உயிரினும் மேலான உத்தம நபி மேல்:
கப்பாப் (ரலி) அவர்களின் உறுதிமிக்க அன்பு.
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، حَدَّثَنَا خَبَّابٌ، قَالَ كُنْتُ رَجُلاً قَيْنًا فَعَمِلْتُ لِلْعَاصِ بْنِ وَائِلٍ فَاجْتَمَعَ لِي عِنْدَهُ فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ فَقَالَ لاَ وَاللَّهِ لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ. فَقُلْتُ أَمَا وَاللَّهِ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ فَلاَ. قَالَ وَإِنِّي لَمَيِّتٌ ثُمَّ مَبْعُوثٌ قُلْتُ نَعَمْ. قَالَ فَإِنَّهُ سَيَكُونُ لِي ثَمَّ مَالٌ وَوَلَدٌ فَأَقْضِيكَ. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا}
இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் கட்டங்கள் தியாகங்களாலும், சோதனைகளாலும் நிறைந்தவை.
அந்தச் சோதனைக் களத்தில் வைரம் பாய்ந்த நெஞ்சங்களாய் நின்றவர்கள் ஸஹாபாக்கள்.
அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த அன்பு வெறும் உணர்ச்சிப்பூர்வமானது மட்டுமல்ல, அது கொள்கை உறுதியால் பிணைக்கப்பட்டிருந்தது.
இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம்.
பொருளை விட மேலானது ஈமான்:
கப்பாப் (ரலி) அவர்கள் ஒரு கொல்லராக இருந்தார்.
அன்றைய காலத்தின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஆஸ் பின் வாயில் என்பவருக்கு அவர் வேலை செய்து கொடுத்தார். உழைத்த கூலியை ஆஸ் பின் வாயில் கொடுக்க மறுத்ததோடு, ஒரு நிபந்தனையையும் விதித்தார்: "நீர் முஹம்மதை நிராகரிக்காத வரை உமக்குரிய கூலியைத் தரமாட்டேன்" என்பதே அந்த நிபந்தனை.
ஒரு ஏழைத் தொழிலாளிக்குத் தான் உழைத்த கூலி என்பது வாழ்வாதாரம். ஆனால், கப்பாப் (ரலி) அவர்களுக்குத் தனது வாழ்வாதாரத்தை விடவும், பசியை விடவும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதான அன்பும், அவர்கள் கொண்டு வந்த சத்திய மார்க்கமுமே பெரிதாகத் தெரிந்தது.
மறுமையிலும் மாறாத பற்று
ஆஸ் பின் வாயிலின் மிரட்டலுக்குக் கப்பாப் (ரலி) அவர்கள் அளித்த பதில் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
"அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இறந்து, பிறகு மீண்டும் எழுப்பப்படும் வரை அது நடக்கவே நடக்காது" என்று முழங்கினார்கள்.
இந்த உறுதியான பதில் எதைக் காட்டுகிறது என்றால்:
நிபந்தனையற்ற அன்பு: உலகமே எதிர்த்து நின்றாலும், வாழ்வாதாரமே முடக்கப்பட்டாலும் நபி (ஸல்) அவர்களை விட்டு விலக மாட்டேன் என்ற உறுதி.
மறுமை நம்பிக்கை: இம்மையின் இழப்புகளை விட மறுமையின் வெற்றியே முக்கியம் என்ற தெளிவு.
குர்ஆன் போற்றிய உறுதி
கப்பாப் (ரலி) அவர்களின் இந்த உறுதியைக் கண்ட ஆஸ் பின் வாயில் பரிகாசமாக, "மறுமையில் எனக்கு சொத்தும் சுகமும் தரப்படும், அப்போது கூலியைத் தருகிறேன்" என்று கூறினான்.
அவனது இந்தத் திமிரையும், கப்பாப் (ரலி) போன்ற தோழர்களின் ஈமானிய உறுதியையும் பற்றி அல்லாஹ்..
, ‘‘நம் வசனங்களை நிராகரித்துவிட்டு, (மறுமையிலும்) நான், நிச்சயமாக பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் வழங்கப்படுவேன் என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா!” (19:77) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
ஒரு சாதாரணத் தொழிலாளியின் கூலிப் பிரச்சினைக்காக விண்ணுலகிலிருந்து வசனம் இறங்கியது என்றால், அதற்கு அந்தத் தோழர் நபி (ஸல்) மீது வைத்திருந்த ஆழமான அன்பே காரணமாகும்.
முடிவுரை
ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களைத் தங்கள் உயிரை விடவும், குடும்பத்தை விடவும், செல்வத்தை விடவும் மேலாக நேசித்தார்கள்.
கப்பாப் (ரலி) அவர்களின் இந்த நிகழ்வு, ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) சோதனைக் காலங்களில் தனது கொள்கையிலும், நபியின் மீதான அன்பிலும் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்குப் பாடமாகத் திகழ்கிறது.
புனித புகாரி ஹதீஸ்களில் நின்றும் இன்று 26.12.2025 (அஸ்ர் தொழுகையின் பின்) வாசிக்கப்பட்ட ஹதீதே அது.
தொகுப்பு :
மெளலவி HMM.பஸ்மின் றப்பானீ.








