒருவரான காயல்பட்டிணத்தைச் சேர்ந்த செய்ஹ் ஸதக் இப்ராஹீம் மரிக்கார் அவர்கள் குஞ்சாலி மரிக்காரினது படையின் தளபதிகளில் ஒருவராக காணப்பட்டதோடுஇ போர்த்துக்கேயருக்கு எதிராக இந்தியாவின் தென்கடலில் நடந்த யுத்தமொன்றில் 'மெனுவல் டீ சூசா' என்ற போர்த்துக்கேய தளபதியின் கப்பலை மூழ்கடித்தார்.
கி.பி 1630 ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி போர்த்துக்கேயருக்கும் இரண்டாம் ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் மெனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பகுதியில் யுத்தம் இடம்பெற்றது. இதில் இலங்கை முஸ்லிம்களும் அரபிகளும் ஓட்டகத்தில் ஏறி போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இந்தப் படை ஒட்டு பலகாய ඔටු හමුදාව (ஒட்டகப் இராணுவம்) என்று அழைக்கப்பட்டது. வெல்லவாய யுத்தத்தில் முஸ்லிங்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் நுவரெலிய ஹங்குராங்கெத்த தேவாலயத்தின் சுவரில் முஸ்லிங்களின் ஒட்டகப் படையை சித்தரிக்கும் வகையில் ஒரு சித்திரம் வரையப்பட்டுள்ளது. இந்த ஒட்டகப்படையினரே போர்த்துகேயருக்கு எதிராகப் போராடினார்கள். இவர்கள் அரேபியாவில் இருந்து ஒட்டகங்களை மன்னார் துறைமுகத்திற்கு எடுத்துவந்ததாகவும் இதன் போது பெருக்கமரம் எனப்படும் ஒட்டகங்கள் சாப்பிடும் 'Baobab' என்ற மரத்தை மன்னார் நகரில் நாட்டினார்கள் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹென்ரி கொரயா அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆங்கிலேய காலனித்துவத்திற்கு எதிராக செயற்பட்ட கிழக்கு மாகணத்தைச் சேர்ந்த ஏழு முஸ்லிம்கள் 1804ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பகைவர்களாக பிரகடணப்படுத்தப்பட்டனர். அவர்களில் நால்வர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மூவர் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
2017ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஆங்கிலேய காலனித்துவத்திற்கு எதிராக செயற்பட்டு பிரித்தானியாவின் பகைவர்களாக அறிவிக்கப்பட்டிருந்த 19பேர், தேசிய வீரர்களாக வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்டது, ஆனால் பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிராகச் செயற்பட்டு பகைவர்களாக அறிவிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட 7 முஸ்லிம்களின் பெயர்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை என்பது
கவலைக்குரிய விடயமாகும்.
19ஆம் நூற்றாண்டு என்பது இலங்கை மக்களின் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்குரிய நூற்றாண்டு என்று குறிப்பிட முடியும். ஏனெனில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த அறிஞர்கள் தமது மக்களின் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக வளர்ச்சிக்கான சேவைகளை மேற்கொண்டார்கள். இக்காலப் பகுதியிலேயே இலங்கையில் பாடசலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இக்காலப் பகுதியில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல அறிஞர்கள் ஆன்மீக, கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தார்கள். அதில் முதன்மையானவர்களாக இமாமமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களை குறிப்பிட முடியும். இவர்கள் இலங்கையில் 350இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களையும், கல்விக்கூடங்களையும் அமைத்தார்கள். யெமனில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த அஹ்மத் இப்கு முபாரக் மௌலானா (ரஹிமஹுல்லாஹ்) மற்றும் அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (ரஹிமஹுல்லாஹ்) இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் கல்வித்துறைக்கு பங்களிப்புச் செய்தார்கள். காதிரிய்யா வழியமைப்பின் செய்ஹாக இருந்த அப்துல்லாஹ் உமர் பாதிப் அல்-யமானி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் மாணவர்களாக அறிஞர் சித்திலெப்பை மற்றும் வாப்பிச்சி மரிக்கார் ஆகியோர் இருந்தார்கள். அக்காலப் பகுதியில் எகிப்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட எகிப்தின் விடுதலை வீரர் ஒராபி பாட்சா அவர்களின் வருகை இவர்கள் இருவருக்கும் இலங்கையின் பல இடங்களில் முஸ்லிம்களுக்கான பாடசலைகளை அமைப்பதற்கு உறுதுணையாக அமைந்ததது. அதேபோல் செய்கு முஸ்தபா (ரஹிமஹுல்லாஹ்), கசாவத்தை
ஆலிம் புலவர் போன்றவர்களும் இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்தார்கள்.
1945ஆம் ஆண்டு இலங்கையின் முஸ்லிம்கள் சார்பாக சோல்பரி ஆணைக்குழுவின் முன்னால் டி. பி. ஜாயா அவர்கள் சாட்சியம் அளித்தார்கள். அதன்போது, அடுத்த சமூகங்களைப் போலவே இலங்கை முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றபோதும், தமது மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைப்பதைவிட இலங்கை சுதந்திரம் அடைவதேயே தாம் விரும்புவதாக அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவேதான், டி.பி. ஜாயா அவர்கள் இலங்கையின் சுதந்திர வீரர்களுள் முக்கியமான ஒருவராக கருதப்படுகின்றார்கள். இவர்கள் போன்றே பல முஸ்லிம் தலைவர்கள் இலங்கையின் சுதந்திரம் அடைவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். எனவே, இன்று 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேலையில், எமது முன்னோர்கள் எமது நாட்டிற்கும், சமூகத்திற்கும் செய்துள்ள சேவைகளை ஞாபகப்படுத்துவதுடன், அவர்களின் சரிதங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வோம்.
தொகுப்பு : இப்ஹாம் நவாஸ்