السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 20 June 2024

கஸ்தூரி வாடை

 

இமாம் நபீய் இப்னு அபூ நுஅய்ம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் மதீனாவில் 70 வருடங்கள் இமாமாக இருந்தார்கள். மதீனாவின் பிரபல காரியாக இருந்த இவர்கள் மாலிக்கி மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் மாலிக் இப்னு அனஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆசிரியர் ஆவார். இமாம் நபீய் அவர்கள் புனித அல்- குர்ஆனை ஓதும் போதும், பேசும் போதும் அவர்களின் வாயில் இருந்து கஸ்தூரி வாடை வீசிக்கொண்டிருந்தது. நீங்கள் ஓதும் போதும், பேசும் போதும் ஏன் உங்கள் வாயிலிருந்து கஸ்தூரி வாடை வீசுகின்றது. நீங்கள் மக்கள் மத்தியில் ஓதும்போது ஏதாவது நறுமண பூச்சுகளை பாவிக்கின்றீர்களா என இமாம் நபீய் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு இமாம் நபீய் அவர்கள், " நான் நபிகள் நாயகம் ﷺ அவர்களை ஒருமுறை கனவில் கண்டேன். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் என் வாயின் மீது ஓதினார்கள். அந்த நொடி முதல் எனது வாயில் இருந்து கஸ்தூரி வாடை வீசுகின்றது" என இமாம் நபீய் அவர்கள் கூறினார்கள். 


அல்லாஹ் ஸுப்ஹானவத்தஆலா எமக்கும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கனவில் பார்க்கும் பாக்கியத்தை வழங்குவானாக, ஆமீன்..!

Wednesday, 19 June 2024

டந்தே ஹஜ் செய்த மூதாட்டி



 நடந்தே வந்த இந்த அம்மையார்...!

******************************************


🕋 பிரமிட் நாடான எகிப்தில் பஹாதா என்ற நகரில் இருந்து மஜ்தா முஹம்மது மூஸா என்ற இந்த அம்மையார் நடந்தே வந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.


கையில் ஒரு பை..!


அவ்வளவு தான் லக்கேஜ்..!


2010 ம் ஆண்டு இவரின் கணவர் இறந்து விட்டார்.


நடந்தே ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும். என்ற லட்சியம் பல ஆண்டுகளாக இருந்தது.


இந்த வருடம் தனது லட்சியம் நிறைவேறி விட்டதாக கூறும் இந்த அம்மையாருக்கு 63 வயது.


இந்த வயதில் கால் வலி. நரம்பு மண்டல பிரச்சனை என்று பல உபாதைகள் இருந்தது.


 நடந்தே ஹஜ் செய்ய வேண்டும். என்ற நிய்யத் துடன் நடக்க ஆரம்பித்த பிறகு அத்தனை உபாதைகளும் காணாமல் போய் விட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.


இந்த வாரத்தில் எகிப்து திரும்பி விடுவதாக இருக்கிறார்.


இவரின் ஹஜ்ஜை அல்லாஹ் கபூல் செய்வானாக. ஆமீன்.



Saturday, 15 June 2024

இஹ்ஸான் சிறு விளக்கம்.


கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,     

 மௌலவி பாஸில் ஷெய்கு   

   *ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,*

  பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.

இஹ்ஸான் என்பதும், இக்லாஸ் என்பதும் ஒத்தகருத்துள்ள சொல்! மனதில் அல்லாஹ் அல்லாதவற்றிற்கு இடம் கொடுக்காமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் நாடிச் செய்யும் செயலை இக்லாஸ் எனப்படும்; 


மக்களின் பாராட்டால் மனம் உவகையடையாமல் தூற்றலால் சோர்வடையாமல் இரண்டையும் சமனாகக் கருதும் போது இஹ்ஸான் வரும்;


 இஹ்ஸானைக் கெடுப்பது முகஸ்த்துதி! இது 

மக்களின் கண்ணியத்தாலும், பாராட்டாலும்தான் வருகிறது.


 ஆகவே, இதை இல்லாதொழிக்க அனைத்தும் அல்லாஹ்வின் செயல் என்று கருதி அதை நமது மனதிலிருந்து வேரோடு பிடுங்கி வீசி விடவேண்டும்.


படைப்புக்கு சக்தி உண்டு என்று நம்பும் வரை மனதில் முகஸ்துதி வருவதைத் தடுக்க முடியாது!


 ஆகவே,  


நமது செயலை அல்லாஹுத்த ஆலா பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்பதை ஆழமாக மனதில் பதித்து அதை சதா நினைவில் பதிக்க வேண்டும். 


நமது மனம் அல்லாஹ்வின் அருள் இறங்கும் இடம்; அவன் காட்சி வெளியாகும் இடம்; ஆகவே அல்லாஹ் அல்லாத வேற்று எண்ணம் என்ற நஜீஸை விட்டும் மனம் பரிசுத்தமாகும் போது இஹ்ஸான் தானே மலரும்.


ஷரீஅத்தின் சட்டங்களைப் பின்பற்றுவதில் இஸ்திகாமத் இருக்க வேண்டும், இஸ்திகாமத் என்பது அல்லாஹ்வுக்காக மன உறுதியோடு செய்வதையும் தனது சந்தோஷங்களையும், விருப்பங்களையும் அல்லாஹ்வுக்காக அற்பணிப்பதையும் குறிக்கும்; 


ஆக, முதலில் இஸ்திகாமத் இருக்கவேண்டும், இதிலிருந்துதான் இஹ்ஸான் வளர்கிறது.

Thursday, 13 June 2024

பெருமானாரின் பாட்டனாரின் கப்ர்

 

இது காஸாவில் அடக்கங்கப்பெற்றுள்ள அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் முப்-பாட்டனார் ஹாஷிம் இப்னு அப்துல் மனாஃப் அவர்களின் ஸியாரத்தின் பழைய புகைப்படம் இது. 


வியாபார நிமித்தமாக ஷாம் நகருக்குச் சென்றிருந்தபோது அவர்கள் காலமானார். தன்னோடிருக்கும் யாரையும் பட்டினியில் தூங்க விடாமாட்டார்கள், தேவைப்படுபவர்களின் கடனை தேடிச் சென்று அடைத்து விடுவார்கள். அல் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளபடி - குளிர்காலம் மற்றும் கோடை காலத்தில் யமன் மற்றும் ஷாம் ஆகிய நாடுகளுக்கு வணிகம் செய்ய சென்ற முதல் குறைஷியும் இவர்களே ஆவார்கள். 


பெருமானார் ﷺ அவர்கள் தனது ஆண் குழந்தைகளை இழந்தபோது, ​​மக்காவின் காஃபிர்கள் சிரித்துக்கொண்டே அவர்களை கேலி செய்ய முயன்றனர். தனது பெயரைக் கட்டிக்காக்க இந்த நபிக்கு ஆண் குழந்தைகள் இல்லையே என்று அவர்கள் சொன்னார்கள். இன்று, பெருமானார் ﷺ அவர்களின் குடும்பம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. 

நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் ஹிஜாஸில் தனியாக மக்களை இஸ்லாத்திற்கு அழைத்தபோது, ​​மக்கள் யாரும் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள் என்று சிரித்தார்கள். இன்று அவருக்கு உலகம் முழுவதும் 1.7 பில்லியன் மக்கள் அவர்களைப் பின் தொடர்பவர்களாக உள்ளனர். 

அன்றைய மக்கத்து மக்கள் அவர்களை முஹம்மது (ﷺ) என்று அழைக்க மறுத்து அவருடைய அந்தஸ்தை ஏற்க விரும்பாமல் அவர்களை இழிவுபடுத்த முயன்றனர். இன்று, அவர்களை தெரியாது யாரும் இல்லை, அவர்களுடைய அருள் நிறைந்த முஹம்மது எனும் திரு நாமம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு பெயராக அல்லாஹ் சிறப்பாக்கி வைதாதுள்ளான்.


பெருமானார் ﷺ அவர்களுக்கு எதிராக மக்கள் போர் தொடுத்து இஸ்லாத்தை அழிக்க முற்பட்ட போது அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை அளித்து உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கமாக அவர்களது தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை ஆக்கினான். 


வெறுப்பவர்கள், நயவஞ்சகர்கள், சந்தேகம் கொள்பவர்கள் மற்றும் நோயுற்ற இதயங்களைக் கொண்ட மக்கள் வாழ்வார்கள், இறப்பார்கள், மறக்கப்படுவார்கள், ஆனால் நமது தலைவர் அகிலத்தின் முதல் ஒளி, மறுவிலாதெழுந்த முழுமதி நபிகள் கோமான் முஹம்மது ﷺ அவர்களின் பெயர், அவர்களது நினைவு, அவர்களது அன்பர்கள், அவர்களைப் பின்பற்றுபவர்கள், அவர்களது மார்க்கம், அவர்களுடைய போதனைகள் மற்றும் அவர்களது பதவி உலக முடிவு நாள் வரை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.  


'பெருமானார் ﷺ அவர்களை எதிர்ப்பவர்களுக்கு, பரிகாசம் செய்பவர்களுக்கு அவமானம் விதியாக்கப்பட்டுள்ளது.'

Tuesday, 4 June 2024

காஸா மக்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக

பலஸ்தீன்

 காஸாவின் வைத்தியசாலையில் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி டொக்டர் அபூ நஜீ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். காஸாவைச் சேர்ந்த முஹம்மத் பவ்தா என்ற மனிதர் தான் வாழ்ந்த பகுதியில் குண்டு வீச்சின் காரணமாக தனது வலது கையையும், காலையும் இழந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் . முஹம்மத் பவ்தாவை நோக்கும் போது, அவர் தான் எதிர்கொண்டிருந்த பயங்கரமான நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளையை பொருந்திக் கொண்டவர்களாக மிகப் பொறுமையுடன், அல்லாஹ்வுக்கு முழுமையாக நன்றி செலுத்திய நிலையில் இருந்ததாக டொக்டர் அபூ நஜீ அவர்கள் கூறினார். 


சில நேரங்களில் பின்னர் காஸாவைச் சேர்ந்த ஒரு மனிதர் வைத்தியசாலைக்கு வந்து, இங்கு முஹம்மத் பவ்தா என்று ஒருவர் இருக்கிறாரா ? நீங்கள் முஹம்மத் பவ்தாவா ? உங்களுக்கு முஹம்மத் பவ்தாவை தெரியுமா? என்று விசாரித்த வண்ணம் நடந்து கொண்டிருந்தார். இறுதியாக அவர் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு வந்து அங்கு டொக்டரிடம் இங்கு முஹம்மத் பவ்தா என்று ஒருவர் இருக்கிறாரா ? என்று கேட்டார். அதற்கு டொக்டர் ஆம் என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர் நான் அவருடன் பேசவேண்டும் என்று கூறினார். பின்னர், அந்த மனிதர் முஹம்மத் பவ்தா இருந்த இடத்தை அடைந்ததும், அவரிடம் "நீங்கள் யார் என்று எனக்குத் தெரியாது. உங்களை நான் இதற்கு முன்னர் கண்டதோ, சந்தித்ததோ இல்லை. ஆனால், நேற்று இரவு நான் கனவில் நபிகள் நாயகம் ﷺ அவர்களை கண்டேன். நபிகள் நாயகம் ﷺ அவர்கள், இந்த வைத்தியசாலைக்கு சென்று, உங்களை தேடி, உங்களிடம்

 " அல்லாஹ்வும், அவனது தூதரும் ﷺ நீங்கள் பொறுமையுடன் அல்லாஹ்வின் கட்டளையை பொருந்திக் கொண்டதன் காரணமாக, உங்களை பற்றி சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைவதாக கூறும்படி எனக்கு ஏவினார்கள் " என்று கூறினார். காஸாவின் மக்களே உண்மையான கெளரவமான மக்கள் ஆவர்.


யா ரஸூலுல்லாஹ், நீங்கள் எமது உயிரை விடவும் எமக்கு நெருக்கமாக இருக்கின்றீர்கள். நீங்கள் எங்களுக்காக உங்கள் நாயனிடம் பரிந்துரை செய்யும்படி உங்களிடம் கேட்கின்றோம்🤲...


செய்க் முஹம்மத் அஸ்லம் Shaykh Mohammed Aslam அவர்களின் முகப்புத்தகத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஆக்கத்தின் தமிழாக்கம்


இர்பான் fb

Monday, 27 May 2024

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி

 

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்


இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவராக இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் பெற்றுக்கொண்டார்கள். சிறு வயதிலேயே புனித அல்-குர்ஆனை மனனம் செய்தார்கள். பின்னர் தனது உயர்கல்விக்காக மொரோக்கோவின் பெஸ் நகருக்குச் சென்ற இமாம் அவர்கள், பெஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டார்கள். இளைஞராக இருக்கும் போது பிக்ஹ் மற்றும் ஏனைய துறைகளிலுள்ள அறிஞர்களுடன் சமயரீதியான விவாதங்களில் ஈடுபடுவதில் சிறந்தவராக இமாம் அவர்கள் காணப்பட்டார்கள். அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்த இமாம் அவர்கள் பின்னர் டியூனிசியா மற்றும் ஈராக் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.


இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்)  அவர்கள் கி.பி. 1243இல் தனது 47வயதில் டியூனிஸ் நகரில் தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்கள். முதன் முதலில் டியூனிஸ் நகரின் அல்-பலத் பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றினார்கள். இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தனர். அக்காலப்பகுதியில் டியூனிஸ்

நகரின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் அபூஸகரிய்யா யஹ்யா அவர்களும் இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்டார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்)  அவர்களிடம் முதலில் 40பேர் பைஅத் பெற்றனர். இதுவே ஷாதுலிய்யா தரீக்காவின் ஆரம்பமாகும் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.


கி.பி. 1250ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மன்சூரா யுத்தம் நடைபெற்றது. இது எகிப்தின் அய்யூபிய படைக்கும், சிலுவை வீரர்களுக்கும் இடையில் நடைபெற்றது. எகிப்தின் அய்யூபிய படைக்கு அமீர் பக்ருத்தீன் யூசுப் அவர்கள் தலைமை தாங்கினார். பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னர் சிலுவைப் படைக்குத் தலைமை தாங்கினார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது நுாற்றுக்கணக்கான முரீதீன்களுடன் இப்போரில் கலந்துகொண்டார்கள். இப்போரில் எகிப்தியப் படை வெற்றிப் பெற்றதுடன், பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னரும் அவரது படைத்தளபதிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 


இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஷாதுலிய்யா வழியமைப்பை பிற்காலத்தில் தோண்றிய பல புகழ்பெற்ற அறிஞர்கள் தொடர்ந்தனர். அவர்களில் இமாம் அவர்களின் மாணவரும், ஷாதுலிய்யா வழியமைப்பின் முதலாவது செய்ஹாகாவும்  அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் செயற்பட்டார்கள். எகிப்தின் நான்கு பெரும் சூபி அறிஞர்களில் முதன்மையானவராக இவர்கள் கருதப்படுகின்றார்கள்.


இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் முரீதாக இருந்த இவர்கள், சுல்தானுல் உலமா என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் உலகம் தாத்தாரியர்களதும், சிலுவை வீரர்களதும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்த வேளை, பிரிந்து இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்றுபடுத்துவதற்கு தனது உறுதியான சொற்பொழிவுகளின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டார்கள். செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆணித்தரமான உரையே தாத்தாரியர்களுக்கு எதிரான ஐன் ஜலுாத் என்ற யுத்தத்தின் மூலம் முதன் முறையாக தாத்தாரியர்கள் (மங்கோலியர்கள்) , முஸ்லிம்களால் (மம்லுாக்கிய ஆட்சியாளர்) தோற்கடிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. 


இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற கஸீதாவாகக் கருதப்படும், கஸீததுல் புர்தாவை இயற்றிய அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு ஸஈத் பூஸரி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் செய்ஹ் அபுல் அப்பாஸ்  அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கலீபாவாக இருந்தார்கள்.  


நபிகள் நாயகம்  ﷺ அவர்களின் பெயரிலான புகழ்பெற்ற ஸலவாத் தொகுப்பான 'தலாஇலுல் கைராத்தை' கோர்வை செய்த செய்ஹ் முஹம்மத் இப்னு சுலைமான் அல்-ஜஸூலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார்கள். மொரோக்கோவின் பெஸ் நகரில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞரான செய்ஹ் அஹமத் அல்-ஸரூக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஸரூக்கிய்யா பிரிவை தோற்றுவித்தார்கள். 


காதிரிய்யா வழியமைப்புக்குப் பின்னர் உலகில் அதிகமானோரால் பின்பற்றப்படும் பிரிவாக ஷாதுலிய்யா வழியமைப்பு காணப்படுகின்றது. தற்போது உலகம் முழுவதும் ஷாதுலிய்யா வழியமைப்பின் 72பிரிவுகள் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஷாதுலிய்யா வழியமைப்பைப் பின்பற்றுகின்றனர். வட ஆபிரிக்கா நாடுகளான எகிப்து, மொரோக்கோ மற்றும் டியூனிசியா ஆகிய நாடுகளில் ஷாதுலிய்யா வழியமைப்பு அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இமாம் முஹம்மத் அல்-பாஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட  ஷாதுலிய்யா வழியமைப்பின் பாஸிய்யா பிரிவானது இலங்கை,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. 


எகிப்தின் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், தலைசிறந்த எழுத்தாளருமான இமாம் ஜலாலுத்தீன் அல்-ஸுயூத்தி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் புகழ்பெற்ற செய்ஹகாக காணப்பட்டார்கள். இமாம் புகாரி அவர்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கு புகழ்பெற்ற விளக்கவுரையை எழுதிய இமாம் சிஹாபுத்தீன் அல்-கஸ்தலானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் செய்ஹ் ஒருவராகக் காணப்பட்டார்கள். புகழ்பெற்ற முஜத்தித்தாகக் காணப்பட்ட இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஒரு செய்ஹாக செயற்பட்டார்கள். 


உதுமானியப் பேரரசின் சுல்தான்களுள் முக்கிய ஒருவராகக் கருதப்படும் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். அவர்களது செய்ஹாக அஷ்செய்ஹ் ஸபீர் எபிந்தி  (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காணப்பட்டார்கள். 


இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் நிறுவனர் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் தனது ஆரம்ப காலத்தில் ஷாதுலிய்யா தரீக்காவின் "ஹஸபிய்யதுஷ் ஷாதுலிய்யா" பிரிவில் இணைந்து கொண்டார். அத்தரீக்காவில் தான் பெற்ற ஆன்மீக பயிற்சிகளே தான் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளுடன் போராட தனக்கு ஆன்ம வலிமையையும், உறுதியையும் வழங்கியதாக தனது "முஸக்கராத்" என்ற சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

நவீன காலத்தில் தோண்றிய தலைசிறந்த அறிஞராகக் கருதப்படும் செய்ஹுல் அஸ்ஹர் கலாநிதி அப்துல் ஹலீம் மஹ்மூத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை விரிவுரையாளர்களாக பணியாற்றும் பலர் ஷாதுலிய்யா வழியமைப்பை பின்பற்றுகின்றனர். 


முழுமையான கட்டுரையை கீழ்வரும் லிங்கில் வாசிக்க முடியும் - 


https://ziyaratceylon.blogspot.com/2021/05/blog-post_29.html?m=1


தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்


See more