السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday 10 November 2018

அன்பளிப்பு பொருட்கள்

                          அன்பளிப்பு பொருட்கள்    உத்தியோகத்தர்களுக்கு ஆகுமானதா?

அரச நிறுவனங்களில் கடமை புரிபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைக்காக அமர்த்தப்பட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் சேவை பெறுனர்களிடம் இருந்து அன்பளிப்பு பொருட்களையோ வேறு உதவிகளையோ பெற்றுக்கொள்வது தொடர்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு, நடைமுறைகளோடு இணைந்த நடுநிலைப் பார்வை அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. பொதுவாக இஸ்லாம் அன்பளிப்பு வழங்குவதை வரவேற்கின்றது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட அன்பளிப்பை தவிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது.

இது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாவது ஒரு பொறுப்பிலே நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் சேவைபெறுனர்களின் அன்பளிப்பு பொருட்களை பெறுவது கூடாது என பின்வரும் நேரடி ஆதாரங்களை மையப்படுத்தியும் வேறு சில துணை விடயங்களை மேற்கோள் காட்டியும் குறிப்பிடுகின்றனர். அவைகள் பின்வருமாறு

1. நபி (ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்த போது இது உங்களுக்குரியது இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்த பின்னர் நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்து திரும்பி) வந்து இது உமக்குரியது இது எனக்குரியது என்று கூறுகிறாரே அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே அவருக்கு அன்பளிப்பு வழங்கப்டுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக அவர் கொண்டு வரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமை நாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் அது மாடாக இருந்தால் அல்லது ஆடாக இருந்தால் கத்திக்கொண்டிருக்கும் என்றார்கள். பிறகு அவர்களின் அக்குளின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தம் கைகளை உயர்த்தி நான் எடுத்து உரைத்து விட்டேனா? என்று மும்முறை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி - 7174)

ஸகாத் வசூலிப்பவர்களுக்கென பிரத்தியேகமான கூலியை இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற போது அன்பளிப்பு எனும் வகையில் உதவிகளை பெற்றுக்கொள்வதை நபி(ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளதை மேலுள்ள ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இமாம் புகாரி அவர்கள் இந்த ஹதீஸிற்கு தலைப்பிடும் போது அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள் என தலைப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். குறிப்பிட்ட கடமைக்காக அமர்த்தப்பட்டிருப்பவருக்கு அவருடைய வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது அன்பளிப்புகளை பெற்றுக்கொள்வதை நேரடியாகவே தடைசெய்யும் விதத்தில் மேலுள்ள ஹதீஸ் காணப்படுகின்றது.

2. மேலும் இவ்வாறான அன்பளிப்பு பொருட்களையோ சேவை பெறுனர்களின் மூலம் கிடைக்கப்பெறும் சலுகைகளையோ பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் நிருவாக ரீதியான சீர்கேடுகளும் நடுநிலை தன்மையும் இஸ்லாம் கூறும் சமத்துவமும் சீர்குலைவதற்கான சந்தர்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. (குறித்த நபருக்கு விஷேட சலுகைகள் வழங்கப்படலாம், முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புண்டு, ஓழுங்கு வரிசை மீறப்பட இடமுண்டு, இரகசிய தகவல்கள் குறித்த நபருடன் பரிமாறப்படுவதற்கான சந்தர்ப்பங்களுண்டு)

3. நபி (ஸல்) அவர்கள் தவறுகள் தொடர்பாக கூறும் போது எது உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதுதான் தவறு எனக்கூறினார்கள். இவ் அன்பளிப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்கள் எல்லோர் முன்னிலையிலும் அதனை பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டமாட்டார்கள் என்பது மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளை உண்மைப்படுத்துவதாக அமைகின்றது.

4. நபி (ஸல்) அவர்கள் ஹராமா? ஹலாலா? எனும் சந்தேகமான விடயங்களையே தவிர்ந்து கொள்ளுமாறு கூறினார்கள் என்றால் இது போன்ற தெளிவாக தடுக்கப்பட்ட விடயங்களில் எந்தளவு கண்டிப்பாக இருந்திருப்பார்கள் என்பதனை தங்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.

5. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு வெகுமதிகள் வழங்க வகுப்பு ரீதியாக மாணவர்களிடம் பணம் சேகரிக்கப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது. இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பது அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகியல் சட்டங்களே இதனை தடைசெய்கிறது எனில் அல்லாஹ்வின் சட்டங்கள்?

எனவே, அறிஞர்களின் இத்தீர்பினையும் அதற்கான ஆதாரங்களையும் அவதானிக்கின்றபோது இது இறையச்சத்திற்கு நெருக்கமான ஒரு முடிவாகவே தென்படுகிறது. எனவே எம் கரங்களை முடியுமானவரை தூய்மைப்படுத்தி மறுமையில் வெற்றிபெற்ற கூட்டமாக மாறுவதற்கு முயற்சிப்போம். நற்பணிகளில் இணைந்தே செயற்படுவோம்.

ஜே.எம்.சியாப்
அபிவிருத்தி உத்தியோகத்தர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்