السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 29 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 201



இம்ரான் இப்னு ஹஸீன் (ரலி) அவர்கள் நபித்தோழர்களில் நபிகளாரின் தனிப் பெரும் பாசத்திற்குரிய ஒருவர். கைபரின் போது இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

துஆ ஒப்புக்கொள்ளப்படும் தூய நபர்களில் ஒருவராகவும் விளங்கினார்கள்.
கைபருக்குப் பின் நடந்த அனைத்துப் போர்களிலும் நபி {ஸல்} அவர்களோடு ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.

      அவர்களுக்கு வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அக்கட்டியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார்கள். முறையான மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் முடக்கு வாதத்தால் முடங்கிப் போனார்கள்.

      கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அவர்கள் படுத்தப் படுக்கையாய் ஆனார்கள். என்ற போதிலும் இறைவழிபாட்டில் சிறிதேனும் அவர்கள் விலகிட வில்லை.

      ஒரு நாள் அன்னாரை நலம் விசாரிக்க வந்த ஒருவர், “அபா நுஜைதே! உம்மை நலம் விசாரிக்க ஒவ்வொரு நாளும் வரவேண்டும் என நினைப்பேன். ஆனால், மக்கள் உன் நிலை குறித்து என்னிடம் சொன்ன போது இந்த நிலையில் உம்மைப் பார்க்கும் சக்தி எமக்கு வரவில்லை. இப்போது கூட மனதைக் கல்லாக்கிக் கொண்டு தான் உம்மை நலம் விசாரிக்க வந்தேன்” என்று கூறியவாறு அமர்ந்தார்கள்.

      அப்போது, இம்ரான் பின் ஹஸீன் (ரலி) அவர்கள் “தோழரே! நீர் அமரவேண்டாம்! அல்லாஹ் நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகின்றானோ, அவ்வாறே நானும் இருக்க விரும்புகின்றேன். என்னை இப்படிப் பார்க்க விரும்புகின்றான். நான் அதை மனப்பூர்வமாக பொருந்திக்கொண்டேன்” என்று பதில் கூறினார்கள்.

இன்னொரு முறை அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன். அவன் திருப்திபட்டதை நான் திருப்திபட்டு விட்டேன். என்று சொன்னதுடன், நீங்கள் என்னை இந்த நிலையை பரிதாபமாகக் காண்கிறீர்கள்.

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கூறுகின்றேன்! இதே நிலையில் இருக்கவே நான் விரும்புகின்றேன். ஏனெனில், நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன். அவர்களை சந்திக்கிறேன், அவர்களின் ஸலாமிற்கு பதில் கூறுகின்றேன், நன்றாக விளங்கிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் எனக்கு வழங்கிய தண்டனையாக இதை நான் கருத வில்லை, மாறாக, அவனிம் முடிவை நான் திருப்தியோடு ஏற்றுக் கொள்கின்றேனா என்பதை சோதிப்பதற்காக எனக்கு இதை வழங்கியதாக நான் கருதுகின்றேன்” என்றும் கூறினார்கள்.

             ( நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}...., உஸ்துல் ஃகாபா ) Moulavi i.m sajith musthafi eravur