السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 13 August 2025

இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?

 


*இறந்தவர் ஆத்மா இல்லம் வருமா?*

      *═════* *✥.❖.✥ ═════*

*கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,*     

  *மௌலவி பாஸில் ஷெய்கு*       

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

  *பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.*

           *B.A (Hon) அவர்கள்*

       *═════* *✥.❖.✥ ═════*

புனித இரவுகளில் மரணித்தவர்களின் றூஹுகள் வாழ்ந்த இடங்களுக்கு வருவதாக நீண்டகாலமாக மக்கள் நம்புகின்றனர். அதனால், இருட்டானதும் வீட்டில் மணமேற்றி அவர்கள் பெயரில் யாஸீன் சூறாக்கள் ஓதுகின்றனர். அவர்களுக்காக தர்மம் செய்கின்றனர். துஆக் கேட்கின்றனர். இந்த நல்ல நடைமுறையால் உயிருள்ளவர்களுக்கும் மரணித்தவர்களுக்குமான உறவு பேணப்பட்டு வந்தது.


இந்த நம்பிக்கை நலிந்து இந்த நடைமுறையும் அருகிவிட்டது. மரணித்தவர்களின் நினைவும் மங்கிவிட்டது. இதற்கு பிரதான காரணம் வஹாபிகளின் தீய தீவிர பிரச்சாரமாகும்.


ஒருவர் மரணித்தால் அவரின் றூஹ் வெளியே வரமாட்டாது. அது சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் முடங்கிக்கிடக்கும் என்று இவர்கள் வாதிக்கின்றனர்.


இவர்களின் வாதம் ஆதாரமற்றது. ஹதீஸ் ஆதாரங்களும், அறிஞர்களின் தீர்ப்பும் இவர்களுக்கு எதிராகவே உள்ளன. இதற்கான ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் பொறுக்கிக் கீழே தரப்பட்டுள்ளன.


01. இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரின் ஆசிரியர்களான இமாம் அபூபக்கர் இப்னு ஷைபாவும், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக் றஹிமஹுமுல்லாஹ் ஆகிய இருவரும் ஹளரத் அம்றுப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும். இமாம் அஹ்மத், முஸ்னதிலும் இமாம் தப்றானி முஃஜமுல் கபீறிலும், இமாம் ஹாகீம் சஹிமுஸ்தத்றக்கிலும், இமாம் அபூநுஐம், ஹில்யாவில் சஹீஹான சனதுடன் அறிவிக்கின்றனர்.


றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,


உலகம் காபிர்களுக்கு சொர்க்கம் முஃமின்களுக்கு சிறை. ஒரு முஃமினின் றூஹ் உடலிலிருந்து வெளியேறினால், ஒரு மனிதன் சிறையிலிருந்து வெளியேறியவனைப் போலாவான். சிறையிலிருந்து விடுதலை பெற்றவன் பூமியின் எப்பகுதிக்கும் சென்று வரும் உரிமையைப் பெறுவான்.


ஆதாரம் : கிதாபுஸ் ஸுஹ்து, இமாம் இப்னு முபாறக், ஹதீது எண் 597, பக்கம் 211


இமாம் அபூபக்கர் இப்னு ஷைபா அவர்களின் அறிவிப்பில்,


ஒரு முஸ்லிம் மரணித்தால் அவரின் றூஹ் விடுதலை அடைகின்றது. அதுவிரும்பிய இடம் செல்லும்.


ஆதாரம் : முஸன்னப் இப்னு ஷைபா, கிதாபுஸ்ஸுஹ்து,

ஹதீது எண் 16571, பாகம் 13, பக்கம்355


இமாம் இப்னு அபீதுன்யா அவர்களும், இமாம் பைஹகீயும், ஹளரத் ஸஈத் இப்னு முஸய்யிப் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது,


ஒரு தினம் ஹளரத் ஸல்மான் பாரிஸி அவர்களும், ஹளரத் அப்துல்லாஹ் இப்னு ஸலாமும் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவரும் சந்தித்து எம்மில் முதல் மரணிப்பவர் அங்கே நடப்பவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர். அப்போது உயிருள்ளவர்கள் மரணித்தவர்களை சந்திப்பார்களா? என்று ஒரு கேள்வி எழுந்தது.


ஆம் முஃமின்கள் மரணித்ததும் அவர்களின் றூஹு சொர்க்கம் செல்லும். அது விரும்பிய இடம் செல்லும் என்று விடை பகரப்பட்டது.


ஆதாரம் : ஷுஃபுல் ஈமான், ஹதீது எண் 1355, பாகம் 2, பக்கம் 141


ஹளரத் இப்னுல் முபாறக், கிதாபுஸ் ஸுஹ்திலும், இமாம் அபூபக்கர் இப்னு அபீத்துன்யா, இப்னு முன்தா ஆகியோர் ஹளரத் ஸல்மானுல் பாரிஸி ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றனர்,


முஃமின்களின் றூஹுகள் புவியில் பர்ஸஹ் என்ற உலகில் இருக்கும். அது விரும்பிய இடம் செல்லும். காபிர்களின் றூஹ் ஸிஜ்ஜின் என்ற நரகில் இருக்கும்


ஆதாரம் : கிதாபுஸ்ஸுஹ்து, ஹதீஸ் எண் 429, பக்கம் 144


ஹாபிழ் இமாம் ஜலாலுத்தின் ஸுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஸறஹுஸ்ஸுதூர் என்ற நூலில் வருகின்றது,


இமாம் அபூஅம்று இப்னு அப்துல் பர்ரு கூறுகின்றார்கள்,


மிகத்தேர்வான (றாஜிஹான) கருத்து இதுதான். ஷுஹதாக்களின் றூஹுகள் சொர்க்கத்திலும், ஏனையவர்களின் றூஹுகள் அவர்களின் கப்றுகளிலுமிருக்கும்.


ஆதாராம் : ஸரஹுஸ்ஸுதூர், பக்கம் 98


அல்லாமா மனாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தைஸீர், ஸறஹ்ஜாமிஉஸ்ஸஈர் என்ற நூலில் கூறுகின்றார்கள்.


நிச்சயமாக றூஹ் உடற்கூட்டிலிருந்து கழன்று மரணத்தின் மூலம் அதன் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெறுகின்றது. பின் அது விரும்பிய இடம் செல்கின்றது.


         ஆதாரம் : தைஸீர்,     

    ஷரஹ்ஜாமிஉஸ்ஸஈர், 

      பாகம் 01, பக்கம் 420


காழிதனாஉல்லாஹ் கூறுகின்றார்கள்,


வலிமார்கள் மற்றும் றூஹுகள், பூமி, வானம், சொர்க்கம் இவற்றில் விரும்பிய இடங்களுக்கு செல்வார்கள்.


ஆதாரம் : ததிக்கிறத்துல் மௌத்தா, பக்கம் 75,76


கஸானாத்துர் றிவாயாத் என்ற நூலில் வருகின்றது. முஹக்கிகான உலமாக்களில் சிலர் கூறுகின்றனர். வெள்ளி இரவில் றூஹுகளுக்கு விடுமுறை கிடைக்கின்றது. அவை வெளியே வருகின்றன. முதலில் தனது கப்றுக்கும், பின் அவர்களின் இல்லங்களுக்கும் செல்கின்றன.


                ஆதாரம் : 

    கஸானாத்துர் றிவாயாத்


இமாம் அபீதுன்யா ஹளரத் மாலிக் இப்னு அனஸ் ரழியல்லாஹு அன்ஹுவைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்,


முஃமின்களின் றூஹுகள் சுதந்திரமாக விரும்பிய இடம் சென்று வரும் என்று எனக்கு ஹதீது கிடைத்துள்ளது.


                   ஆதாரம் : 

  ஸறஹுஸ்ஸுதூர், பக்கம் 98


முஃமின்களின் றூஹுகள் ஒவ்வொரு வெள்ளி இரவும், பெருநாள், ஆஷுறா தினங்களிலும், பறாஅத் இரவிலும் தங்களது வீடுகளுக்கு வெளியே வந்து நின்று கொண்டு கவலை தோய்ந்த குரலில், வீட்டில் உள்ளோரே! என் பிள்ளைகளே! என் இன பந்துக்களே! தர்மம் செய்து எங்களுக்கு இரங்குங்கள் என்று கூறும்.


                 ஆதாரம் : 

    கஷ்புல் அதா, பக்கம் 66


இமாம் ஷைய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி மிஷ்காத்தின் விரிவுரையான அஷிஃஅத்துல்லம்ஆத் என்ற நூலில் கூறுகின்றார்கள்,


ஒரு மையித் அடக்கம் செய்யப்பட்டதிலிருந்து ஏழு தினங்கள் வரை மையித்திற்காக தர்மம் செய்வது ஸுன்னத் ஆகும். மைய்யித்திற்காகச் செய்யப்படும் சதகா - தர்மம் நிச்சயம் பயனளிக்கும். இதில் அறிஞர்கள் மத்தியில் எதுவித கருத்துவேறுபாடும் கிடையாது. இது தெடர்பாக ஸஹீஹான ஹதீதுகள் வந்துள்ளன. குறிப்பாக தர்மமாக தண்ணீர் புகட்டுதல் பற்றி வந்துள்ளன.


மையித்திற்கு ஸதகா, துஆ ஆகியவற்றின் நன்மைகள் மட்டுமே வரும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். சில அறிவிப்புக்களில்,


ஜும்ஆ இரவில் றூஹ் வீடு வருகின்றது. அதற்கு யாராவது தர்மம் செய்கின்றார்களா? என்று அது எதிர்பார்த்து நிற்கின்றது என்று வந்துள்ளது.


                  ஆதாரம் : 

     அஷிஃஅத்துல்லம்ஆத், 

     பாகம் 1, பகக்ம் 716, 717


மரணித்தவர்களின் றூஹுகள் புனித நாட்களிலும், இரவுகளிலும் வீடு வரும் என்ற நம்பிக்கையில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்தல், கத்தம் ஓதுதல், துஆக் கேட்டல் உள்ளிட்ட காரியங்களை நமது முன்னோர் செய்து வந்த நற்பழக்கங்களைத் தொடர்ந்து செய்து வந்தால், மரணித்தவர்களின் துஆவைப் பெறமுடியும். பெற்றோர் உள்ளிட்டோருக்கு நன்றி உபகாரம் செய்த நற்கூலி கிடைக்கும்.


நாம் செய்தால்தான் நமது பிள்ளைகள் நாம் மரணித்த பின் நமக்குச் செய்வர். எம்மை நினைவு கூர்வர். அதனால் இந்த நல்ல வழக்கத்தை வீடுகளில் இருப்பிடங்களில் புத்துயிர் பெறச்செய்து நல்லருளைப் பெறமுயலுவோம்.