தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முன்னால் தலைவரும் பிரச்சாரகருமாகிய திரு.பீ.ஜெயினுலாபீதீன் என்பவர் எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ள சிங்கள மொழியில் குரான் மொழியாக்கம் வெளியிடும் நிகழ்வில் பிரதம அதிதியாக வருகை தரவிருக்கிறார் என்ற செய்தியை அந்த அமைப்பின் கிளையாக இலங்கையில் செயல்படும் சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்(ளுடுவுது)அறிவித்துள்ளத்துடன் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பிரஸ்தாபிக்கப்பட்டுவருகிறது.
பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் ஜமாத்தார்களிடையே இது ஒரு பேசுபொருளாகியிருகிற நிலையில் இலங்கையை பொருத்தவரை இவற்றின் சாதக பாதகங்கள் பற்றி விமர்சன ரீதியில் பல கருத்தாடல்கள் சமூக வலைத்தளங்களிலே தொடர்ந்தவண்ணம் உள்ளன.
காலம் காலமாக முஸ்லிம்கள் செய்துவருகின்ற கத்தம் இபாத்திஹா மௌலிது மீலாது தர்ஹா போன்றவற்றை எதிர்த்து 1980 களில் இருந்து திரு பீஜே பிரச்சாரம் செய்துவருகிறார்.
முஸ்லிம்கள் அமல்காளாக கருதி தொன்றுதொட்டு செய்துவரும் செயல்பாடுகளை ஷிர்க் என்றும் பித் அத் என்றும் பிரகடனப்படுத்திய இவர் அன்று தொட்டு இன்று வரை உலமாக்களால் பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகிறார். இருந்தும் இவரது கம்பீரமான பேச்சாற்றலினால் கவரப்பட்ட பலர் இவரது கொள்கைகளை ஏற்று அவரது அமைப்பான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இணைந்து ஈமானை பறிகொடுத்துவருகின்றனர்.
ஒரு காலத்தில் ஷிர்க் பித் அத் மூட நம்பிக்கை என்று முஸ்லிம்களின் அமல்கள் மீது கைவைத்துவந்த இவர் அண்மைக்காலமாக குப்ரிய்யத்தான கொள்கையின் பக்கம் அவர் சார்ந்திருக்கும் நபர்களை அழைத்து செல்ல துணிந்துவிட்டார். இமாம்களும் மத்ஹபுகளும் தேவையில்லை என்று ஆரம்பத்தில் கிளம்பிய இவர் பின்னர் ஸஹபாக்களை மறுக்கும் நிலையை தன் கொள்கையாக வகுத்துக்கொண்டதுடன் அல்குர் ஆனும் அல் ஹதீஸும் மாத்திரமே இஸ்லாமிய மூல ஆதாரங்கள் என்று பிரச்சாரம் செய்தார். இப்பரச்சாரத்தால் கவரப்பட்ட பலர் அவரது அமைப்பில் இணைந்ததுடன் தங்களது ஈமானையும் பறிகொடுத்தனர்.
அது மட்டுமன்றி தமிழகத்தில் ஊர்களுக்கிடையேயும் குடும்பங்களிடையேயும் பிளவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தார்.இது பற்றி த.த.ஜ. அமைப்பின் தற்போதைய தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி என்பவர் ஓரிடத்தில் பேசும்போது “சமூகத்தில் பிளவை ஏற்படுத்தியதில் எமக்கு பெரும்பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. நாங்கள் குழப்பவாதிகள் என்றால் மிகப்பெரிய குழப்பவாதி றஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள்தான்’ என்று நாயகத்தின் மீது ஓர் அருவருக்கத்தக்க வார்த்தை பிரயோகத்தை கூறி உலமாக்களினதும் சமூகத்தினதும் கண்டனத்தையும் பெற்றிருந்தார்.
அல்குரான் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்கள் என்று கூறி பிரச்சாரம் செய்து வந்த இவர் அண்மைக்காலமாக ஸஹீஹான பல ஹதீதுகளையும் மறுக்கின்ற குப்ரிய்யத்தான படுபாதக செயலில் இறங்கியிருக்கின்றார். அறிவிப்பாளர் தொடர் சரியான ஹதீதுகளை அல்குரானுக்கு முரண்படுவதாகவும் புத்திக்கு முரண்படுவதாகவும் இவரும் இவரை சார்ந்த அமைப்பும் மறுத்துவருகிறது.நான் அறிய சுமார் 80 ஸஹீஹான ஹதீதுகளை பல்வேறு நொண்டி வாதங்களை முன்வைத்து இவர்கள் மறுத்துவருகின்றனர்.
அதில் பிரதானமாக நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது சம்பந்தமாக புஹாரியிலும் மற்றும் பல கிரந்தங்களிலும் இடம்பெற்றுள்ள செய்தியை இவர் மறுத்திருப்பது பலரிடையே ஆச்சரியத்தையும் பலத்த விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் நாகரீகாமவும் அநாகரீகாமாகவும் பல்வேறு தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
இவரது குப்ரிய்யத்தான கொள்கைகளை ஆராய்ந்த தமிழ்நாடு மாநில ஜமாத்துல் உலமா சபை கடந்த 23.06.2015 அன்று இவரையும் இவரது கொள்கை சார்ந்தவர்களையும் ‘முர்தத்கள்’ என்று பத்வா வழங்கி தீர்மாணம் நிறைவேற்றியுள்ளது.
திரு பீஜே அவர்கள் குரான் மொழி பெயர்ப்பு என்ற பெயரில் தமிழில் வெளியிட்டிருக்கின்ற புத்தகத்தையே சிங்கள மொழியில் வெளியிட ளுடுவுது இனர் முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால் பீஜே அவர்கள் வெளியிட்டிருக்கின்ற தமிழ் மொழிபெயர்ப்புக்களில்கூட ஏராளம் ஏராளம் இஸ்லாத்துக்கு புறம்பான கருத்துக்களும் கோட்பாடுகளும் புதைந்து கிடக்கின்றன.இவை பற்றி உலமாக்கள் பல்வேறு விமர்சனங்களையும் தெளிவுகளையும் வழங்கியுள்ளனர்.அவை பற்றி அலசினால் இக்கட்டுரை வேறு திசை நோக்கி பயணித்துவிடும் என்பதால் தவிர்த்துக்கொள்கிறேன்.
மேலும் ஸஹாபாக்கள் தொகுத்தளித்த அல்குர் ஆன் மூலப்பிரதியில் கூட எழுத்துப்பிழை இருக்கிறது என்ற படுமோசமான யூதக்கருத்தையும் இவர் கொண்டிருக்கின்றார். இது சம்பந்தமாக கடந்த ஆண்டு தூத்துக்குடி ஜமாத்துல் உலமாவுக்கும் பீஜே அவர்களுக்குமிடையே ஒரு விவாதமும் நடைபெற்று பீஜே அவர்களுடைய முகத்திரை கிழிக்கப்பட்டது.
இலங்கையை பொருத்தவரை அதிகமான முஸ்லிம்கள் தொன்றுதொட்டு தனது மூதாதையர்களான ஸாலிஹீன்கள் வழியில் நான்கு மத்ஹபுகளாக ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர்.ஆன்மீக நோக்கங்களுக்காக தரீகாக்களிலும் தம்மை இணைத்து அமல்களில் பேனுதலை கடைப்பிடித்துவருகின்றனர்.
த.த.ஜ வின் கிளையாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் மற்றும் தவ்ஹீத் பெயர்களில் உள்ள பிற ஜமாத்துக்களின் தோற்றத்தின் பின்னரே இலங்கையிலும் குடும்ப உறவுகளிடையே பிளவுகளும் பிரச்சனைகளும் தலைதூக்கி இன்று பல ஊர்களில் அடிதடி வரை நிலமை மோசமாகிவருகிறது.எந்தளவுக்கென்றால் ஜனாஸாவை அடக்குவதில் கூட பிரச்சனைகளை சந்திக்கவேண்டிய அவல நிலைக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே கடைசியாக இலங்கையில் பீஜே அவர்கள் வருகைதந்திருந்தார். அக்குரணை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஓர் நிகழ்வில் இவர் பேசியபோது அங்கு பாரிய குழப்ப நிலை ஏற்பட்டதையும் அரசியல் மட்டங்களில் கூட இவரது வருகையை தடை செய்யவேண்டும் என்ற கருத்தாடல்கள் அதன் பின்னர் ஏற்பட்டதையும் சிலர் அறிந்திருக்க வாய்ப்புண்டு.
எனவே சகோதரர் பீஜேவின் இலங்கை வருகை எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவதாகவே அமையப்போகிறது என்கிற உண்மை நிச்சயம் உணரப்படும்.
UL.Muhamed Manas kalmunai