السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 20 August 2025

இலகுவாக உணவு கிடைத்தால்

 


உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்?


இந்த யோசனை அமெரிக்க உயிரியலாளர் ஜான் கால்ஹவுனுக்குத் தோன்றியது. 1970-ஆம் ஆண்டு இந்த பரிசோதனையைத் தொடங்கினார்.


ஏராளமான உணவு, நீர் மற்றும் வசதிமிக்க ஓரிடத்தை உருவாக்கினார். பின்னர் அங்கு நான்கு எலிகளை (இரண்டு ஆண், இரண்டு பெண்) வைத்தார்.


முதலில் எலிகள் வியக்கத்தக்க விகிதத்தில் இனப்பெருக்கம் செய்தன, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் 315 நாட்களுக்குப் பிறகு, இனப்பெருக்க விகிதம் கணிசமாகக் குறையத் தொடங்கியது.


எலிகளின் எண்ணிக்கை தோராயமாக 600-ஐ எட்டியபோது, அவற்றுக்கு இடையே புதிய மாற்றங்கள் தோன்றின. அந்த மாற்றங்கள் மிக மோசமானவையாக இருந்தன.


பெரிய எலிகள் பலவீனமானவற்றைத் தாக்கத் தொடங்கின. இது ஆண்களிடையே உளவியல் ரீதியான சரிவுக்கு வழிவகுத்தது. 


இதற்கிடையில், சில பெண் எலிகள் குட்டிகளைப் பராமரிப்பதை கைவிட்டன. மேலும் எந்த காரணமும் இல்லாமல் மற்ற பெண்களின் குட்டிகளைத் தாக்கத் தொடங்கின.


காலப்போக்கில், இளம் எலிகளிடையே இறப்பு விகிதம் அதிகரித்து, பிறப்பு விகிதம் பூஜ்ஜியமாகக் குறைந்தது.


ஏராளமான உணவு இருந்தபோதிலும்; ஒருபால் உறவு, காட்டுமிராண்டித்தனம், மற்ற எலிகளை கடித்து உண்ணுதல் போன்ற விசித்திரமான நடத்தைகளும் தோன்றின.


சோதனை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசி எலி 1973-ல் பிறந்தது. 


கைசேதம் என்னவென்றால் "யுனிவர்ஸ் 25" என்று அழைக்கப்பட்ட இந்த சோதனையின் முடிவில் அனைத்து எலிகளும் இறந்தன.


வினோதம் என்னவென்றால் இதே சோதனை 25 முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது, ஒவ்வொரு முறையும் அதே முடிவு. அதே சரிவு. அதே அழிவு. 


கால்ஹவுன் கூறுகிறார்: சமூகங்களுக்கு - எலிகளோ மனிதர்களோ - முயற்சி அல்லது சவால் இல்லாமல் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டால்; அவற்றின் பண்புகள் நாசமாகி அழிவு நிச்சயம் ஏற்படும்.


1450 ஆண்டுகளாக அல்குர்ஆன் இதைத்தான் கூறிக்கொண்டு இருக்கிறது: 


‌"அல்லாஹ் தன் அடியார்கள் அனைவருக்கும் தாராளமாக வாழ்வாதாரத்தை வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் அராஜகப் புயலை பரவச் செய்திருப்பார்கள். ஆகவே அவன் ஒரு கணக்குப்படி, தான் விரும்புகிற அளவில் இறக்கி வைக்கின்றான். திண்ணமாக, அவன் தன் அடிமைகள் பற்றி நன்கு புரிந்தவனாகவும், அவர்களைக் கவனிப்பவனாகவும் இருக்கின்றான்”. 

(42:27)


✍️ நூஹ் மஹ்ழரி

Wednesday, 13 August 2025

இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?

 


*இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?*

      *═════* *✥.❖.✥ ═════*

*கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,*     

  *மௌலவி பாஸில் ஷெய்கு*       

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

  *பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.*

           *B.A (Hon) அவர்கள்*

       *═════* *✥.❖.✥ ═════*

புனித இரவுகளில் மரணித்தவர்களின் றூஹுகள் வாழ்ந்த இடங்களுக்கு வருவதாக நீண்டகாலமாக மக்கள் நம்புகின்றனர். அதனால், இருட்டானதும் வீட்டில் மணமேற்றி அவர்கள் பெயரில் யாஸீன் சூறாக்கள் ஓதுகின்றனர். அவர்களுக்காக தர்மம் செய்கின்றனர். துஆக் கேட்கின்றனர். இந்த நல்ல நடைமுறையால் உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்குமான உறவு பேணப்பட்டு வந்தது.


இந்த நம்பிக்கை நலிந்து இந்த நடைமுறையும் அருகிவிட்டது. மரணித்தவர்களின் நினைவும் மங்கிவிட்டது. இதற்கு பிரதான காரணம் வஹாபிகளின் தீய தீவிர பிரச்சாரமாகும்.


ஒருவர் மரணித்தால் அவரின் றூஹ் வெளியே வரமாட்டாது. அது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் முடங்கிக்கிடக்கும் என்று இவர்கள் வாதிக்கின்றனர்.


இவர்களின் வாதம் ஆதாரமற்றது. ஹதீஸ் ஆதாரங்களும், அறிஞர்களின் தீர்ப்பும் இவர்களுக்கு எதிராகவே உள்ளன. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் பொறுக்கிக் கீழே தரப்பட்டுள்ளன.


01. இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரின் ஆசிரியர்களான இமாம் அபூபக்கர் இப்னு ஷைபாவும், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரும் ஹளரத் அம்றுப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும். இமாம் அஹ்மத், முஸ்னதிலும் இமாம் தப்றானி முஃஜமுல் கபீறிலும், இமாம் ஹாகீம் சஹிமுஸ்தத்றக்கிலும், இமாம் அபூநுஐம், ஹில்யாவில் சஹீஹான சனதுடன் அறிவிக்கின்றனர்.


றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,


உலகம் காபிர்களுக்கு சொர்க்கம் முஃமின்களுக்கு சிறை. ஒரு முஃமினின் றூஹ் உடலிலிருந்து வெளியேறினால், ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியேறியவனைப் போலாவான். சிறையிலிருந்து விடுதலை பெற்றவன் பூமியின் எப்பகுதிக்கும் சென்று வரும் உரிமையைப் பெறுவான்.


ஆதாரம் : கிதாபுஸ் ஸுஹ்து, இமாம் இப்னு முபாறக், ஹதீது எண் 597, பக்கம் 211


இமாம் அபூபக்கர் இப்னு ஷைபா அவர்களின் அறிவிப்பில்,


ஒரு முஸ்லிம் மரணித்தால் அவரின் றூஹ் விடுதலை அடைகின்றது. அதுவிரும்பிய இடம் செல்லும்.


ஆதாரம் : முஸன்னப் இப்னு ஷைபா, கிதாபுஸ்ஸுஹ்து,

ஹதீது எண் 16571, பாகம் 13, பக்கம்355


இமாம் இப்னு அபீதுன்யா அவர்களும், இமாம் பைஹகீயும், ஹளரத் ஸஈத் இப்னு முஸய்யிப் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது,


ஒரு தினம் ஹளரத் ஸல்மான் பாரிஸி அவர்களும், ஹளரத் அப்துல்லாஹ் இப்னு ஸலாமும் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவரும் சந்தித்து எம்மில் முதல் மரணிப்பவர் அங்கே நடப்பவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர். அப்போது உயிருள்ளவர்கள் மரணித்தவர்களை சந்திப்பார்களா? என்று ஒரு கேள்வி எழுந்தது.


ஆம் முஃமின்கள் மரணித்ததும் அவர்களின் றூஹு சொர்க்கம் செல்லும். அது விரும்பிய இடம் செல்லும் என்று விடை பகரப்பட்டது.


ஆதாரம் : ஷுஃபுல் ஈமான், ஹதீது எண் 1355, பாகம் 2, பக்கம் 141


ஹளரத் இப்னுல் முபாறக், கிதாபுஸ் ஸுஹ்திலும், இமாம் அபூபக்கர் இப்னு அபீத்துன்யா, இப்னு முன்தா ஆகியோர் ஹளரத் ஸல்மானுல் பாரிஸி ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றனர்,


முஃமின்களின் றூஹுகள் புவியில் பர்ஸஹ் என்ற உலகில் இருக்கும். அது விரும்பிய இடம் செல்லும். காபிர்களின் றூஹ் ஸிஜ்ஜின் என்ற நரகில் இருக்கும்


ஆதாரம் : கிதாபுஸ்ஸுஹ்து, ஹதீஸ் எண் 429, பக்கம் 144


ஹாபிழ் இமாம் ஜலாலுத்தின் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஸறஹுஸ்ஸுதூர் என்ற நூலில் வருகின்றது,


இமாம் அபூஅம்று இப்னு அப்துல் பர்ரு கூறுகின்றார்கள்,


மிகத்தேர்வான (றாஜிஹான) கருத்து இதுதான். ஷுஹதாக்களின் றூஹுகள் சொர்க்கத்திலும், ஏனையவர்களின் றூஹுகள் அவர்களின் கப்றுகளிலுமிருக்கும்.


ஆதாராம் : ஸரஹுஸ்ஸுதூர், பக்கம் 98


அல்லாமா மனாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தைஸீர், ஸறஹ்ஜாமிஉஸ்ஸஈர் என்ற நூலில் கூறுகின்றார்கள்.


நிச்சயமாக றூஹ் உடற்கூட்டிலிருந்து கழன்று மரணத்தின் மூலம் அதன் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறுகின்றது. பின் அது விரும்பிய இடம் செல்கின்றது.


         ஆதாரம் : தைஸீர்,     

    ஷரஹ்ஜாமிஉஸ்ஸஈர், 

      பாகம் 01, பக்கம் 420


காழிதனாஉல்லாஹ் கூறுகின்றார்கள்,


வலிமார்கள் மற்றும் றூஹுகள், பூமி, வானம், சொர்க்கம் இவற்றில் விரும்பிய இடங்களுக்கு செல்வார்கள்.


ஆதாரம் : ததிக்கிறத்துல் மௌத்தா, பக்கம் 75,76


கஸானாத்துர் றிவாயாத் என்ற நூலில் வருகின்றது. முஹக்கிகான உலமாக்களில் சிலர் கூறுகின்றனர். வெள்ளி இரவில் றூஹுகளுக்கு விடுமுறை கிடைக்கின்றது. அவை வெளியே வருகின்றன. முதலில் தனது கப்றுக்கும், பின் அவர்களின் இல்லங்களுக்கும் செல்கின்றன.


                ஆதாரம் : 

    கஸானாத்துர் றிவாயாத்


இமாம் அபீதுன்யா ஹளரத் மாலிக் இப்னு அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்,


முஃமின்களின் றூஹுகள் சுதந்திரமாக விரும்பிய இடம் சென்று வரும் என்று எனக்கு ஹதீது கிடைத்துள்ளது.


                   ஆதாரம் : 

  ஸறஹுஸ்ஸுதூர், பக்கம் 98


முஃமின்களின் றூஹுகள் ஒவ்வொரு வெள்ளி இரவும், பெருநாள், ஆஷுறா தினங்களிலும், பறாஅத் இரவிலும் தங்களது வீடுகளுக்கு வெளியே வந்து நின்று கொண்டு கவலை தோய்ந்த குரலில், வீட்டில் உள்ளோரே! என் பிள்ளைகளே! என் இன பந்துக்களே! தர்மம் செய்து எங்களுக்கு இரங்குங்கள் என்று கூறும்.


                 ஆதாரம் : 

    கஷ்புல் அதா, பக்கம் 66


இமாம் ஷைய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி மிஷ்காத்தின் விரிவுரையான அஷிஃஅத்துல்லம்ஆத் என்ற நூலில் கூறுகின்றார்கள்,


ஒரு மையித் அடக்கம் செய்யப்பட்டதிலிருந்து ஏழு தினங்கள் வரை மையித்திற்காக தர்மம் செய்வது ஸுன்னத் ஆகும். மைய்யித்திற்காகச் செய்யப்படும் சதகா - தர்மம் நிச்சயம் பயனளிக்கும். இதில் அறிஞர்கள் மத்தியில் எதுவித கருத்துவேறுபாடும் கிடையாது. இது தெடர்பாக ஸஹீஹான ஹதீதுகள் வந்துள்ளன. குறிப்பாக தர்மமாக தண்ணீர் புகட்டுதல் பற்றி வந்துள்ளன.


மையித்திற்கு ஸதகா, துஆ ஆகியவற்றின் நன்மைகள் மட்டுமே வரும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். சில அறிவிப்புக்களில்,


ஜும்ஆ இரவில் றூஹ் வீடு வருகின்றது. அதற்கு யாராவது தர்மம் செய்கின்றார்களா? என்று அது எதிர்பார்த்து நிற்கின்றது என்று வந்துள்ளது.


                  ஆதாரம் : 

     அஷிஃஅத்துல்லம்ஆத், 

     பாகம் 1, பகக்ம் 716, 717


மரணித்தவர்களின் றூஹுகள் புனித நாட்களிலும், இரவுகளிலும் வீடு வரும் என்ற நம்பிக்கையில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்தல், கத்தம் ஓதுதல், துஆக் கேட்டல் உள்ளிட்ட காரியங்களை நமது முன்னோர் செய்து வந்த நற்பழக்கங்களைத் தொடர்ந்து செய்து வந்தால், மரணித்தவர்களின் துஆவைப் பெறமுடியும். பெற்றோர் உள்ளிட்டோருக்கு நன்றி உபகாரம் செய்த நற்கூலி கிடைக்கும்.


நாம் செய்தால்தான் நமது பிள்ளைகள் நாம் மரணித்த பின் நமக்குச் செய்வர். எம்மை நினைவு கூர்வர். அதனால் இந்த நல்ல வழக்கத்தை வீடுகளில் இருப்பிடங்களில் புத்துயிர் பெறச்செய்து நல்லருளைப் பெறமுயலுவோம்.

Thursday, 7 August 2025

வியாபாரியின் கதை

 


ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து

வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.


ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு

அவனிடம் வந்து, “எஜமான்! இரண்டு

ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை

செய்கிறேன். ஆனால் நான் செய்யும்

வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது.


மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட

வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது

உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே

சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான். 


பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை

மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது.


இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி, “மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்படைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்” என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்துக் கொண்டது.


புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று

வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, “மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம்

மிகக் குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்துக் கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்யக் கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை” என்றான்.


கோபமடைந்த மாடு, “எஜமான்! இந்தப் புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை” என்றது. 


அதற்கு வியாபாரி, “மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்றுத் தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே” என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு, “வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்றுத் தந்து விடுகிறேன்” என்று கூறியது.


மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம்

திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்கத் தொடங்கியது. ஆனால் மிகக் கடின

உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லைக் கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் கழித்து வியாபாரி, “மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விடப் போகிறேன்” என்றான். 


“எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன்

அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?” என்றது.


வியாபாரி அதற்கு “அவர்கள் உன்னை வேலை செய்யச் சொல்ல வாங்கவில்லை.

உன்னைக் கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்குக் கேட்கிறார்கள்” என்றான்.


வியாபாரி சொன்ன பதிலைக் கேட்டதும்

மாட்டிற்கு கண்களில் நீர் வர

தொடங்கியது. “எஜமான்! நீங்கள்

செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன்.

இல்லாவிடில் நான் நீண்ட காலம்

ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்” என்றது.


அதைக் கேட்ட வியாபாரி, “நான் செய்தது

துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில்

சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு

இருக்கலாம்” என்றான். மாடு தன் முட்டாள்

தனத்தை எண்ணி நொந்து கொண்டது.


நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். பணியாளர்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் √


படித்ததில் மனதே கலங்கிய பதிவு

😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞

Wednesday, 6 August 2025

பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்

 


பெற்றோர்கள் பிள்ளைகள்மீது கொஞ்சம் கவனமெடுத்தால்

பாடசாலையில் வீண் பிணக்குகளைத் தடுக்கலாம்.

----------------------------------------------------------------------------------

அன்பான பெற்றோர்களே!

எமது பிள்ளைகள் பாடசாலைக்கு ஆயத்தமாகிச் செல்லும்போது கவனம் செலுத்துகிறீர்களா?

பிள்ளையின்

* தலைமுடி பாடசாலை மாணவர்களுக்குப்

   பொருத்தமானதாக வெட்டப்பட்டுள்ளதா?

* சீருடை நேர்த்தியாக உள்ளதா?

* பாடசாலை இலச்சினை

   கழுத்துப்பட்டி முறையாகக் 

   கட்டியுள்ளாரா?

* பாதணிகளை அணிந்துள்ளாரா?

* புத்தகங்கள், புத்தகப்பை ஒழுங்காக

   உள்ளதா?

* தேவையற்ற பொருட்கள் ஏதாவது

   உள்ளதா?

* பாடசாலைக்கு சென்றடைவதற்குப்

   போதிய நேரத்தில் 

   பயணமாகிறாரா?

* சேர்த்து செல்லும் நண்பர்,நண்பிகள் 

   யார்?

* பாடசாலை முடிந்து உரிய நேரத்திற்கு

   வீடுவந்து சேர்கிறார்களா?


போன்ற விடயங்களில் பெற்றோர்கள் கவனமெடுக்காதபோது பாடசாலையில் இவைகளுக்காக அதிக நேரமொதுக்க வேண்டி ஏற்படுகிறது.

கண்டும் காணாமல் விடமுடியாது. இதனைச் சரிசெய்யும் முயற்சிகளின் போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே தொடர் முரண்பாடு தோன்றுகிறது.


மாணவர்களை ஏதோவொரு முறையில் கட்டுப்படுத்த முற்படும்போது பெற்றோர்கள் ஒத்துழைக்க மறுப்பதன் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே முரண்பாடு உருவாகிறது.

இதனால் ஆசிரியர்கள் கண்டும் காணாமல் கற்பித்தலோடு நின்று விடுகின்றனர். இது மாணவர்கள் ஒழுக்கவீனங்களுக்கு வித்திடுகிறது.


மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் அடைவு மட்டம் தொடர்பாக கலந்துரையாடலுக்கு பெற்றோர்களை அழைக்கும்போது யாரோடு விடயங்களைக் கலந்துரையாடவேண்டிய தேவை உள்ளதோ. குறிப்பாக அப்பெற்றோர் கூட்டத்திற்கு வருவதில்லை.

ஆனால் பிள்ளைகளின் ஒழுக்கம்பற்றி ஆசிரியர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால். சட்ட வல்லுனர்களாக சண்டைக்கு வருவது அவர்களே!

ஆசிரியர்கள்மீது குறைபாடிருந்தால் பெற்றோர்கள் கேட்கவேண்டும். அவ்வாறே பிள்ளைகளின் விடயம் சம்பந்தமாக பெற்றோர்களை அழைக்கும்போதும் பாடசாலைக்குள் வரவேண்டும்.


எனது பிள்ளையின் ஒழுக்கத்திற்கு நானே முதலில் பொறுப்பேற்கவேண்டும்.

பிள்ளையின் அடைவுகள்,பாராட்டுக்கள், வெற்றிகளைக் கண்டு எவ்வளவு மகிழ்ச்சியடைய வேண்டும்.

மாறாக பிள்ளைகள் வழிதவறும்போது நல்வழிப்படுத்தவேண்டியதும். தோல்வி அடையும்போது தட்டிக்கொடுத்து சரியான பாதைக்கு வழிகாட்டுவதும் பெற்றோரின் கடமையே.


எனது பிள்ளை அறிவாளி,கெட்டிக்காரர் என்பதைவிட ஒழுக்கமானவர் என்பதே நிலைபேறானது.


கால் நூற்றாண்டுகடந்த கல்விப்பணி மற்றும்

இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவே இதை எழுதினேன்.


படங்கள் முகநூலில் பெற்றது.


நன்றி

மாணிக்கம். இளங்கோ

FB

பாவம் பற்றி இஸ்லாம்

 

பாவம் பற்றி இஸ்லாம்

மாணவர் ஒருவர் தன்னுடைய ஆசிரியரிடம் நாம்  எவ்வளவோ பாவம் செய்கிறோம், ஆனால் அல்லாஹ்  நம்மை தண்டிப்பதில்லையே? என்றார்.


அதற்கு ஆசிரியர் சொன்னார் : அல்லாஹ் உன்னை பல்வேறு வகையில் தண்டிக்கிறான் ஆனால், அதை நீ உணர்ந்து கொள்வதில்லை.


அல்லாஹ்விடம நெஞ்சுருக உரையாடுகின்ற இனிமையான அந்த உணர்வை உன்னிடமிருந்து அவன் பறித்துக் கொள்ளவில்லையா?


அல்லாஹ்வின் முன் கதறி அழமுடியாத இறுகிய உள்ளத்தை விட வேறு எந்த பெரிய  பாவத்தாலும் அல்லாஹ் சோதிப்பதில்லை.


குர்ஆனின் ஒரு பக்கத்தை கூட ஓதாமல் உன்னுடைய நாட்கள் ஓடுவதில்லையா?


இந்த குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கினால் அது நடுநடுங்கி அல்லாஹ்வின் அச்சத்தால் சுக்கு நூறாகி சிதறி விடும் என்ற அல்லாஹ்வின் வசனத்தை சில நேரம் நீ கேட்டிருப்பாய்.


அந்த வசனத்தை செவி மெடுக்காததை போன்று எந்த பாதிப்பும் இல்லாமல நீ சென்று கொண்டிருப்பதில்லையா?


நீண்ட இரவுகள் உன்னை கடந்து செல்கின்றன. அதில் சிறிது நேரம் கூட நின்று தொழாமல் நீ தடுக்கப்பட்டுவிடவில்லையா?


ரமலான், ஷவ்வாலின் ஆறு நாட்கள், துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என நல்ல காலங்கள் உன்னை கடந்து செல்கின்றன. அவைகளை அவன் விரும்புகின்ற விதத்தில் நீ பயன்படுத்துகின்ற தவ்ஃபீக் உனக்கு கிடைக்காமல் போய் விட்டதை உணரவில்லையா?


இதை விட பெரிய தண்டனை என்ன இருக்கிறது??


வணக்க வழிபாடுகள் உனக்கு கடினமாக தோன்றவில்லையா??


அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும் உன்னுடைய நாவு தடுக்கப்படவில்லையா??


மன இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் முன்னால் நீ பலகீனமாகுவதை உன்னால் உணரமுடியவில்லையா??


பொருள், பதவி, பிரபல்யம் ஆகவேண்டும்  என்ற பேராசைகளால் நீ சோதிக்கப்படவில்லையா??


இதை விட பெரிய தண்டனை என்ன இருக்கிறது??


புறம் பேசுதல், கோள் மூட்டுதல், பொய் சொல்லுதல் போன்ற பாவங்கள் புரிவது உன் மீது லேசாக ஆக்கப்படவில்லையா??


மறுமையை மறக்கடித்து இந்த உலக வாழ்கையை உன்னுடைய பெரிய கவலையாக ஆக்கப்படவில்லையா??


இதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையில்லாமல் வேறென்ன??


*என்னருமை மகனே! எச்சரிக்கையாய் இரு..*


_அல்லாஹ் கொடுத்த தண்டனையில் மிக இலகுவானது பொருட்செல்வத்திலும் மக்கள்செல்வத்திலும் உனக்கு ஏற்படும் நட்டத்தில் எதை நீ தண்டணையாக  உணர்கிறாயோ அவைகள்தான்,_


_அல்லாஹ்வின் தண்டனைகளிலே மிக மோசமானது உள்ளத்தால் உணரப்படாமல் இருப்பது தான்.._


*யா அல்லாஹ்,*

*உன் கருணையின் மீது நம்பிக்கை வைத்துக் கேட்கின்றோம்,*


_உன்னை நினைவு கூறாது செலவு செய்த ஒவ்வொரு நொடிக்காகவும் எங்களை மன்னிப்பாயாக.._


_எங்கள் உள்ளங்களில் ஈமானை பலப்படுத்துவாயாக, முஃமினாக எங்களை மரணிக்கச் செய்வாயாக._

                    🍂🍃🍂🍃🍂🍃.

வட்டி பற்றி இஸ்லாம்

 

இஸ்லாத்தில் வட்டி

“வட்டி ஒரு கொடூரமானது” - அதனோடு தொடர்பான தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்போம் 

------------------------------------------------------------------------

"வட்டி ஒரு கொடூரமானது" என்பதை கொடுப்போரும், வாங்குவோரும்தான் மற்றவர்களை விட மிகத் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். எனினும் அதிலிருந்து அவர்களால் விட முடியாமல் தவித்து வருகிறார்கள்.


தனி மனிதனிடமட்டுமல்ல இந்நிலமை. மாறாக, உலக நாடுகள் அனைத்துமே இந்த வட்டியை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. அதன் கொடூரம் புரிந்திருந்தும் அதிலிருந்து விடுபட வழி அறியாது விழி பிதுங்கி நிற்கின்றன. பணக்கார நாடுகள் சில, ஏழை நாடுகளை வட்டியின் பெயரால் சுரண்டிப் பிழைத்து வருகின்றன. வளர்ந்து(?) வரும் ஏழை நாடுகளோ வேறு வழியின்றி வட்டிக்கு வாங்கி, அதற்கான வட்டியைக்கட்ட மேலும் வட்டிக்கு வாங்கி.. என இவ்வாறே பின்னோக்கி செல்கின்றன.


உலகளவில் இயங்கி வரும் இன்றைய எல்லாத் தொழில் நிறுவனங்களும் இந்த வட்டியை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகின்றன.


இத்தொழிலில்(?) ஈடுபட்டுவரும் முனைவர்கள் கூறும் காரணங்கள்தான் வேடிக்கையானது. விரைவில் முன்னேற்றம் அடைய வட்டிக்கு வாங்குவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என வாதிடுகிறார்கள். அவரச்தேவைக்கு என வட்டிக்கடைகாரர்களைத் தவிர கடன் தருவதற்கு யார் முன் வருகிறார்கள்? என பலஹீனமான கேள்வி ஒன்றையும் எடுத்து வைக்கிறார்கள்.


அவர்கள் கூறுவது போன்று வட்டிக்கு வாங்கிய நாடுகள், வங்கிக் கடனில் சுய தொழில் செய்து வரும் தனி நபர்கள், அல்லது வட்டியை மூலதனமாக வைத்து தொழிற்சாலைகள் துவங்கிய முதலாளிகள் தங்களது எண்ணத்தில் - திட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா? அவர்களது தொழில் துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளார்களா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே ஆய்வறிக்கைகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.


துவங்கிய பல தொழிற்சாலைகள் தொடங்கிய அதே வேகத்திலேயே இழுத்து மூடப்பட்டு விட்டன என்பதையும், அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளிகள் ஒரு நேர சோத்துக்கு வழியின்றி தெருவில் இறங்கி போரடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.


காரணம் என்ன? வட்டிக்கு கடன் வாங்கி தொழில் துவங்கிய சில நாட்களிலேயே வட்டி கட்ட வேண்டிய நெருக்கடி தொழிலதிபர்களுக்கு ஏற்படுகிறது. அதனை கட்ட முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை ஏற்படும் போது, தொழிற்சாலையை இழுத்து மூட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார். இதுதான் நமது நாட்டில் அடிக்கடி நடந்து வரும் கேலிக் கூத்தான நிகழ்வு.


தமிழில் ஒரு வழக்குச் சொல் ஒன்று உண்டு.


"அட்டிகை செய்வதற்கு வட்டிக்கு வாங்கினேன். வட்டியை கட்ட முடியாமல், அட்டிகையை விற்று வட்டியைக் கட்டினேன்"


இதுதான் நமது இலங்கை நாட்டின் நிலை! எமது பிரதேச குடி மக்களின் பெரும்பாலாரின் அவல நிலையும் இதுதான். மேற்கூறிய வழக்குச் சொல்லுக்கு விரிவுரையாக விளங்கும் சர்வசாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியை எளிதில் புரிய வைப்பதற்காக இங்கே குறிப்பிடுகிறேன்.


"வீட்டு லோன், வாகன லோன், தொலிலுக்கான லோன்" என பல லோன்களை கேள்விப்பட்டிருப்பீர்களே! இன்றெல்லாம் வீடு தேடி வந்து வீட்டு லோன் தருகிறார்கள். இதில் தனியார் நிறுவனங்கள்(?) பரபரப்பான விளம்பரங்களை செய்து, வாடிக்கையாளர்களை தனது மாய வலைக்குள் சிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள். பரிசுகள் பல உண்டு என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் தாங்கிய விளம்பரங்கள் நகரங்களின் அடுக்கு மாடிக் கட்டிடச் சுவர்களை ஆக்கரமித்துள்ளன.


சொந்த வீடு, வாகனம் மற்றும் மீன்பிடிப்படகு பற்றிய கனவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பரம ஏழைகளில் பலர் பளிச்சிடும் இந்த போலியான விளம்பரங்களில் விட்டில் பூச்சியாய் விழுந்து தங்களை மாய்த்து வருகிறார்கள்.


சிரமப்பட்டு பல தேவையான ஆதாரங்களைத் திரட்டி, வீடு கட்டுவதற்காக வங்கிகள் மற்றும் நிதிறுவனங்களை அணுகி குறைந்த வட்டி விகித்தில் இடத்தின் பத்திரத்தை அடமானமாக வைத்து கடனைப் பெற்று விடுகிறார்கள். இதில் முஸ்லீம்கள் - ஈமான் குன்றியவர்கள் அதிகம் ஈடுபட்டிருப்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன்.


வாங்கிய கடனைக் கொண்டு வீடு கட்டி முடிப்பதற்குள் வட்டித் தொகையை கட்ட வேண்டிய காலம் வந்து விடும். அதனை கட்ட முடியாமல், சிரமப்பட்டுக் கொண்டிருப்பவன், கட்டி முடிவடையாமல், அரை குறையாக இருக்கும் தனது வீட்டினை அடிமாட்டு விலைக்கு விற்று வட்டியைக் கட்ட வேண்டிய நிர்பந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதற்கு அவ்வாறான பல வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சேவையாற்றுபவர்களும் உடந்தையாக மற்றும் உந்துதலாகவும் இருந்துவருகின்றார்கள்;. (இது தேவைதானா? வாசகர்களே! இதை உங்களது சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.)


"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்" என்பது போல, வட்டிக்கு வாங்குபவன் இருக்கும் வரை வட்டிக்கு கொடுப்பவன் ஏழைகளின் இரத்தை உறுஞ்சிக் கொண்டுதான் இருப்பான்.


இந்த வட்டியில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை ரகங்கள்! அப்பப்பா!!


வட்டி, வட்டிக்கு வட்டி, டபுள் வட்டி, மீட்டர் வட்டி, நிமிட வட்டி, ஸ்பீடு வட்டி, ரன் வட்டி, கந்து வட்டி, தண்டல் வட்டி, தின வட்டி இது போன்ற எண்ணற்ற வட்டி ரகங்கள்!


இதுபோன்று எமது பிரதேசத்தில் விஷேடமாக கிலோவுக்கு ரூபா.10.00 /  ரூபா.20.00 போன்ற பல கொமிசன் எனும் பெயரிலும் வட்டித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்! 


இந்த அனைத்து ரக வட்டிகளும், ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக ஆய்வு செய்து கண்டு பிடிக்கப் பட்ட புதிய ரகங்களா? அதுதான் இல்லை. பட்டு சாரன் கட்டிவிடலாம் என்ற கனவில் வட்டிக்கு கடன் வாங்கியவன், இறுதியில் அவன் கட்டியிருக்கும் கோவணத்தையே இழக்கச் செய்யும் வட்டி ரகங்கள்தான் இவைகள். ஆம்! இந்த ரக வட்டிகள் மக்களை ஓட்டாண்டியாக்கி வைக்கும் புது ரக கொடூர வட்டிகள்.


மனித சமூகத்தில் ஊடுறுவிய புற்று நோய்கள்தான் இந்த வட்டி ரகங்கள். இதனை அடியோடு வேரறுக்க வில்லையெனில், சமூகத்தையே அழித்து விடும் அபாயம் நிறைந்தது. எந்த சமூகத்தில் வட்டி தலைவிரித்தாடுகிறதோ, அவர்களின் மீது இறைவனின் சாபமும், தண்டனையும் இறங்குகிறது என்பதை பின்வரும் நபி மொழி எச்சரிக்கிறது:


عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ما ظهر في قوم الزنا والربا إلا أحلوا بأنفسهم عذاب الله رواه أبو يعلى بإسناد جيد


"விபச்சாரமும்,வட்டியும் மலிந்து காணப்படும் சமுதாயம் தங்களை இறைவனின் தண்டனைக்கு இலக்காக்கிக் கொள்கிறார்கள்"|என நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: அபூ யஃலா.


ஒரு சமூகத்தில் வட்டி வாங்குவது, கொடுப்பது பரவலாக - பகிரங்கமாக நடந்து வரும் போது அது தடுத்து நிறுத்தப்பட வில்லையானால், ஒட்டு மொத்த சமூகத்தின் மீதும் அல்லாஹ்வின் கோபமும், சாபமும் இறங்குவதோடு அவனது தண்டனையும் இறங்கும் என்பதை நாம் நடை முறையில் பார்த்து வருகிறோம்.


மழை இல்லை. பஞ்சம், வறட்சி, பசி, பட்டினி, குடிக்க தண்ணீர் இன்றி மனித இனமட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களான கால் நடைகளும் சேர்ந்து செத்து மடிந்து கொண்டிருக்கின்றன. நிலத்தில் விளைச்சல் இல்லை. சில பகுதிகளில் மழை பொழிவதால் அழிவும், நாசமும் ஏற்படுகிறது. நில அதிர்வுகள் அடிக்கடி நிகழ்ந்து பல உயிர்களைக் கொன்று குவிக்கின்றன. காலரா நோய் பரவி, கணக்கற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எண்ணற்ற சோதனைகள் அடிக்கடி நிகழ்கின்றன.


எண்ணற்ற சோதனைகளும் வேதனைகளும் எதனால் ஏற்படுகிறது? "வட்டி என்பது ஒரு குற்றமல்ல, அது வியாபார உத்தி" என யூதர்கள் கருதி வந்தது போல் இஸ்லாமியர்களும் அவ்வாறே கருதி வட்டிக்கு கொடுப்பதையம் வாங்குவதையும் சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள்.


கள்ளுக் குடிப்பவன் வெளியே தலைகாட்ட வெட்கப்படுகிறான். விபச்சாரம் புரிந்தவன் நடமாட நாணம் அடைகிறான். வட்டிக்குக் கொடுப்பவனோ பள்ளிவாசலின் / பாடசாலையின்/ பொது நிறுவனங்களின் தலைவனாக  பவனிவருகிறான். அந்தளவிற்கு மக்களுக்கு மத்தியில் சமூக அந்தஸ்தைத் தேடித் தரக் கூடியதாக இத்தொழில் மாறிவிட்டிருக்கிறது என்பதை வேதனையோடு இங்கே குறிப்பிடுகிறேன்.


"வட்டிக்கு கொடுப்பது, வாங்குவது எவ்வளவு பெரிய கொடூரமான பெரும் குற்றம் என்பதை இந்த இஸ்லாமியச் சமுதாயத்திற்கு சரியான முறையில் எடுத்துரைக்கப்படவில்லை" என்பதே இதற்கான காரணம் என நான் உணர்கிறேன். பெரும்பாலும் கல்குடா பிரதேசங்களில் வெள்ளிக் கிழமை மிம்பர்களில் இதுபற்றி ஆழமாகப் பேசப்படுவதே இல்லை. காரணம் பல பள்ளிவாயல் தர்மகர்த்தாக்களும் மற்றும் மௌலிவிமார்களும் மறைமுகமாக வட்டியுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றமையாகும்.


பெரும் பாவம்:


அன்பான சொந்தங்களே! மற்ற பல குற்றங்களை விட மிகக் மிகக் கொடூரமானது வட்டிதான் என்பதைக் கீழ் காணும் குர்ஆன் வசனங்ளும், நபி மொழிகளும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன:


الَّذِينَ يَأْكُلُونَ الرِّبا لا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ


"வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். "வியாபாரம் வட்டியைப் போன்றதே" என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து, வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தப்பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டித் தொழில்) செய்வோர் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல் குர்ஆன்: 2:275)


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ


"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!"


"அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்து விடுங்கள்" அல் குர்ஆன்: 2:278,279.


عن عبد الله بن حنظلة غسيل الملائكة قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهويعلم أشد من ستة وثلاثين زنية (رواه أحمد)


"வட்டியின் ஒரு நாணயத்தை (அது வட்டியின் பொருள்தான் என்பதை) அறிந்த நிலையில் ஒருவன் உண்பது, முப்பத்தி ஆறு முறை விபச்சாரம் புரிவதை விட கடுமையான குற்றமாகும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழளா (ரலி) அவர்கள், நூல்: அஹ்மது.


عن عبد الله بن مسعود أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه رواه إ بن ماجه


"வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் நயாகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: இப்னு மாஜா.


வட்டியின் கொடூரத்தை விவரிக்கும் நபி மொழிகள் இன்னும் ஏராளம் உண்டு. படிப்பினை பெற நினைப்போருக்கு மேற் கூறியவைகளே போதுமானதாகும்.


1) 36 முறை விபச்சாரம் செய்வதை விடவும் கடுமையான குற்றமாக இந்த வட்டித் தொழில் செய்வது கருதப்படுகிறது. ஒரு முறை விபச்சாரம் செய்தால் அதற்கான தண்டனை என்ன என்பதை வாசகர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள்! ஒருவன் 36 முறை விபச்சாரம் புரிந்தால் இறைவனிடம் என்ன தண்டனை கிடைக்குமோ அதனைவிட கொடூரமான தண்டனை வட்டித் தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு உண்டு என்பதை அடுத்த நபி மொழி நமக்கு கூறுகிறது.


2) விபச்சாரம், திருட்டு, கொலை, கொள்ளை, வழிப் பறி போன்ற தவறுகள் செய்த குற்றவாளிகளை எச்சரிப்பதை விட, வட்டிக்கு கொடுத்து வாங்கும் குற்றவாளிகளை, "வட்டித் தொழிலை நிறுத்திக் கொள்ள வில்லையெனில், என்னோடு போர் புரியத் தாயாரகிக் கொள்ளுங்கள்" என மிகக் கடுமையாகவே எச்சரிக்கை செய்துள்ளான். இறைவனோடு போர் புரிவதற்கு யாருக்குத்தான் முடிவும்?


3) வட்டியை உண்பவன் இவ்வுலகில் தண்டிக்கப் படுவதோடு மறுமையிலும் அவன் பேயரைந்தவன் போன்று பைத்திய நிலையில் எழுப்பப்படுவான். இன்று வட்டித் தொழில் செய்து வருவோரில் பலர் தங்களது இவ்வுலக வாழ்வில் பல் வேறு துன்பங்கள் அனுபவித்து வருவதை நாம் நேரில் பார்த்து வருகிறோம். இதனைக் பார்த்தப் பிறகாவது நாம் படிப்பினைப் பெறவில்லையெனில் பெரும் நஷ்டத்திற்குரியவர் நம்மை விட வேறு யாரும் இருக்க முடியாது என்பது உறுதி.


வட்டி குட்டி போடுவது உண்மைதானா?


வட்டித் தொழில் புரிந்து வருபவர்கள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தராக சமுதாயத்தில் காட்சி தருகிறார். சிறிய முதலீட்டில் "சிட் ஃபண்ட்" நிறுவனத்தைத் துவக்கிய சில மாதங்களிலேயே பெரிய பெரிய பல நிறுவனங்களுக்கு உரிமையாளராக மாறி விடுகிறார். இதனை காணும் அப்பாவி மக்கள் ஏமாற்றம் அடைந்து, வட்டி பல குட்டிகள் போடுவதாக கற்பனை செய்து அவர்களும் வட்டித் தொழிலை ஆரம்பித்து விடுகிறார்கள். இது ஒரு மாயத் தோற்றமே என்பதை ஆரம்பத்தில் புரிய தவறி விடுகிறார்கள்.


மெலிந்தவனுக்கு ஏற்படும் உடல் வீக்கத்தை சதை வளர்ந்து விட்டதாக தப்புக் கணக்குப் போட்டு சிகிச்சை பெறத் தவறினால், விரைவில் மரணம் ஏற்படுவது உறுதி. வட்டியினால் ஏற்படும் பணப் பெருக்கத்தை இலாபம் என கருதி, மென்மேலும் அத்தொழிலை விரிவுபடுத்த நினைப்பது, அவனது செல்வத்திற்கு அழிவை ஏற்படுத்துவது அதனை விட உறுதியானது.


ஓகோ என வெற்றி நடை போட்டு வந்த எத்தனையோ வியாபார நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் முதலாளிகள் இன்று மாமியார் வீட்டில் மணியடிச்சால் சோறு சாப்பிடும் கூட்டத்தில் சேர்ந்து கம்பியை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ பிடி வாரண்டிற்கு பயந்து ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார்கள்.


உண்மையில் என்ன நடந்தது? வட்டி பல குட்டிகள் போட்டு பெருகிக் கொண்டுதானே இருந்தது? இலட்சம் பல இலட்சங்களாக மாறிக் கொண்டுதானே இருந்தது? திடீரென இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டு, வியாபார நிலையங்களை/  நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? என்று பலருக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.


"வட்டியினால் பெருகும் செல்வம், அழிவிற்கே காரணமாக அமைகின்றது. நாம் அறியாத விதத்தில் அது அழிந்து கொண்டே வருகின்றது. அல்லாஹ் அதனை அருள்வளம் அற்றதாக ஆக்கி இறுதியில் அழித்தே விடுகிறான்" என்ற உண்மையை பலரும் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். நமது செல்வத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் அல்லாஹ், வட்டியை அருள் வளமற்றதாக ஆக்கி அழித்து விடுவதாக பின் வரும் வசனத்தில் கூறுகிறான்.


يَمْحَقُ اللَّهُ الرِّبا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ


"அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்; தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்" (2:276)


"வட்டியினால் அதிகரிக்கும் செல்வம் உண்மையில் குறைந்து கொண்டே வருகிறது" என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறி உள்ளார்கள்.


عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما أحد أكثر من الربا إلا كان عاقبة أمره إلى قلة رواه ابن ماجه والحاكم .


"வட்டியினால் அதிகரிக்கும் ஒருவனது செல்வம், இறுதியில் குறைந்து (அழிந்தே) விடுகிறது" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூட்கள்: இப்னு மாஜா, ஹாகிம்.


வட்டியினால் ஏற்படும் ஆபத்தை அறிந்து கொண்ட நாம் அதிலிருந்து முற்றிலுமாக விலக வேண்டும். வட்டியின் வாடை இன்றி ஒருவன் வாழவே முடியாது என்ற மாயத் தோற்றம் ஏற்பட்டு விட்ட மோசமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்தக் காலம் குறித்துதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியிருப்பார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.


عن أبي هريرة قال قال رسول الله صلىالله عليه وسلم قال يأتي على الناس زمان يأكلون الربا فمن لم يأكله أصابه من غباره (رواه النسائي)


"(அதிகமானோர்) வட்டியை உண்ணக் கூடிய அல்லது அதனுடை புழுதியாவது படியக் கூடிய ஒரு காலம் மக்கள் மீது வரும்" என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவப்பது அபூ ஹுரைர (ரலி) அவர்கள். (நஸாயீ)


இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது இந்நபி மொழி நூற்று நூறு பொருந்தி வருவதை தெளிவாகவே நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. வட்டியின் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது என்று முடிவு எடுத்து செயல் பட்டு வரும் பல சகோதரர்கள் ஏதேனும் ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, இந்தத் தீமையில் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.


வட்டி வாங்கும் கொடுக்கும் மனித சமுதாயமே! சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் தண்டனைகளுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்! துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் நம் சகோதரர்களுக்கு அழகிய கடன் கொடுப்போம்! நம் தகுதியை விட கூடுதலாக ஏற்படும் தேவைகளை தவிர்ப்போம்! "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" எனும் முது மொழியை மனதிற் கொண்டு உள்ளதைக் கொண்டு போதுமாக்கும் மனப் பக்குவத்தை உண்டாக்குவோம்! அதுவே! இன்பத்தின் திறவு கோல் என உள்ளத்திற்கு கூறுவோம்!


வட்டியை ஒழிப்போம். வட்டி இல்லாத ஓர் உலகு படைப்போம். வட்டித் தொழில்புரிபவர்களை அல்லது அதனுடன் தொடர்புபட்டவர்களை தலைமைத்துவம் வகிப்பதை தவிர்ப்போம் மற்றும் பள்ளிவாயல் நிருவாகங்களிலும் அவர்களை தெரிவுசெய்துவிடாமல் மிகவும் அவதாணமாகச் செயற்படுவோம்


அல்லாஹ் அதற்கு துணைச் செய்யப் போதுமானவன்.


(Islamic Research and Development)