السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Monday 27 May 2024

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி

 

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி

இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்


இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய ஆளுமைகளில் மிக முக்கியமான ஒருவராக இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் பெற்றுக்கொண்டார்கள். சிறு வயதிலேயே புனித அல்-குர்ஆனை மனனம் செய்தார்கள். பின்னர் தனது உயர்கல்விக்காக மொரோக்கோவின் பெஸ் நகருக்குச் சென்ற இமாம் அவர்கள், பெஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டார்கள். இளைஞராக இருக்கும் போது பிக்ஹ் மற்றும் ஏனைய துறைகளிலுள்ள அறிஞர்களுடன் சமயரீதியான விவாதங்களில் ஈடுபடுவதில் சிறந்தவராக இமாம் அவர்கள் காணப்பட்டார்கள். அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்த இமாம் அவர்கள் பின்னர் டியூனிசியா மற்றும் ஈராக் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்தார்கள்.


இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்)  அவர்கள் கி.பி. 1243இல் தனது 47வயதில் டியூனிஸ் நகரில் தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்கள். முதன் முதலில் டியூனிஸ் நகரின் அல்-பலத் பள்ளிவாசலில் சொற்பொழிவாற்றினார்கள். இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தனர். அக்காலப்பகுதியில் டியூனிஸ்

நகரின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் அபூஸகரிய்யா யஹ்யா அவர்களும் இமாம் அவர்களின் உரையால் கவரப்பட்டார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்)  அவர்களிடம் முதலில் 40பேர் பைஅத் பெற்றனர். இதுவே ஷாதுலிய்யா தரீக்காவின் ஆரம்பமாகும் என வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.


கி.பி. 1250ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மன்சூரா யுத்தம் நடைபெற்றது. இது எகிப்தின் அய்யூபிய படைக்கும், சிலுவை வீரர்களுக்கும் இடையில் நடைபெற்றது. எகிப்தின் அய்யூபிய படைக்கு அமீர் பக்ருத்தீன் யூசுப் அவர்கள் தலைமை தாங்கினார். பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னர் சிலுவைப் படைக்குத் தலைமை தாங்கினார். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது நுாற்றுக்கணக்கான முரீதீன்களுடன் இப்போரில் கலந்துகொண்டார்கள். இப்போரில் எகிப்தியப் படை வெற்றிப் பெற்றதுடன், பிரான்ஸின் 9வது லுாயிஸ் மன்னரும் அவரது படைத்தளபதிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 


இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஷாதுலிய்யா வழியமைப்பை பிற்காலத்தில் தோண்றிய பல புகழ்பெற்ற அறிஞர்கள் தொடர்ந்தனர். அவர்களில் இமாம் அவர்களின் மாணவரும், ஷாதுலிய்யா வழியமைப்பின் முதலாவது செய்ஹாகாவும்  அபுல் அப்பாஸ் அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் செயற்பட்டார்கள். எகிப்தின் நான்கு பெரும் சூபி அறிஞர்களில் முதன்மையானவராக இவர்கள் கருதப்படுகின்றார்கள்.


இஸ்லாமிய வரலாற்றில் தோண்றிய தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராக செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கருதப்படுகின்றார்கள். இமாம் அபுல் ஹஸன் அலி-அஷ்ஷாதுலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் முரீதாக இருந்த இவர்கள், சுல்தானுல் உலமா என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் உலகம் தாத்தாரியர்களதும், சிலுவை வீரர்களதும் தாக்குதலுக்கு உட்பட்டிருந்த வேளை, பிரிந்து இருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களை ஒன்றுபடுத்துவதற்கு தனது உறுதியான சொற்பொழிவுகளின் மூலம் முயற்சிகளை மேற்கொண்டார்கள். செய்ஹ் இஸ்ஸதீன் அப்திஸ்ஸலாம் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் ஆணித்தரமான உரையே தாத்தாரியர்களுக்கு எதிரான ஐன் ஜலுாத் என்ற யுத்தத்தின் மூலம் முதன் முறையாக தாத்தாரியர்கள் (மங்கோலியர்கள்) , முஸ்லிம்களால் (மம்லுாக்கிய ஆட்சியாளர்) தோற்கடிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தது. 


இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற கஸீதாவாகக் கருதப்படும், கஸீததுல் புர்தாவை இயற்றிய அபூ அப்துல்லாஹ் முஹம்மத் இப்னு ஸஈத் பூஸரி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர்கள் செய்ஹ் அபுல் அப்பாஸ்  அல்-முர்ஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கலீபாவாக இருந்தார்கள்.  


நபிகள் நாயகம்  ﷺ அவர்களின் பெயரிலான புகழ்பெற்ற ஸலவாத் தொகுப்பான 'தலாஇலுல் கைராத்தை' கோர்வை செய்த செய்ஹ் முஹம்மத் இப்னு சுலைமான் அல்-ஜஸூலி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பைச் சேர்ந்தவர் ஆவார்கள். மொரோக்கோவின் பெஸ் நகரில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞரான செய்ஹ் அஹமத் அல்-ஸரூக் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஸரூக்கிய்யா பிரிவை தோற்றுவித்தார்கள். 


காதிரிய்யா வழியமைப்புக்குப் பின்னர் உலகில் அதிகமானோரால் பின்பற்றப்படும் பிரிவாக ஷாதுலிய்யா வழியமைப்பு காணப்படுகின்றது. தற்போது உலகம் முழுவதும் ஷாதுலிய்யா வழியமைப்பின் 72பிரிவுகள் காணப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் ஷாதுலிய்யா வழியமைப்பைப் பின்பற்றுகின்றனர். வட ஆபிரிக்கா நாடுகளான எகிப்து, மொரோக்கோ மற்றும் டியூனிசியா ஆகிய நாடுகளில் ஷாதுலிய்யா வழியமைப்பு அதிகமான மக்களால் பின்பற்றப்படுகின்றது. இமாம் முஹம்மத் அல்-பாஸி (றஹிமஹுல்லாஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட  ஷாதுலிய்யா வழியமைப்பின் பாஸிய்யா பிரிவானது இலங்கை,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. 


எகிப்தின் புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும், தலைசிறந்த எழுத்தாளருமான இமாம் ஜலாலுத்தீன் அல்-ஸுயூத்தி (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா வழியமைப்பின் புகழ்பெற்ற செய்ஹகாக காணப்பட்டார்கள். இமாம் புகாரி அவர்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கு புகழ்பெற்ற விளக்கவுரையை எழுதிய இமாம் சிஹாபுத்தீன் அல்-கஸ்தலானி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் செய்ஹ் ஒருவராகக் காணப்பட்டார்கள். புகழ்பெற்ற முஜத்தித்தாகக் காணப்பட்ட இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி (றஹிமஹுல்லாஹ்) அவர்களும் ஷாதுலிய்யா வழியமைப்பின் ஒரு செய்ஹாக செயற்பட்டார்கள். 


உதுமானியப் பேரரசின் சுல்தான்களுள் முக்கிய ஒருவராகக் கருதப்படும் சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். அவர்களது செய்ஹாக அஷ்செய்ஹ் ஸபீர் எபிந்தி  (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் காணப்பட்டார்கள். 


இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் நிறுவனர் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் தனது ஆரம்ப காலத்தில் ஷாதுலிய்யா தரீக்காவின் "ஹஸபிய்யதுஷ் ஷாதுலிய்யா" பிரிவில் இணைந்து கொண்டார். அத்தரீக்காவில் தான் பெற்ற ஆன்மீக பயிற்சிகளே தான் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளுடன் போராட தனக்கு ஆன்ம வலிமையையும், உறுதியையும் வழங்கியதாக தனது "முஸக்கராத்" என்ற சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

நவீன காலத்தில் தோண்றிய தலைசிறந்த அறிஞராகக் கருதப்படும் செய்ஹுல் அஸ்ஹர் கலாநிதி அப்துல் ஹலீம் மஹ்மூத் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஷாதுலிய்யா தரீக்காவின் முரீதாக இருந்தார்கள். எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை விரிவுரையாளர்களாக பணியாற்றும் பலர் ஷாதுலிய்யா வழியமைப்பை பின்பற்றுகின்றனர். 


முழுமையான கட்டுரையை கீழ்வரும் லிங்கில் வாசிக்க முடியும் - 


https://ziyaratceylon.blogspot.com/2021/05/blog-post_29.html?m=1


தொகுப்பு - இப்ஹாம் நவாஸ்


See more