السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 30 October 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 204



 அலீ {ரலி} அவர்களின் தாயார் அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் {ரலி} அவர்கள் இறந்த போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அலீ {ரலி} அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

அன்னை ஃபாத்திமா {ரலி} அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு “அன்னையே! நீங்களும் என் அன்னையைப் போன்றவர்கள் தான்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

நீங்கள் பசித்திருந்து என் வயிற்றை நிரப்பினீர்கள்; நல்ல உணவு பதார்த்தங்களை நீங்கள் சாப்பிடாமல் எனக்கு உண்ணத்தருவீர்கள்; நீங்கள் கந்தலாடைகளை அணிந்து கொண்டு எனக்கு அழகிய ஆடைகளை அணிவித்து அழகு பார்த்தீர்கள். இவைகளையெல்லாம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்திற்காகவும், அழிவே இல்லாத மறுமை வாழ்விற்காகவும் தான் நீங்கள் செய்தீர்கள் என்பதை நான் மிகவும் அறிவேன்” என்று கூறினார்கள்.

பின்பு, கற்பூரம் கலந்து வைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீரில் தமது கைகளை முக்கியெடுத்து அதில் குளிப்பாட்டுமாறு ஏவினார்கள். பின்னர் தங்களது மேலாடையை கழற்றிக் கொடுத்து, அவர்களுக்கு கஃபனாக அணிவிக்குமாறு கூறினார்கள்.

பின்னர் மையவாடிக்குச் சென்று, கப்ர் குழியை மார்பளவு தோண்டினார்கள். அங்கு கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கப்ர் குழிக்குள் இறங்கி அங்கும் இங்குமாக புரண்டார்கள்.

பின்னர், ”அல்லாஹ் தான் உயிர் கொடுக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான்; அவனோ மரணிக்காத நித்திய ஜீவனாக இருக்கின்றான்.”என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வே! எனது அன்னை ஃபாத்திமா பிந்த் அஸத் அவர்களின் பிழைகள மன்னித்தருள்வாயாக! அவர்களின் ஆதாரத்தை உறுதிபடுத்துவாயாக! அவர்களின் மண்ணறையை உன்னுடைய இந்த தூதரின் பொருட்டாலும், எனக்கு முன் சென்ற தூய நபிமார்களின் பொருட்டாலும் விசாலமாக்கித் தருவாயாக! நீ தான் கிருபையாளர்களுக் கெல்லாம் கிருபையாளனாக இருக்கின்றாய்!” என்று துஆ செய்தார்கள்.

பின்னர் தொழவைத்தார்கள்; அதற்குப் பிறகு அபூபக்ர் {ரலி} அப்பாஸ் {ரலி} ஆகியோருடன் இணைந்து மண்ணறையில் இறங்கி அடக்கம் செய்தார்கள்.

”அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன் யாருடைய மண்ணறையின் முன் நீங்கள் இப்படி நடந்து கொண்டதில்லையே! தாங்கள் பிரத்தியேகமாக அன்னையவர்களின் மண்ணறையில் இப்படி நடந்து கொண்டதின் காரணம் என்னவோ?” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “அபூ தாலிப் அவர்களுக்குப் பிறகு என்னிடத்தில் அன்னையைப் போன்று வேறு யாரும் உபகாரத்தோடும், அரவணைப்போடும் நடந்து கொள்ளவில்லை.

ஆதலால் தான், சுவனத்து பட்டாடைகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென ஆவலில் நான் என் ஆடையை கழற்றிக் கொடுத்தேன். கப்ரின் வேதனை இலகுவாக்கப் பட வேண்டும் என்கிற ஆசையில் நான் மண்னறையில் புரண்டு எழுந்தேன்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

( நூல்: தப்ரானீ, ஹ.எண்.6935, இஸ்தீஆப், 3/248, உஸ்துல் ஃகாபா, ஸியர் அஃலா மின் நுபலா )

ladies arabic college