السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 21 May 2024

மத்ரஸா கல்வியின் முக்கியத்துவமும் அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய மாற்றங்களும்.



மத்ரஸா கல்வியின் முக்கியத்துவமும் அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய மாற்றங்களும்.

 முஸ்லிம் சமூகத்தில் குர்ஆன் மத்ரஸா கல்வியின் முக்கியத்துவமும் அதில் ஏற்படுத்தப்பட வேண்டிய புதிய மாற்றங்களும். 


இஸ்லாமிய நாகரீக வரலாற்றை நாம் எடுத்து நோக்கினோமானால் அது காலமாற்றத்திற்கு ஏற்றால் போல் தன்னை அல்குர்ஆன் ஸூன்னாவிற்கு முரண்படாதவாறு அழகியல், கலாச்சாரம், அறிவியல், அரசியல், பொருளியல், வரலாறு மற்றும் சமூகவியல் என பல துறைகளிலும் இயைந்து கெடுத்து மாற்றமடைந்தது செல்வதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் தான் இன்று வரை உலக வரலாற்றில் எத்தனையோ நாகரிகங்கள் தோன்றி வளர்ச்சியடைந்து அழிவுற்றாலும் 14 நூற்றாண்டுகளைக் கடந்தும் இஸ்லாமிய நாகரிகம் தனது நெகிழும் நெகிழாத் தன்மையின் ஊடாக தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது  வருவதை நாம் காணலாம்.


எமது நாகரிகத்தின் வளர்ச்சி பாதையில் மஸ்ஜிதுகளின் பங்கு என்பது என்றும் மறக்க முடியாத தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டு வருகின்றது. 


இஸ்லாமிய வரலாற்றில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்திய நிலையமாகவே இருந்து வந்துள்ளது என்பதை வரலாற்றினுடா நாம் அறிய முடிகின்றது. அதாவது தொழுகைத் தளமாக, நீதிமன்றமாக ,கல்விக்கூடமாக பொது விடயங்கள் கலந்துரையாடப்படும் மத்திய தளமாக, திருமண மண்டபமாக ஒழுக்க சீர்திருத்தக் கூடமாக என பல கோணங்களிலும் முஸ்லிம் சமூகத்துடன் மிக நெருங்கிய ஒன்றாகவே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


காலம் மாற்றம் மஸ்ஜிதுகள் முஸ்லிம் சமூகத்துடன் கொண்டுள்ள தொடர்புகளில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தினாலும் ஆன்மிக கல்வியை போதிப்பதிலும் பெற்றுக் கொள்வதிலும் எந்த ஒரு புதிய நடைமுறைகளை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இவ் ஆன்மீக கல்வியை பள்ளிவாயல்கள் குர்ஆன் மத்ரஸாக்கள், குல்லியாக்கள், கலாபீடங்கள் போன்ற தளங்களின் ஊடாகவும் வெள்ளிதேறும் குத்பா உரைகள் , கந்தூரிகள் ,மீலாத் விழாக்கள் மற்றும் ரமழான் விஷேட நிகழ்வுகள் என பல ஆன்மீக நிகழ்ச்சித் திட்டங்கள் ஊடாகவும் வழங்கி வருகின்றன.


இதில் குர்ஆன் மத்ரஸா கல்வி என்பது முஸ்லிம் சமூகத்தின் குழந்தைகளின் ஆரம்ப ஆன்மீக கல்விக் கூடமாக திகழ்கின்றது.


இக்கூடத்தை இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரதேச மக்களும் வெவ்வேறு சொல்லாடல்களை கொண்டு அடையாளப்படுத்துவது இயல்பு அதில் ஓதர, ஓதல் பள்ளிக்கூடம் ,மரைக்கார் பள்ளி போன்ற சொற்கள் மிகவும் பிரபல்யமானவையாகும்.


இக்குர்ஆன் மத்ரஸாக்கள்  எமது குழந்தைகளின் ஆன்மீக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பல பங்களிப்புக்கள் மற்றும் அடிப்படைகளையும் வழங்கி வருவதை நடைமுறை வாழ்வின்ஊடாகவே நாம் இயல்பாக காண முடியும். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.


சிறுபிள்ளைகளுக்கு அரபு எழுத்துக்களை கற்பித்தல் மற்றும் குர்ஆனை முறைப்படி ஓதப் பழக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும் பிரதான தளமாக காணப்படுகின்றன.


நல்ல ஒழுக்க விழுமியங்கள் போதிக்கப்படும் தளமாக காணப்படுகின்றன. 


தொழுகை சம்பந்தமான ஆரம்ப பயிற்சி வழங்கப்படுவதுடன் குறிப்பாக தொழுகைகளில் ஓதப்படும் ஓதல்கள் சம்பந்தமான விளக்கங்களும் இங்கு கற்பிக்கப்படுகின்றன.


நபி (ஸல்)அவர்கள் பற்றியும் அவர்களது குடும்பம் மற்றும் ஏனைய இறை நேசர்களின் சிறுவயது வாழ்வு மற்றும் அவர்களுடைய நற்பண்புகள் தொடர்பான வரலாற்று சம்பவங்கள் போதிக்கப்படுகின்றன.


சிறு பிள்ளைகளுக்கு இடையிலான விட்டுக்கொடுப்பு அன்பு சகோதரத்துவம் போன்ற சமூகப் பண்புகள் கற்பிக்கப்படும் தளமாகவும் திகழ்கின்றன. 


இஸ்லாமிய கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்ற கஸீதாக்கள் மௌலிதுகள் போன்றன கற்பிக்கப்படுகின்றன.


பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்ற நடைமுறை வழிகாட்டல்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 


ஆரம்பகால முதல் இன்று வரை இவ்வாறு பல கோணங்களில் சிறுவர்களின் ஆன்மீக கல்வியின் அடிப்படைத் தளத்தில் பல பங்களிப்புகளை குர்ஆன் மத்ரஸாக்கள் செய்தாலும் நடைமுறையில் அவற்றின் கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையும் இன்று காண முடிகின்றது. 


பொதுவாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் தோற்றம் பெற்றுள்ள மாணவர் மையக் கல்வியை விருத்தி செய்து  வளர்ச்சியடையச் செய்வதற்கான இயலுமை இன்றைய குர்ஆன் மத்ரஸா கல்வி முறையில் இல்லை என்ற விமர்சனம் பிரதானமாக முன் வைக்கப்படுகின்றது. அதாவது குர்ஆன் மத்ரஸாக்களின் கல்வியானது கற்பிக்கும் ஆசிரியர்களின் வார்த்தைகளை மாணவர்கள் செவிமடுத்து மனனம் செய்து மீண்டும் கூறுகின்ற ஆசிரியர் மையக் கல்வியை ஆதரிப்பதாகவே காணப்படுகின்றது. இந்நிலை மாணவர்களின் சிந்தனை ஆற்றல்  விருத்தியை கட்டுப்படுத்துவதாக அமையப்பெற்றுள்ளது.


பள்ளிவாயில்களின் நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படுகின்ற குர்ஆன் மத்ரஸாக்களில் நன்கு அரபு மொழியில் புலமை பெற்ற ஆசிரியர்கள் பணியாற்றுகின்றார்கள் அதேபோல் சாதாரணமாக குர்ஆனை ஓதத் தெரிந்த லெப்பை என்று அழைக்கப்படுகின்றவர்களும் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றார்கள்.


இதில் அரபு மொழியில் புலமை பெற்ற ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அல்குர்ஆனை கற்பிக்கும் போது அல்குர்ஆனின் பொருள், யதார்த்தம் போன்றவற்றை உணர்த்தும் வகையில்  தனது கற்பித்தலை மேற்கொள்வார்கள் ஆனால் அரபு மொழியில் புலமை பெறாத லெப்பை ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்கள் பிள்ளைகளுக்கு குர்ஆனை கற்பிக்க முற்படுகின்ற போது அதை வெறுமனே ஓதுவதற்கான அறிவை மாத்திரமே வழங்குபவர்களாக காணப்படுவார்கள். இதனால் மாணவர்கள் அல்குர்ஆனின் அடிப்படையான மொழி அர்த்தத்தை கூட விளங்கிக் கொள்ள முடியாத சூழலுக்கு தள்ளப்படுவதை நாம் காணலாம்.


பெரும்பாலான குர்ஆன் மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தை பொருத்தவரை அது பழமையானதாகவும் புராதன விடயங்களை மாத்திரம் உள்ளடக்கியதாகவும் இன்று வரை காணப்படுகின்றது. மாறாக நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றால் போல் பாடத்திட்டத்தில் உள்ள விடயங்களை மீழ் பரிசீலனை செய்வதென்பது அசாத்தியமான ஒன்றாகவே இன்று வரை தொடர்கின்றது. இதனால் மாணவர்கள் கிளிப்பிள்ளைகளைப் போலவே வடிவமைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பெரும்பாலான மத்ரஸாக்களின் பௌதீக வளங்களை நாம் நோக்குகின்ற போது ஏனைய கல்விகளுக்காக அமைக்கப்படுகின்ற வசதியான கட்டிடங்கள் போல் அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக இருந்தாலும் வறுமையான பிரதேசமாக இருந்தாலும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு எவ்வித கட்டடங்களும் முறையாக அமைக்கப்பட்டுவதில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும்.


நாம் கற்ற காலங்களில் இருந்து இன்று வரை பெரும்பாலான குர்ஆன் மத்ரஸாக்களின் கட்டடங்கள் ஓலை குடிசைகளாகவும், சிதைந்த ,இடிந்த அழுக்கடைந்தாகவுமே காணப்படுவதுடன் அங்கு பயன்படுத்தப்படுகின்ற தளபாடங்கள் கிழிந்த அழுக்கடைந்த பாய்களாகவே காணப்படுகின்றன.


அதேபோல் அங்கு  கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களது அன்றாட ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்கு கூட போதுமானதாக இன்று வரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இவ்வாறான சூழல்கள் குர்ஆன் மதரஸா மாணவர்களின் சுகாதாரச் சூழல் கல்வியின் தரம் போன்றவற்றில் செல்வாக்கு செலுத்துவதை அறிய முடிகிறது. 


குர்ஆன் மத்ரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் சிறுவர்களாகவே காணப்படுகின்றனர். இதனால் அவர்களுடைய உளவியல் என்பது பெரியவர்களின் உளவியலில் இருந்து மாறுபட்டது. எனவே சிறுவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்ற சிறுவர் உளவியல் கற்ற ஆசிரியர்கள் குர்ஆன் பாடசாலைகளில் ஆசிரியர்களாக அமர்த்தப்படுவது இன்று அரிதாகவே காணப்படுகின்றது . இந்நிலை குர்ஆன் பாடசாலை மாணவர்களின் உள ஆரோக்கியத்தில் பாதிப்பு செலுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.


இவ்வாறு பல கோணங்களில் குர்ஆன் மத்ரஸாவில் செயற்பாடுகள் நவீன காலத்தில் விமர்சிக்கப்பட்டு வந்தாலும் அதன் தேவையும் முக்கியத்துவமும் சமூகத்தில் எக்காலமும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது 


எனவே  நவீன மாற்றங்கள் சிலவற்றை குர்ஆன் மத்ரஸாவின் கல்வித்திட்டத்தில் ஏற்படுத்துவதன் ஊடாக ஒரு பாரிய ஆன்மீக கல்விப் புரட்சியை எமது இளம் சமூகமட்டத்திலிருந்து மேற்கொள்ள முடியும் என்பது நம்பத்தக்கதாகும்.


இதன் அடிப்படையில் பின்வரும் சில மாற்றங்களை குர்ஆன் மத்ரஸாக்களில் இற்றைப்படுத்துவதன் ஊடாக வினைத்திறனான மாற்றங்களை நாம் உணரலாம். 


குர்ஆன் மத்ரஸாவின் அமைப்பிலும் சூழலிலும் மாற்றங்களை கொண்டு வருதல் வேண்டும். அதாவது சீரான கட்டடங்கள் மற்றும் அழுக்கடைத்த தளபாடம் மாற்றி அமைக்க வேண்டும்.


பாடத்திட்டம் முழுமையாக மாணவ மைய கல்வியை போதிப்பதாகவும் நடைமுறை சூழலுக்கு ஏற்றால் போல் மாற்றி அமைக்கப்பட கூடியதாகவும் அமைய வேண்டும்.


வருடத்தில் ஒருமுறை மாத்திரம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.


மத்ரஸாக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களின் அறிவுத்தரத்தை அதிகரிப்பதுடன் சிறுவர் உளவியல் சம்பந்தமான கல்வி அவர்களுக்கு போதிக்கப்படல் வேண்டும்.


கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பொருத்தமான போதியனமான ஊதியம் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 


தொழில்நுட்ப சாதனங்கள் ஊடாக மாணவர்களை வழிப்படுத்த ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும். 


மாணவர்களுக்கு குர்ஆன் மத்ரஸா கல்வியை பாடசாலை கல்வியை போல இலகுவாக போதிக்க முயற்சிக்க வேண்டும். 


குர்ஆன் மதரஸாக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் உரிய முறையில் தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும். 


எனவே சுருக்கமாக கருதினால் இஸ்லாமிய நாகரிகத்தின் பெரும்பாலான துறைகள் காலமாற்றத்திற்கு ஏற்றால் போல்‌ இயைபடைந்து செல்வதே போல குழந்தைகளின் ஆன்மீகக் கூடமான குர்ஆன் மத்ரஸா கல்வியை நவீன சமூகத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் மாற்றி அமைப்பதனுடாக மத அடிப்படையிலான ஆரம்பக் கல்வியை எமது சமூக மாணவர்களுக்கு வினைத்திறனாக வழங்க முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


உசாத்துணைகள் 

ஜெமில் எஸ்.எச்.எம்,(1990), கல்வி சிந்தனைகள், தமிழ் மன்றம், கொழும்பு.


அல்- இன்ஷிராஹ் , பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பேராதனைப் பல்கலைகழகம்.


Hans Raj Bhatia. 1991. General Psychology. Oxford & IBH Publishiry co. pvt. Ltd. New Delhi. 

 

Mangal. S.K. 2006. General Psychology. Sterling Publishers pvt. Ltd. New Delhi.


M.L Lathfan Rosin 

Department of Political Science 

Faculty of Arts 

University of Peradeniya.