السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 1 November 2018

ஏறாவூர் அல்- ஜுப்ரியா வித்தியாலயம் உருவான கதை


ஏறாவூர் அல்- ஜுப்ரியா வித்தியாலயம் உருவான கதை


உமர் சக்காப் மௌலானா என்ற தமிழ்நாட்டு வம்சாவளியைச் சேர்ந்த சமூக நோக்குடைய மனிதர் ஏறாவூரில் வாழ்ந்து வந்தார். புன்னைக்குடா வீதியில் அவரது வீடு அமைந்திருந்தது.நான் அவரை 'ஜின்னாஹ் தொப்பி' அணிந்தவராகவே கண்டிருக்கிறேன்.இஸ்மாயில் சாஹிபின் முஸ்லிம் லீக்கை நேசிப்பவராகவும் இலங்கையில் இடது சாரிகள் கூட்டிணைந்திருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் திராவிட நிறத்து மேனியராகத் தென்பட்டார். ஊரில் வாழ்ந்த இன்னும் சில மௌலானாக்கள் சிவப்பு நிறத் தேகமுடையோராய் ஆரிய வம்சாவளி போல் தென்பட்டனர்.
மேற்சொன்ன எனது அவதானிப்பு மிகப் பிந்தியதாகும், அதாவது " திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும்" என்ற ஆங்கில நூலுக்கு மறைந்த எம். எஸ். எஸ் பாண்டியன் Economic and Political Weekly பத்திரிகையில் எழுதிய புத்தகத் திறனாய்வை வாசித்த பின்னரே இந்த அவதானிப்பைச் செய்தேன். திராவிட சாஹிபுகள் மாத்திரமல்ல, திராவிட மௌலானாக்களும் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உமர் சக்காப் மௌலானாவின் வாழ்வையும் இன்னும் சில கறுப்பு நிற மௌலானாக்களின் நடத்தைகளையும் இலங்கையில் அவதானித்த வகையில் எனது அபிப்பிராயமாகும். "திராவிட சாஹிபுக்கள் மற்றும் பிராமண மௌலானாக்கள்" என்ற கருத்து அரசியல் தன்மையதாகும்.மேலும் சாதிய அடிப்படையையும், உணர்வையும் இக்கருத்து பிரதிபலிக்கிறது.
"சாஹிப்" என்ற அரபுச் சொல்லின் தமிழ் பதம் தோழமையைக் குறிப்பதால் சமத்துவ வாழ்வை விரும்பிய முஸ்லிம்களை திராவிடக் கொள்கைக்குள் உள்ளீர்த்தும்- மௌலானாக்கள் எனப்படுவோரின் மன நிலையை சமத்துவத்துக்கு எதிரான,உயர்சாதி மனநிலை கொண்ட பிராமணர்களோடு ஒப்பிட்டும் புத்தகத்தின் தலைப்பு அமைந்திருப்பதை அவதினிக்கலாம்.
உமர் சக்காப் மௌலானாவின் புன்னைக்குடா வீதி வீட்டில் இஷாத் தொழுகையின் பின் சுமார் இரவு எட்டு மணிபோல் கூடுகிற சிலர் அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிக் கதைத்திருப்பர். இது 70 களில் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் நிகழும்.ஏறாவூர் பட்டினாட்சி மன்றத் தலைவராகவும் மட்டக்களப்புத் தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளராகவும் இருந்த M.A.C.A றகுமான் சேர், அக்காலத்தில் ஏறாவூர் உதவி அரச அதிபராக இருந்த திருவாளர் சொர்ணவடிவேல் ஐயா,கவிஞர் சாலிஹ் சேர்,குவாஸி அப்துல் காதிர், எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை சேர்,மௌலானா,நடராஜமூர்த்தி சேர் உட்பட இன்னும் சிலர் அங்கு கூடியிருப்பர்.
1977 இன் பிந்திய காலாண்டில் ஓரிரவு இவர்கள் பேசிக்கொண்டிருந்த போது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தின் மாணவ நெரிசல் பற்றிய விடயத்தை சாலிஹ் சேர் எடுத்துப் போட்டார்.நெரிசல் அதிகமாக இருந்தால் ஆறாம் வகுப்புக்குக் கீழ் கற்கும் மாணாக்கர்களை வேறு இடத்துக்கு நகர்த்த வேண்டும், அப்படியாயின் புதிதாகத் தொடக்கப் பள்ளி ஒன்று ஆரம்பிக்கவேண்டும் என்றும் அதற்கான இடமாக மௌலானாவின் வீட்டுக்கு முன்னால் இருந்த பெரிய வளவைச் சுட்டிக் காட்டி இது பொருத்தமான இடம் என்றும் நடராஜமூர்த்தி சேர் சொன்னார்.
உடனே,இரவுணவும் சாப்பிடாமல் றகுமான் சேரும், மௌலானாவும், நடராஜமூர்த்தி சேரும் சாலிஹ் சேரும் றகுமான் சேரின் காரில் ஏறி இரவு 10 மணியளவில் மட்டக்களப்பை நோக்கிச் சென்றனர். அப்போது கல்விப் பணிப்பாளராக இருந்த சமீம் அவர்களை அவரது விடுதியில் சந்தித்து "சின்ன அலிகார்" உருவாக வேண்டிய அவசியத்தை விளக்கினர். சமீமும் இவர்களின் நெருங்கிய இலக்கிய நண்பர் என்பதானால்தான் அந்த நேரத்தில் அவரைச் சந்திக்கச் சென்றனர்.
நிதி இருக்கிறது, ஆனால் அமைச்சு அனுமதியளிக்கவேண்டும் என்று சமீம் சொன்னார். சமீமுடன் சேர்ந்து மட்டக்களப்பு நகர் இரவுத் தேனீர்க் கடை ஒன்றில் தேனீர் அருந்திவிட்டு, ஊருக்கு வந்து உடுப்புகளை எடுத்தனர்.
கார் கொழும்பை நோக்கிப் பறந்தது.சக்காப் மௌலானாவின் உறவினரான மாஸ்டர் மௌலானா கொழும்பு மருதானை சின்னப் பள்ளிவாயில் அறையில் தங்கியிருந்தார். அங்கே சென்று சிறிது நேரம் ஆறுதலாகத் தங்கிவிட்டு ஒன்பது மணிக்கு கல்வி அமைச்சுக்குச் செல்லும் உத்தேசத்தில் மாஸ்டர் மௌலானாவைச் சந்தித்தனர். அவர் தனது பள்ளி அறையில் அவர்களைத் தங்குமாறு சொன்னார். நடராஜமூர்த்தி சேருக்கு பள்ளிக்குள் செல்வதற்கு கொஞ்சம் 'ஒஞ்சுதலாக' இருந்தது, வேணாம் மச்சான், நான் வெளியில் எங்காவது தங்கிவிட்டு காலை 8.30 மணிக்கு வருகிறேன் என்று சொன்னார்.அதற்கு விரும்பாத தோழர்கள் மூர்த்தி சேரின் முதுகைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு பள்ளிக்குள் ஏறி தங்கினர். காலை 8.30 க்கு கல்வியமைச்சுக்குச் சென்ற போது அமைச்சர் பதியுத்தீன் அங்கிருக்கவில்லை, ஆதலால் அமைச்சரின் செயலரைச் சந்தித்து விடயத்தைக் கூறினர்.செயலர் அமைச்சுக்கு வந்திருப்போர் பற்றி தொலை பேசியில் சொன்னார். மதியம் 12 மணிக்கு அலுவலகம் வந்த அமைச்சரிடம் விபரம் கூறி உதவி கோரப்பட்டது. உடனே செயற்பட்ட அமைச்சர் மட்டக்களப்பு கல்விப் பணிப்பாளர் சமீமுக்கு திட்டத்துக்கான நிதியை ஒதுக்குமாறு ஆணை பிறப்பித்தார். குழு ஏறாவூர் திரும்பியது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லத்தீப் சின்னலெப்பைக்குச் சொந்தமான, நடராஜமூர்த்தி சேர் பரிந்துரைத்த ஓர் ஏக்கர் காணியைச் சுவீகரிக்கும் திட்டத்தைத் தீட்டி விரைவாக நிறைவேற்றினர்.
இந்த வளவுக்குள் அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்ட சிறியதோர் கட்டடத்தில் சின்ன அலிகார் என இன்றும் செல்லமாக அழைக்கப்படுகிற அல் - ஜுப்ரியா வித்தியாலயம் 11.01.1978 இல் திறந்துவைக்கப்பட்டது.இன்று பல மாடிக் கட்டிடங்களோடு இப்பாடசாலை நிமிர்ந்திருப்பதைக் காணலாம்.
நினைவூட்டலுக்காக லத்தீப் ஹாஜியாருக்கு நன்றி!
கீழே காணப்படும் நிழற்படங்கள் றகுமான் சேர் அவர்கள் பேசுகிற வேளை அவரது இடது புறம் சொர்ணவடிவேல் ஐயா அமர்ந்திருப்பதனால் பதிவேற்றப்படுகிறது. தனிப்படத்தில் இருப்பவர் எஸ். பொன்னுத்துரை சேராகும்.ஏனையவர்களின் படத்தை அவசரத்துக்குத் தேடி எடுக்க முடியவில்லை.

Basheer Segu Dawood