அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க், அல் இமாம்
ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமிய உலகின் மாபெரும் அறிஞரும் ஆன்மிக முன்னோடியும் ஆவார்கள்.
இவர்கள் கண்மணி முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரக்குழந்தைகளில் மிக முக்கியமானவர்களாவார்கள்.
இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் (699 – 765) இஸ்லாமிய வரலாற்றின் ஒளி தரும் நக்ஷத்திரமாக விளங்குகின்றார்கள்.
நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரையிலிருந்து வந்த இவர்களது அறிவு, ஆன்மிகம் மற்றும் தத்துவங்கள், இஸ்லாமிய சமூகத்தையே மாற்றியமைத்த பெருமைமிகு சொத்து ஆகும்.
இமாம் அலீ மற்றும் ஃபாத்திமா பின்த் முகம்மது (ரலி) அவர்களது நேரடி வம்சத்தில் பிறந்த இவர்களுக்கு,
ஷியா மற்றும் சுன்னி சமுதாயங்களின் மதிப்பும் மரியாதையும் உச்சகட்டமாக உள்ளது.
பிறப்பு மற்றும் குடும்பம்
இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
699ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி, மதினாவில் பிறந்தார்கள்.
புகழ்பெற்ற அறிஞரும் ஆழ்ந்த ஞானியுமான முகம்மது அல்-பாகிர் றழியல்லாஹு அன்ஹு, உம் ஃபுர்வா பின்த் காஸிம் றழியல்லாஹு அன்ஹா ஆகியோரின் அன்புப் புதல்வராகவும் பிறந்த இவர்களின் குடும்பம், இஸ்லாமிய உலகின் அசைக்கமுடியாத அடிப்படையாக விளங்குகிறது.
அவர்களது குடும்பம் இஸ்லாமிய சமூகத்தில் ஆன்மிகமாகவும் அறிவியல் அடிப்படையிலும் விளங்கிய சிறப்பான குடும்பமாக இருந்து வருகின்றது.
இவர்களது மனைவிகள் ஃபாத்திமா பின்த் அல்-ஹுசைன் மற்றும் ஹமீதா அல்-பர்பரியா ஆகியோரும், பிள்ளைகள் (மூஸா அல்-காழிம், இஸ்மாயில் றழியல்லாஹு அன்ஹுமா உள்ளிட்டோர்) இவர்களது அறிவையும் ஞானத்தையும் பின் தொடர்ந்து உலகின் வெளிச்சத்துக்கு ஊன்றுகோளாயிருந்தனர்.
பிள்ளைகள்
இஸ்மாயில்
அப்துல்லாஹ்
மூஸா அல்-காழிம்
இஸ்ஹாக் அல்-முமின்
முஹம்மது
அல்-அப்பாஸ்
அலி அல்-அரீழி
அபூ பக்கர்
அஸ்மா
பாத்திமா
ஆயிஷா
றழியல்லாஹு அன்ஹும்
அறிவியல், ஆன்மிகம் மற்றும் தத்துவம்
இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவியல், ஆன்மிகம், மற்றும் தத்துவ துறைகளில் தனித்தன்மை கொண்டவர்களாக திகழ்கின்றார்கள்.
1. இஸ்லாமிய ஃபிக்ஹும் மற்றும் ஹதீஸும் – அவர்களது ஆழ்ந்த கருத்துக்கள் மற்றும் பகுத்தாய்வுகள் இன்றளவும் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2. கீமியாவியல் மற்றும் அறிவியல் அறிவுகளில் புகழ்பூத்து விளங்கும்– ஜாபிர் இப்னு ஹியானின் ஆசானாக இருந்து, கீமியாவின் அடிப்படைகளை அமைத்துத் தந்தவர்களாக இமாம் அவர்கள் இருக்கின்றார்கள்.
குறிப்பு:-
கீமியா அறிவு என்பது மாறுபட்ட பொருட்களை மாற்றும் அல்லது சுரக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு பண்டைய அறிவியல் மற்றும் தத்துவம் ஆகும்.
கீமியா என்ற சொல் அரபிய சொல் "அல்-கீமியா" என்பதிலிருந்து பெறப்பட்டது.
இது உலோகங்களைச் சுத்திகரித்து பல்வேறு வடிவங்களில் மாற்றுவதற்கான முயற்சிகளையும், வாழ்க்கையின் ரகசியங்களை ஆராய்வதையும் உள்ளடக்கியது.
கீமியா அறிவு இன்று நவீன வேதியலின் துறைகளில் அடிப்படையாக இருந்து வருகிறது.
அறிவியல் ஆராய்ச்சியிலும் தத்துவ சிந்தனைகளிலும் கீமியாவின் தாக்கம் என்றும் நிலைத்துள்ளது.
3. தத்துவம் மற்றும் மெய்யியல் துறையில் – கலாநிதி மட்டுமின்றி தத்துவ ஞானத்தின் ஒளியையும் பரப்பிய சிற்பியாக இமாம் அவர்கள் விளங்குகின்றார்கள்.
ஆன்மிக முன்னோடி
இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் சத்தியம், நேர்மை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக 'அஸ்ஸாதிக்' (சத்தியவான்) என்ற பட்டத்தைப் பெற்றார்கள்.
அவர்கள் கூறிய ஆன்மிகக் கருத்துகள் மட்டுமல்லாமல், சமூகத்தையும் தன்னிலை மாற்றும் அளவுக்கு மையமாக அமைந்தது.
அறிவுப்பள்ளியும் புகழ்பெற்ற மாணவர்களும்
அவர்கள் உருவாக்கிய அறிவுப்பள்ளியில் இமாம் அபூ ஹனீஃபா, மாலிக் இப்னு அனஸ் றழியல்லாஹு அன்ஹுமா போன்ற அறிவியல் முன்னோடிகள் கற்றனர்.
அவர்கள் உருவாக்கிய கல்வி அமைப்புகள் இஸ்லாமிய சமூகத்தில் உள்வாங்கப்பட்டு பல தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாக உள்ளன.
அன்னாரின் மறைவுப் புகழ்
இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்
765 ஆம் ஆண்டில் மதினாவில் வபாதானார்கள்.
அவர்கள் மதீனாவின் "ஜன்னதுல் பகீஃ" மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அவர்களது மறைவு இஸ்லாமிய உலகிற்கு பெரிய இழப்பாக அமைந்தது.
இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்இஸ்லாமிய உலகிற்கு ஒளி காட்டும் மாபெரும் நட்சத்திரமாக இருந்து வருகிறார்கள்.
அறிவு, ஆன்மிகம், மற்றும் சமூக நலனுக்காக அவர்கள் அர்ப்பணித்த வாழ்வு இன்றளவும் ஏராளமான மனிதர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.
அவர்களது சாதனைகள், தத்துவங்கள், மற்றும் பாங்கான வாழ்வியலால் அவர்கள் இஸ்லாமிய உலகின் மறையாத ஒளிச்சுடராக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எமதூர் காத்தான் குடியில் பத்ரிய்யா
ஜும்ஆ பள்ளிவாயலில் றஜப் மாதம் பிறை 22ல் இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் இனிப்பு பூரியானோ சமைத்து அவர்கள் பெயரிலான மெளலித் ஷரீப் வெகு சிறப்பாக ஓதப்பட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.
இவ்வாறு செய்வது இமாம் ஜஃபருஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் காட்டித்தந்த செல்வமும், செளிப்பும் உண்டாகும் வழியேயாகும்.
அதை நாமும் பின்பற்றி சீமான்களாவோம்.
அறியாமை இருளகற்றும் அறிவொளி நீர்,
அருள்வழி தெளிவூட்டும் ஆன்மச் சுடர் நீர்,
தத்துவமாம் தீபம் தொலைவூடும் பாதை,
தரும நெறி காட்டும் தாஹா நபிகளின் வசம் நீர்
புரியாத பொருளிலும் தெளிவூட்டினீர்,
புரவலராய் புவியெங்கும் பிரகாசித்தீர்,
சொற்கதையின் ஓர் உச்சம் அன்றி,
சோலைமலராய் நெஞ்சில் நிறைந்தீர்
மூலம் : பஸ்மில் ரப்பானி
.