மீலாதுன் நபி ( ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது.....
தொடர்கிறது.....
அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அல்கமா (ரலி) அவர்களிடம் இருக்கும் ஒரு நபிமொழியைக் கேட்டு வர மதீனாவிலிருந்து மிஸ்ருக்கு பயணமானார்கள்.
மிஸ்ரின் பிரதான தெரு ஒன்றின் வழியில் மஸ்லமா இப்னு மகல்லத் அல் அன்ஸாரி (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது, மஸ்லமா (ரலி) அவர்கள் மிஸ்ரின் கவர்னராக இருந்தார்கள்.
இருவரும் சந்தித்து முஆனக்கா செய்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர், மஸ்லமா (ரலி) அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் என்ன விஷயமாக மிஸ்ர் வந்தீர் என்று வினவ, நபி {ﷺ} அவர்கள் கூறிய ஒரு செய்தியை அல்கமா இப்னு ஆமிர் (ரலி) தெரிந்து வைத்திருக்கின்றாராம். அவரிடம் இருந்து கேட்டுச் சென்றிடவே இங்கு வந்தேன்” என்றார்களாம். இது கேட்ட வியந்து போன மஸ்லமா (ரலி) தானும் உங்களோடு வருகின்றேன் என்று கூறி அவர்களோடு சேர்ந்து அல்கமா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
இருவரும் அல்கமா இப்னு ஆமிர் (ரலி) அவர்களைச் சந்தித்து, தாங்கள் இருவரும் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அல்கமா (ரலி) அவர்கள் “எவர் ஒரு இறைநம்பிக்கையாளனின் குறையை உலகில் மறைக்கின்றாரோ, அவரின் குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான்” என நபி {ﷺ} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அங்கிருந்து அவ்விருவரிடமும் விடை பெற்று விட்டு ஒரு நிமிடம் கூட மிஸ்ரில் தங்காமல் மதீனா திரும்பினார்கள் அபூ அய்யூப் (ரலி) அவர்கள். ( முஸ்னத் அஹ்மத் )
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு முறை ஒருவர் என்னிடம் மறுமை குறித்து நபி {ஸல்} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாக என்னிடம் கூறினார்.
அந்தச் செய்தியை நேரடியாக நான் கேட்க விரும்பினேன். ஆகவே, அவர் எங்கிருக்கின்றார் என்று விசாரித்தேன். அவர் ஷாமிலே இருக்கின்றார் என்பதை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமானேன்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இமாம் அபூ யஃலா அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் விரைவாகச் செல்கிற ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, ஒரு மாதகாலம் பயணம் செய்து ஷாம் சென்றார். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்களின் வீட்டை தேடிப்பிடித்து அவரின் வீட்டிற்குச் சென்று தான் வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்லி விட்டு நபி {ﷺ} அவர்கள் மறுமையில் பழிவாங்குவது குறித்து கூறிய அந்தச் செய்தியை தமக்கு கூறுமாறு சொன்னார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இதற்காகவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள்? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் “ நபி {ﷺ} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை கேட்காமலே இறந்து விடுவதை நான் அஞ்சுகின்றேன்” என்றார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ”நபி {ﷺ} அவர்கள் ஒரு நாள் எங்களிடம் மறுமையில் மனிதர்களை அல்லாஹ் நிர்வாணிகளாக எழுப்பி மஹ்ஷரில் நிற்க வைத்திருப்பான். அப்போது, அவர்கள் மிகச் சமீபத்திலே ஒரு சப்தத்தைக் கேட்பார்கள். அது வேறு யாருடைய சப்தமும் அல்ல. அது அல்லாஹ்வின் சப்தமாகும்.
அல்லாஹ் கூறுவான் “நரகம் செல்லும் எந்த நரகவாசியும் சுவனம் செல்கிற சுவனவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். அது போல், “சுவனம் செல்லும் எந்த சுவனவாசியும் நரகம் செல்கிற நரகவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். உலகில் வாழும் காலத்தில் அவர் கையால் ஒரு குத்து குத்தியிருந்தாலும் சரியே! பழிவாங்கிக் கொள்ளட்டும்!” என்று
அப்போது அங்கிருந்த நாங்கள் எவ்வாறு பழிதீர்க்கப்படும்? என்று கேட்டோம். அதற்கு நபி {ﷺ} நன்மைக்கு பகரமாக தீமையையும், தீமைக்குப் பகரமாக நன்மையையும் பெற்று பழிதீர்க்கப்படும்” என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஜாபிர் (ரலி) அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்று மதீனா வந்து சேர்ந்தார்கள். ( நூல்: முஸ்னத் அபூ யஃலா, முஸ்னத் அஹ்மத் )
தொடரும்.......
தொடரும்.......