السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 27 December 2025

திருக்குர்ஆன் விளக்கம் 04


 . *திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி..

•••••••••••••••••••••••••••••••••

              தொடர்: 4



 *ويقيمون الصلوة* 


தொழுகையை நிலை நிறுத்தியவர்கள்


 *தொடர்பு:* 


இந்த இடத்தில் முத்தகீன்களின் பண்பைப்பற்றிக்கூறப்படுகின்றது, " முத்தகீ" என்பவர் ஈமானிலும் , அமல்களிலும் சீரானவராக இருக்கவேண்டும், ஈமானைப்பற்றி முதலில் கூறப்பட்டுள்ளது, இப்போது அமல்களைப்பற்றி ஆரம்பமாகின்றது, அமல்களில் தொழுகை தான் முதன்மையானது , ஆகவே , தொழுகையை முதலில் கூறப்படுகின்றது, 


சில காரணங்களினால் ஈமான் அமல்களை விட முதன்மையாகின்றது.


1- அமல்களுக்கு ஈமான் தான் அடிப்படை, ஆகவே, முதலில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

2- ஈமான் கல்பின் செயல், அமல்கள் உடலின் செயல்கள்,மனம் அரசர், உடல் அவரின் பிரஜை ஆகவே, மனதின் செயல் உடலின் செயலை விட மேலானது,


3- ஈமான் அனைத்து நபிமார்களின் மார்க்கத்திலும் ஒன்று போலிருந்தது, செயல்களில் வேறுபாடுகள் வந்தன, நிரந்தரமான பொருள் மாறுபடும் பொருளை விட மேம்பட்டது, 


4- ஈமான் கொள்வது இஸ்லாம் ஆரம்பித்த நாளிலிருந்து பர்ழாக இருந்து வருகின்றது, தொழுகை, ஸகாத் உள்ளிட்டவை பின்னால் பர்ழானவை .


5- செயல்கள் மரணத்தோடு முடிந்துவிடும், ஈமான் மரணம், கப்று ,ஹஷ்று உள்ளிட்ட சகல இடங்களிலும் தொடர்ந்து சேர்ந்திருக்கும்,  


6- ஈமான் கொள்வது அனைவர்மீதும் பர்ழு , அமல்கள் அனைவர் மீதும் பர்ழு இல்லை, காபிர் மீதும் ஈமான் கொள்ளவேண்டியது பர்ழு, பெற்றோரைத் தொடர்ந்திருக்கும் குழந்தை, பைத்தியம் உள்ளிட்ட முஸ்லிம்கள் மீது எல்லா நிலைகளிலும் ஈமான் பர்ழாகும்,ஆனால், தொழுகை உள்ளிட்ட அமல்கள் இவர்களுக்கு பர்ழு இல்லை, , இவ்வாறு பெண்களுக்கு ஹைழு, நிபாஸ் காலத்தில் தொழுகை,நோன்பு பர்ழு இல்லை, ஏழைக்கு ஸகாத் , ஹஜ் கடமை இல்லை,  


இவ்வாறான காரணங்களுக்காக அமல்களை விட ஈமான் முற்படுத்தப்பட்டுள்ளது, 


 இவ்வாறு தொழுகை ஸகாத்தைவிட முற்படுத்தப்பட்டதற்கும் சில காரணங்கள் உள்ளன.


1- தொழுகை உடலின் செயல், ஸகாத் பொருளின்செயல், பொருளை விட உடல் மேலானது, ஆகவே, தொழுகை முற்படுத்தப்பட்டது.


2- இஸ்லாத்தில் முதலாவதாக தொழுகை தான் கடமையானது.


3- தொழுகை அர்ஷுக்கு அப்பால் அல்லாஹு ஸுப்ஹானஹு வத ஆலா வின் திருவடியில்கடமையாக்கப்பட்டது, ஏனைய அமல்கள் பூமியில் கடமையானவை , இதிலிருந்து தொழுகை , ஏனைய அமல்களை விட மேலானது என்பது தெளிவு,


4- தொழுகை தினமும் ஐந்து வேளைகள் பர்ழு, ஸகாத், நோன்பு, ஹஜ் வருடத்தில் ஒருமுறை தான் பர்ழு ,.


5- தொழுகை அரசர், ஆண்டி பிரயாணி, நோயாளி உள்ளிட்ட அனைவர் மீதும் கடமை , ஸகாத் ஏழைக்கு கடமையில்லை பிரயாணி , நோயாளிக்கு நோன்பு கடமை இல்லை , பின்னர் கழாச்செய்யலாம்.


6-   

 தொழுகை ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தொடக்கம் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காலம்வரை சகல நபிமார்களுக்கும் சில வேறுபாட்டோடு கடமையாக இருந்து வந்தது, 


ஹளறத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் சுப்ஹு தொழுதார்கள், ஹளறத் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் ழுஹர் தொழுதார்கள், ஹளறத் யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அஸர் தொழுதார்கள், ஹளறத் ஈஸா நபி அலைஹிமஸ்ஸலாம் மக்ரிப் தொழுதார்கள், ஹளறத் மூஸா நபி அலைஹிமஸ்ஸலாம் இஷா தொழுதார்கள்,


தப்ஸீர் றூஹுல் பயான்.


விளக்கம் : தப்ஸீர்.


தொழுகையை நிலை நாட்டுதல் என்பதன் பொருள்: எப்போதும் அதன் அக,புற ஒழுக்கங்களைப் பேணித் தொழ வேண்டும் என்பதாகும் , வெளிப்படையான ஒழுக்கங்கள் என்பன, அதன் ஷர்த்துக்கள் ;பர்ழுகள், சுன்னத்துக்கள், உள்ளிட்ட வையாகும், மனதில் பணிவை ஏற்படுத்துவது, மனதை ஓர்மைப்படுத்துவது, மனதை இறை சன்னிதானம் பக்கம் திருப்புவது உள்ளிட்டவை அந்தரங்க ஒழுக்கங்களாகும். .


திருக்குர்ஆனில் தொழுகையைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் நிலை நாட்டுமாறு கூறுகின்றது, எனவே, ,எவர் தொழுகையை பேணுதலோடு தொழவில்லையோ, அவர் இத்திரு வசனத்தின் பிரகாரம் தொழாதவராகவே கருதப்படுவார். 


நிலை நாட்டுவார்கள் என்பது, பன்மைச் சொல், இதன் மூலம் ஜமாத்தாகத் தொழுவது வலியுறுத்தப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் صلوة. என்ற சொல் ஐந்து பொருளில் வந்துள்ளது 


1 -து ஆ - وصل عليهم  

    

2- புகழுதல் - يصلون علي النبي 


3- திருக்குர்ஆனை ஓதுதல். ولا تجهر بصلوتك


4- றஹ்மத் - صلوات من ربهم 


5- தொழுகை - اقيموا الصلوة 


தொழுகையில் முதல் நான்கு பொருள்களும் உள்ளடங்கி இருக்கின்றன, அதில் ரப்பிடம் துஆ கேட்பதும், அவனைப் புகழுவதும், திருக்குர்ஆனைப் பாராயணம் செய்வதும் ,அதை ஓதுபவர் மீது ரஹ்மத் கிடைப்பதும் இருக்கின்றன,


 தொழுகையில் அனைத்து மலக்குகளின் அமல்களும் உள்ளடங்கியுள்ளன. 

தொழுகையில் அனைத்து வகையான படைப்புகளின் வணக்கங்களும் சேகரமாகி இருக்கின்றன, மரம் எல்லா நேரத்திலும் நின்று வணங்குகின்றது, கால் நடைகள் றுகூவிலிருக்கின்றன,பாம்பு, தேள்,பூரான் உள்ளிட்ட ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் சுஜூதில் இருக்கின்றன, தவளை இருப்பிலிருக்கின்றது, இவை யாவற்றிலும் மேலானவன் மனிதன்! ஆகையால், அனைத்து வணக்கங்களும் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளன.


ஸூபியாக்கள் "நிலை நாட்டுதல்" என்பதற்கு வேறு பொருளைக் கூறுகின்றனர்,அத்திவாரமின்றி சுவர் இல்லை! வேரின்றி மரம் இல்லை! இஸ்லாத்தின் அனைத்துக் கட்டிடங்களும் தொழுகை என்ற சுவரிலேயே நிற்கின்றன,"தொழுகை" என்ற சுவர் நிலைத்து நிற்பதற்கு முஸ்தபா மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் "இஷ்க்" என்ற காதல் அடிப்படையாகும், எனவே, தொழுகையில் முகம் கிப்லாவை நோக்கியும், மனம் மதினா தைய்யிபாவை நோக்கியும் இருக்க வேண்டும், இல்லையேல் றுகூஊ, சுஜூது திரைக்குள்ளையே இருக்கும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் காதலோடு தொழுகையை நிலை நிறுத்துவதற்குரிய தௌபீக்கை கிருபை யுள்ள ரஹ்மான் நமக்கு ஈந்தருள் புரிவானாக! ஆமீன்.




.

திருக்குர்ஆன் விளக்கம் 03


 *படிக்கும் காலத்தில் இருக்க வேண்டிய* *உள்நோக்கம் (நிய்யத்) பற்றிய விளக்கம் !* 

•••••••••••••••••••••••••••••

அரபு மூலம்: 

தஃலீமுல் முத அல்லிம்


தமிழில்: 


மௌலவி, பாஸில், *ஏ. எல். பதுறுத்தீன்.* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••

          தொடர் : (3)


 படிக்கும் காலத்தில் மாணவனுக்கு கல்வியைப் பற்றிய உள்ளார்ந்த நோக்கம்( நிய்யத்) இருக்க வேண்டும்,ஸஹீஹான ஹதீதில் "செயல்கள் யாவும் உள்ளார்ந்த எண்ணத்தைப் பொறுத்து இருக்கின்றன" என்ற திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் கூற்றுக்கு ஒப்ப எண்ணம்தான் அனைத்து செயல்களுக்கும் மூல வேராக இருக்கின்றது, 


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


كَمْ مِنْ عَمَلٍ يَتَصَوَّرُ بِصُورَةِ أَعْمَالِ الدُّنْيَا،

وَيَصِيرُ بِحُسْنِ النِّيَّةِ مِنْ أَعْمَالِ الْآخِرَةِ،

وَكَمْ مِنْ عَمَلٍ يَتَصَوَّرُ بِصُورَةِ أَعْمَالِ الْآخِرَةِ،

ثُمَّ يَصِيرُ مِنْ أَعْمَالِ الدُّنْيَا بِسُوءِ النِّيَّة


“எத்தனையோ செயல்கள் உலகச் செயல்களாகத் தோன்றினாலும், நல்ல நிய்யத்தால் அவை மறுமையின் செயல்களாகி விடுகின்றன.

அதேபோல், எத்தனையோ செயல்கள் மறுமையின் செயல்களின் தோற்றத்தில் இருந்தாலும், கெட்ட நிய்யத்தால் அவை வெறும் உலகச் செயல்களாகி விடுகின்றன.”


 அறிவைத் தேடுவதில் மாணவன் 


1- அல்லாஹுத்த ஆலா வின் திருப்பொருத்தம், 


2- மறுமையின் இல்லம்,(சொர்க்கம்) 


 3- தன்னிலிருந்தும் , ஏனைய அறிவிலிகளிலிருந்தும் அறியாமையை அகற்றல், 


 4- சன்மார்க்கத்தை உயிர்ப்பித்தல், 


5- இஸ்லாத்தைப் பாதுகாத்தல் 


 உள்ளிட்ட வையை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும், ஏனெனில், இஸ்லாம் அறிவால் தான் நிலைத்திருக்கும், முட்டாள்தனம் இருக்கத்தக்க நிலையில் துறவறமும் தக்வாவும் ஒருபோதும் சீராகுவதில்லை..


"ஹிதாயா" என்ற புகழ்பெற்ற நூலை எழுதிய மேதகு அறிஞர் இமாம் புர்ஹானுத்தீன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் இந்த கவிதைகளைக் கேளுங்கள்.


فَسَادٌ كَبِيرٌ عَالِمٌ مُتَحَنِّكٌ

وَأَكْبَرُ مِنْهُ جَاهِلٌ مُتَسَنِّكُ

هُمَا فِتْنَةٌ فِي الْعَالَمِينَ عَظِيمَةٌ

لِمَنْ بِهِمَا فِي دِينِهِ يَتَمَسَّكُ


பொறுப்பற்ற அறிஞன் மிகப்பெரிய குழப்பக்காறன்,


இதை மிகைத்த குழப்பக்காறன் முட்டாள் வணக்கசாலி,


.தனது மார்க்கத்தில் இவ்விருவரையும் பின்பற்றுபவருக்கு 


 இவ்விருவரும் உலகத்தில் மிகப்பெரிய சோதனையாக இருக்கின்றனர்.


  அறிவைப் பெறுவதன் மூலம் அல்லாஹுத்த ஆலாவின் அருட்கொடை யான புத்தி (عقل) உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட நிஃமத்துக்களைத்தந்த அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டுவதை மாணவன் மனதில் எண்ணிக்கொள்வது அவசியமாகும்.  


அறிவின் மூலம்

 மக்களை தன்பக்கம் கவர்வது,

 உலகத்தின் குப்பை ( செல்வங்)களை திரட்டுவது, அரசரிடமும் ,அவரல்லாதவர்களிடமும் கண்ணியத்தை எதிர்பார்ப்பது உள்ளிட்டவையை நினைக்கக்கூடாது. 


முஹம்மத் இப்னு ஹஸன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி கூறுகின்றார்கள்.


لَوْ كانَ النّاسُ كُلُّهُمْ عَبِيدِي لَا اعْتَقَدْتُهُمْ فَتَبَرَّأْتُ مِنْ وَلائِهِمْ، وَمَنْ وَجَدَ لَذَّةَ الْعِلْمِ وَالْعَمَلِ بِهِ قَلَّمَا يَرْغَبُ فِيمَا عِنْدَ النّاسِ.


“மனிதர் எல்லோரும் எனக்கு அடிமைகளாயிருந்தாலும், நான் அவர்களிடம் சார்ந்திருப்பதாக எண்ணாது; அவர்களது ஆதரவைப் பொறுத்திருக்காமல் விடுவிப்பேன்.


ஏனெனில், அறிவின் இனிமையையும் அதன்படி நடப்பதன் ஆனந்தத்தையும் உணர்ந்தவன், மனிதர்களிடமுள்ள பொருட்களிலும் ஆதாயங்களிலும் பெரிதாக விருப்பம் கொள்ளமாட்டான்.”


 மேதகு இமாம் கீர்த்திமிக்க ஆசான் அஷ்ஷைகு கவ்வாமுத்தீன் ஹம்மாத் இப்னு இப்றாஹீமுஸ்ஸிஙார் அன்ஸாரி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின் "அமாலி" என்ற நூலிலிருந்து ஒரு கவிதையை நமக்கு சொல்லிக் காட்டுகின்றார் கள்.


مَنْ طَلَبَ العِلْمَ لِلمَعَادِ

فَازَ بِفَضْلِ اللهِ مِنَ الرَّشَادِ

فَيَا لِخُسْرَانِ طَالِبِهِ

لِنَيْلِ فَضْلٍ مِنَ العِبَاد


மறுமையின் வாழ்க்கைக்காக—அறிவைத் தேடுகிறவன்,

அல்லாஹ்வின் கருணையும் நல் வழிகாட்டுதலையும் பெற்று வெற்றி பெறுகின்றான்.


ஆனால், மனிதர்களிடமிருந்து புகழையும், உலக நலன்களையும்

பெறுவதற்காக அறிவைத் தேடுகிறவன் உண்மையிலேயே பெரும் இழப்புக்குள்ளாகின்றான்..


 உண்மைதான்! நன்மையை ஏவி, தீமையை விலக்கவும், சத்தியத்தை நிலைநாட்டவும், மார்க்கத்தின் கண்ணியத்தை உயர்த்தவும் பதவியைத் தேடினால், அதில் தனக்கோ , தனது பேராசைக்கான நோக்கம் இல்லாதிருந்தால்,, நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் அளவான பதவியைத்தேடுவது ஆகுமானது, 


மாணவன் கல்வியைத் தேடுவது தொடர்பில் அதிகமாக சிந்திக்க வேண்டியது அவசியமாகும், ஏனெனில், கடின முயற்சி செய்து பெற்ற கல்வியை அழியக்கூடிய அற்ப உலகத்திற்காக அதை செலவு செய்யக்கூடாது,  


றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


اِتَّقُوا الدُّنْيَا، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّهَا لَسِحْرٌ مِنْ هَارُوتَ وَمَارُوتَ


 “இம்மையை எச்சரிக்கையுடன் தவிர்த்து நடந்து கொள்ளுங்கள்.

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் உயிர் எவனுடைய கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக!

உலகம் ஹாரூத்–மாரூத் ஆகியோர் செய்த மாயையைவிட மோசமான மாயையுடையதாக இருக்கிறது.”


கவிதை: 


هِىَ الدُّنْيا أَقَلُّ مِنَ الْقَلِيلِ

وَعَاشِقُهَا أَذَلُّ مِنَ الذَّلِيلِ

تُصِمُّ بِسِحْرِهَا قَوْمًا وَتُعْمِي

فَهُمْ مُتَحَيِّرُونَ بِلَا دَلِيلِ


“இந்த உலகம் அற்றப்பத்திலும் அற்மானது,

அதை காதலிப்பவன் கடையனிலும் கடையனாவான்,

அவள் (உலகம்) தனது வித்தையால் பலரை செவிடாகவும், குருடாகவும் ஆக்கிவிட்டாள்,

அவர்கள் வழியறியாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றார்கள்.


وَيَنْبَغِي لِأَهْلِ الْعِلْمِ أَنْ لَا يُذِلَّ نَفْسَهُ بِالطَّمَعِ فِي غَيْرِ الْمَطْمُعِ وَيَتَحَرَّزَ عَمَّا فِيهِ مُذِلَّةُ الْعِلْمِ وَأَهْلِهِ وَيَكُونَ مُتَوَاضِعًا وَالتَّوَاضُعُ بَيْنَ التَّكَبُّرِ وَالْمَذِلَّةِ وَالْعِفَّةُ كَذَلِكَ وَيُعْرَفُ ذَلِكَ فِي كِتَابِ الْأَخْلَاقِ


தங்களுக்குச் சொந்தமில்லாததில் ஆசைப்பட்டு தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளாமலிருப்பது அறிஞர்களுக்கு அவசியமாகும், 

அறிவுக்கும் , அறிஞர்களுக்கும் இழிவைத்தரக்கூடியவையிலிருந்து விலகியிருக்க வேண்டும், பணிவுள்ளவராக இருக்க வேண்டும், பணிவு பெருமைக்கும், இழிவுக்கும் மத்தியிலிருப்பதாகும், கற்பும் அவ்வாறுதான் , ஒழுக்க வியல் (اخلاق) நூற்களில் இதை அறிந்து கொள்ள முடியும். 


அல்அதீபுல் முக்தார் என்று அறியப்பட்ட இமாம் அல் உஸ்தாத் றுக்னுத்தீன் றஹ்மத்துள்ளாஹிஅலைஹி இந்த கவிதையை எனக்கு சொன்னார்கள்.


اِنَّ التَّوَاضُعَ مِنْ خِصَالِ الْمُتَّقِي

وَبهُ الْتَّقِي إِلَى الْمَعَالِي يَرْتَقِي

وَمِنَ الْعَجَائِبِ عَجَبٌ مَنْ هُوَ جَاهِلٌ

فِي حَالِهِ أَهُوَ السَّعِيدُ أَمِ الشَّقِي

المُ كَيَّفَ يُخْتَمُ عُمْرُهُ أَوْ رُوحُهُ

يَوْمَ النَّوَى مُتَسَفِّلٌ أَمْ مُرْتَقِي


وَالْكِبْرِيَاءُ لِرَبِّنَا صِفَةٌ بِهِ

مَخْصُوصَةٌ تَجَنَّبْهَا وَالْمُتَّقِي


“பணிவு என்பது தக்வாவுள்ளவரின் சிறப்புக்குணங்களில் ஒன்றாகும்;

தக்வாவுள்ளவர் இதனால் உயர்ந்த நிலைகளுக்கு ஏறுகிறார்.


தான் பாக்கியவானா?இல்லைஅபாக்கியவானா? என்பதை அறியாத மூடன் தற்பெருமை கொள்வது விசித்திரமான தாகும், 


 மரண வேளையில் தனது ஆயுளும், தனது றூஹும் எப்படி முற்றுப்பெறும்,அது நரகம் செல்லுமா? அல்லது உயர்சொர்க்கம் செல்லுமா?  


பெருமை என்பது ,நமது இறைவனைச் சேர்ந்த தனித்துவமான குணமாகும்;

அதை தக்வாவுள்ளவர் தக்க முறையில் தவிர்க்க வேண்டும்.”


 இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய சீடர்களுக்கு இவ்வாறு கூறினார்கள்.


உங்களின் தலைப்பாகைகளை பெரிதாக்குங்கள், இன்னும், உங்களின் ஆடையின் கைகளை விசாலமாக்குங்கள், அறிவையும், அறிவுள்ளவர்களையும் ஏளனமாக அடுத்தவர்கள் பார்க்காதிருக்கவே இவ்வாறு கூறினார்கள்.


இமாமுல் அஃழம் அபூ ஹனீபா றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய சீடர் யூஸூப் இப்னு காலித் அஸ்ஸம்தி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி தங்களுடைய குடும்பத்தாரிடம் செல்லும் போது அவருக்கு எழுதிய "அல் வஸிய்யத்" என்ற நூலை மாணவன் பெற்றுக்கொள்வது அவசியமாகும், தேடினால் அதைப் பெற்றுக்கொள்ள முடியும்

 

எமது ஆசான் ஷைகுல் இஸ்லாம் புர்ஹானுத்தீன் அலி இப்னு அபீபக்கர் கத்தஸல்லாஹு றூஹஹுல் அஸீஸ்.அவர்கள் நான் ஊருக்குத் திரும்பும் வேளை அதை எழுதுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள், நான் அதை எழுதினேன், மக்களோடு உறவைப்பேணிக்கொள்ளும் ஆசிரியருக்கும், முப்திக்கும் இந்த நூல் மிக அவசியமான ஒன்றாகும்‌

திருக்குர்ஆன் விளக்கம் 02

 

திருக்குர்ஆன் விளக்கம்

*திருக்குர்ஆன் விளக்கம்.* 

•••••••••••••••••••••••••••••••• (2) 


மௌலவி, பாஸில், *ஏ எல். பதுறுத்தீன்*. ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி..

•••••••••••••••••••••••••••••••••


 **ذلك الكتب لا ريب فيه* 

 *هدى للمتقين.*


  2 : 2- உன்னதமான அந்த வேதத்தில் சந்தேகத்திற்குரிய எந்த இடமும் இல்லை, அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அதில் வழிகாட்டல் உண்டு!

---------------------------

 தப்ஸீர் : விளக்கம்.


அந்த வேதம் என்பது,

 முந்தைய நபிமார்களால் அவர்களின் வேதங்களில் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட முத்திரை நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அல்லாஹுவால் லௌஹுல் மஹ்பூழ் ஏட்டில் பாதுகாக்கப்பட்டுள்ள வேதத்தைக் குறிக்கும், 


அல்லது , றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு ஏற்கனவே இறங்கிய அத்தியாயங்களும், இதன்பின் இறங்க இருக்கும் லௌஹுல் மஹ்பூழிலிருக்கும் அத்தியாயங்களையும் குறிக்கும்,  


இதில் சந்தேகத்திற்கான எந்த இடமும் இல்லை என்பது, அதில் சொல்லப்படும் சட்டங்கள்,நுட்பங்கள், சரித்திரங்கள், எச்சரிக்கைகள், சுப செய்திகள் உள்ளிட்ட யாவும் உண்மை!, இவற்றில் எதிலும் எவ்வித சந்தேகமும் கிடையாது என்பதைக் குறிக்கும்.

 ஹிதாயத்திற்கான விளக்கம் சூரத்துல் பாதிஹாவின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

தக்வா மூன்று படித்தரங்களைக்கொண்டுள்ளது.


1- நிரந்தரமான வேதனையிலிருந்து தவிர்ந்திருப்பது,


 இந்த வகையில் அனைத்து முஸ்லிம்களும் முத்தகீகளாகும்.


2- பொதுவான பாவங்களை விட்டும் தவிர்த்திருப்பது,


 பொதுவாக தக்வாவுக்கு இப்பொருளையே கூறப்படுகின்றது.


3- ஹக்குத்த ஆலாவின் நினைவைத் தடுக்கக்கூடிய அனைத்தையும் விட்டும் தவிர்த்திருப்பது,

   அல்லாஹ்வுடைய வலிமார்கள், நபிமார்கள் இந்த வகையான முத்தகிகளாகும்.


இறுதியான இந்த அதிஉயர் படி நிலைக்கு இரு விதங்கள் உண்டு.


1- ஹளறத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்போன்று உலகியல் தொடர்புகளை விட்டும் முற்றிலுமாக ஒதுங்கி இருப்பது,


2- உலகத்தின் தொடர்புகளில்ஈடுபட்டுக்கொண்டு அதில் மனம் சாயாமல் முழுமையாக அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருப்பது, 


 ஹளறத் சுலைமான் நபி , ஹளறத் யூஸூப் நபி அலைஹிமஸ்ஸலாம் போன்றவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள், மேலும், கௌதுல் அஃழம் றழியல்லாஹு அன்ஹு அவர்களினதும், ஏனைய ஆரிபீன்களான ஷைகுமார்களின் தரீக்காவும் இந்த வகையைச்சேர்ந்ததாகும்,  


,உடல் மக்களோடு உறவாடும், மனம் அல்லாஹ்வின் நினைவில் மூழ்கியிருக்கும்.


திருக்குர்ஆனில் "தக்வா" என்ற சொல் பின்வரும் பொருள்களில் வருகின்றது. 


1-ஈமான் 


 2- தவ்பா


3- வழிப்படுதல்


 4- பாவத்தைத் தவிர்த்தல்..


 5- இக்லாஸ் கலப்பற்ற எண்ணம்


 6- இறையச்சம்.


அச்சம் இருவிதங்களால் ஏற்படும்.


1- தீங்கு செய்யக்கூடிய வையினால் தனக்கு தீங்கு ஏற்படும் என்று நம்பும் போது ஏற்படும் அச்சம்.


2- அரசர், அதிகாரி உள்ளிட்டோரின்ஆற்றல் , அதிகாரம் உள்ளிட்டவையால் ஏற்படும் அச்சம், 


 தீங்கு செய்யக்கூடியதின் அச்சத்தால் வெறுப்பும் விரண்டோடுவதும் நிகழும், ஆற்றல், அதிகாரத்தின் அச்சத்தால் கீழ்படிதல் நிகழும், றப்பின் அச்சம் இரண்டாவது வகையில் உள்ளதாகும்.


ஆற்றலின் அச்சமும் இருவகைப்படும்.

1- நம்பிக்கையில்லாத அச்சம்.


2- நம்பிக்கையான அச்சம்.


நம்பிக்கையில்லாத அச்சம் பாவத்தின் பக்கம் இழுக்கும், நம்பிக்கையுள்ள அச்சம் பாவத்திலிருந்து பாதுகாக்கும். றப்புத்த ஆலா வின் அச்சம் இரண்டாவது வகையில் இருக்க வேண்டும்.


வழிகாட்டல்: 


 ஒவ்வொரு தரத்திலிருக்கும் தக்வாதாரிக்கும் அவர்களின் தகுதிக்குத் தக்க விதத்தில் திருக்குர்ஆன் வழிகாட்டும், இந்த வகையில்


 ஷரீஅத்தில் "தக்வா" என்பது,

 மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய காரியங்களைத் தவிர்ப்பதைக் குறிக்கும்.


 "தக்வா" மூன்று விதத்தில் வழி காட்டுகின்றது,


1- பாமரர்களுக்கு ஈமான் இஸ்லாத்திற்கு வழிகாட்டுகின்றது.


2- விஷேஷமானவர்களுக்கு உறுதிப்பாட்டிற்கும், இஹ்ஸானுக்கும் வழிகாட்டுகின்றது,


3- அதி விஷேசமானவர்களுக்கு அல்லாஹ்வுக்கும், அவர்களுக்குமிடையிலான திரையை அகற்றி அல்லாஹ்வின் பேரழகைக் காட்சி காண்பதற்கு வழிகாட்டுகிறது.


"முத்தகி"' என்பவர், ஆலமுல் அர்வாஹில் (ஆத்மீக உலகில்) அல்லாஹ்விடம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுபவர் என்று ஸூபியாக்கள் கூறுகின்றனர், இதற்கான அடையாளம், சோதனையில் பொறுமையும், நிஃமத்தில் நன்றி பாராட்டலும்; விதியில் பொருத்தமும, குர்ஆனுக்கு முன்னால் தலை சாய்ப்பதுமாயிருக்கும்.


 திருக்குர்ஆன் முஸ்லிம் ,காபீர், முனாபிக் உள்ளிட்ட அனைவருக்கும் பொதுவாக வழிகாட்டும், ஆனால், முத்தகியைக் கூட்டி வந்து நேரிய வழியில் நிறுத்தி செல்லுமிடத்திற்குத் துணையாக கூடவே வந்து சேர்த்து வைக்கும்.


"ஹிதாயத்", என்பது சேர வேண்டிய இடத்தில் சேர்த்து வைப்பது, அதாவது, திருக்குர்ஆன் தக்வாதாரியை மறுமையில் சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும், திருக்குர்ஆன் ஒளியாகி தக்வா தாரிக்கு முன்னால் செல்லும், திருக்குர்ஆன் முஃமின்களுக்கும், நல்லமல்களுக்கும் வழிகாட்டும்.

திருக்குர்ஆன் விளக்கம் 01

 

திருக்குர்ஆன் விளக்கம் 01

*திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••

மௌலவி பாஸில் *ஏ> எல், பதுறுத்தீன்* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

••••••••••••••••••••••••••••••••. ( 1)


தமிழில் பல திருக்குர்ஆன் தமிழ் தர்ஜமாக்கள் வெளிவந்துள்ளன, அவற்றில் எதுவும் அரபு தப்ஸீரை அடியொற்றி தமிழாக்கம் செய்யப் படவில்லை, பல இடங்களில் பிழையான மொழிபெயர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன, 


நாம் அறிந்தவரை ஆரம்ப காலத்தில் அரபுத் தமிழில் வெளிவந்த முழுமையான இரு தப்ஸீர்களும் மிகச் சரியாகவே மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன, 


தமிழில் வெளிவந்த" தப்ஸீருல் ஹமீத் இப்னுகதீர் உள்ளிட்டவையும் சரியாகவே உள்ளன, இவற்றில் தப்ஸீருல் ஹமீத் " தப்ஸீர் றூஹுல் பயான்" தப்ஸீரின் தமிழாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழில் வழுவில்லாத தர்ஜமத்துல் குர்ஆனின் தேவையை நீண்ட காலமாக அனைவராலும் எதிர்பாக்கப்பட்டு வருகின்றது, நமது மனதிலும் இந்த கவலை இருந்துவந்தது, 


உருது மொழியில் பல தர்ஜமாக்கள் உள்ளன, அவற்றுள் இமாம் அஹ்மத் றிழா கான் பா ஸில் பரேலவி றஹ்மத்துள்ளாஹிஅலைஹி அவர்களின்*கன்சுல் ஈமான்" என்ற தர்ஜமா அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அற்புதமான தர்ஜமாவாகும்.


இதனை தமிழில் கொண்டுவரவேண்டும் என்ற பேரவா என்நெஞ்சில் நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்தது, 


கிருபையுள்ள றஹ்மான் எனது பேரவாவை நிறைவேற்ற தீர்மானித்தான், அல்லாஹுத்த ஆலா வின் பேரருள்ளால் 2021 அதை தமிழாக்கி நிறைவாக்கினேன்.அல்ஹம்துலில்லாஹ்! 


இதன்பின், விரிவான விளக்கம் எழுத வேண்டும் என்று என்மனம்என்னை உறுத்தியது, பல்வேறு சோதனைகள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அல்லாஹுத்த ஆலா வில் தவக்குல் வைத்து அவன் நல்லுதவியை எதிர்பார்த்து அதை எழுதத் துணிந்தேன், 


எனது முயற்சி முழுமையடையும் வரை எனது ஆயுளை ஆரோக்கியத்தோடு நீட்டித்துத்தர வேண்டும் என்று கிருபையுள்ள றஹ்மானிடம் இரஞ்சுகின்றேன்.


எமது ஏராளமான ஆக்கங்கள் புத்தக வடிவில் வெளிவராவிட்டாலும், சமூக வலைத்தளம் ஊடாக மக்களிடம் போய்ச்சேர்ந்துள்ளன.


இந்த வகையில் நமது தப்ஸீர் நூல் வடிவம் பெறுவதற்கு காலதாமதம் ஏற்படலாம் என்று அஞ்சி சமூக வலைத்தளம் ஊடாக மக்களிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து சிறு சிறு பகுதிகளாக முன்வைக்கின்றேன். 


 நமது எழுத்துப் பணி முற்றிலும் தூய நோக்கம் கொண்டது, இதன் மூலம் பொருளாதார விருத்தியோ, புகழ் பெறுவதோ நமது நோக்கமல்ல, 


 நாம் செய்யும் இந்த வேலையால் எந்த விதமான பாராட்டோ, வ ரவேற்போ நமக்குக் கிடைப்பதில்லை, அதை நாம் எதிர்பார்ப்பது மில்லை, உண்மையைச் சொல்லப்போனால் நமது ஆக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க கூட இருப்பவர்கள் வெகுதூரம் செல்கின்றனர், நமது ஆக்கங்களை திருடி எனது பெயரை அழித்துவிட்டு அவர்களின் பெயரைப் போட்டு வெளியிடுகின்றனர், இதனால் நமது மனம் சஞ்சலம் பட்டாலும் நமக்கு முன்னாலும் இந்த வேலையை பெருங்கொண்ட இமாம்களுக் கும் இதே காரியத்தைச் செய்திருக்கின்றார்கள், அந்த வகையில் நாம் ஆறுதல் பெறுகின்றோம்.


ஆயுள் சுருங்குகின்றது, பலவீனம் முற்றுகின்றது, இதற்குள் முடிந்ததை ச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சொந்த விடயங்களை ஓரமாக்கி அவற்றை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றேன். 


நமது மறைவிற்குப் பின் இவை நமக்கு நற்பலன் தரவேண்டும் இதன் பறக்கத்தால் எனது குடும்பம் மனைவி பிள்ளைகள் நேர்வழியில் இருக்க வேண்டும், என்பது எனது பிரார்த்தனை.

கிருபையுள்ள றஹ்மான் எனது நோக்கத்தை கபூல் செய்வானாக ! ஆமீன்.


எமது விளக்கத்தில் தவறுகளைக் காண்பவர்கள் தயவு செய்து உடன் தெரிவிக்குமாறு வேண்டுகின்றேன்.

--------------------------  


அல்பகறா. பசு. மதனி


 வசனங்கள் 280

பிரிவுகள்:40. எழுத்துக்கள்

சொற்கள்: 6312. 26792

•••••••••••••••••••••••••••••••


 பகறா சூறத்திற்கு மேலதிகமாக இரு நாமங்கள் உள்ளன, 

1- கிஸ்தாதுல் குர்ஆன்

فسطاط القران ذ

.2- 

 ஸனாமுல் குர்ஆன், 

سنام القران

 

இத்கான் : பாகம்1 பக்கம் 54


'பகறா' என்றால், "பசு" என்பது பொருள், ஒரு பசுவை அறுத்து அதன்மூலம் இறந்த ஒருவர் உயிர்பிக்கப்பட்ட வரலாறு இந்த அத்தியாயத்தில் கூறப் பட்டிருப்பதால், இவ்வத்தியாயத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது;


இறங்கிய காரணம்: 


இஸ்லாத்தின் நிறுவனரான நபிகள் திலகம் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் மக்காவில் தன்னை நபியென்று பிரகடனப்படுத்திய போது, அங்கு சிலைவணங்கிகள் உள்ளிட்ட முஷ்ரிக்குகளிடம் மட்டுமே மோத வேண்டியிருந்தது, ஆனால், மதீனா தைய்யிபாவுக்கு வருகை தந்ததும், அங்கு யூத, நஸாறாக்களின் அதிகமான குடியிருப்புக்களைக் கண்டார்கள்,


மதீனாவில் யூதர்களின் ஆதிக்கம் அதிகமாகயிருந்தது, அப்துல்லாஹ் இப்னு உபையை அவர்களின் தலைவராக அவர்கள் ஏற்கும் தருணமாக இருந்த நிலையில்தான் இஸ்லாம் அங்கே தனது பேரொளியைப் பாய்ச்சத் தொடங்கியது, திருக்குர்ஆனின் திருவசனங்கள் அவர்களின் செவிக்குள் ஊடுருவியதும், பலர் புனித இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர், ஆயினும், அவர்களுள் அறிவாளிகள் என்று பிரபல்யமான சிலர் பொறாமையின் காரணமாக இஸ்லாத்தில் இணையாமல் விலகியிருந்தனர், மதீனாவைச் சுற்றியிருப்பவர்கள் இவர்களுக்கு கண்ணியம் கொடுத்து வந்தனர், இதன்காரணமாக அதிகமான அறிவில்லாத பாமரமக்கள் அவர்களோடு இணைந்திருந்தனர்,


யஹூதிகளும், நஸாறாக்களும் காலம்காலமாக சண்டை பிடித்துக்கொண்டேயிருந்தனர், இஸ்லாம் வந்த போது இஸ்லாத்தை எதிர்ப்பதற்காக தங்கள் பகையை மறந்து. இருவரும் இணைந்து கொண்டனர், அப்துல்லாஹ் இப்னு உபையும், அவனுடைய சஹாக்களும் வெளிப்படையில் கண்ணியத்தையும், சொத்தையும் நேசிப்பவர்களாக இருந்ததால், போலித்தனமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர், ஆயினும், அவர்களின் மனம் காபிர்கள் பக்கமே இருந்தது, இவர்கள் திரைமறைவில் காபிர்களுக்கு உதவிசெய்து கொண்டிருந்தனர், 


 றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா தைய்யிபா வந்தபின்,1- யஹூதி அறிஞர்கள், 2- நஸாறா அறிஞர்கள், 3- அறிவில்லாத முஷ்ரிக்குகள், 4- முனாபிக்குகள் உள்ளிட்ட நான்கு தரப்பில் எதிரிகளைச்சந்திக்க வேண்டியதாயிற்று;


முனாபிக்குகள் மறைமுகமாக வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, முஸ்லிம்களுக்கு மத்தியில் சந்தேகங்களையும் ; சலனங்களையும் ஏற்படுத்தவும் முயற்சித்தனர், இந்த கட்டத்தில்தான், மேற்படி நான்கு கூட்டத்தார்களின் சந்தேகங்களைத் தூராக்கும் வண்ணம் ஓர் அத்தியாயத்தை இறக்க அல்லாஹுத்த ஆலா தீர்மானித்தான்;


ஆகவே, றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா தைய்யிபா வருகை தந்ததுமே இந்த அத்தியாயம் இறங்கத் தொடங்கியது , இது முழுமையான அத்தியாயம் இறங்தியதற்கான விளக்கமாகும் ; தவிர, திருவசனங்கள் இறங்திய காரணங்கள் ஆங்காங்கே உரிய இடத்தில் இடம்பெறும் இன்ஷாஅல்லாஹ்! 


சூறத்துல் பகறாவின் சிறப்புக்கள்.


1- ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். 


 1- உங்கள் வீடுகளை கப்றுகளக ஆக்கி விடாதீர்கள், சூரத்துல் பகரா ஓதப்படும் வீடுகளில் ஷைத்தான் நிச்சயமாக நுழைவதில்லை. 


 2- திருக்குர்ஆன் ஓதப்படாமல் கப்றுஸ்த்தான் பாழடைந்து கிடப்பது போன்று இபாதத்துக்கள் , திருக்குர்ஆன் பாராயணமில்லாமல் வீடுகளை பாழடைந்ததாக ஆக்கக்கூடாது, குறிப்பாக சூறா பகறாவை ஓதவேண்டும் , அதன் காரணமாக ஷைத்தான் ஓடிவிடுவான், ஷைத்தான் ஓடுவதன் காரணமாக,


- இந்த சூறத்தின் பறக்கத்தினால் வீட்டிலிருப்பவர்களை ஷைத்தான் 

வழிகெடுக்கமுடியாது, ஆகவே, அவன் வேறுவழியைத்தேடுவான்,


-வீட்டிலிருப்பவர்கள் வணக்கவழிபாடுகளில் முயன்று ஈடுபடுபடுவதையும் ,அதில் அவர்கள் உறுதியாக இருப்பதையும் ஷைத்தான் பார்த்து நிராசையடைந்து ஓடிவிடுவான். இந்த சூறத்தின் பறக்கத்தால் இதுநடக்கின்றது ,


- இந்த சூறத் நீளமாக இருப்பதாலும், இதில் அல்லாஹுத்த ஆலாவின் திருநாமங்களும், சட்டங்களும் அதிகளவில் இடம்பெறுகின்றன, இதில் ஆயிரம் கட்டளைகள், ஆயிரம் விலக்கல்கள், ஆயிரம் ஹிக்மத்துக்கள், ஆயிரம் தகவல்கள் இருப்பதாகக்கூறப்படுகின்றது,


மிர்க்காத், பாகம்2 பக்கம் 580. 


2- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


திருக்குர்ஆனில் சூறத்துல் பகறா இருப்பது, ஒட்டகத்தின் உடலில் அதன் திமிலிருப்பது போன்றாகும். (அதாவது, ஒட்டகத்திற்கு அதன் திமில் அழுகு சேர்ப்பதுபோன்று, சூறத்துல் பகறா திருக்குர்ஆனுக்கு அழகு சேர்க்கின்றது.


முஸ்னத் அஹ்மத்.


3- றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.


எவர் ஜும்ஆவுடைய இரவில் சூறத்துல் பகறாவையும், சூறத்து ஆல இம்றானையும் ஓதினால், அவருக்கு அதன் நற்கூலி பஈதாவிலிருந்து உறூபா வரை நிறைந்திருக்கும், 'ப ஈதா' என்பது, பூமியின் ஏழாவது தட்டுக்கான பெயர், அறூபா,என்பது ஏழாம் வானத்திற்கான பெயர்.

தப்ஸீர் அஸீஸி 


4- சூறத்துல் பகறா ஓதப்படும் வீட்டில் மூன்று நாட்களுக்கு ஷைத்தானால் நுளைய முடியாது! 


5- எவராவது ஒருவர் தூங்கும் வேளை சூறதுல் பகறாவின் பத்து திருவசனங்களை ஓதுவாராயின், இன்ஷாஅல்லாஹ் அவர் திருக்குர்ஆனை மறக்க மறக்கமாட்டார்.


 அத்திருவசனங்கள் வருமா று,


ஆரம்பத்தில்உள்ள ' مفلحون வரையிலான நான்கு திருவசனங்கள், ஆயத்துல் குர்ஸி, ஆயத்துல் குர்ஸிக்குப் பின் தொடர்ந்து வரும் இரு ஆயத்துக்கள் சூறத்தின் இறுதியில் வரும் மூன்று ஆயத்துக்கள்.


6- ஹளறத் உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் தப்றானி, பைஹகி அறிவிக்கின்றார்கள்,


-றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,


மைய்யித்தை நல்லடக்கம் செய்த பின், அதன் தலைப்பக்கமாக சூறத்துல் பகறாவின் முதல் நான்கு ஆயத்துக்களையும் ; இன்னும் கால்பக்கமாக இந்த சூறத்தின் கடைசி றுகூயையும் ஓதவும். . 


அமீ ருல் முஃமினீன் ஹளரத் உமர் பாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு சூரத்துல் பகராவின் விளக்கத்தை பன்னிரண்டு ஆண்டுகள் அதன் நுட்பங்கள் எதார்த்தங்கள் உள்ளிட்டவையை கற்று முடித்த அன்று, ஓர் ஒட்டகத்தை அறுத்து சஹாபாக்களுக்கு மகிழ்ச்சியுடன் விருந்து படைத்தார்கள்.


(கிதாபுகளை ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இனிப்புக்கள் வழங்குவது ஸஹாபாக்களின் சுன்னத் என்பதை இதன்மூலம் புரிந்து கொள்தின்றோம்.) 


சூரத்துல் பகராவில் ஆயிரம் சட்டங்களும், ஆயிரம் விளக்கங்களும்; ஆயிரம் செய்திகளும் உள்ளடங்கியிருப்பதாக ஷெய்குல் அக்பர் முஹ்யத்தீன் இபுனு அரபி ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்.


சிறப்பு:


திருக்குர்ஆனின் திருவசனங்கள் பெ ரிதாயினும் சரி, சிறியதாயினும் சரி அவையனைத்திலும் அல்லாஹுத்த ஆலாவின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும்; எவ்வாறு பெரிய அத்தியாயத்தில் கணக்கற்ற சிறப்புக்கள் பொதிந்துள்ளதோ , அதேயளவான சிறப்புக்கள் சிறிய அத்தியாயத்திலும் பொதிந்திருக்கின்றது; சிறிய , பெரிய அத்தியாயங்கள் அனைத்தும் தனியான முஃஜிஸாவாகும்;   


சிந்தித்துப் பாருங்கள்! யானை உருவத்தில் மிகப் பெரியது, எறும்பு மிகச்சிறியது; யானை , ஒட்டகம் உள்ளிட்ட பெரிய மிருகங்களில் என்னென்ன அவயங்கள் உள்ளனவோ அவையனைத்தும் நுளம்பு , எறும்பு உள்ளிட்ட மிகச்சிறிய உயிரினங்களிலும் அதன் விகித சமனில் உண்டு! இதில் அல்லாஹுத்த ஆலாவின் ஆற்றலும் ஹிக்மத்தும் வெளிப்படுகின்றன;


மேலதிக பிரயோசனங்களை சூறத்தின் இறுதியில் இன்ஷாஅல்லாஹ் கூறப்படும்.


•••••••••••••••••••••••••••••••••


بسم الله الرحمن الرحيم. 


உச்ச கருணையும், 

 இரக்கமுமுள்ள அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.


தொடர்பு: 

சூரத்துல் பாதிஹாவை பிஸ்மியிலிருந்து, அல்லது அல்ஹம்திலிருந்து ஆரம்பம் செய்தான், இதன் விளக்கம் தெளிவானது, 

சூரத்துல் பகறாவை. الم லிலிருந்து ஆரம்பம் செய்தான், இதன் பொருளை விளங்குவதில் பெரும் பெரும் உலமாக்களும், வலிமார்களும் தடுமாற்றமடைந்துள்ளனர், திருக்குர்ஆனின் சில வசனங்களைப் புரிந்து கொள்வது மிக இலகு, மற்றும் சில திருவசனங்களின் இரகசியங்களையும், கூறியீடுகளையும் புரிந்து கொள்வது மிகவும் சிரமம், இவற்றைப் புரிந்து கொள்ள புத்தி ஆற்றல் பெறமாட்டாது, சுருதியான ஹதீதுகளின் அவசியம் வேண்டும்.


விளக்கம்: தப்ஸீர்.


الم 

இதன் பொருளை அல்லாஹ்வும், இன்னும்,அவனுடைய ரசூலையும் தவிர, வேறு எவரும் அறிய மாட்டார்கள், ஆகவே, அதை ஏற்பதும் ,அதன் எதார்த்தமான பொருளை அல்லாஹ்,இன்னும் ரசூல் பக்கம் சாட்டி விடுவதும் நமது கடமையாகும். 


சில அறிஞர்கள் இதற்குபின்வரும் சில விளக்கங்களைக் கூறியுள்ளனர், 


1 - இது பகறா அத்தியாயத்தின் பெயர், சூத்தின் ஆரம்பத்தில் வரும் இதுபோன்றவையும் உ+ம், الر - حمعيق அத்தியாயங்களில் நாமங்களாகும்.


2- இவற்றின் ஒவ்வொ எழுத்தும் ஹக்குத்த ஆலா வின் திருநாமமாகும்உ+மாக, الف என்பது அல்லாஹ்வையும்,لام என்பது لطف மென்மை (அன்பு) مينم என்பது, معين, உதவுபவர், مجيد பெருமை மிக்கவன், منان மிகுந்த அருளாளன் என்பதையும் குறிக்கும்.


3- அலிஃப் என்பது انا நான், لام என்பது அல்லாஹ், ميم என்பது اعلم 

 நான் அறிவேன் என்பதைக்கூறிக்கும்.


4- அல்லாஹ்வையும் இன்னும் மற்றவர்களையும் குறிக்கும் இலகுவான எழுத்துக்களாகும், அதாவது , الف என்பது அல்லாஹ்வையும், لام என்பது ஜிப்ரீலையும், ميم என்பது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் குறிக்கும், இதில் திருக்குர்ஆனை அனுப்பியவர், கொண்டுபோய் சேர்ந்தவர், பெற்றுக்கொண்டோர் உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருக்கின்றன, 


ஜாஹிலியாக்காலத்தில் பிறர் புரியாத சில சங்கேத சொற்களை பாவித்து தங்களுக்குள்பேசிக்கொள்ளும் வழக்கம் அரபிகளுக்குள் இருந்தது, அவர்களின்அந்தவழக்கத்தைஅல்லாஹுத்த ஆலாவும் கையாண்டுள்ளான், இவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய திருத்தூதுவருக்குமிடையிலான இரகசிய சங்கேத சொற்களாக உள்ளன, அக்காலத்து நடைமுறை அரபி மொழியில் வித்துவத்தின் உச்சியிலியிருப்பதாக தம்பட்டமடித்தவர்களின் உச்சந்தலையில் இவை சம்மட்டி அடிகொடுத்தன, 


இதன் உட்பொருளை விளங்குவதற்கு அவர்களால் இயன்ற அனைத்தையும் முயற்சித்தும் விடை தெரியாமல் தோல்வியுற்றார்.கள். 


திருக்குர்ஆனின்முஃஜிஸாத்தைவெளிப்படுத்தும்ஆதாரங்களாக இவையும் இவை போன்ற முதஷாபிஹத்தான திருவனங்களும் இருக்கின்றன, ஆகவே , இதன் எதார்த்தமான பொருளை அல்லாஹ்வும், இன்னும் அவனுடைய திருத்தூதரு மே அறிவார்கள் என்று கூறவேண்டும்.

Friday, 26 December 2025

கப்பாப் (ரலி) அவர்களின் உறுதிமிக்க அன்பு.

 

கப்பாப் (ரலி) அவர்களின் உறுதிமிக்க அன்பு.

உயிரினும் மேலான உத்தம நபி மேல்: 

கப்பாப் (ரலி) அவர்களின் உறுதிமிக்க அன்பு.


حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، حَدَّثَنَا خَبَّابٌ، قَالَ كُنْتُ رَجُلاً قَيْنًا فَعَمِلْتُ لِلْعَاصِ بْنِ وَائِلٍ فَاجْتَمَعَ لِي عِنْدَهُ فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ فَقَالَ لاَ وَاللَّهِ لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ. فَقُلْتُ أَمَا وَاللَّهِ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ فَلاَ. قَالَ وَإِنِّي لَمَيِّتٌ ثُمَّ مَبْعُوثٌ قُلْتُ نَعَمْ. قَالَ فَإِنَّهُ سَيَكُونُ لِي ثَمَّ مَالٌ وَوَلَدٌ فَأَقْضِيكَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا}


​இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் கட்டங்கள் தியாகங்களாலும், சோதனைகளாலும் நிறைந்தவை.


 அந்தச் சோதனைக் களத்தில் வைரம் பாய்ந்த நெஞ்சங்களாய் நின்றவர்கள் ஸஹாபாக்கள். 

அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த அன்பு வெறும் உணர்ச்சிப்பூர்வமானது மட்டுமல்ல, அது கொள்கை உறுதியால் பிணைக்கப்பட்டிருந்தது. 


இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம்.


​பொருளை விட மேலானது ஈமான்:


​கப்பாப் (ரலி) அவர்கள் ஒரு கொல்லராக இருந்தார். 


அன்றைய காலத்தின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஆஸ் பின் வாயில் என்பவருக்கு அவர் வேலை செய்து கொடுத்தார். உழைத்த கூலியை ஆஸ் பின் வாயில் கொடுக்க மறுத்ததோடு, ஒரு நிபந்தனையையும் விதித்தார்: "நீர் முஹம்மதை நிராகரிக்காத வரை உமக்குரிய கூலியைத் தரமாட்டேன்" என்பதே அந்த நிபந்தனை.


​ஒரு ஏழைத் தொழிலாளிக்குத் தான் உழைத்த கூலி என்பது வாழ்வாதாரம். ஆனால், கப்பாப் (ரலி) அவர்களுக்குத் தனது வாழ்வாதாரத்தை விடவும், பசியை விடவும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதான அன்பும், அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கமுமே பெரிதாகத் தெரிந்தது.


​மறுமையிலும் மாறாத பற்று

​ஆஸ் பின் வாயிலின் மிரட்டலுக்குக் கப்பாப் (ரலி) அவர்கள் அளித்த பதில் வரலாற்றுச் சிறப்புமிக்கது.


 "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இறந்து, பிறகு மீண்டும் எழுப்பப்படும் வரை அது நடக்கவே நடக்காது" என்று முழங்கினார்கள்.


​இந்த உறுதியான பதில் எதைக் காட்டுகிறது என்றால்:

​நிபந்தனையற்ற அன்பு: உலகமே எதிர்த்து நின்றாலும், வாழ்வாதாரமே முடக்கப்பட்டாலும் நபி (ஸல்) அவர்களை விட்டு விலக மாட்டேன் என்ற உறுதி.


​மறுமை நம்பிக்கை: இம்மையின் இழப்புகளை விட மறுமையின் வெற்றியே முக்கியம் என்ற தெளிவு.


​குர்ஆன் போற்றிய உறுதி

​கப்பாப் (ரலி) அவர்களின் இந்த உறுதியைக் கண்ட ஆஸ் பின் வாயில் பரிகாசமாக, "மறுமையில் எனக்கு சொத்தும் சுகமும் தரப்படும், அப்போது கூலியைத் தருகிறேன்" என்று கூறினான்.


 அவனது இந்தத் திமிரையும், கப்பாப் (ரலி) போன்ற தோழர்களின் ஈமானிய உறுதியையும் பற்றி அல்லாஹ்..


, ‘‘நம் வசனங்களை நிராகரித்துவிட்டு, (மறுமையிலும்) நான், நிச்சயமாக பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் வழங்கப்படுவேன் என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா!” (19:77) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.


ஒரு சாதாரணத் தொழிலாளியின் கூலிப் பிரச்சினைக்காக விண்ணுலகிலிருந்து வசனம் இறங்கியது என்றால், அதற்கு அந்தத் தோழர் நபி (ஸல்) மீது வைத்திருந்த ஆழமான அன்பே காரணமாகும்.


​முடிவுரை

​ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களைத் தங்கள் உயிரை விடவும், குடும்பத்தை விடவும், செல்வத்தை விடவும் மேலாக நேசித்தார்கள்.


 கப்பாப் (ரலி) அவர்களின் இந்த நிகழ்வு, ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) சோதனைக் காலங்களில் தனது கொள்கையிலும், நபியின் மீதான அன்பிலும் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்குப் பாடமாகத் திகழ்கிறது.


புனித புகாரி ஹதீஸ்களில் நின்றும் இன்று 26.12.2025 (அஸ்ர் தொழுகையின் பின்) வாசிக்கப்பட்ட ஹதீதே அது.


தொகுப்பு :

மெளலவி HMM.பஸ்மின் றப்பானீ.




Wednesday, 24 December 2025

#மார்க்கத்தை விற்க வேண்டாம்

 

“நான் ஒரு போதும் மார்க்கத்தை விற்று, அத்திப்பழம் வாங்க மாட்டேன்.”


பக்குவத்துக்கும் பற்றற்ற வாழ்வுக்கு பெயர் போன மாலிக் பின் தினார் அவர்கள் ‘தாபீஈன்கள்” எனப்படும் இஸ்லாத்தின் இரண்டாம் தலைமுறையினர்களில் ஒருவராகவும், பிரபல மார்க்க மேதைகளில் ஒருவரகாவும் இருந்தார். 


ஒரு முறை அவர் பஸ்ரா நகர சந்தையில் சென்றுகொண்டிருந்த போது அத்திப்பழம் விற்பனை செய்யும் கடையை கண்டதும், அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என  ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் கையில் பணம் ஏதும் இருக்க வில்லை. 


கடைக்காரனிடம் சென்று; நான் பிறகு பணம் தருகிறேன், அத்திப்பழம் தர முடியுமா?” என கேட்டார். அதற்கு கடைக்காரர் மறுத்துவிட்டார். “சரி, எனது பாதணியை உங்களிடம் அடகாக வைக்கிறேன், தர முடியுமா?” என கேட்டார். “இல்லை, முடியாது! உங்கள் பாதணி எதற்கும் பெறுமதி இல்லை.” என கடைக்காரர் மறுத்துவிட்டார். 


மாலிக் பின் தீனார், அந்த இடத்திலிருந்து சென்ற பின்னர் அங்கிருந்த சிலர்; “இவர்தான் பிரபல மார்க மேதை மாலிக் பின் தீனார்” என கடைக்காரரிடம் சொன்னார்கள். 


உடனே அந்த கடைக்காரர், ஒரு சிறுவனை அனுப்பி, பணம் தேவையில்லை. இலவசமாக அத்திப்பழத்தை எடுத்துக் கொள்ளும் படி அனுப்பி வைத்தார். 


அதற்கு மாலிக் பின் தீனார் அவர்கள்: ” நான் மார்க்க மேதை என்பதற்காக இலவசமாக அத்திப்பழம் எனக்கு வேண்டாம். நான் ஒரு போதும் மார்க்கத்தை விற்று அத்திப்பழம் வாங்க மாட்டேன்.” என்று எடுக்க மறுத்துவிட்டார். 


http://muslimvoice.lk/?p=30535