السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 21 June 2015

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்

அன்பு உன் எதிரியையும் அன்பனாக்கும்

ஒரு நாள் காலைப் பொழுது. ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வந்தார்கள்.
பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே! நீங்கள் விரும்பினால் உங்கள் துணிமூட்டைகளை என்னிடம் தாருங்கள்! நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள்.
“ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் கொடுத்தாள். “திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்?” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கேட்டார்கள்.
தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அதுதான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார்.
அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள்.
வழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களை பற்றி முன்பு கூறியது போன்று கூறி கொண்டு வந்தார்.
பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பொறுமையோடும் புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார்.
கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் விடைபெற்றார்கள்.
மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்களை பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார்.
அதற்கு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள்.
கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லிவிட்டு செல்லுங்கள்” என்று கூறினார்.
அப்போது நற்குணத்தின் தாயகம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரைவிட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான்தான்” என்று கூறினார்கள்.
அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார்.
நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார்.
இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன.
1. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மூதாட்டிக்கு உதவும்போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள்.
2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள்.
3.கடைசியாக! தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார்.
*****************************************************
அன்பினால்: இருள் வெளிச்சம் ஆகும்
அன்பினால்: கசப்பு இனிமை ஆகும்
அன்பினால்: வேதனை சுகமாகும்

பெண்களின் தலைவி பாத்திமா றழியல்லாஹ- அன்ஹா

றமழான் பிறை 03ல் அவர்கள் மரணித்த நாள் அந்நாளில் அவர்களின் வாழ்கை வரலாறுகளை சுறுக்கமாக தெரிந்து கொள்வொம்
  1. Varalaru-Fathima Raliyallahu Thala Anha Avargalin Sirappu-Ramalan Moon-12-2010
  2. 1/5 Tamil Bayan-Varalaru-Fathima Raliyallahu Thala Anha Avargalin Valkkai Murai-Ramalan Moon-13-2010
  3. 2/5 Tamil Bayan-Varalaru-Fathima Raliyallahu Thala Anha Avargalin Valkkai Murai-Ramalan Moon-13-2010
  4. 3/5 Tamil Bayan-Varalaru-Fathima Raliyallahu Thala Anha Avargalin Valkkai Murai-Ramalan Moon-13-2010
  5. 4/5 Tamil Bayan-Varalaru-Fathima Raliyallahu Thala Anha Avargalin Valkkai Murai-Ramalan Moon-13-2010
  6. 5/5 Tamil Bayan-Varalaru-Fathima Raliyallahu Thala Anha Avargalin Valkkai Murai-Ramalan Moon-13-2010
  7. Tamil Bayan - Annai Fathima Raliyallahu Anhaa
  8. Tamil Bayan - Pennin Perumayey Fathima Raliyallahu Anhaa
  9. Sithi Fathima Raliyallahu Thaala Anha



பெண்கள் சமூகத்தின் கண்கள் என மதிக்கப்பட வேண்டியவர்கள். வருங்கால சந்ததியை உற்பத்தி செய்வோரும் அவர்களை செதுக்கி செப்பனிடுவோரும் அவர்களே! ஒரு பெண்ணின் நடத்தை, நம்பிக்கை, குணங்கள் என்பவற்றின் செல்வாக்கு தலைமுறை தாண்டியும் கடத்தப்படலாம். இவ்வகையில் பெண்களுக்கான வழிகாட்டால் ஒரு சமூகத்துக்கான வழிகாட்டலாக இருக்கும்.
இஸ்லாமிய எழுச்சியில் ஆண்களைப் போன்றே பெண்களும் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். ஆரம்பகால இஸ்லாமிய வாழ்வை எடுத்து நோக்கும் போது இந்த உண்மையை நாம் அறியலாம். அவர்கள் இஸ்லாமிய கலைகளையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்பதில் தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையை இன்று காண முடிவதில்லை.
எமது இளம் பெண்களில் பலர் தொலைக்காட்சி சேனல்களின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். சினிமா நாயகிகளைத் தமது முன்மாதிரியாக்கிக் கொண்டு அதற்கேற்ப தமது உடை. நடை, பேச்சு முறைகளைக் கூட மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு சீரழிந்து செல்லும் பெண் இனத்தின் முன்மாதிரிகள் யார்? அவர்கள்தான் இஸ்லாமிய வரலாற்று வானில் மின்னும் ஒளித்தாரகையான அன்னை பாத்திமா(ரலி) அவர்களாவார்கள். இவர்கள் அகில உலகின் அருட்கொடை, மனிதருள் மாணிக்கம் மாநபி(ஸல்) அவர்களினதும் முதன்முதலில் இஸ்லாத்தில் இணைந்து தமது வளங்களையெல்லாம் அதன் வளர்ச்சிக்காக வாரி வழங்கிய அன்னை கதீஜா(ரலி) அவர்களின் அருமைப் புதல்வியுமாவார்கள்.
அன்னையவர்கள் தான்   நபி(ஸல்) அவர்களின் மகள் என்கிற எண்ணத்தில் இறுமாந்ததில்லை. ஒரு தலைவரின் மகளுக்குரிய மக்கள் செல்வாக்கையோ மரியாதையையோ எதிர்பார்த்திருந்ததாகவும் இல்லை. இவர்கள் இஸ்லாமிய உலகில் நிகழ்ந்த பலபோர் முனைகளிலும் பங்கு கொண்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்த மக்கா வெற்றியிலும் அன்னையவர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் மதீனத்து மண்ணின் இணையற்ற தலைவரின் மகளாக இருந்தும் வறுமையில் வாடினார்கள். வீட்டுப்பணியை சிரமத்துடன் நிறைவேற்றினார்கள்.
ஒருமுறை யுத்தகைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர், அலி(ரலி) அவர்கள் அன்னையரின் இரு கரத்தையும் பார்த்தார்கள், தண்ணீர்  இறைத்து கைகளில் தழும்புகள், நீர் சுமந்து கழுத்தில் கருமை, வீட்டுப் பணிகள் புரிந்து ஆடைகள் அழுக்கடைந்து, முகம் வாடி வதங்கிய நிலை, சுவனத்து மங்கையர்களின் தலைவி, பாத்திமா(ரலி) அவர்களின் கோலமா இது!  அலி(ரலி) அவர்களின் நெஞ்சு கனத்துப் போனது. பாத்திமா(ரலி) அவர்களை பரிதாபத்துடன் பார்த்து, பாத்திமாவே! உன் தந்தையிடம் சென்று, உனக்கொரு பணியாளரை கேட்கலாமே! உனக்கு உதவியாக இருக்குமே என வேண்ட, பாத்திமா(ரலி) அவர்களும் பெருத்த எதிர்பார்ப்புடனும் மனமகிழ்வுடனும் அண்ணலார் இல்லம் சென்று தனக்கு ஒரு யுத்தக்கைதியை தந்துதவினால் பெரும் உதவியாக இருக்கும் என்று வேண்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பணியாளனைவிட சிறந்த ஒன்றை அறிவிக்கட்டுமா? எனக் கேட்டுவிட்டு உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும் அல்லாஹுஅக்பர் 34 தடவையும் கூறுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள்.
இங்கே அன்னையரின் வறுமையின் உச்ச நிலையையும் பொறுமையையும் நாம் பெரும் பாடமாக பெற வேண்டும். இன்றைய பெண்களுக்கு வாஷின்ங் மிசினிருந்தும் கேஸ் குக்கர் இருந்தும் மின்சார வசதி இருந்தும் வீட்டு வேலைகளை செய்வதென்பது பெரும் சிரமமாக உள்ளது. இறைவணக்கம் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் அருமை புதல்வி பாத்திமா(ரலி) அவர்களின் நிலை என்ன என்பதை பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களே தன் மகளை பார்த்து கூறுகின்றார்கள், பாத்திமாவே! நான் உனக்காக நாளை மறுமையில் பொறுப்பு எடுக்கமாட்டேன், ஒரு நபியின் மகள் என்று நல்லமல்களை விட்டுவிடாமல் சுயமாக நல்லமல் செய்து அல்லாஹ்வின் அன்பைப்பெற்ற பாத்திமா(ரலி) அவர்களின் முன்மாதிரியை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். ஒரு தலைவரின் மகள் என்ற நிலையில்கூட வறுமையிலும் பொறுமை காத்த இவர்களின் பொன்னான நல் வாழ்வை நம் பெண்ணினம் பின்பற்றிட வேண்டும். இன்னும் கூறுவதென்றால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆண்களில் ஈமானில் முழுமை அடைந்தவர்கள் அதிகமானோர், ஆனால் பெண்களில் ஈமானில் முழுமையடைந்தோர் நான்கு பேர் ‘ஆசியா(அலை), மர்யம்(அலை),    கதீஜா(ரலி), பாத்திமா(ரலி)’ இப்படிப்பட்ட உத்தமிகளின் வாழ்விலிருந்து நாம் படிப்பினை பெறுவொம்
அறிவுரைகள்:
• அல்குர்ஆனும் அண்ணலாரின் அருள்மொழிகளுமே நமது வாழ்க்கை வழிகாட்டல் என்பதை எச்சந்தர்பத்திலும் மறந்துவிடாதீர்கள்.
• இறை நம்பிக்கையும் இறையச்சமும் உங்களைக் காக்கும் இரு அரண்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
• பர்தா முறையை அனுசரியுங்கள், அது அடக்கு முறையோ, அடிமைத்தனமோ அல்ல, அதுவே உண்மையான கெளரவமும் உயர்வுமாகும் என்பதை உணருங்கள்.
• நபித்தோழிகளில் உங்களுக்கு அழகிய படிப்பினைகள் இருக்கின்றது, நடிகைகளோ, நட்சத்திர மாடல் அழகிகளோ, உலக அழகிகளோ? அல்ல என்பதை உறுதியாக நம்புங்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் இஸ்லாத்தில் வாழ்ந்து மரணித்த பெண்களாக ஆக்கியருள்வானாக.!
 உம்மு யாசிர்

தந்தையின் சிறப்பு

தந்தையின் சிறப்பு

தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை.
தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம். காரணம், தந்தையின் உயர்வு சொல்-த் தெரிய வேண்டியதில்லை. வேர்களுக்கு எதற்கு விளம்பரம்? என்று கூறுவார்கள். ஓங்கி வளர்ந்து, தழைத்து, காயோடும் கனியோடும் காட்சிதரும் ஒரு விருட்சத்தைத் தாங்கி நிற்பது அதன் ஆணிவேர்தான். அதுபோல் ஒரு குடும்பத்தின் தலைவனாக இருந்து, அக்குடும்பத்தைச் சீரான முறையில் நடத்தி வருபவன் தந்தை எனும் பொறுப்பில் உள்ளவன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தந்தையின் சிறப்பை யாரும் பேசுவதில்லை.
தந்தையின் சிறப்பையும் உயர்வையும் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறாமல் விட்டுவிடவில்லை. அவருடைய சிறப்பையும் உயர்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியே குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அத்தோடு திருக்குர்ஆனும் தெளிவாகக் கூறியுள்ளது.
“ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ உன் பெற்றோரைப் பேணிக்கொள் அல்லது (பேணாமல்) விட்டுவிடு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 2080) மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல். எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு. அல்லது அதைப் பேணிக்கொள். (நூல்: இப்னுமாஜா 3653)
ஆக, மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம், ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஒரு தந்தைக்கு உயர்வும் சிறப்பும் ஏன்? அவன் தன் பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைக்கின்றான். எவ்வளவு பெரிய துன்பத்தையும் சிரமத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களுக்காக உழைத்துப் பொருளீட்டுகின்றான். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு அவர்களின் நல்வாழ்விற்காகவே வாழ்கிறான். எனவேதான் அவருக்குச் சிறப்பும் உயர்வும் உள்ளன. ஆகவே ஒரு குடும்பம் சிறந்து விளங்கவும் மேம்படவும் பொருளாதாரம் இன்றியமையாதது. அதை ஈட்டித் தருபவர் தந்தையே ஆவார்.
அதனால்தான் அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள். ஏனெனில் அவர்களுள் சிலரைவிட (வேறு) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள், தங்கள் பொருளாதாரத்திலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலும் ஆகும். (04: 34)
ஆகவே, ஒரு தந்தை தன் கும்பத்தாருக்குப் பொருளாதார ரீதியில் உதவிசெய்வதாலும் பெண்களைவிட ஒரு படி உயர்வு அவருக்கு இருப்பதாலுமே அவர் மேன்மையடைகிறார். ஒரு தந்தையின் உயர்வையும் சிறப்பையும் பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம். மூன்று பேரின் பிரார்த்தனை (துஆ) எவ்விதச் சந்தேகமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். 1. அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனை, 2. ஒரு பயணியின் பிரார்த்தனை, 3. ஒரு தந்தை தன் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு தந்தை தம் பிள்ளைக்காகச் செய்யும் பிரார்த்தனை எவ்விதத் தடையுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு தந்தை தம்மைவிடத் தம் பிள்ளை உயர்வையும் சிறப்பையும் பெற வேண்டும் என்று நினைப்பவர். உளத்தூய்மையோடும் உயர் எண்ணத்தோடும் அவர் செய்யும் பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். இத்தகைய உயர்வைப் பெற்றுள்ள தந்தைக்கு இக்காலப் பிள்ளைகள் கொடுக்கும் மரியாதை என்ன? அவரின் பிரார்த்தனையைப் பெறுவதற்காகப் பிள்ளைகள் செய்யும் முயற்சிதான் என்ன? மனத்தளவில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றார்களா?
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளதாவது: (நபியே!) உங்களது இறைவன் தன்னைத்தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படியும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களுள் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்கüடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். (17: 23)
இவ்வசனத்தில் ஒருவரோ இருவருமோ என்று பொதுவாகத்தான் கூறியுள்ளான். தம் இளமை முழுவதையும் தம் குடும்பத்திற்காகவும் தம் பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகவும் செலவழித்த ஒரு தந்தையை அவர்தம் பிள்ளைகள் மிக்க அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்தினால், அவர்கள் தம் தந்தையின் அன்பைப் பெற்றுவிடலாம். ஒருவன் தன் தந்தையின் அன்புக்குரியவனாக ஆகிவிட்டால், அவர்தம் பிள்ளைக்காகச் செய்கின்ற பிரார்த்தனையை உயர்ந்தோன் அல்லாஹ் எவ்விதத்தடையுமின்றி உடனடியாக ஏற்றுக்கொள்கிறான். அது அவனை நினைத்துப் பார்க்க முடியாத உயர்வுக்கும் சிறப்புக்கும் இட்டுச் சென்றுவிடும். அவ்வளவு வலிமையானது ஒரு தந்தையின் துஆ. இதை எத்தனை பேர் விளங்கியிருக்கின்றார்கள். எத்தனை பேர் தம் அன்றாட வாழ்க்கையில் செயல்படுத்துகின்றார்கள். அல்லாஹ்வின் அன்பையும் தந்தையின் அன்பையும் பெற்றுவிட்டால், அவனுக்குச் சொர்க்கம் கிடைப்பது உறுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
முதுமைப் பருவத்தை அடைந்துவிட்ட தந்தையின் அநாதையாக்கப்படுகிறார். அவருடைய தேவைகளை அவர் ஈன்றெடுத்த பிள்ளைகள் நிறைவேற்றுவதில்லை. அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காகப் பிள்ளைகள் பொருளாதார உதவி செய்வதில்லை. ஒருவருக்கு இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள் இருந்தால், நீ கவனித்துக்கொள், நான் கவனித்துக் கொள்ள மாட்டேன் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை வருவதும் அல்லது இவர் மட்டுந்தான் மகனா? உங்களுக்கு இன்னும் இரண்டு மகன்கள் இருக்கின்றார்களே. அவர்களுடைய வீட்டுக்குச் சென்று மூன்று மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அண்ணன் தம்பிகள் கூறுவதும், அல்லது மருமகள் கூறுவதும், குடும்பத்தில் மூத்தவர் கவனித்துக்கொண்டால் மற்றவர்கள் அவரை அறவே கவனித்துக்கொள்ளாமல் தமக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற கோணத்தில் முற்றிலும் புறக்கணித்துவிடுவதும் இன்றைய அன்றாட நிதர்சன உண்மைகள். தன் மனைவியின் தொடர்தொல்லைகளைச் சமாளிக்கமுடியாத ஆளுமைத்திறனற்ற ஆண்கள் அவரைப் புறக்கணிப்பதும், ஒதுக்குவதும், அவரிடம் கடுகடுவெனப் பேசுவதும், இறுதியில் அநாதை இல்லங்களில் சேர்த்துவிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வமும் குழந்தைகளும் உள்ளனர். என்னுடைய தந்தை என் பொருளை(ப் பணத்தை எனக்குத் தெரியாமல்) எடுத்துக்கொள்கிறார் என்று (தம் தந்தையைப் பற்றி) முறையீடு செய்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீயும் உன் செல்வமும் உன்னுடைய தந்தைக்கே சொந்தம் என்று விடையளித்தார்கள். (நூல்: இப்னுமாஜா-2282)
ஒரு பிள்ளை உழைத்துச் சம்பாதிக்கின்ற பணமும் பொருளும் அவனுடைய தந்தைக்கே சொந்தம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து, தந்தையின் உயர்வையும் உரிமையையும் அறியலாம். ஆகவே அவர் தம் பிள்ளையின் பணத்தை, அவனைக் கேட்டுத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
உங்களுடைய பிள்ளைகள் (உடைய செல்வம்) உங்களுடைய உழைப்பில் மிகத் தூய்மையானது. எனவே அவர்களுடைய பொருட்களிலிருந்து நீங்கள் உண்ணுங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா 2283)
முதுமையின் காரணமாகப் பிள்ளையின் உழைப்பில் உண்டுகொண்டிருக்கிறோமே. இது சரியா? முறையா? என்ற உள்ளுணர்வோடும் சஞ்சலத்தோடும் கையறு நிலையில் வாழ்பவர்கள் இனி அவ்வாறு நினைக்கவே தேவையில்லை. உங்களுடைய பிள்ளையின் உழைப்பும் வருமானமும் உங்களுடையதுதான். அதில் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இதை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மருமகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மகன் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று வினவினார். அதற்கவர்கள், அவ்விருவரும் உன்னுடைய சொர்க்கமும், உன்னுடைய நரகமும் ஆவர் என்றுரைத்தார்கள். (நூல்: 3652)
ஒரு பிள்ளைக்கு அவனுடைய பெற்றோரே சொர்க்கமும் நரகமும் ஆவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து பெற்றோரின் உயர்வும் மதிப்பும் ஒவ்வொருவருக்கும் எளிதாகப் புரியும். ஒருவன் சொர்க்க செல்ல வேண்டுமாயின், அவன் தன் பெற்றோரை மதித்து, அவர்களுக்கு நல்ல முறையில் பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்க வேண்டும். அவர்களிடம் கனிவாகப் பேச வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவர்களின் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதன் மூலம் அவர்கள் மகிழ்வுற்று, தம் பிள்ளைக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். அதுவே அவனைச் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் காரணமாக அமையும்.
ஒருவரின் தந்தை இறந்துவிட்டாலும் அவன் தன் தந்தைக்குச் செய்யும் கடமை முடிவதில்லை. அது அவரின் மரணத்திற்குப்பின்னும் தொடர்கிறது. அதாவது ஒருவன் தன் தந்தையின் நண்பர்களைச் சந்திக்கின்றபோது அவர்களிடம் இணக்கமாகவும் நட்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நன்மைகளுள் மிகவும் அதிகமான நன்மை செய்பவன், தன் தந்தை யார்மீது அன்புகொண்டிருந்தாரோ அவர்களிடம் உறவு வைத்துக்கொள்பவர் ஆவார். (நூல்: முஸ்லிம் 4629)
ஒருவன் தன் தந்தையின் நண்பர்களை மதிப்பது தன் தந்தையை மதிப்பதைப் போன்றாகும். “இவருடைய தந்தை என்னுடைய நண்பராக இருந்தார். இவரும் தம் தந்தையைப்போல் மரியாதை தெரிந்த பிள்ளை” என்று போற்றும்போது அது தந்தையின் கண்ணியத்தையும் மதிப்பையும் உயர்த்தும். ஆக, ஒருவர் தம் தந்தையின் மதிப்பையும் கண்ணியத்தையும் உயர்த்த, தம் தந்தையின் நண்பர்களோடு நல்ல முறையில் பழக வேண்டும். இது, தந்தையை மதிக்கும் ஒவ்வொரு தனயனின் கடமையாகும்.
மூன்றைத் தவிர, ஒரு மனிதன் இறந்தபின் அவனுடைய எல்லாச் செயல்பாடுகளும் (உலகத் தொடர்பைவிட்டு) நீங்கிவிடுகின்றன. 1. தொடர்படியான தர்மம், 2. பயனுள்ள வகையில் கற்பிற்கப்பட்ட கல்வி, 3. அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை-என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு தந்தை தம்முடைய பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்க்க தம் வாழ்நாளில் எவ்வளவு பாடுபட்டிருப்பார். அவர் எவ்வளவு சிரமங்களைச் சகித்திருப்பார். அவர் செய்த அத்தனை முயற்சிகளின் பயனாக வளர்ந்த பிள்ளை, தன் தந்தையின் பாவமன்னிப்பிற்காகப் பிரார்த்தனை செய்தால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். ஆக, அதுவும் ஒரு தந்தையின் முயற்சிதான். அவர் செய்த முயற்சியின் பயனைத்தான் அவர் மறுமையில் அடைகிறார்.
ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதும் அதை வளர்க்கச் சிரமப்பட்டு உழைப்பதும் அப்பிள்ளைக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்கப் பாடுபடுவதும் ஒரு தந்தையின் கடமையாகின்றது. அக்கடமையை அவர் செவ்வனே செய்ததால், அவர் இறந்த பின்னரும் நன்மையைப் பெறுகிறார். அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுச் சொர்க்க வாழ்க்கையை அடைகிறார்.
ஆக, அன்பிற்குரியோரே! ஒவ்வொரு தனயனும் தம் தந்தையின் கடின உழைப்பையும் அவர் தன்னை வளர்க்க எடுத்துக்கொண்ட சிரமங்களையும் அதற்காக அவர் அனுபவித்த இன்னல்களையும் நினைவுகூர்ந்து, அவரைக் கண்ணியமாகவும் கனிவாகவும் நடத்துவது கடமையாகும். அத்தோடு தாய்-தந்தை இருவருக்கும் சேர்த்து ஒரு தனயன் எவ்வாறு தன்னிடம் பிரார்த்தனை செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறியுள்ளானோ அதேபோன்று நாம் பிரார்த்தனை செய்வோமாக!
"என் இறைவா! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர்மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்! (17: 24)

22 மணி நேர நோண்பை நோர்ப்பவர்கள் ஐஸ்லாந் முஸ்லிம்கள்


மிக நீண்ட கால அளவை கொண்ட22 மணி நேர நோண்பை இந்த ஆண்டு நோர்ப்பவர்கள் ஐஸ்லாந்தை சார்ந்த முஸ்லிம்கள்
ஒரு நாள் என்பது 24 மணி நேரங்களை கொண்டதாகும் இதில் இந்தியர்களாகிய நாம் வைக்கும் நோண்பு சுமார் பனிரெண்டு மணி நேரத்தில் இருந்து 15 மணி நேரத்திர்கு உள்ளாக இருக்கும்
இதை விட குறைந்த கால அளவில் உண்டான நோண்பை நாம் அனுபவித்திருந்தாலும் இதை விட அதிக கால அளவை கொண்ட நோண்புகளை நாம் அனுபவித்திருக்க வாய்பில்லை
இந்த ஆண்டு மிக நீண்ட கால அளவை கொண்ட நோண்பை ஐஸ்லாந்தை சார்ந்த முஸ்லிம்கள் நோற்று வருகின்றர் அங்கு பகல் 22 மணி நேரமாக உள்ளது
சூரியன் மறைந்து மூன்றே மணி நேரத்திகுள் மீண்டும் உதயமானாலும் சூரியன் உதயமாவதர்கு சுமார் ஒரு மணி நேரத்திர்கு முன்பே சஹ்ரை முடித்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் இங்கு வாழும் முஸ்லிம்கள் 22 மணி நேரம் நோண்பு வைத்தக வேண்டிய அவசியம் இருக்கிறது
இது பற்றி அங்குள்ள ஒரு இஸ்லாமிய மையத்தின் பொறுப்பாளார் கூறும் போது
சூரியன் மறைந்த பிறகு வீட்டிர்கு சென்று நோன்பு திறப்பதர்கும் அல்லது வீட்டிர்கு சென்று சஹர் செய்வதர்கும் போதிய நேரம் இல்லாததால் கடமையான தொழுகைகள் மற்றும் தராவீஹ் தொழுகைகளை நிறைவேற்றும் மையங்களிலேயே இப்தார் மற்றும் சஹர்களை செய்து கொள்கிறோம்
ஜஸ்லாந்து முஸ்லிம்களுக்கு அடுத்த நிலையில் நீண்ட கால அளவை கொண்ட நோண்பை நோற்று கொண்டிருப்பவர்கள் டென்மார்க்கை சார்ந்த முஸ்லிம்கள் இவர்கள் 21 மணி நேரம் நோண்பிருக்கின்றனர்
மிக குறைந்த காலஅளவை கொண்ட நோண்பை இந்த ஆண்டு பெற்றவர்கள் அர்ஜென்டினாவை சார்ந்த முஸ்லிம்கள் சுமார் ஒன்பதுஅரை மணி நேரம் மட்டுமே நோண்பு வைக்கின்றனர்


Saturday, 20 June 2015

மார்க்க சொற்பொழிவு நேரடி ஒலிபரப்பு

கல்முனை மஸ்ஜிதுல் பத்ரிய்யாஹ் பள்ளிவாயளில் நாள் தொரும் 11.00 தொடக்கம் 12 .00 வரை  நடைபெறும் புனித றமழான் விசேட மார்க்க சொற்பொழிவு நேரடியாக எமது இணையதளத்தின் மூலம்
நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகின்றது . நீங்களும் இந்த முகவரி மூலம் நேரடியாக பார்க்கலாம்

Eravur Yoosuf Moulavi


Thursday, 18 June 2015

கோழிக்கு பதிலாக வறுத்த எலி?

கே.எப்.சி.-யில் கோழிக்கு பதிலாக வறுத்த எலி? பேஸ்புக்கில் வைரலாக பரவும் படம் - மறுக்கும் கே.எப்.சி. நிர்வாகம்

கே.எப்.சி.-யில் கோழிக்கு பதிலாக வறுத்த எலி? பேஸ்புக்கில் வைரலாக பரவும் படம் - மறுக்கும் கே.எப்.சி. நிர்வாகம்

உணவு விஷயத்தில் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, எந்தவித துரித உணவும் பாதுகாப்பானது இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. சமீபத்தில் கே.எப்.சி.-யில் கோழிக்கு பதிலாக வறுத்த எலி பரிமாறப்பட்டதாக பேஸ்புக்கில் வைரலாக ஒரு படம் பரவி வருகிறது.  

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கே.எப்.சி. உணவகத்தில் வறுத்த கோழி கேட்டுள்ளார் டேவோர்ஸ் டிக்ஸன் என்பவர். ஆனால் அவருக்கு வந்த கோழியோ நன்றாக வறுக்கப்பட்ட எலியை போன்று இருந்துள்ளது. இது பற்றி உணவகத்தின் மேலாளரிடம் தான் விளக்கம் கேட்டதாகவும் அவரும் அதை எலி என்று ஒத்துக்கொண்டதாகவும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டிக்ஸன். 

அந்த புகைப்படத்தை இதுவரை ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். ஆனால் இது பற்றி விளக்கம் அளித்துள்ள கே.எப்.சி. ”இது பற்றி தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் அவரது குற்றசாட்டை நிரூபிக்கும் ஆதாரஙகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எங்களுக்கு அனுப்பபடும் கோழிகள் பலவடிவங்களில் வருவது வாடிக்கையானது தான். இந்த குற்றச்சாட்டை வைத்துள்ள டேவோர்ஸ் டிக்ஸனை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஆனால் அவர் ஒத்துழைக்க மறுக்கிறார்” என தெரிவித்துள்ளது. 

டேவோர்ஸ் டிக்ஸன் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் அதை எலி என்றுதான் சொல்வார்களே தவிர ஒரு போதும் கோழி என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம்.