السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 30 March 2024

வரலாற்றில் ஓர் ஏடு

 


#வரலாற்றில் #ஓர் #ஏடு #தொடர் 475
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
#ஷஹர் #சிந்தனை -18
--------------------------------------

சில போது சில பொருட்கள் உயர்ந்தவர்களோடு சேர்கிற போது மாண்பையும், மகத்துவத்தையும் பெரும்.

ஈமானிய உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள் சிலர் இணைவைப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஊரை விட்டு ஓடி குகை ஒன்றினுள் ஒளிந்து கொண்டதால் அந்த ( அல் கஹ்ஃப் ) குகை அல்குர்ஆனில் இடம் பெற்றது.

இஸ்லாமிய ஏகத்துவ அழைப்பை ஸபா நாட்டு அரசிக்கு தன் அலகிலும், கால்களிலும் சுமந்து சென்றதால் ஹுத்ஹுத் பறைவையும் அல்குர்ஆனில் இடம் பெற்றது.

அல்லாஹ்வின் பரிசுத்த ஆலயத்தை பாதுகாக்க அளவினில் மிகச் சிறியதாக இருந்த வாயினுள் எரிகற்களைச் சுமந்து சென்ற அபாபீல் பறவையும் அல்குர்ஆனில் இடம் பெற்றது.

அந்த வரிசையில் ஈமானிய எழுச்சி கல்யை, இஸ்லாத்தின் ஜோதியை பாரெங்கும் நிலைத்திடச் செய்யும் வகையில் எவ்வித ஆயுதமும் இன்றி மாநபி {ﷺ} அவர்களும், சத்திய ஸஹாபாக்களும் ஒன்று திரண்ட ஓர் இடம் தான் பத்ர்.

அடிப்படையில், அது மதீனாவைச் சுற்றிலும் இருந்த எந்த ஒரு பிரபல்யமும் இல்லாத கிணறுகளில் ஒன்று ஆம்! பத்ர் எனும் கிணறு.

அல்லாஹ் அந்த பத்ரையும் அல்குர்ஆனில் இடம் பெறச் செய்ததோடு மாத்திரமல்லால் அந்தப் பெயரையே பல்வேறு சிறப்புக்களுக்குச் சொந்தமாக்கி விட்டான்.

இந்த உலகமும், உலகத்தில் முஸ்லிம் சமூகமும் உள்ள வரை பேசப்படுகிற ஓர் உயரிய அம்சமாக ஆக்கிவிட்டான்.

#சிறந்தவர்களும்… #மிகச்சிறந்தவர்களும்…

فضل من شهد بدراً من الصحابة، والملائكة على غيرهم، روى البخاري في صحيحه من حديث معاذ بن رفاعة ابن رافع عن أبيه، وكان أبوه من أهل بدر قال: جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صلى اللهُ عليه وسلم فَقَالَ: "مَا تَعُدُّونَ أَهْلَ بَدْرٍ فِيكُمْ؟" قَالَ: مِنْ أَفْضَلِ الْمُسْلِمِينَ، - أَوْ كَلِمَةً نَحْوَهَا - قَالَ: وَكَذَلِكَ مَنْ شَهِدَ بَدْرًا مِنَ الْمَلَائِكَةِ

முஆத் இப்னு ரிஃபாஆ இப்னு ராஃபிஇ (ரலி) அவர்கள் பத்ரில் கலந்து கொண்ட தங்களின் தந்தை ரிஃபாஆ (ரலி) அவர்கள் மூலமாக அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மாநபி {ﷺ} அவர்களின் திருச்சமூகம் வந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் “பத்ர் போரில் கலந்து கொண்ட உங்கள் தோழர்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்? என்று நபி {ﷺ} அவர்களிடம் கேட்டார்கள்.

அதற்கு, “எங்களில் மிகச்சிறந்தவர்களாக அவர்களை நாங்கள் மதிக்கின்றோம்” என்று மாநபி {ﷺ} அவர்கள் பதில் கூற, அதற்கு ஜிப்ரயீல் (அலை) “எங்களிலும் கூட பத்ரிலே கலந்து கொண்ட வானவர்களை மிகச் சிறந்தவர்களாக நாங்கள் மதிக்கின்றோம்” என பதில் கூறினார்கள்.                            ( நூல்: புகாரி )

பத்ரின் ஷஹீத்கள் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிலே….

أن من قُتل منهم نال الفردوس الأعلى، روى البخاري في صحيحه من حديث أنس بن مالك رضي اللهُ عنه: أَنَّ أُمَّ الرُّبَيِّعِ بِنْتَ الْبَرَاءِ وَهِيَ أُمُّ حَارِثَةَ بْنِ سُرَاقَةَ أَتَتِ النَّبِيَّ صلى اللهُ عليه وسلم فَقَالَتْ: يَا نَبِيَّ اللَّهِ: أَلَا تُحَدِّثُنِي عَنْ حَارِثَةَ؟ وَكَانَ قُتِلَ يَوْمَ بَدْرٍ، أَصَابَهُ سَهْمٌ غَرْبٌ، فَإِنْ كَانَ فِي الْجَنَّةِ صَبَرْتُ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ اجْتَهَدْتُ عَلَيْهِ فِي الْبُكَاءِ، قَالَ: "يَا أُمَّ حَارِثَةَ! إِنَّهَا جِنَانٌ فِي الْجَنَّةِ، وَإِنَّ ابْنَكِ أَصَابَ الْفِرْدَوْسَ الْأَعْلَى

பத்ர் யுத்தம் முடிந்து மதீனாவின் எல்லைக்குள் மாநபியும், மாநபித் தோழர்களும் அடியெடுத்து வைத்த அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிப் பிழம்பான தருணம்.

பத்ரில் கலந்து கொண்டு வெற்றியோடு திரும்பிய தங்களின் உறவுகளை அவரவர்களின் குடும்பத்தினர்கள் ஆரத்தழுவி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.

ஒரு இளைஞரின் தாய் அங்கும் இங்கும் அலைகிறார். தேடுகின்றார். போருக்குச் சென்று திரும்பியவர்களில் அவர்களின் மகன் இடம் பெறவில்லை. பதறித் துடித்தவர்களாக அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! என் மகன் ஹாரிஸாவின் நிலை என்ன? என்று வினவினார்.

அப்போது, அங்கு சுற்றி நின்றிருந்த நபித்தோழர்கள் உம்முடைய மகன் ஒரு அம்பு பட்டு போரில் கொல்லப்பட்டு விட்டார்” என்றார்கள்.

மாநபியின் அருகே வந்த அப்பெண்மணி “என் மகன் சுவனத்தில் இருக்கின்றான் என்றால் மாநபியே நான் பொறுமையோடு இங்கிருந்து திரும்பிச் செல்வேன். இல்லையேல், என் அழுகையை என்னால் கட்டுப்படுத்தவே முடியாது” என்று கூறினார்.

அதற்கு, நபி {ﷺ} அவர்கள் “உம்மு ஹாரிஸாவே! சுவனங்கள் என்ன ஒன்றா? இரண்டா? இருக்கின்றது. பல சுவனங்கள் இருக்கின்றது. உம்முடைய மகன் மேலான ஃபிர்தவ்ஸிலே இருக்கின்றார்” என்று சோபனம் சொன்னார்கள் 
                                         ( நூல்: புகாரி 

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ் பத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களின் எல்லா செயல்களிலும் உள்ள பிழைகளை மன்னித்து விட்டான்” என மாநபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.                           
  ( நூல்: அஹ்மத் )

இந்த மகத்தான சோபனம் பத்ர் ஸஹாபாக்களைத் தவிர நபித்தோழர்களில் வேறெவருக்கும் கிடைக்கப் பெறவில்லை என இப்னு ஜரீர் (ரஹ்) கூறுகின்றார்கள்

சுவனத்தின் நான்கு தலைவர்களில் இருவர் பத்ர் ஸஹாபிகள்..

وأخرج ابن عساكر عن عبد الرحمن بن يزيد عن جابر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم " سادات السودان أربعة: لقمان الحبشي. والنجاشي. وبلال. ومهجع ".

பத்ரு போரில் முதன் முதலாக ஷஹீதானவர் மிஹ்ஜஹ் என்ற கறுப்பு நிற அடிமையாவார். உமர் (ரலி) அவர்கள் கறுப்பு நிற மனிதர்களுக்கு தலைமைப் பதவி கொடுத்து கௌரவியுங்கள். ஏனெனில் நான்கு கறுப்பு நிற மனிதர்கள் சொர்க்கத்தில் தலைவராக இருப்பார்கள்.  என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.1.எத்தியோப்பியா நாட்டு அதிபரான கருப்பர் இன மக்களின் மன்னர் நஜ்ஜாஷி,  2.  லுக்மானுல் ஹகீம் (அலை), 3. பிலால் (ரலி), 4. பத்ருப் போரில் முதலில் ஷஹீதான மிஹ்ஜஃ (ரலி) ஆகியோர் எனக் கூறினார்கள்.  ( நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் )

பத்ர் ஷுஹதாவின் மகளுக்கு அல்லாஹ் வழங்கிய பாதுகாப்பு…

أخبرنا أبو الحسين بن بشران قال: أخبرنا أبو علي الحسين بن صفوان البردعي قال: أخبرنا عبد الله بن محمد بن أبي الدنيا قال: أخبرنا محمد بن قدامة، قال: حدثنا عمر بن يونس اليمامي الحنفي، قال: حدثنا عكرمة بن عمار، قال: حدثنا إسحاق بن عبد الله بن أبي طلحة، قال: حدثنا أنس بن مالك قال: كانت ابنة عوف ابن عفراء مستلقية على فراشها، فما شعرت إلا بزنجي قد وثب على صدرها، ووضع يده في حلقها، فإذا صحيفة صفراء، تهوي بين السماء والأرض، حتى وقعت على صدري.

فأخذها - تعني - : الزنجي فقرأها، فإذا فيها: من رب لكين إلى لكين: اجتنب ابنة العبد الصالح، فإن لا سبيل لك عليها؛ فقام وأرسل يده من حلقي، وضرب بيده على ركبتي، فاسودت، حتى صارت مثل رأس الشاة، قالت: فأتيت عائشة، فذكرت ذلك لها.

فقالت: " يا ابنة أخي إذا حضت، فاجمعي عليك ثيابك، فإنه لن يضرك إن شاء الله - قال: فحفظها الله بأبيها، إنه علي كان قتل يوم بدر شهيدا كذا في كتابي بنت عوف ابن عفراء وروي من وجه آخر عن الربيع بنت معوذ ابن عفراء، وهي صاحبة القصة.

முஅவ்விது இப்னு அஃப்ராவு (ரலி) அவர்கள் பத்ரு போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களில் ஒருவராகும். இவர்களின் மகள் ருபைய்யி உபின்த் முஅவ்விது (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:- ஒரு நாள் லுஹருக்கு முன்பு ‘கைலூலா’ தூங்குவதற்காக தலையணையில் தலையை வைத்து படுத்திருந்தேன்.

அப்போது ஒரு கருத்த உருவம் திடீரென என் மேல் உட்கார்ந்து என்னை தொந்தரவு செய்தது. என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கும் போது வானிலிருந்து மஞ்சள் நிறத்திலான ஒரு பேப்பர் துண்டு பறந்து வந்து என் மேல் அமர்ந்திருந்த கருப்பு உருவத்தின் அருகில் விழுந்தது. அதை அந்த உருவம் படித்துப் பார்த்தது.

அதில் பிஸ்மி எழுதப்பட்டு அதன்பின் ‘இது மேலான இறைவனிடமிருந்து இறை அடிமையின் பக்கம் எழுதப்பட்டதாகும். ஸாலிஹான (பத்ரு ஸஹாபியின்) நல்லடியாரின் மகளான என் அடிமைப் பெண்ணை தீங்கு செய்ய உனக்கு எந்த உரிமையுமில்லை’ என எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

இதைப் படித்துப் பார்த்ததும் கோபத்தில் என் முட்டில் ஓங்கி அடித்து விட்டு ஓடி விட்டது. அதன் வேதனையை நான் மரணிக்கும் வரை அனுபவித்து வந்தேன் எனக் கூறுகிறார்கள்.

இந்த செய்தியை  இமாம் பைஹகீ (ரஹ்)  தம்முடைய நூலில் குறிப்பிட்’டு, பிறகு தான் எழுதிய அடிக்குறிப்பில் மேல் கூறிய நிகழ்ச்சியில் பத்ரு ஸஹாபியுடைய பரக்கத்தினால் அவருடைய மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவன் நீக்கியிருப்பது இங்கு குறிப்பிடத் தக்கது எனக் கூறுகிறார்கள். ( நூல்: பைஹகீ 115/7  )

அன்று அவர்கள் விழுதுகளாக இந்த சத்திய சன்மார்க்கத்தைத் தாங்கிப் பிடிக்க வில்லை என்றால் இன்று 600 கோடிக்கும் மேலான முஸ்லிம்களாக நாம் விருட்சமாய் பாருலகெங்கும் பரவி விரவியிருக்க மாட்டோம்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் பத்ர் ஸஹாபாக்கள் மீது நேசத்தையும், பிரியத்தையும் வைப்பதற்கு அருள்புரிவானாக!

அல்லாஹ் அன்னார்களின் வழிச்சுவடுகளை பின்பற்றி வாழும் மேன்மக்களில் ஒருவராக ஆக்கியருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! 
@highlight