பாங்கு, இகாமத் சொல்லும் முன் ஸலவாத்து ஓதலாமா?.
- அ. நௌஷாத் அலீ பாகவீ.
ஷாஃபியீ மத்ஹபின் சட்டமேதைகள் சிலர்… "அவ்வாறு பாங்கு, இகாமத்துக்கு முன்னால் ஸலவாத்து சொல்வது ஸுன்னத்" என்று சொல்கின்றனர்.
அரபுலக அறிஞர்களால் கூட ஆதரிக்கப்பட்ட வளைகுடா நாடுகளிலும் கூட அச்சடிக்கப்படுகிற நூலான ஃபத்ஹுல் முஈன் மற்றும் இஆனத்துத் தாலிபீன் நூல்களில் உள்ள வாசகமாவது:
"وتسنّ الصلاة على النبي صلى الله عليه وسلم قبلهما : أي الأذان والإقامة"
"பாங்கு, இகாமத்துக்கு முன்னால் ஸலவாத்து சொல்வது ஸுன்னத் ஆகும்".
முக்கிய நபிமொழி நூல்களில் ஒன்றான தப்ரானியில் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிற நபிமொழியொன்று இப்படி வருகிறது:
[عن أبي هريرة رضي الله عنه] كان بلالٌ إذا أرادَ أنْ يُقِيمَ الصلاةَ قال السلامُ عليْكَ أيُّها النبيُّ ورحمَةُ اللهِ وبَرَكاتُهُ الصلاةُ رَحِمَكَ اللهُ
"பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இகாமத் சொல்ல நாடினால் 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு அஸ்ஸலாத்து ரஹிமகல்லாஹ்' என்று (ஸலாத்தும் ஸலாமும்) சொல்வார்கள்"
الهيثمي (ت ٨٠٧)، مجمع الزوائد ٢/٧٨ • أخرجه الطبراني في «المعجم الأوسط» (٨٩١٠)
ஆனாலும் வழக்கம் போல் அல்பானீ போன்ற சவூதிய அறிஞர்கள் இந்நபிமொழியை ளஈஃப் முத்திரை குத்தி பலவீனப்படுத்துகிறார்கள். ளஈஃப் முத்திரையோடு ஆக்ரோஷமாக பாய்ந்து வந்து இச்செயலை பித்அத் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஒருவேளை ஸஹீஹானதாக இருந்தாலும், பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்படி சொன்னதற்குக் காரணம், பள்ளியை ஒட்டியே இருந்த நபியவர்களின் அறைக்குச் சென்று இகாமத் சொல்ல அனுமதி பெறுவதற்காக இருக்கலாமென்றும் அல்லது நபியவர்களுக்கு இகாமத் கேட்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் கூட இருக்கலாமல்லவா? என அசடு வழியும் சப்பைக் காரணங்களை சொல்கிறார்கள்.
இக்கேள்விக்கு ஷாஃபியீ மத்ஹபின் மிக முக்கிய இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜருல் ஹைத்தமீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது 'அல்ஃபfத்தாவல் ஃபிfக்ஹிய்யத்துல் குப்ரா' எனும் நூலில் ஃபத்வா தந்துள்ளார்கள்:
"இகாமத்துக்கு முன்னர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது ஸுன்னத் என்று சொல்பவர்களை நான் பார்க்கவில்லை.
பாங்கைப் போலவே இகாமத்துக்குப் பின்னரும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது ஸுன்னத் என்று தான் நம் இமாம்கள் சொல்கிறார்கள். அதற்குப் பிறகு 'அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவத்தி...' என்ற பாங்கு துஆவை ஓதலாம்.
ஆனால், பாங்கு இகாமத்துக்கு முன்னர் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வதை இடையூறு செய்யும்படியாக எந்த நபிமொழியிலும் நான் பார்க்கவில்லை. நம் இமாம்கள் பேச்சுகளிலும் அப்படி இடையூறு இருந்து நான் பார்த்ததில்லை.
இது போன்ற நேரங்களில், பாங்குக்கும், இகாமத்துக்கும் முன்னர் அவ்விரண்டும் ஸுன்னத் இல்லை தான். அவ்விரண்டும் ஸுன்னத் என்ற நம்பிக்கையில் ஒருவர் இதைச் செய்யும் போது அது தடுக்கப்படும். காரணம், ஆதாரமே இல்லாத ஒன்றை ஷரீஅத்தாக ஆக்கிய குற்றம் ஏற்படும். ஆதாரமில்லாத ஒன்றை ஷரீஅத்தாக்குவன் தண்டிக்கப்படுவான். அச்செயல் தடை செய்யப்படும்"
سئل ابن حجر الهيتمي في "الفتاوى الفقهية الكبرى" :
" هل نص أحد على استحباب الصلاة والسلام على النبي صلى الله عليه وسلم أول الإقامة ؟
فأجاب :
لم أر من قال بندب الصلاة والسلام أول الإقامة ، وإنما الذي ذكره أئمتنا أنهما سنتان عقب الإقامة كالأذان ، ثم بعدهما : اللهم رب هذه الدعوة التامة ...( ثم ذكر الآثار السابقة عن الحسن البصري وغيره ) " انتهى
وقال أيضا في (1/131) :
" لم نر في شيء منها – يعني الأحاديث - التعرض للصلاة عليه – صلى الله عليه وسلم - قبل الأذان ، ولا إلى محمد رسول الله بعده ، ولم نر أيضا في كلام أئمتنا تعرضا لذلك أيضا ، فحينئذ كل واحد من هذين ليس بسنة في محله المذكور فيه ، فمن أتى بواحد منهما في ذلك معتقدا سنيته في ذلك المحل المخصوص نُهي عنه ومنع منه ؛ لأنه تشريع بغير دليل ، ومن شرَّع بلا دليل يزجر عن ذلك ويُنهى عنه " انتهى
ஆக மொத்தம், நம் இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜருல் ஹைத்தமீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் கருத்துப் பிரகாரம் "இது ஸுன்னத்தும் இல்லை. பித்அத்தும் இல்லை. காரணம் நபிமொழிகளில் அதற்குத் தடை இல்லை" என்று கூறியிருக்க,
நம் மதரஸாக்களில் மிகுந்த மதிப்பு கொடுத்து ஓதித்தரப்படும் கிதாபுகளில் ஒன்றான ஃபத்ஹுல் முஈன் உடைய ஆசிரியரும், கேரள சட்ட வல்லுநருமான பொன்னானி ஜைனுத்தீன் மக்தூம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "இது ஸுன்னத்" என்று கூறியிருக்க,
வஹ்ஹாபிகளின் இமாமான அல்பானி போன்றோரின் 'பித்அத்' முத்திரையை டேஷாக கூட மதிக்கமாட்டோம்.
நம் இமாம்கள் காட்டித் தந்த வழியில் ஒரு ஊரில் பாங்குக்கு முன்னர் ஸலவாத்து ஓதும் பழக்கம் இருக்குமேயானால் அதைத் தடை செய்ய எந்த அல்பானி வகையறாக்களுக்கும் உரிமையில்லை.
குறிப்பு: சில ஊர்களில் இதை கடுமையாக வஹ்ஹாபிகள் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாக்குவதாக வந்ததையடுத்து இச்சிறு கட்டுரை இந்நேரத்தில் பதிவிடப்படுகிறது.