எங்கட ஊருல நிறையப்பேருட வெளிக்கதவுப்படி ரோட்டுலான் இருக்கு. இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
கைபர் போரில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் அதிக அளவில் போர்ச் செல்வத்தைக் கைப்பற்றினர். பின்னர் அங்கிருந்து மதீனாவுக்குத் திரும்பினர்.
கூட்டத்தில் மித்அம் எனப்படும் ஒருவரும் இருந்தார். எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர் மீது பாய்ந்து அவர் மரணித்தார்.
அப்போது நபித்தோழர்கள், "இறைவழியில் உயிர் தியாகம் செய்யும் பாக்கியம் இவருக்குக் கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!'' என்றனர்.
அதுகேட்ட நபி (ஸல்), "இல்லை. அல்லாஹ் மீதாணை! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படுமுன் அவர் எடுத்துக்கொண்ட ஒரு போர்வையே அவருக்கான நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது'' என்றார்கள். (புகாரி)
இறைப்பாதையில் போரிடச் சென்ற ஒரு முஜாஹித் அவர். முஸ்லிம்களின் பொதுச் சொத்தில் இருந்து ஒரு போர்வையைத் திருடிவிட்டார். அதற்காக அவர் நரக வேதனையை அனுப்பவிக்கிறார்.
பொதுச் சொத்தில் இருந்து ஒரு பொருளை ஒருவர் திருடினால் அதற்காக அவர் நரக நெருப்பை அனுபவிக்க வேண்டி வரும் என்று இதிலிருந்து தெரிகிறது.
தெருக்களில் இருக்கும் அரசாங்கப் பாதைகள் அனைவருக்குமானது. ஒருவர் அதிலிருந்து சிறுது இடத்தை அபகரித்து படியும் திண்ணையும் கட்டினால், அவர் நரக நெருப்பையே எடுக்கிறார் என்று பொருள்.
பூங்காக்கள், பொது இடங்களில் இருக்கும் பொருட்களை ஒருவர் திருடுகிறார் என்றால் அவர் நரக நெருப்பையே எடுக்கிறார் என்று பொருள்.
வேலை செய்யும் இடத்திலிருந்து காகிதம், பேனா போன்றவற்றை அனுமதியின்றி வீட்டுக்கு எடுத்து வந்தால், பொது நூலகத்திலிருந்து புத்தகத்தைத் திருடினால் அவர் நரக நெருப்பையே எடுக்கிறார்.
அல்லாஹ் மன்னிப்பாளன்தான். அடியானுக்கும் அவனுக்கும் இடையே இருக்கும் விவகாரம் என்றால் அவன் மன்னிப்பான். ஆனால் பொது மக்களின் உரிமை தொடர்பான விவகாரம் என்றால் அவன் நீதியுடன்தான் செயல்படுவான்.
ஒருவருடைய உரிமையை அவருக்குத் திருப்பிக் கொடுப்பதுதான் அல்லாஹ்வின் நீதி.
தனி மனித உடமையைத் திருடுவது மட்டுமே ஹராம், பொது உடமையை திருடுவது ஹராமல்ல என்று எண்ண வேண்டாம்.
எச்சரிக்கை! அனைவருக்குமான சொத்தைத் திருடுவது அனைவரிடமிருந்தும் திருடுவது போன்றாகும்.
✍️ நூஹ் மஹ்ழரி