السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday, 13 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 213

meelad competition 2018
மீலாதுன் நபி ( ﷺ) சிறப்புப்பார்வை
தொடர்கிறது.....
அதாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்கள் அல்கமா (ரலி) அவர்களிடம் இருக்கும் ஒரு நபிமொழியைக் கேட்டு வர மதீனாவிலிருந்து மிஸ்ருக்கு பயணமானார்கள்.
மிஸ்ரின் பிரதான தெரு ஒன்றின் வழியில் மஸ்லமா இப்னு மகல்லத் அல் அன்ஸாரி (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது, மஸ்லமா (ரலி) அவர்கள் மிஸ்ரின் கவர்னராக இருந்தார்கள்.
இருவரும் சந்தித்து முஆனக்கா செய்து, ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர், மஸ்லமா (ரலி) அபூஅய்யூப் (ரலி) அவர்களிடம் என்ன விஷயமாக மிஸ்ர் வந்தீர் என்று வினவ, நபி {ﷺ} அவர்கள் கூறிய ஒரு செய்தியை அல்கமா இப்னு ஆமிர் (ரலி) தெரிந்து வைத்திருக்கின்றாராம். அவரிடம் இருந்து கேட்டுச் சென்றிடவே இங்கு வந்தேன்” என்றார்களாம். இது கேட்ட வியந்து போன மஸ்லமா (ரலி) தானும் உங்களோடு வருகின்றேன் என்று கூறி அவர்களோடு சேர்ந்து அல்கமா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்.
இருவரும் அல்கமா இப்னு ஆமிர் (ரலி) அவர்களைச் சந்தித்து, தாங்கள் இருவரும் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அல்கமா (ரலி) அவர்கள் “எவர் ஒரு இறைநம்பிக்கையாளனின் குறையை உலகில் மறைக்கின்றாரோ, அவரின் குறையை அல்லாஹ் மறுமையில் மறைப்பான்” என நபி {ﷺ} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.
உடனடியாக, அங்கிருந்து அவ்விருவரிடமும் விடை பெற்று விட்டு ஒரு நிமிடம் கூட மிஸ்ரில் தங்காமல் மதீனா திரும்பினார்கள் அபூ அய்யூப் (ரலி) அவர்கள். ( முஸ்னத் அஹ்மத் )
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு முறை ஒருவர் என்னிடம் மறுமை குறித்து நபி {ஸல்} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாக என்னிடம் கூறினார்.
அந்தச் செய்தியை நேரடியாக நான் கேட்க விரும்பினேன். ஆகவே, அவர் எங்கிருக்கின்றார் என்று விசாரித்தேன். அவர் ஷாமிலே இருக்கின்றார் என்பதை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமானேன்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் இமாம் அபூ யஃலா அவர்களின் வாயிலாக அறிவிக்கின்றார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் விரைவாகச் செல்கிற ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கி, ஒரு மாதகாலம் பயணம் செய்து ஷாம் சென்றார். அப்துல்லாஹ் இப்னு உனைஸ் (ரலி) அவர்களின் வீட்டை தேடிப்பிடித்து அவரின் வீட்டிற்குச் சென்று தான் வந்த நோக்கத்தை விவரித்துச் சொல்லி விட்டு நபி {ﷺ} அவர்கள் மறுமையில் பழிவாங்குவது குறித்து கூறிய அந்தச் செய்தியை தமக்கு கூறுமாறு சொன்னார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் இதற்காகவா இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தீர்கள்? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்கள்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் “ நபி {ﷺ} அவர்கள் சொன்ன ஒரு செய்தியை கேட்காமலே இறந்து விடுவதை நான் அஞ்சுகின்றேன்” என்றார்கள்.
அப்போது, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ”நபி {ﷺ} அவர்கள் ஒரு நாள் எங்களிடம் மறுமையில் மனிதர்களை அல்லாஹ் நிர்வாணிகளாக எழுப்பி மஹ்ஷரில் நிற்க வைத்திருப்பான். அப்போது, அவர்கள் மிகச் சமீபத்திலே ஒரு சப்தத்தைக் கேட்பார்கள். அது வேறு யாருடைய சப்தமும் அல்ல. அது அல்லாஹ்வின் சப்தமாகும்.
அல்லாஹ் கூறுவான் “நரகம் செல்லும் எந்த நரகவாசியும் சுவனம் செல்கிற சுவனவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். அது போல், “சுவனம் செல்லும் எந்த சுவனவாசியும் நரகம் செல்கிற நரகவாசிகளிடம் எதுவும் பழிவாங்க வேண்டியதிருந்தால் பழிவாங்கிக் கொள்ளட்டும். உலகில் வாழும் காலத்தில் அவர் கையால் ஒரு குத்து குத்தியிருந்தாலும் சரியே! பழிவாங்கிக் கொள்ளட்டும்!” என்று
அப்போது அங்கிருந்த நாங்கள் எவ்வாறு பழிதீர்க்கப்படும்? என்று கேட்டோம். அதற்கு நபி {ﷺ} நன்மைக்கு பகரமாக தீமையையும், தீமைக்குப் பகரமாக நன்மையையும் பெற்று பழிதீர்க்கப்படும்” என்று கூறினார்கள்.
இதன் பின்னர் ஜாபிர் (ரலி) அவர்கள் அவரிடமிருந்து விடை பெற்று மதீனா வந்து சேர்ந்தார்கள். ( நூல்: முஸ்னத் அபூ யஃலா, முஸ்னத் அஹ்மத் )
தொடரும்.......

meelad competition 2018

Monday, 12 November 2018

வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை
மீலாதுன் நபி (ﷺ) சிறப்புப்பார்வை 
தொடர்கிறது.......
அல்லாஹ்வின் தூதர் {ﷺ} அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் எனும் வதந்தியால் உஹத் யுத்தகளத்தின் நிலைமைகள் முற்றிலுமாய் மாறிப்போயிருந்த தருணம் அது…
நபித்தோழர்களில் பலர் எதிரிகளின் தாக்குதல் தாங்க முடியாமல் யுத்த களத்தின் நாலாபுறமும் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர்.
இந்த வதந்தியைக் கேட்ட மாத்திரத்தில் யுத்தகளத்தின் நடுப்பகுதியிலிருந்து தங்களது குடும்பம் சகிதமாக அண்ணலாரைத் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.
ஆம்! உஹத் யுத்தகளத்தில் அவர்களின் கணவர் ஸைத் இப்னு ஆஸிம் (ரலி) மற்றும் அவர்களின் இரு மகன்களான ஹபீப் இப்னு ஸைத், அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி – அன்ஹுமா) ஆகியோரோடு கலந்து கொண்டார்கள் வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள்
இறுதியாக, அண்ணலாரின் இருப்பிடத்தைக் கண்டதும், அண்ணலார் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தார்கள்.
ஆச்சர்ய மேலீட்டால் ”இதோ அண்ணலார் உயிரோடு இங்கே உயிரோடு இருக்கின்றார்கள்” என்று உஹத் யுத்தகளம் முழுமையும் கேட்கும் அளவுக்கு சப்தமாகக் கூறினார்கள்.
இதே நேரத்தில், எதிரிகள் அண்ணலாரைத் தாக்கிட ஆயத்தமானார்கள். அப்போது அண்ணலாருக்கு அருகே நாலா புறங்களிலும் அரணாக தங்களை அமைத்து அண்ணலாரை காக்கும் பணியில் சில நபித்தோழர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அதில் தங்களையும் ஒருவராக வீர மங்கை உம்மு உமாரா (ரலி) அவர்கள் இணைத்துக் கொண்டார்கள்.
மாநபி {ﷺ} அவர்கள் தங்களைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு சுழன்று சுழன்று போராடிய உம்மு உமாரா (ரலி) அவர்களைப் பார்த்து “உஹத் யுத்தகளத்தில் என்னைச் சுற்றி வலப்புறத்திலும், இடப்புறத்திலும் உம்மு உமாரா (ரலி) அவர்கள் போராடியதைப் போன்று வேறெவரும் போராட நான் பார்க்க வில்லை” என்று நபி {ﷺ} அவர்கள் கூறினார்கள்.
கிட்டத்தட்ட 13 – க்கும் மேற்பட்ட காயங்களோடு அம்மையார் போராடிக் கொண்டிருக்க ஒரு எதிரி வாள் கொண்டு வீசி அம்மையாரின் தோள்பட்டையை காயப்படுத்தி விட்டான்.
அந்தக் காயம் அதிக வேதனையைத் தரவே அண்ணலாரை நோக்கி மெல்ல நடந்து வந்தார்கள். அண்ணலாரின் அருகே வந்ததும் ”அல்லாஹ்வின் தூதரே! என் கணவர், இருமகன்கள், நான் உட்பட அனைவரும் நாளை மறுமையில் சுவனத்தில் உங்களோடு தோழமை பெற்றிட துஆ செய்யுங்கள்” என்று வேண்டினார்கள்.
أن رسول الله صلى الله عليه وسلم قال : اللَّهُمَّ اجْعَلْهُم رُفَقَائِي فِي الجَنَّةِ). )
உடனடியாக, உம்மு உமாராவுக்காக அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “யாஅல்லாஹ் இவர்கள் அனைவரையும் சுவனத்தில் என்னுடன் இருப்பவர்களாய் ஆக்கியருள் புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதனைக் கேட்ட உம்மு உமாரா (ரலி) அவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
( நூல்: ஸீரத் இப்னு ஹிஷாம், ஸியரு அஃலா மின் நுபலா, தபகாத் இப்னு ஸஅத் )
தொடரும்.......


வரலாற்றில் ஓர் ஏடு தொடர் 211

Sunday, 11 November 2018

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை

வாழ்க்கையாக இருக்கட்டும், வாழ்ந்து மறைந்த பின் விட்டுச் செல்கிற வரலாறாக இருக்கட்டும் புகழுக்குரியதாய் அமைந்திருக்க வேண்டும் என்கிற புதியதோர் இலக்கணத்தை இப்பூவுலகிற்கு தந்தவர்கள் பெருமானார் {ﷺ} அவர்கள்.
வரலாற்றிலும் கூட புகழோடு தோன்றுகிற பெரும் பேறு பெற்றவர்கள் நமது உயிரினில் கலந்த உத்தம நபி {ﷺ} அவர்கள்

நபி (ﷺ) அவர்கள் மேற்கொண்ட ஒரு பிரயாணத்தின் போது ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ﷺ) அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

நபி (ﷺ) அவர்களை மிகவும் கண்ணியப்படுத்தினார்.  இச்செயலை கண்டு அக மகிழ்ந்து போன நபி {ஸல்} அவர்கள் மதீனா வந்தால் அவசியம் தங்களைச் சந்திக்க வருமாறு அழைப்பு கொடுத்து விட்டு விடை பெற்றார்கள்.

சிறிது காலம் கழித்து அக்கிராம வாசி மதீனா வந்தார்.  நபி (ﷺ) அவர்களை மஸ்ஜிதுந் நபவீயில் வந்து சந்தித்தார். அவரை நபி (ﷺ) அவர்கள் அன்புடன் உபசரித்தார்கள்.

அவர் விடைபெற்றுச் சென்ற போது “என்னிடம் ஏதாவது கேளுங்கள்!”  என்று நபி (ﷺ) அவர்கள் அக்கிராம வாசியிடம் கேட்டார்கள்.

”அவர் எனக்கு ஓர் ஒட்டகம் தேவை அதை நான் வாகனமாக பயன் படுத்திக் கொள்வேன்” என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள்.

அதற்கவர், அதை பாதுகாக்க ஒரு நாய் வேண்டும் என்றார். மீண்டும் நபிகளார் வேறு ஏதாவது கேளுங்கள்! என்றார்கள், அதற்கவர் அவ்விரண்டையும் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணைத்தாருங்கள் என்று கேட்டார்.

இதுதான் உங்கள் தேவையா? என மாநபி (ﷺ) கேட்ட போது,  ஆமாம் அல்லாஹ்வின் தூதரே! இதுவே எனக்குப் போதும் என்றார் அவர்.

அல்லாமா தப்ரானீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கும் ரிவயாத்

அக்கிராமவாசி ஓர் ஒட்டகம் தேவை,  தாங்கள் அதை வழங்கினால் வாகனமாக பயன்படுத்திக் கொள்வேன், இன்னும் சில ஆடுகளைத் தந்தால் அதன் பாலைக் கறந்து என் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வேன் என்றார். இதுதான் உங்களின் தேவையா? என்று வினவியபோது ஆமாம் இறைத்தூதரே!  இதுவே எனக்குப் போதும் என்றார்.

இதைக்கேட்டதும் அண்ணல் நபி (ﷺ) அவர்கள்:  “அல்லாஹ்வின் தூதராகிய நான் உமது தேவை குறித்து கேட்டபோது இவ்வளவு மலிவான பொருளை கேட்டு விட்டீரே! மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மூதாட்டி மூஸா (அலை) அவர்களிடம் கேட்டது போல நீங்களும் கேட்க தவறி விட்டீரே! உம்மை விட அம்மூதாட்டி சிறந்தவள் என்றார்கள்.

உடனே சுற்றியிருந்த தோழர்கள் யார் அந்த மூதாட்டி?அப்படி என்ன தான் கேட்டார்?ஆர்வமாய் அண்ண்லாரிடம் கேட்டார்கள்.

மூஸா நபியவர்கள் பனூ இஸ்ரவேலவர்களை எகிப்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸிற்கு அழைத்துச் செல்ல முயன்ற போது பாதை தெரியாமல் பயணம் தடைபட்டது.

அது குறித்து ஆலோசித்த போது அங்கிருந்த மூத்த வயதுடையவர்கள் “இஸ்ரவேலவர்கள் பைத்துல் முகத்தஸ்ஸிற்கு பயண மேற்கொள்வதாக இருந்தால் தமது ஜனாஸாவையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என நபி யூஸுப் (அலை) அவர்கள் வஸிய்யத் செய்ததாகவும் அதனால் தான் பயணம் தடை படுவதாகவும்” சொன்னார்கள்.

 சக நபி யூசுப் (அலை) அவர்களின் அடக்கத்தலம் குறித்து விசாரித்த போது இது குறித்த தகவல் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிற்கு தெரியும் என தெரிந்து கொண்டார்கள்.

இறுதியில், அம் மூதாட்டியை சந்தித்த மூஸா (அலை) அடக்கத்தலம்குறித்து விசாரித்தார்கள்.

நான் அறிவித்து தந்தால் எனக்கு என்ன சன்மானம் தருவீர்கள்? என அம்மூதாட்டி கேட்டார்.என்ன வேண்டும்? எது கேட்டாலும் தருகிறேன் என்று மூஸா (அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

அப்படியானால், மறுமையில் சுவனத்தில் உங்களுடன் நான் இருக்க வேண்டும் என தமது கோரிக்கையை முன் வைத்தார்கள்.

அம்மூதாட்டியின் ஆர்வத்தையும், ஆவலையும் கண்டு வியந்த நபி மூஸா (அலை) அவர்கள் ஒப்புக்கொண்டு அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.

பின்பு அம்மூதாட்டி காண்பித்த நீரோடை அருகேயிருந்து யூஸுப் (அலை) அவர்களின் புனித உடல் கண்டெடுக்கப்பட்டு, பைத்துல் முகத்தஸை நோக்கி கொண்டு செல்லப்பட்டு அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

     ( நூல்: அல் முஸ்தத்ரக் அல் ஹாகிம் )

தொடரும்.......



மீலாதுன் நபி (ﷺ)சிறப்புப்பார்வை 210

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

கொசு (நுளம்பு) தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.
மேற்கொண்டு படியுங்கள்.
1. அது பெண்பால்.
2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.
3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.
5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்
7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது.
அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது.
அது என்ன வசனம் தெரியுமா? إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)
அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவேர் அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ 
இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.



குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்

Saturday, 10 November 2018

அன்பளிப்பு பொருட்கள்

                          அன்பளிப்பு பொருட்கள்    உத்தியோகத்தர்களுக்கு ஆகுமானதா?

அரச நிறுவனங்களில் கடமை புரிபவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைக்காக அமர்த்தப்பட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் சேவை பெறுனர்களிடம் இருந்து அன்பளிப்பு பொருட்களையோ வேறு உதவிகளையோ பெற்றுக்கொள்வது தொடர்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தோடு, நடைமுறைகளோடு இணைந்த நடுநிலைப் பார்வை அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. பொதுவாக இஸ்லாம் அன்பளிப்பு வழங்குவதை வரவேற்கின்றது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அனுமதிக்கப்பட்ட அன்பளிப்பை தவிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துகின்றது.

இது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாவது ஒரு பொறுப்பிலே நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் சேவைபெறுனர்களின் அன்பளிப்பு பொருட்களை பெறுவது கூடாது என பின்வரும் நேரடி ஆதாரங்களை மையப்படுத்தியும் வேறு சில துணை விடயங்களை மேற்கோள் காட்டியும் குறிப்பிடுகின்றனர். அவைகள் பின்வருமாறு

1. நபி (ஸல்) அவர்கள் பனூஸஅத் குலத்தாரில் ஒருவரை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். அவர் இப்னுல் உதபிய்யா (அல்லது இப்னுல் லுதபிய்யா) என்று அழைக்கப்பட்டார். அவர் (ஸகாத் வசூலித்துக்கொண்டு) வந்த போது இது உங்களுக்குரியது இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் (எழுந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்த பின்னர் நாம் அனுப்பும் அதிகாரியின் நிலை என்ன? அவர் (பணியை முடித்து திரும்பி) வந்து இது உமக்குரியது இது எனக்குரியது என்று கூறுகிறாரே அவர் (மட்டும்) தம் தந்தை அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து பார்க்கட்டுமே அவருக்கு அன்பளிப்பு வழங்கப்டுகிறதா? இல்லையா? என்று தெரியும். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக அவர் கொண்டு வரும் (அன்பளிப்பு) எதுவாயினும் அதைத் தம் கழுத்தில் சுமந்தபடிதான் மறுமை நாளில் வருவார். அந்த அன்பளிப்பு ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் அது மாடாக இருந்தால் அல்லது ஆடாக இருந்தால் கத்திக்கொண்டிருக்கும் என்றார்கள். பிறகு அவர்களின் அக்குளின் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தம் கைகளை உயர்த்தி நான் எடுத்து உரைத்து விட்டேனா? என்று மும்முறை கூறினார்கள். (ஆதாரம்: புகாரி - 7174)

ஸகாத் வசூலிப்பவர்களுக்கென பிரத்தியேகமான கூலியை இஸ்லாம் வரையறுத்திருக்கின்ற போது அன்பளிப்பு எனும் வகையில் உதவிகளை பெற்றுக்கொள்வதை நபி(ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளதை மேலுள்ள ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இமாம் புகாரி அவர்கள் இந்த ஹதீஸிற்கு தலைப்பிடும் போது அதிகாரிகள் பெறும் அன்பளிப்புகள் என தலைப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். குறிப்பிட்ட கடமைக்காக அமர்த்தப்பட்டிருப்பவருக்கு அவருடைய வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது அன்பளிப்புகளை பெற்றுக்கொள்வதை நேரடியாகவே தடைசெய்யும் விதத்தில் மேலுள்ள ஹதீஸ் காணப்படுகின்றது.

2. மேலும் இவ்வாறான அன்பளிப்பு பொருட்களையோ சேவை பெறுனர்களின் மூலம் கிடைக்கப்பெறும் சலுகைகளையோ பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் நிருவாக ரீதியான சீர்கேடுகளும் நடுநிலை தன்மையும் இஸ்லாம் கூறும் சமத்துவமும் சீர்குலைவதற்கான சந்தர்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. (குறித்த நபருக்கு விஷேட சலுகைகள் வழங்கப்படலாம், முன்னுரிமை வழங்கப்பட வாய்ப்புண்டு, ஓழுங்கு வரிசை மீறப்பட இடமுண்டு, இரகசிய தகவல்கள் குறித்த நபருடன் பரிமாறப்படுவதற்கான சந்தர்ப்பங்களுண்டு)

3. நபி (ஸல்) அவர்கள் தவறுகள் தொடர்பாக கூறும் போது எது உனது உள்ளத்தை உறுத்துகிறதோ அதுதான் தவறு எனக்கூறினார்கள். இவ் அன்பளிப்பு பொருட்களை பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்கள் எல்லோர் முன்னிலையிலும் அதனை பெற்றுக்கொள்ள விருப்பம் காட்டமாட்டார்கள் என்பது மேற்கூறப்பட்ட நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகளை உண்மைப்படுத்துவதாக அமைகின்றது.

4. நபி (ஸல்) அவர்கள் ஹராமா? ஹலாலா? எனும் சந்தேகமான விடயங்களையே தவிர்ந்து கொள்ளுமாறு கூறினார்கள் என்றால் இது போன்ற தெளிவாக தடுக்கப்பட்ட விடயங்களில் எந்தளவு கண்டிப்பாக இருந்திருப்பார்கள் என்பதனை தங்களின் சிந்தனைக்கு விடுகிறேன்.

5. ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களுக்கு வெகுமதிகள் வழங்க வகுப்பு ரீதியாக மாணவர்களிடம் பணம் சேகரிக்கப்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்று நிருபம் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது. இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பது அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகியல் சட்டங்களே இதனை தடைசெய்கிறது எனில் அல்லாஹ்வின் சட்டங்கள்?

எனவே, அறிஞர்களின் இத்தீர்பினையும் அதற்கான ஆதாரங்களையும் அவதானிக்கின்றபோது இது இறையச்சத்திற்கு நெருக்கமான ஒரு முடிவாகவே தென்படுகிறது. எனவே எம் கரங்களை முடியுமானவரை தூய்மைப்படுத்தி மறுமையில் வெற்றிபெற்ற கூட்டமாக மாறுவதற்கு முயற்சிப்போம். நற்பணிகளில் இணைந்தே செயற்படுவோம்.

ஜே.எம்.சியாப்
அபிவிருத்தி உத்தியோகத்தர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

Friday, 9 November 2018

தூக்கணாங்குருவி

மஹர் கொடுக்குமாம் இந்த தூக்கணாங்குருவி.....

ஒவ்வொரு பறவையிலும் அல்லாஹ் ஒவ்வொரு அத்தாட்சியை வைத்துள்ளான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அதில் ஒரு படிப்பினை உள்ளது.

உதாரணமாக தூக்கனாங் குருவி என்பது ஒரு பறவை என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், அந்த பறவை கூட மஹர் என்ற திருமணக்கொடை கொடுத்து தான் தனது வாழ்க்கையை தொடங்கும் என்பது யாருக்காவது தெரியுமா ?

கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன.

இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால் கீழே விழுவதில்லை, மழை நீர் உள்ளே இறங்குவதில்லை.

தூக்கனாங் குருவியின் இனத்தைப் பொறுத்தவரையில் ஆண் தூக்கனாங் குருவி தான் எப்போதுமே தனது வீடான
கூட்டைக் கட்டும் அதில் நாம் வசிப்பது போன்றே பல அறைகள் இருக்குமாம்.

கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு சமிக்கை கொடுக்கும்
 (என்னை பார் என் கூட்டை பார்). பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும்.

ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண்குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார் போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. பின் கூடு முழுமையடையும்,.

பெண் தூக்கனாங் குருவியானது ஒவ்வொரு கூட்டிலும் நுழைந்து எந்த ஆண் தூக்கனாங் குருவி கட்டிய வீடு தனக்கு பிடித்திருக்கிறதோ அந்த ஆண் தூக்கனாங் குருவியை தன் துணையாக்கி அதனோடு தன் வாழ்க்கையை ஆரம்பித்து இனப் பெருக்கம் செய்யுமாம்.

சுப்ஹானல்லாஹ் எவ்வளவு பெரிய அற்புதம் பாருங்கள். ஆனால் மனித சமுதாயம் வரதட்சனை என்ற பெயரில் பெண்ணுடைய வாழ்க்கையையே சுரண்டிக் கொண்டிருக்கிறது. சாதாரண பறவையிலிருந்து எவ்வளவு பெரிய ஒரு படிப்பினையை அல்லாஹ் காட்டியுள்ளான்.

பறவைகளை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்...

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும்பறவைகளும்
உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.
(அல்குர்ஆன் : 6:38)

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
(அல்குர்ஆன்-67:19)