السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 1 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 202

Moulavi Sajith musthafi Eravur
கலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார்.
நேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் தான் தவறொன்றும் செய்ய வில்லையே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள் செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். என்று கேட்டார்.
உடனே, உமர் {ரலி} அவர்கள் சற்றேரக்குறைய 12 வயதே ஆன அச் சிறுவரை தம் அருகே அழைத்து, உமர் {ரலி} அவர்கள் ”தலையை தடவிக் கொடுத்து, முதுகை தட்டிக் கொடுத்து இப்படித்தான் உண்மையை, சத்தியத்தை யார் எதிரிலும் சொல்லத் தயங்கிடக் கூடாது. துணிவுடன் கூற வேண்டும். என்று பாராட்டிக் கூறினார்கள்.
அச் சிறுவர் வேறுயாருமல்ல அபூபக்ர் {ரலி} அவர்களின் மகள் அஸ்மா {ரலி} அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்கள் தான்.
பின் நாளில் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை மிகத் துணிவோடு எதிர் கொண்டு போராடிட, உமர் {ரலி} அவர்களின் பாராட்டல் தான் உந்து சக்தியாக இருந்ததோ என்னவோ ஹஜ்ஜாஜின் எந்தவொரு உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் பயப்படாமல் “அஞ்சா நெஞ்சத்துடன்” தொடர்ந்து போராடினார்கள்.
வரலாற்றில் அடக்கு முறையாளர்களை நடுங்கவைத்தவர்கள் எனும் ஒரு சிறப்பியலே இருக்கிறது. அதில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு தனியோரு புகழுக்குச் சொந்தக் காரராக மிளிர்கிறார்கள்.
ஹஜ்ஜாஜ் ஹரம் ஷரீஃபை முற்றுகையிட்டிருந்த வரலாற்றின் மிக மோசமான தருணம் அது.
எப்படியும் தாம் ஷஹீதாகி விடுவோம் என்பதை விளங்கியிருந்த அப்துல்லாஹ் {ரலி}, நடுநிசியில் தம் தாயார் அஸ்மா {ரலி} அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள்.
தாயாரிடம் அவர் ” நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! என்னை விட உன்னைப் பற்றி நீயே நன்கறிவாய்! நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய்! ஆதலால் தான் மக்களையும் சத்தியத்தின் மீது ஒன்றினைத்து இருக்கின்றாய்!
எனவே எதை நீ சத்தியமென நீ உறுதி கொண்டுள்ளாயோ, அதில் மரணம் வரும் வரை நிலைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே! பனீ உமைய்யாக்களின் சிறுவர்கள் முட்டுக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்று நீயும் இருந்து விடாதே!
ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் – க்கு எதிரான உன் போராட்டம் உலகாதாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமேயானால், மகனே நன்றாக விளங்கிக் கொள். பூமியில் நடமாடுபவர்களில் நீயே மிக மிகக் கெட்டவன்.
உன்னையும் அழித்து, உன்னை நம்பி உன் பின்னால் அணிதிரண்டு உனக்கு ஆதரவாய் நிற்கிற நம் மக்களையும் கொன்றொழித்த மாபாவியாகி விடுவாய்!” என்று கூறினார்கள்.
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் தம் தாயார் அஸ்மா {ரலி] அவர்களை நோக்கி “ எனதருமைத் தாயே! நான் மரணத்தைக் கண்டு பயந்தோ, உலகில் வாழ வேண்டும் என ஆசைப் பட்டோ உம்மைக் காண வர வில்லை.
மாறாக, ”ஒரு வேளை இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் இறந்து போய் விட்டால் உங்களின் நிலை என்னவாகுமோ? நீங்கள் தைரியம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, ஆறுதல் வார்த்தைக் கூறிச் சென்றிடவே வந்தேன்.
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாயே! இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் உலகாதாயம் எனக்கில்லை. எனக்கு இந்த உலக சொகுசின் மீது எப்போதுமே பற்றிருந்ததில்லை.
அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மீறிடும் துணிவு ஒருக்காலத்திலும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஒரு போதும் என்னை நம்பி என் பின்னால் அணி திரண்டு நிற்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றிடவோ, துரோகமிழைத்திடவோ மாட்டேன்! என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே!” என்றார்.
தம் மகன் சத்தியத்தின் மீது வார்க்கப்பட்ட இரும்பு கோட்டையாய் நிலைத்திருப்பதை உணர்ந்த அஸ்மா {ரலி} அவர்கள் “ மகனே! சத்தியமாக நான் உன்னை குறித்து நல்ல முடிவையே ஏற்றிருக்கின்றேன்.
ஒன்று நான் உனக்கு முன் இறந்து போவேன், அல்லது எனக்கு முன் நீ இறந்து போவாய்! பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா! என் மகனுக்கு அருள் செய்வாயாக! அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக!”
”அவர் என்னிடமும் என் கணவரிடமும் எப்படி கருணையுடன் நடந்து கொண்டாரோ, அது போன்றே நீயும் அவருக்கு கருணை புரிவாயாக!”
”யாஅல்லாஹ்! உன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நான் முழுமையாக நம்புகின்றேன்! அவர் விஷயத்தில் நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக் கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக!”
என் மகன் விஷயத்தில் நான் மேற்கொள்ளும் பொறுமைக்கு பகரமாக, நன்றியாளர்களுக்கும், பொறுமையாளர்களுக்கும் நீ கொடுக்கும் நற்கூலியை வழங்குவாயாக!” என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள்.
தன் மகனை அருகே அழைத்த அஸ்மா {ரலி} அவர்கள் உச்சி முகர்ந்து வழியனுப்புகிற போது தம் மகன் கவசம் அணிந்திருப்பதை உணர்ந்தார்கள்.
உடனே அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! கோழைகளைப் போல கவசம் அணிந்து இருக்கிறாயே! உன் பாரம்பரியம் என்ன? உன் தந்தை சுபைர் {ரலி} அவர்களின் வீரம் என்ன? உன் தாயின் தந்தையான அபூ பக்ர் {ரலி} அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன? ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ? கழற்றி தூர எறி! என்றார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் “சாவிற்கு அஞ்சி நான் கவசம் அணியவில்லை தாயே! நான் எதிரிகளின் கையில் சிக்குண்டால் என்னை சல்லடையாக ஆக்கி விடுவார்கள்.
அதை ஏற்றுக் கொள்கிற மன நிலை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. தள்ளாத வயதில் என் மரணத்தின் மூலம் உங்களை ரணப்படுத்த விரும்பவில்லை
இதோ! உங்களின் விருப்பப்படியே கவசம் இன்றி களம் காண்கிறேன் தாயே! உங்களது கையால் நீங்களே தூக்கி எறிந்து விடுங்கள்.” என்று கூறி கவசத்தை கழற்றி தாயாரிடம் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றார்கள்.

Moulavi Sajith musthafi Eravur 

Sajith musthafi Eravur