السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday 9 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 209

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 209
ல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் நபித்தோழர்களோடு அமர்ந்திருக்கும் ஒரு சபையில் “எனக்கு சுவனம் காட்டப்பட்டது அப்போது அதில் நான் நுழைந்தேன். எனக்கு முன்னால் யாரோ ஒருவர் நடந்து செல்லும் காலடி சப்தத்தை நான் கேட்டேன். அப்போது நான் நடந்து செல்வது யார்? என்று கேட்டேன். அது ருமைஸா பிந்த் மில்ஹான் (ரலி) என்று கூறப்பட்டது” எனக் கூறினார்கள்.
உலகில் வாழும் காலத்திலேயே சுவனத்தின் சோபனத்தைப் பெறும் பேறு பெற்ற அப்பெண்மனி நபித்தோழியர்களில் உம்மு ஸுலைம் என்று வரலாற்றில் அறியப்படுகிற அனஸ் (ரலி) அவர்களின் தாயார் ருமைஸா பின்த் மில்ஹான் (ரலி) அவர்கள் ஆவார்கள்.
மிகச் சாதாரணமாக இப்பேற்றை அவர்கள் பெறவில்லை. இஸ்லாமிய வாழ்வில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு தியாகங்களை மேற்கொண்டார்கள்.
எனினும், வரலாற்று ஆசிரியர்கள் இவர்களைப் பற்றி குறிப்பிடும் போது “அவர்கள் பேசினால் அறிவார்ந்த முறையில் பேசுவார்கள். பேச்சின் துவக்கமும், முடிவும் உயர்ந்த இலக்கை நோக்கியதாக அமைந்திருக்கும். அல்லாஹ்வும், அவன் தூதரும் பொருந்திக் கொள்கிற பேச்சையே அவர்கள் பேசுவார்கள்.” என்று கூறுவார்கள்.
ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாக்கியசாலி. இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விரும்பாத இவர்களின் கணவர் மாலிக் பின் நஜர் உம்மு ஸுலைம் அவர்களிடம் கோபித்துக் கொண்டு ஷாமிற்குச் சென்று விட்டார்.
இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவர் இறந்தும் விட்டார். இப்போது, அபூதல்ஹா என்பவர் உம்மு ஸுலைம் அவர்களை திருமணம் செய்ய விரும்புவதாக தூது அனுப்பினார்.
அபூதல்ஹாவை நேரில் வரவழைத்த உம்மு ஸுலைம் அவர்கள் அவரிடம் “அபூதல்ஹாவே! உம்மை திருமணம் செய்யும் விஷயத்தில் எமக்கும் உளப்பூர்வமான ஆசை உண்டு. ஆனால், நான் அல்லாஹ்வையும், அல்லாஹ்வின் தூதரையும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன்.
ஆனால், நீங்களோ இறை நிராகரிப்பாளராக இருக்கின்றீர்கள். இந்நிலையில் என்னை நீங்கள் திருமணம் செய்வதற்கு சாத்தியமே இல்லை.
அபூதல்ஹாவே! நீங்கள் என்றாவது உங்கள் கடவுளர்களைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததுண்டா? நீங்கள் வணங்குகின்ற கற்சிலையின் உண்மை நிலையைப் பற்றி ஆராய்ந்ததுண்டா?
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! எங்கோ ஒரு நிலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பாறையை இன்ன கோத்திரத்தைச் சார்ந்த ஒரு ஹபஷீ அடிமையான ஒரு சிற்பியல்லவா சிலையாக வடித்திருக்கின்றான்?
நீங்கள் அதைப் போய் தெய்வமாக, காக்கும் கடவுளாக வணங்குகின்றீர்களே? எந்தச் சக்தியும் இல்லாத, எந்த வலிமையும் கொண்டிராத இந்த கல்லுக்கு முன்னால் தலைசாய்த்து வணங்குகின்றீர்களே? உங்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று கூறினார்கள்.
இதைக் கேட்ட அபூதல்ஹா தவறென்பது போல் ஆம் என்று தலையசைத்தார்.
மீண்டும், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் ”என்னை நீங்கள் திருமணம் செய்ய வேண்டுமானால் அந்த அசுத்தத்திலிருந்து மீண்டு, பரிசுத்தமான இஸ்லாத்திற்கு வருவதைத் தவிர வேறு முகாந்திரமே இல்லை” என்று திட்ட வட்டமாகக் கூறி அனுப்பி வைத்தார்கள்.
உம்மு ஸுலைம் அவர்களின் ஒவ்வொரு கேள்வியும் அவரை துளைத்தெடுத்திருக்க வேண்டும். மூன்று நாள் கழித்து உம்மு ஸுலைம் (ரலி) அவர்களைச் சந்தித்து தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
ஆம்! இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அபூதல்ஹா (ரலி) அவர்கள். அடுத்து அவர்களைத் திருமணம் செய்ய வேண்டும். மஹர் கொடுக்கக் கூட வழியில்லாத வறியவராக விழி பிதுங்கி அபூதல்ஹா (ரலி) நின்ற போது உங்கள் ஷஹாதா கலிமாவையே நான் மஹராக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறி நெகிழச் செய்தார்கள்.
( நூல்: உஸ்துல் காபா, தபகாத் இப்னு ஸஅத் )
இஸ்லாமிய வரலாற்றில் கலிமா ஷஹாதாவையே மஹராகப் பெறும் பாக்கியம் உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்கு மாத்திரமே கிடைத்தது.

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 209