السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 14 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 212

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது
ஆயிரக்கணக்கானோர் திரண்டு உறுதிமிக்க நெஞ்சோடு மரணத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ஒரு மாவீரனின் முன்னால் நின்று கொண்டிருந்த பரபரப்பான தருணம் அது.
ஆம்! குபைப் (ரலி) அவர்கள் கழுமரத்தில் ஏற்றப்பட்டு மக்காவின் முக்கியமான ஒரு தலைவரின் வருகைக்காக காத்திருந்தது அந்தக் கூட்டம்.
எதிர்பார்த்த அந்த தலைவர் அங்கே வருகை புரிந்தார். மக்கள் அமைதியானார்கள். ஆம்! மக்காவின் பெரும் தலைவராக பொறுப்பேற்று இருந்த அபூசுஃப்யான் அங்கே வந்தார்.
வந்தவர், ஃகுபைப் (ரலி) அவர்களின் அருகே சென்று “குபைபே! உம்மை துன்புறுத்த வேண்டும், உம்மைக் கொல்ல வேண்டும் என்பதெல்லாம் எங்களின் நோக்கமல்ல!
குபைபே! உம்மிடம் இருந்து நாங்கள் எதிர்பார்ப்பது இது தான்! அதுவும் ஒற்றை வார்த்தை தான் சொல்லிவிடு குபைபே!
“இந்தக் கழுமரத்தில் முஹம்மத் {ﷺ} அவர்கள் ஏற்றப்படுவதை நான் விரும்புகின்றேன்” என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிடு!
உமக்கு வாழ்க்கை தருகின்றோம்! உமது மனைவி, மக்களோடு நீர் இன்பமாக வாழலாம்” என்றார்.
“என் மனைவி, மக்களுடன் வாழவோ, உலக இன்பத்தில் திளைக்கவோ நான் ஆசைப் படவில்லை. என் குடும்பத்தையே அடியோடு அழிப்பீர்களே அப்போதும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
என் வாயால் ஒரு போதும் நீங்கள் கூறுவது போன்ற எந்தவொரு வார்த்தையையும் சொல்லப்போவதில்லை.
கேட்டுக் கொள்ளுங்கள்! நபி {ﷺ} அவர்களின் திருப்பாதங்களில் சிறு முள் தைக்கப்படுவதைக் கூட என் மன ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என்று அஞ்சா நெஞ்சத்தோடு ஃகுபைப் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
இது கேட்ட அபூசுஃப்யான் ஆவேசமடைந்தார். கொலைவெறியோடு திரண்டிருந்த மக்களிடையே ஃகுபைபை காலி செய்யுமாறு சைகை செய்தார்.
தனியொரு மனிதனை, கழுமரத்தில் உடல் முழுவதும் கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு மாவீரனை திரண்டிருந்த மக்கள் கூட்டம் சின்னா பின்னப்படுத்தியது.
கையில் கொண்டு வந்திருந்த அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களால் குபைபை கொடூரமாக தாக்கினார்கள் எதிரிகள்.
மரணத்தின் விளிம்பில் பயணித்துக் கொண்டிருந்த ஃகுபைப் (ரலி) அவர்கள் உயிர் பிரிவதற்கு சற்று முன்னதாக தங்களின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி “இறைவா! உன் திருத்தூதர் எங்களுக்கு ஒப்படைத்த பொறுப்பை நாங்கள் நிறைவு செய்து விட்டோம்! எங்களின் இந்த நிலையை நீ உன் தூதருக்கு அறிவித்து விடு! என் ஸலாத்தையும் அவர்களுக்கு எத்தி வைத்துவிடு!” என்று இறைஞ்சினார்கள்.
அல்லாஹ் குபைப் அவர்களின் பிரார்த்தனையை உடனே அங்கீகரித்தான். ஆம்! குபைப் (அலி) அவர்களின் தூய ஷஹாதத்தை அல்லாஹ் மாநபி {ﷺ} அவர்களுக்கு அறிவித்தான்.
நபி {ﷺ} அவர்கள் குபைப் (ரலி) அவர்கள் தங்கள் மீது வைத்திருந்த உள்ளார்ந்த அன்பை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார்கள்.
வார்த்தையில் கூட விட்டுக் கொடுக்காத குபைப் (ரலி) அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நபி {ஸல்} அவர்கள் விரும்பினார்கள்.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை பாவிகள் கழுமரத்திலிருந்து கீழே இறக்காமல் அரபுலக மக்களுக்கு காட்சிப் பொருளாக ஆக்கியிருப்பதைக் கேட்டு நபி {ﷺ} அவர்கள் வேதனை அடைந்தார்கள்.
உடனடியாக, தங்களது தோழர்களை ஒன்று கூட்டிய நபி {ﷺ} அவர்கள், தோழர்களை நோக்கி “தோழர்களே! ஃகுபைப் (ரலி) அவர்களை ஏனைய ஷுஹதாக்களோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என என் மனம் விரும்புகின்றது. மக்காவிற்குச் சென்று குபைப் (ரலி) அவர்களின் பூவுடலை கைப்பற்றி இங்கே யார் கொண்டு வருகின்றார்களோ அவர் சுவனவாசியென்று நான் சாட்சி பகர்கின்றேன்!” என்று கூறினார்கள்.
அங்கே, கூட்டத்தில் அமர்ந்திருந்த ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் சென்று குபைப் (ரலி) அவர்களின் உடலைக் கொண்டு வருகின்றேன்! எனக்கு துணையாக, நீங்கள் எனக்கு கொள்கைச் சகோதரராக ஆக்கிய மிக்தாத் இப்னு ஆமிர் (ரலி) அவர்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார்கள்.
உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு மக்காவின் எல்லைக்கு இருவரும் வந்தார்கள். பகலில் மக்கள் நடமாட்டத்தையும், எதிரிகளின் எண்ணிக்கையையும் கண்காணித்து விட்டு, சிறந்த ஓர் திட்டத்தை தயார் செய்து இரவுக்காக காத்திருந்தார்கள்.
நள்ளிரவு நேரத்தில் ஓசைபடாமல் நடந்து கழுவேற்றப்பட்ட தன்ஈம் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே கழுவேற்றப்பட்ட மரத்தை சுற்றி பாதுகாப்புக்கு நின்ற நாற்பது வீரர்களும் போதையில் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.
விவேகத்தோடு செயல்பட்ட அவ்விரு ஸஹாபாக்களும் துணிச்சலுடன் அம்மரத்திலிருந்து குபைபை இறக்கினார்கள். அப்போது குபைப் (ரலி) அவர்களின் அந்த பூவுடல் சிதையாமல் அப்படியே இருந்தது.
கொல்லப்பட்டு 40 நாட்களாகியும் உடலில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. அவர்களுடைய கை காயத்தின் மீது இருந்தது. பூஉடல் செந்நிறமாகவும், வாடை கஸ்தூரி வாடையாகவும் இருந்தது.
குபைப் (ரலி) அவர்களின் உடலை சுபைர் (ரலி) அவர்கள் குதிரையில் வைத்துக் கொண்டு வந்தார்கள்.
இதே நேரத்தில் பாதுகாப்புக்கு நிண்றிருந்தவர்கள் போதையிலிருந்து தெளிந்து, கண் விழித்துப் பார்த்த போது குபைபை காணாது திகைத்துப் போனார்கள்.
உடனே குறைஷித்தலைவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 70 குதிரை வீரர்கள் விரைவாக சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இறுதியாக, ஸுபைர் (ரலி) அவர்களையும், மிக்தாத் (ரலி) அவர்களையும் அந்த குதிரை வீரர்கள் மடக்கினர்.
மடக்கியதும் குபைப் (ரலி) அவர்களின் உடலை ஸுபைர் (ரலி) அவர்கள் பூமியில் வைத்தார்கள். பூமி குபைப் (ரலி) அவர்களின் உடலை விழுங்கிக் கொண்டது. அதனாலேயே முதன் முதலாக பூமியால் விழுங்கப்பட்டவர் என்று குபைப் (ரலி) அவர்கள் வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
( நூல்: தஃப்ஸீர் அல் பஃக்வீ, உயூனுல் அஸர் ஃபீ ஃபுனூனில் மஃகாஸி வஷ்ஷமாயிலி வஸ்ஸியர் லி இமாமி இப்னு ஸைய்யிதின் நாஸ் )
தொடரும்..........


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 212

Tuesday, 13 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 213

meelad competition 2018
மீலாதுன் நபி ( ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது.....
அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அல்கமா (ரலி) அவர்களிடம் இருக்கும் ஒரு நபிமொழியைக் கேட்டு வர மதீனாவிலிருந்து மிஸ்ருக்கு பயணமானார்கள்.
மிஸ்ரின் பிரதான தெரு ஒன்றின் வழியில் மஸ்லமா இப்னு மகல்லத் அல் அன்ஸாரி (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது, மஸ்லமா (ரலி) அவர்கள் மிஸ்ரின் கவர்னராக இருந்தார்கள்.
இருவரும் சந்தித்து முஆனக்கா செய்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர், மஸ்லமா (ரலி) அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் என்ன விஷயமாக மிஸ்ர் வந்தீர் என்று வினவ, நபி {ﷺ} அவர்கள் கூறிய ஒரு செய்தியை அல்கமா இப்னு ஆமிர் (ரலி) தெரிந்து வைத்திருக்கின்றாராம். அவரிடம் இருந்து கேட்டுச் சென்றிடவே இங்கு வந்தேன்” என்றார்களாம். இது கேட்ட வியந்து போன மஸ்லமா (ரலி) தானும் உங்களோடு வருகின்றேன் என்று கூறி அவர்களோடு சேர்ந்து அல்கமா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
இருவரும் அல்கமா இப்னு ஆமிர் (ரலி) அவர்களைச் சந்தித்து, தாங்கள் இருவரும் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அல்கமா (ரலி) அவர்கள் “எவர் ஒரு இறைநம்பிக்கையாளனின் குறையை உலகில் மறைக்கின்றாரோ, அவரின் குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான்” என நபி {ﷺ} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அங்கிருந்து அவ்விருவரிடமும் விடை பெற்று விட்டு ஒரு நிமிடம் கூட மிஸ்ரில் தங்காமல் மதீனா திரும்பினார்கள் அபூ அய்யூப் (ரலி) அவர்கள். ( முஸ்னத் அஹ்மத் )
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு முறை ஒருவர் என்னிடம் மறுமை குறித்து நபி {ஸல்} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாக என்னிடம் கூறினார்.
அந்தச் செய்தியை நேரடியாக நான் கேட்க விரும்பினேன். ஆகவே, அவர் எங்கிருக்கின்றார் என்று விசாரித்தேன். அவர் ஷாமிலே இருக்கின்றார் என்பதை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமானேன்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இமாம் அபூ யஃலா அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் விரைவாகச் செல்கிற ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, ஒரு மாதகாலம் பயணம் செய்து ஷாம் சென்றார். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்களின் வீட்டை தேடிப்பிடித்து அவரின் வீட்டிற்குச் சென்று தான் வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்லி விட்டு நபி {ﷺ} அவர்கள் மறுமையில் பழிவாங்குவது குறித்து கூறிய அந்தச் செய்தியை தமக்கு கூறுமாறு சொன்னார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இதற்காகவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள்? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் “ நபி {ﷺ} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை கேட்காமலே இறந்து விடுவதை நான் அஞ்சுகின்றேன்” என்றார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ”நபி {ﷺ} அவர்கள் ஒரு நாள் எங்களிடம் மறுமையில் மனிதர்களை அல்லாஹ் நிர்வாணிகளாக எழுப்பி மஹ்ஷரில் நிற்க வைத்திருப்பான். அப்போது, அவர்கள் மிகச் சமீபத்திலே ஒரு சப்தத்தைக் கேட்பார்கள். அது வேறு யாருடைய சப்தமும் அல்ல. அது அல்லாஹ்வின் சப்தமாகும்.
அல்லாஹ் கூறுவான் “நரகம் செல்லும் எந்த நரகவாசியும் சுவனம் செல்கிற சுவனவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். அது போல், “சுவனம் செல்லும் எந்த சுவனவாசியும் நரகம் செல்கிற நரகவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். உலகில் வாழும் காலத்தில் அவர் கையால் ஒரு குத்து குத்தியிருந்தாலும் சரியே! பழிவாங்கிக் கொள்ளட்டும்!” என்று
அப்போது அங்கிருந்த நாங்கள் எவ்வாறு பழிதீர்க்கப்படும்? என்று கேட்டோம். அதற்கு நபி {ﷺ} நன்மைக்கு பகரமாக தீமையையும், தீமைக்குப் பகரமாக நன்மையையும் பெற்று பழிதீர்க்கப்படும்” என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஜாபிர் (ரலி) அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்று மதீனா வந்து சேர்ந்தார்கள். ( நூல்: முஸ்னத் அபூ யஃலா, முஸ்னத் அஹ்மத் )
தொடரும்.......

meelad competition 2018

Monday, 12 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை 
தொடர்கிறது.......
அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது…
நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.
இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆம்! உஹத் யுத்தகளத்தில் அவர்களின் கணவர் ஸைத் இப்னு ஆஸிம் (ரலி) மற்றும் அவர்களின் இரு மகன்களான ஹபீப் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி – அன்ஹுமா) ஆகியோரோடு கலந்து கொண்டார்கள் வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள்
இறுதியாக, அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும், அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.
ஆச்சர்ய மேலீட்டால் ”இதோ அண்ணலார் உயிரோடு இங்கே உயிரோடு இருக்கின்றார்கள்” என்று உஹத் யுத்தகளம் முழுமையும் கேட்கும் அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.
இதே நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு அருகே நாலா புறங்களிலும் அரணாக தங்களை அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.
மாநபி {ﷺ} அவர்கள் தங்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்து “உஹத் யுத்தகளத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லை” என்று நபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.
கிட்டத்தட்ட 13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக் கொண்டிருக்க ஒரு எதிரி வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.
அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும் ”அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள்” என்று வேண்டினார்கள்.
أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ). )
உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம், ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )
தொடரும்.......


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

Sunday, 11 November 2018

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை

வாழ்க்கையாக இருக்கட்டும், வாழ்ந்து மறைந்த பின் விட்டுச் செல்கிற வரலாறாக இருக்கட்டும் புகழுக்குரியதாய் அமைந்திருக்க வேண்டும் என்கிற புதியதோர் இலக்கணத்தை இப்பூவுலகிற்கு தந்தவர்கள் பெருமானார் {ﷺ} அவர்கள்.
வரலாற்றிலும் கூட புகழோடு தோன்றுகிற பெரும் பேறு பெற்றவர்கள் நமது உயிரினில் கலந்த உத்தம நபி {ﷺ} அவர்கள்

நபி (ﷺ) அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ﷺ) அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

நபி (ﷺ) அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.  இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்து விட்டு விடை பெற்றார்கள்.

சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார்.  நபி (ﷺ) அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் வந்து சந்தித்தார். அவரை நபி (ﷺ) அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள்.

அவர் விடைபெற்றுச் சென்ற போது “என்னிடம் ஏதாவது கேளுங்கள்!”  என்று நபி (ﷺ) அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள்.

”அவர் எனக்கு ஓர் ஒட்டகம் தேவை அதை நான் வாகனமாக பயன் படுத்திக் கொள்வேன்” என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள்.

அதற்கவர், அதை பாதுகாக்க ஒரு நாய் வேண்டும் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள், அதற்கவர் அவ்விரண்டையும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணைத்தாருங்கள் என்று கேட்டார்.

இதுதான் உங்கள் தேவையா? என மாநபி (ﷺ) கேட்ட போது,  ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார் அவர்.

அல்லாமா தப்ரானீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ரிவயாத்

அக்கிராமவாசி ஓர் ஒட்டகம் தேவை,  தாங்கள் அதை வழங்கினால் வாகனமாக பயன்படுத்திக் கொள்வேன், இன்னும் சில ஆடுகளைத் தந்தால் அதன் பாலைக் கறந்து என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வேன் என்றார். இதுதான் உங்களின் தேவையா? என்று வினவியபோது ஆமாம் இறைத்தூதரே!  இதுவே எனக்குப் போதும் என்றார்.

இதைக்கேட்டதும் அண்ணல் நபி (ﷺ) அவர்கள்:  “அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டீரே! மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி மூஸா (அலை) அவர்களிடம் கேட்டது போல நீங்களும் கேட்க தவறி விட்டீரே! உம்மை விட அம்மூதாட்டி சிறந்தவள் என்றார்கள்.

உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி?அப்படி என்ன தான் கேட்டார்?ஆர்வமாய் அண்ண்லாரிடம் கேட்டார்கள்.

மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது.

அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள் “இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயண மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்” சொன்னார்கள்.

 சக நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்கு தெரியும் என தெரிந்து கொண்டார்கள்.

இறுதியில், அம் மூதாட்டியை சந்தித்த மூஸா (அலை) அடக்கத்தலம்குறித்து விசாரித்தார்கள்.

நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்? என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்? எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.

அம்மூதாட்டியின் ஆர்வத்தையும், ஆவலையும் கண்டு வியந்த நபி மூஸா (அலை) அவர்கள் ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

பின்பு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் புனித உடல் கண்டெடுக்கப்பட்டு, பைத்துல் முகத்தஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

     ( நூல்: அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் )

தொடரும்.......



மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

கொசு (நுளம்பு) தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.
மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது.
அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது.
அது என்ன வசனம் தெரியுமா? إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ 
இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.



குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

Saturday, 10 November 2018

அன்பளிப்பு பொருட்கள்

                          அன்பளிப்பு பொருட்கள்    உத்தியோகத்தர்களுக்கு ஆகுமானதா?

அரச நிறுவனங்களில் கடமை புரிபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைக்காக அமர்த்தப்பட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் சேவை பெறுனர்களிடம் இருந்து அன்பளிப்பு பொருட்களையோ வேறு உதவிகளையோ பெற்றுக்கொள்வது தொடர்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு, நடைமுறைகளோடு இணைந்த நடுநிலைப் பார்வை அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. பொதுவாக இஸ்லாம் அன்பளிப்பு வழங்குவதை வரவேற்கின்றது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட அன்பளிப்பை தவிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது.

இது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாவது ஒரு பொறுப்பிலே நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் சேவைபெறுனர்களின் அன்பளிப்பு பொருட்களை பெறுவது கூடாது என பின்வரும் நேரடி ஆதாரங்களை மையப்படுத்தியும் வேறு சில துணை விடயங்களை மேற்கோள் காட்டியும் குறிப்பிடுகின்றனர். அவைகள் பின்வருமாறு

1. நபி (ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்த போது இது உங்களுக்குரியது இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்த பின்னர் நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்து திரும்பி) வந்து இது உமக்குரியது இது எனக்குரியது என்று கூறுகிறாரே அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே அவருக்கு அன்பளிப்பு வழங்கப்டுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக அவர் கொண்டு வரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமை நாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் அது மாடாக இருந்தால் அல்லது ஆடாக இருந்தால் கத்திக்கொண்டிருக்கும் என்றார்கள். பிறகு அவர்களின் அக்குளின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தம் கைகளை உயர்த்தி நான் எடுத்து உரைத்து விட்டேனா? என்று மும்முறை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி - 7174)

ஸகாத் வசூலிப்பவர்களுக்கென பிரத்தியேகமான கூலியை இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற போது அன்பளிப்பு எனும் வகையில் உதவிகளை பெற்றுக்கொள்வதை நபி(ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளதை மேலுள்ள ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இமாம் புகாரி அவர்கள் இந்த ஹதீஸிற்கு தலைப்பிடும் போது அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள் என தலைப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். குறிப்பிட்ட கடமைக்காக அமர்த்தப்பட்டிருப்பவருக்கு அவருடைய வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது அன்பளிப்புகளை பெற்றுக்கொள்வதை நேரடியாகவே தடைசெய்யும் விதத்தில் மேலுள்ள ஹதீஸ் காணப்படுகின்றது.

2. மேலும் இவ்வாறான அன்பளிப்பு பொருட்களையோ சேவை பெறுனர்களின் மூலம் கிடைக்கப்பெறும் சலுகைகளையோ பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் நிருவாக ரீதியான சீர்கேடுகளும் நடுநிலை தன்மையும் இஸ்லாம் கூறும் சமத்துவமும் சீர்குலைவதற்கான சந்தர்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. (குறித்த நபருக்கு விஷேட சலுகைகள் வழங்கப்படலாம், முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புண்டு, ஓழுங்கு வரிசை மீறப்பட இடமுண்டு, இரகசிய தகவல்கள் குறித்த நபருடன் பரிமாறப்படுவதற்கான சந்தர்ப்பங்களுண்டு)

3. நபி (ஸல்) அவர்கள் தவறுகள் தொடர்பாக கூறும் போது எது உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதுதான் தவறு எனக்கூறினார்கள். இவ் அன்பளிப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்கள் எல்லோர் முன்னிலையிலும் அதனை பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டமாட்டார்கள் என்பது மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளை உண்மைப்படுத்துவதாக அமைகின்றது.

4. நபி (ஸல்) அவர்கள் ஹராமா? ஹலாலா? எனும் சந்தேகமான விடயங்களையே தவிர்ந்து கொள்ளுமாறு கூறினார்கள் என்றால் இது போன்ற தெளிவாக தடுக்கப்பட்ட விடயங்களில் எந்தளவு கண்டிப்பாக இருந்திருப்பார்கள் என்பதனை தங்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.

5. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு வெகுமதிகள் வழங்க வகுப்பு ரீதியாக மாணவர்களிடம் பணம் சேகரிக்கப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது. இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பது அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகியல் சட்டங்களே இதனை தடைசெய்கிறது எனில் அல்லாஹ்வின் சட்டங்கள்?

எனவே, அறிஞர்களின் இத்தீர்பினையும் அதற்கான ஆதாரங்களையும் அவதானிக்கின்றபோது இது இறையச்சத்திற்கு நெருக்கமான ஒரு முடிவாகவே தென்படுகிறது. எனவே எம் கரங்களை முடியுமானவரை தூய்மைப்படுத்தி மறுமையில் வெற்றிபெற்ற கூட்டமாக மாறுவதற்கு முயற்சிப்போம். நற்பணிகளில் இணைந்தே செயற்படுவோம்.

ஜே.எம்.சியாப்
அபிவிருத்தி உத்தியோகத்தர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்