السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 12 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை 
தொடர்கிறது.......
அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது…
நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.
இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆம்! உஹத் யுத்தகளத்தில் அவர்களின் கணவர் ஸைத் இப்னு ஆஸிம் (ரலி) மற்றும் அவர்களின் இரு மகன்களான ஹபீப் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி – அன்ஹுமா) ஆகியோரோடு கலந்து கொண்டார்கள் வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள்
இறுதியாக, அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும், அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.
ஆச்சர்ய மேலீட்டால் ”இதோ அண்ணலார் உயிரோடு இங்கே உயிரோடு இருக்கின்றார்கள்” என்று உஹத் யுத்தகளம் முழுமையும் கேட்கும் அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.
இதே நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு அருகே நாலா புறங்களிலும் அரணாக தங்களை அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.
மாநபி {ﷺ} அவர்கள் தங்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்து “உஹத் யுத்தகளத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லை” என்று நபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.
கிட்டத்தட்ட 13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக் கொண்டிருக்க ஒரு எதிரி வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.
அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும் ”அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள்” என்று வேண்டினார்கள்.
أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ). )
உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம், ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )
தொடரும்.......


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211