السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 1 November 2018

ஏறாவூர் அல்- ஜுப்ரியா வித்தியாலயம் உருவான கதை


ஏறாவூர் அல்- ஜுப்ரியா வித்தியாலயம் உருவான கதை


உமர் சக்காப் மௌலானா என்ற தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சமூக நோக்குடைய மனிதர் ஏறாவூரில் வாழ்ந்து வந்தார். புன்னைக்குடா வீதியில் அவரது வீடு அமைந்திருந்தது.நான் அவரை 'ஜின்னாஹ் தொப்பி' அணிந்தவராகவே கண்டிருக்கிறேன்.இஸ்மாயில் சாஹிபின் முஸ்லிம் லீக்கை நேசிப்பவராகவும் இலங்கையில் இடது சாரிகள் கூட்டிணைந்திருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் திராவிட நிறத்து மேனியராகத் தென்பட்டார். ஊரில் வாழ்ந்த இன்னும் சில மௌலானாக்கள் சிவப்பு நிறத் தேகமுடையோராய் ஆரிய வம்சாவளி போல் தென்பட்டனர்.
மேற்சொன்ன எனது அவதானிப்பு மிகப் பிந்தியதாகும், அதாவது " திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும்" என்ற ஆங்கில நூலுக்கு மறைந்த எம். எஸ். எஸ் பாண்டியன் Economic and Political Weekly பத்திரிகையில் எழுதிய புத்தகத் திறனாய்வை வாசித்த பின்னரே இந்த அவதானிப்பைச் செய்தேன். திராவிட சாஹிபுகள் மாத்திரமல்ல, திராவிட மௌலானாக்களும் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உமர் சக்காப் மௌலானாவின் வாழ்வையும் இன்னும் சில கறுப்பு நிற மௌலானாக்களின் நடத்தைகளையும் இலங்கையில் அவதானித்த வகையில் எனது அபிப்பிராயமாகும். "திராவிட சாஹிபுக்கள் மற்றும் பிராமண மௌலானாக்கள்" என்ற கருத்து அரசியல் தன்மையதாகும்.மேலும் சாதிய அடிப்படையையும், உணர்வையும் இக்கருத்து பிரதிபலிக்கிறது.
"சாஹிப்" என்ற அரபுச் சொல்லின் தமிழ் பதம் தோழமையைக் குறிப்பதால் சமத்துவ வாழ்வை விரும்பிய முஸ்லிம்களை திராவிடக் கொள்கைக்குள் உள்ளீர்த்தும்- மௌலானாக்கள் எனப்படுவோரின் மன நிலையை சமத்துவத்துக்கு எதிரான,உயர்சாதி மனநிலை கொண்ட பிராமணர்களோடு ஒப்பிட்டும் புத்தகத்தின் தலைப்பு அமைந்திருப்பதை அவதினிக்கலாம்.
உமர் சக்காப் மௌலானாவின் புன்னைக்குடா வீதி வீட்டில் இஷாத் தொழுகையின் பின் சுமார் இரவு எட்டு மணிபோல் கூடுகிற சிலர் அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிக் கதைத்திருப்பர். இது 70 களில் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் நிகழும்.ஏறாவூர் பட்டினாட்சி மன்றத் தலைவராகவும் மட்டக்களப்புத் தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவும் இருந்த M.A.C.A றகுமான் சேர், அக்காலத்தில் ஏறாவூர் உதவி அரச அதிபராக இருந்த திருவாளர் சொர்ணவடிவேல் ஐயா,கவிஞர் சாலிஹ் சேர்,குவாஸி அப்துல் காதிர், எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை சேர்,மௌலானா,நடராஜமூர்த்தி சேர் உட்பட இன்னும் சிலர் அங்கு கூடியிருப்பர்.
1977 இன் பிந்திய காலாண்டில் ஓரிரவு இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தின் மாணவ நெரிசல் பற்றிய விடயத்தை சாலிஹ் சேர் எடுத்துப் போட்டார்.நெரிசல் அதிகமாக இருந்தால் ஆறாம் வகுப்புக்குக் கீழ் கற்கும் மாணாக்கர்களை வேறு இடத்துக்கு நகர்த்த வேண்டும், அப்படியாயின் புதிதாகத் தொடக்கப் பள்ளி ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என்றும் அதற்கான இடமாக மௌலானாவின் வீட்டுக்கு முன்னால் இருந்த பெரிய வளவைச் சுட்டிக் காட்டி இது பொருத்தமான இடம் என்றும் நடராஜமூர்த்தி சேர் சொன்னார்.
உடனே,இரவுணவும் சாப்பிடாமல் றகுமான் சேரும், மௌலானாவும், நடராஜமூர்த்தி சேரும் சாலிஹ் சேரும் றகுமான் சேரின் காரில் ஏறி இரவு 10 மணியளவில் மட்டக்களப்பை நோக்கிச் சென்றனர். அப்போது கல்விப் பணிப்பாளராக இருந்த சமீம் அவர்களை அவரது விடுதியில் சந்தித்து "சின்ன அலிகார்" உருவாக வேண்டிய அவசியத்தை விளக்கினர். சமீமும் இவர்களின் நெருங்கிய இலக்கிய நண்பர் என்பதானால்தான் அந்த நேரத்தில் அவரைச் சந்திக்கச் சென்றனர்.
நிதி இருக்கிறது, ஆனால் அமைச்சு அனுமதியளிக்கவேண்டும் என்று சமீம் சொன்னார். சமீமுடன் சேர்ந்து மட்டக்களப்பு நகர் இரவுத் தேனீர்க் கடை ஒன்றில் தேனீர் அருந்திவிட்டு, ஊருக்கு வந்து உடுப்புகளை எடுத்தனர்.
கார் கொழும்பை நோக்கிப் பறந்தது.சக்காப் மௌலானாவின் உறவினரான மாஸ்டர் மௌலானா கொழும்பு மருதானை சின்னப் பள்ளிவாயில் அறையில் தங்கியிருந்தார். அங்கே சென்று சிறிது நேரம் ஆறுதலாகத் தங்கிவிட்டு ஒன்பது மணிக்கு கல்வி அமைச்சுக்குச் செல்லும் உத்தேசத்தில் மாஸ்டர் மௌலானாவைச் சந்தித்தனர். அவர் தனது பள்ளி அறையில் அவர்களைத் தங்குமாறு சொன்னார். நடராஜமூர்த்தி சேருக்கு பள்ளிக்குள் செல்வதற்கு கொஞ்சம் 'ஒஞ்சுதலாக' இருந்தது, வேணாம் மச்சான், நான் வெளியில் எங்காவது தங்கிவிட்டு காலை 8.30 மணிக்கு வருகிறேன் என்று சொன்னார்.அதற்கு விரும்பாத தோழர்கள் மூர்த்தி சேரின் முதுகைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு பள்ளிக்குள் ஏறி தங்கினர். காலை 8.30 க்கு கல்வியமைச்சுக்குச் சென்ற போது அமைச்சர் பதியுத்தீன் அங்கிருக்கவில்லை, ஆதலால் அமைச்சரின் செயலரைச் சந்தித்து விடயத்தைக் கூறினர்.செயலர் அமைச்சுக்கு வந்திருப்போர் பற்றி தொலை பேசியில் சொன்னார். மதியம் 12 மணிக்கு அலுவலகம் வந்த அமைச்சரிடம் விபரம் கூறி உதவி கோரப்பட்டது. உடனே செயற்பட்ட அமைச்சர் மட்டக்களப்பு கல்விப் பணிப்பாளர் சமீமுக்கு திட்டத்துக்கான நிதியை ஒதுக்குமாறு ஆணை பிறப்பித்தார். குழு ஏறாவூர் திரும்பியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லத்தீப் சின்னலெப்பைக்குச் சொந்தமான, நடராஜமூர்த்தி சேர் பரிந்துரைத்த ஓர் ஏக்கர் காணியைச் சுவீகரிக்கும் திட்டத்தைத் தீட்டி விரைவாக நிறைவேற்றினர்.
இந்த வளவுக்குள் அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்ட சிறியதோர் கட்டடத்தில் சின்ன அலிகார் என இன்றும் செல்லமாக அழைக்கப்படுகிற அல் - ஜுப்ரியா வித்தியாலயம் 11.01.1978 இல் திறந்துவைக்கப்பட்டது.இன்று பல மாடிக் கட்டிடங்களோடு இப்பாடசாலை நிமிர்ந்திருப்பதைக் காணலாம்.
நினைவூட்டலுக்காக லத்தீப் ஹாஜியாருக்கு நன்றி!
கீழே காணப்படும் நிழற்படங்கள் றகுமான் சேர் அவர்கள் பேசுகிற வேளை அவரது இடது புறம் சொர்ணவடிவேல் ஐயா அமர்ந்திருப்பதனால் பதிவேற்றப்படுகிறது. தனிப்படத்தில் இருப்பவர் எஸ். பொன்னுத்துரை சேராகும்.ஏனையவர்களின் படத்தை அவசரத்துக்குத் தேடி எடுக்க முடியவில்லை.

Basheer Segu Dawood 

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 202

Moulavi Sajith musthafi Eravur
கலீஃபா உமர் {ரலி} அவர்கள் ஒரு நாள் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். உமர் {ரலி} அவர்களைக் கண்டதும் அச் சிறுவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஒரெயொரு சிறுவர் மட்டும் ஓடாமல் விளையாடிக் கொண்டிருந்தார்.
நேராக அச் சிறுவரிடம் சென்ற உமர் {ரலி} அவர்கள் “ஏன் நீ மட்டும் உன் தோழர்களோடு ஓடாமல் இங்கேயே நின்று விட்டாய்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு, அச்சிறுவர் “அமீருல் முஃமினீன் அவர்களே! நான் தான் தவறொன்றும் செய்ய வில்லையே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். மேலும்,நீங்கள் செல்வதற்கு வீதி தான் விசாலமாக இருக்கின்றதே? பிறகு நான் ஏன் ஓட வேண்டும். என்று கேட்டார்.
உடனே, உமர் {ரலி} அவர்கள் சற்றேரக்குறைய 12 வயதே ஆன அச் சிறுவரை தம் அருகே அழைத்து, உமர் {ரலி} அவர்கள் ”தலையை தடவிக் கொடுத்து, முதுகை தட்டிக் கொடுத்து இப்படித்தான் உண்மையை, சத்தியத்தை யார் எதிரிலும் சொல்லத் தயங்கிடக் கூடாது. துணிவுடன் கூற வேண்டும். என்று பாராட்டிக் கூறினார்கள்.
அச் சிறுவர் வேறுயாருமல்ல அபூபக்ர் {ரலி} அவர்களின் மகள் அஸ்மா {ரலி} அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு சுபைர் {ரலி} அவர்கள் தான்.
பின் நாளில் கொடுங்கோன்மை புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃபை மிகத் துணிவோடு எதிர் கொண்டு போராடிட, உமர் {ரலி} அவர்களின் பாராட்டல் தான் உந்து சக்தியாக இருந்ததோ என்னவோ ஹஜ்ஜாஜின் எந்தவொரு உருட்டலுக்கும்,மிரட்டலுக்கும் பயப்படாமல் “அஞ்சா நெஞ்சத்துடன்” தொடர்ந்து போராடினார்கள்.
வரலாற்றில் அடக்கு முறையாளர்களை நடுங்கவைத்தவர்கள் எனும் ஒரு சிறப்பியலே இருக்கிறது. அதில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டு தனியோரு புகழுக்குச் சொந்தக் காரராக மிளிர்கிறார்கள்.
ஹஜ்ஜாஜ் ஹரம் ஷரீஃபை முற்றுகையிட்டிருந்த வரலாற்றின் மிக மோசமான தருணம் அது.
எப்படியும் தாம் ஷஹீதாகி விடுவோம் என்பதை விளங்கியிருந்த அப்துல்லாஹ் {ரலி}, நடுநிசியில் தம் தாயார் அஸ்மா {ரலி} அவர்களைச் சந்திக்க வந்திருந்தார்கள்.
தாயாரிடம் அவர் ” நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! என்னை விட உன்னைப் பற்றி நீயே நன்கறிவாய்! நீ சத்தியத்தின் மீதே இருக்கின்றாய்! ஆதலால் தான் மக்களையும் சத்தியத்தின் மீது ஒன்றினைத்து இருக்கின்றாய்!
எனவே எதை நீ சத்தியமென நீ உறுதி கொண்டுள்ளாயோ, அதில் மரணம் வரும் வரை நிலைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே! பனீ உமைய்யாக்களின் சிறுவர்கள் முட்டுக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போன்று நீயும் இருந்து விடாதே!
ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் – க்கு எதிரான உன் போராட்டம் உலகாதாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்குமேயானால், மகனே நன்றாக விளங்கிக் கொள். பூமியில் நடமாடுபவர்களில் நீயே மிக மிகக் கெட்டவன்.
உன்னையும் அழித்து, உன்னை நம்பி உன் பின்னால் அணிதிரண்டு உனக்கு ஆதரவாய் நிற்கிற நம் மக்களையும் கொன்றொழித்த மாபாவியாகி விடுவாய்!” என்று கூறினார்கள்.
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் தம் தாயார் அஸ்மா {ரலி] அவர்களை நோக்கி “ எனதருமைத் தாயே! நான் மரணத்தைக் கண்டு பயந்தோ, உலகில் வாழ வேண்டும் என ஆசைப் பட்டோ உம்மைக் காண வர வில்லை.
மாறாக, ”ஒரு வேளை இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் நான் இறந்து போய் விட்டால் உங்களின் நிலை என்னவாகுமோ? நீங்கள் தைரியம் இழந்து விடக்கூடாது என்பதற்காக, ஆறுதல் வார்த்தைக் கூறிச் சென்றிடவே வந்தேன்.
”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தாயே! இந்தப் போராட்டத்தின் பிண்ணனியில் உலகாதாயம் எனக்கில்லை. எனக்கு இந்த உலக சொகுசின் மீது எப்போதுமே பற்றிருந்ததில்லை.
அல்லாஹ்வின் சட்ட திட்டங்களை மீறிடும் துணிவு ஒருக்காலத்திலும் எனக்கு ஏற்பட்டதில்லை. ஒரு போதும் என்னை நம்பி என் பின்னால் அணி திரண்டு நிற்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றிடவோ, துரோகமிழைத்திடவோ மாட்டேன்! என்னை வாழ்த்தி வழியனுப்புங்கள் தாயே!” என்றார்.
தம் மகன் சத்தியத்தின் மீது வார்க்கப்பட்ட இரும்பு கோட்டையாய் நிலைத்திருப்பதை உணர்ந்த அஸ்மா {ரலி} அவர்கள் “ மகனே! சத்தியமாக நான் உன்னை குறித்து நல்ல முடிவையே ஏற்றிருக்கின்றேன்.
ஒன்று நான் உனக்கு முன் இறந்து போவேன், அல்லது எனக்கு முன் நீ இறந்து போவாய்! பின்பு வானை நோக்கி கையை உயர்த்தி “இறைவா! என் மகனுக்கு அருள் செய்வாயாக! அவரின் நெருக்கடியில் அவருக்கு நீ உதவியாளனாய் இருப்பாயாக!”
”அவர் என்னிடமும் என் கணவரிடமும் எப்படி கருணையுடன் நடந்து கொண்டாரோ, அது போன்றே நீயும் அவருக்கு கருணை புரிவாயாக!”
”யாஅல்லாஹ்! உன் விஷயத்தில் அவர் எடுத்திருக்கும் முடிவை நான் முழுமையாக நம்புகின்றேன்! அவர் விஷயத்தில் நீ எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் அதைப் பொருந்திக் கொள்ளும் மன நிலையை எனக்கு தந்தருள்வாயாக!”
என் மகன் விஷயத்தில் நான் மேற்கொள்ளும் பொறுமைக்கு பகரமாக, நன்றியாளர்களுக்கும், பொறுமையாளர்களுக்கும் நீ கொடுக்கும் நற்கூலியை வழங்குவாயாக!” என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார்கள்.
தன் மகனை அருகே அழைத்த அஸ்மா {ரலி} அவர்கள் உச்சி முகர்ந்து வழியனுப்புகிற போது தம் மகன் கவசம் அணிந்திருப்பதை உணர்ந்தார்கள்.
உடனே அஸ்மா {ரலி} அவர்கள் “மகனே! கோழைகளைப் போல கவசம் அணிந்து இருக்கிறாயே! உன் பாரம்பரியம் என்ன? உன் தந்தை சுபைர் {ரலி} அவர்களின் வீரம் என்ன? உன் தாயின் தந்தையான அபூ பக்ர் {ரலி} அவர்களின் இறைநம்பிக்கையின் தரம் என்ன? ஒரு ஷஹீதின் மகன் அல்லவா நீ? கழற்றி தூர எறி! என்றார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் {ரலி} அவர்கள் “சாவிற்கு அஞ்சி நான் கவசம் அணியவில்லை தாயே! நான் எதிரிகளின் கையில் சிக்குண்டால் என்னை சல்லடையாக ஆக்கி விடுவார்கள்.
அதை ஏற்றுக் கொள்கிற மன நிலை உங்களுக்கு இருப்பதாக நான் கருதவில்லை. தள்ளாத வயதில் என் மரணத்தின் மூலம் உங்களை ரணப்படுத்த விரும்பவில்லை
இதோ! உங்களின் விருப்பப்படியே கவசம் இன்றி களம் காண்கிறேன் தாயே! உங்களது கையால் நீங்களே தூக்கி எறிந்து விடுங்கள்.” என்று கூறி கவசத்தை கழற்றி தாயாரிடம் கொடுத்து விட்டு, விடை பெற்றுச் சென்றார்கள்.

Moulavi Sajith musthafi Eravur 

Sajith musthafi Eravur

Tuesday, 30 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 204



 அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்” என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!” என்று துஆ செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )

ladies arabic college

நிலையா உடலைவிட்டே உயிர் செல்லும் நேரத்திலே

நிலையா உடலைவிட்டே உயிர் செல்லும் நேரத்திலே

அண்மையில் நடந்த இந்தோனேசிய விமான விபத்து மிகவும் துயரமானது.

இறப்பு உண்டு என்பது,இறையடியார்கள் நன்கு அறிந்த ஒன்று என்றாலும் திடீர் மரணம் வந்துவிடக் கூடாது என்பது குறித்து அண்ணல் நபி(ஸல்) அவர்களும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

எங்கிருக்கும் போது இறப்பு எப்படி வரும் என்பதை இறைவனே அறிவான்.எனினும் "அழகிய முடிவு"க்காக நாம் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் இறப்பு எப்படி நேர்ந்தாலும் அதன் ரகசியத்தையும் மதிப்பையும் அறிந்தவன் அல்லாஹ்வே.

சற்றும் எதிர்பாராத தருணத்திலே மரணம் வந்தாலும் கூட இறைவனை நினைத்து அவனுடைய திருப்பெயர் கூறி அல்லது கலிமாவை (இஸ்லாத்தின் மூல முதல் உறுதிமொழியை)முழங்கி இறப்பை எதிர்கொள்வது என்பது சாதாரணமான செய்தி அல்ல.இதற்கு வாழ்வு முழுவதும் மனப்பயிற்சி பெற்றிருந்தால்தான் இது வாய்க்கும்.அதற்கு அல்லாஹ்வின் அருளும் வேண்டும்.வரலாற்றில் இந்தப் பேறுபெற்ற பலரை நாம் காண்கிறோம்.

அதனால்தான் தக்கலை ஞானி பீரப்பா அவர்கள் இதுபற்றிய தம் கவலையை இப்படி வெளிப்படுத்தினார்கள்:

"......
நிலையா உலகைவிட்டே உயிர்செல்லும் நேரத்திலுன்
 'கலிமா'வை நெஞ்சுள் கலங்காமல்தா என்'ஹக்'கானவனே ...!

இந்தோனேசிய விமானவிபத்தின் போது விமானத்தில் இருந்த ஏறத்தாழ எல்லாரும் இப்படி இறுதியாகக் கூறுவதைக் காட்டும் காணொளியை  கண்டபோது ஏற்பட்ட எண்ணங்களே மேற்கண்டவாறு பதிவானது.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் செய்வானாக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் ....             


Yembal Thajammul Mohammad FB Friend


                           
ladies arabic college



Monday, 29 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 201



இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

      அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

      கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

      ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

      அப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் “தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.

இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.

             ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா ) Moulavi i.m sajith musthafi eravur 

சாந்த நபியின் சிறு பிராயம்


நபிகள் நாயகம் (ஸல்) பிறக்கும் முன்பே தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்கள்

அவர்களுக்கு 6வயதானபோது தாயார் ஆமினா அவர்கள்

 *மகனே* *மதீனாவிலுள்ள நமது சொந்தங்களை உனக்கு அறிமுகப்படுத்தித் தரட்டுமா?*

எனக்கூறி மதினாவுக்கு அழைத்து செல்கிறார்கள்.
     
அங்கு ஒருமாதம் தங்கியப்பிறகு மீண்டும் மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்.

அவர்களோடு பராக்கா(உம்மு அய்மன் )..
அப்துல்லாஹ் தம் சொத்து என்று ஆமினாவுக்கு விட்டுச் சென்றவை ஐந்து ஒட்டகங்கள்; ஆட்டு மந்தை; இவற்றோடு அடிமைப் பெண் பராக்கா..

மக்காவை நெருங்க இரண்டு இரவுகளே உள்ள நிலையில் தாயார் ஆமினாவுக்கு காய்ச்சல் முற்றுகிறது..


ஆறு வயதேஆன நபி(ஸல்) அவர்களுக்கு தெரியவில்லை அது தாயின் சக்கராத்தென்று.. !

அந்த குழந்தை பார்க்கபோகும் முதல் மரணம் அது..

ஆனால் அந்த தாயிக்கு புரிந்துவிட்டது இது தன் கடைசி நேரமென்று..

தன் மகனின் மடியில் படுத்தவாறே அவர் கண்ணத்தை தடவியபடியே கூறுகிறார்.."*மகனே! பொறுமையாக இரு..

இவ்வுலகில் வந்த ஒவ்வொரு உயிரும் மரணமடைந்தே தீரும்..

அல்லாஹ் யாரையும் விடமாட்டான்..

ஒவ்வொரு வாலிபமும் வயோதிகமாகும்..

ஒவ்வொரு இன்பமும் அழியும்..

மகனே! பொறுமையாக இரு!"

 எனக்கூறி தனது அடிமைபெண் பராக்காவிடம்
"“பரக்கா! எனது இவ்வுலக வாழ்க்கை முடியப்போகிறது. என் மகன் முஹம்மதை உன் பொறுப்பில் அளிக்கிறேன்.

என் வயிற்றில் இருக்கும்போதே தன் தந்தையை இழந்த சிறுவன் இதோ இப்போது தன் கண்ணெதிரே தாயையும் இழக்கப்போகிறான்.

 ஒரு தாயாய் அவனைக் கவனித்துக்கொள் பராக்கா.

அவனை விட்டு விலகாதே.” என்று.


அதை பராக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது அவருக்கு.

புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

அதைக் கண்ட சிறுவர் முஹம்மது விஷயம் முழுதாய்ப் புரியாவிட்டாலும் ஏதோ துக்கம் என்று தெரிந்துகொண்டு விம்ம ஆரம்பித்துவிட்டார்.

 தம் அன்னையின் கைகளுக்குள் புதைந்து கழுத்தை இறுக கட்டிக்கொண்டார். அன்னை ஆமினாவிடமிருந்து ஓர் இறுதி முனகல் வெளிப்பட்டு அடங்கியது.

ஆறு வயதுப் பாலகன் முற்றிலும் நிராதரவரானார்..(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)

துக்கத்தை அடக்க முடியாமல் அழுதார் பராக்கா. உடலும் கண்களும் களைத்துப் போகும் வரை அழுதார். அந்த காட்டில்..அந்த சிறிய மலைகுன்றில் யாருமின்றி..பிறகு தம் கையாலேயே குழிதோண்டி, தம் எசமானி ஆமினாவை நல்லடக்கம் செய்துவிட்டு, அழுது கொண்டிருக்கும் சிறுவர் முஹம்மது(ஸல்) அவர்களின் கைகளை பற்றிக்கொண்டு மக்காநோக்கி நடக்கிறார்..சிறிது தூரம்கூட செல்லவில்லை..

அவர் கைகளை உதறிவிட்டு ஓடிச்சென்று தனது தாயின் கபுரின் மேல்படுத்து அழுகிறார் சிறுவரான நபி(ஸல்)

"அம்மா! உங்களை விட்டு போகமாட்டேன். நீங்கள் எனக்கு தேவை" என தேம்பிதேம்பி அழுகிறார்கள். மக்கா வரை அழுதுகொண்டே செல்கிறார்.

பிறகு அப்படியே காலம் செல்கிறது.
இப்போது நபி(ஸல்) அவர்களுக்கு வயது 63.
 தனது முதலும் கடைசிமான ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா நோக்கி புறப்படுகிறார்கள்.

 தனது தாய் அடக்கியுள்ள அபுவா குன்றின் வழியாக தனது பயணத்தை அமைத்துகொண்டு,

அந்த இடம் வந்ததும் பயணக்கூட்டத்தை அன்று இரவு அங்கேயே தங்கச்சொல்லிவிட்டு தான்மட்டும் மலைக்கு மேல்ஏறி தனது தாயின் கபுரின் முன்பு இருகால்களையும் கைகளால் கட்டிக்கொண்டு அமருகிறார்கள்.

6வயதில் விட்டுசென்ற தாயை  63வயது ஆனபோதும் தாயை மறக்கவில்லை.


இடையில் 57வருடங்களில் நபிபட்டம் கிடைத்தது தன் தாயை மறக்கவில்லை.

பத்ர் உட்பட பல போர்களின் வெற்றி- தன் தாயை மறக்கவில்லை.

சித்ரத்துல் முன்தஹா  வரை விண்ணுலக பயணம் சென்று வந்தார்கள்.
 நபி(ஸல்)அவர்கள் தாயை மறக்கவில்லை.

தனது தாயின் கபுரை பார்த்து அழுது கொண்டே சொல்கிறார்கள்..

*அம்மா! நீங்கள் உயிரோடு இருந்திருந்தால் உங்களுக்கு எவ்வளவு பணிவிடைகளை செய்திருப்பேன் தெரியுமா.*

 *நான் தொழுகையில் இருக்கும்போது நீங்கள் முஹம்மது முஹம்மது! என்று அழைத்திருந்தால் இதோ. வந்துவிட்டேன் தாயே!*

என்று  தொழுகையை விட்டுவிட்டு உங்களுக்கு பணிவிடை செய்ய வந்திருப்பேனே! அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே" என அழுது அழுது மனம் வருந்தினார்கள்...


*இதன்மூலம் யுக முடிவுநாள் வரையுள்ள அனைத்து மனிதர்களுக்கும் நபி(ஸல்)அவர்கள் ஒரு செய்தியை தருகிறார்கள்.*

நீ எத்தனை ஹஜ்ஜுக்கு போனாலும்.. எவ்வளவு தானதர்மங்கள் செய்தாலும்.. எத்தனை அமல்கள் செய்தாலும்..
ஒரு *நபியாகவே* இருந்தாலும்கூட பெற்றோர் உயிரோடு இருந்து அவர்களை கண்ணியப்படுத்தாவரை அவரின் எந்த அமலும் ஏற்றுக்கொள்ளப்படாது...


தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை *‘சீ’* என்றுகூடக் கூறாதீர்.

 மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக.. ( திருக்குர் ஆன் 17:23 ).

பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுபோல் முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது.

 *‘பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று’*
 என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள்.

நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்,

நீ ஒருவனின் தந்தையைத் திட்ட, அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே
 என்று உணர்த்துகிறார்கள் நபி (ஸல்).
( நூல் முஸ்லிம்)

*பெற்றோரை_மறக்காதீர்கள்*...