Friday, 12 January 2024
உம்மு ஹராம் ரழியல்லாஹு அன்ஹா
Thursday, 4 January 2024
வஹியுடன் வஹி முரண்படுமா..? தொடர் 03
இப்போ ஹதீஸுக்கு வாருங்கள்..வீடியோவை கீழே பார்வை இடவும்..
இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புகாரி #கிதாப்_அஹாதீஸுல்_அன்பியா #பாபு_வபாதி_மூஸா (அலைஹிஸ் ஸலாம்) என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம் 3407 அதே போல் #பாபு_மன்_அஹப்பத்_தபன_பிஃல்_அர்ழில்_முகத்ஸ்ஸதி_அவ்_நஹ்விஹா என்ற பாடத்தில் ஹதீஸ் இலக்கம் 1339, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹ்மத், ஸுனன் நஸாயி,ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் எல்லாம் இந்த ஹதீஸ் பதிவாகி உள்ளது.
ஸஹீஹ் உடைய நிபந்தனைகள் எல்லாம் சரியாக இருக்கும் நிலையில் மறுப்பதற்கும் இடமில்லாத நிலையில் ஹதீஸ் கலை வல்லுனர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இருக்கும் ஹதீஸே இது..அதனால் தானே இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்..
#ஸஹீஹுல்_புகாரி
என்ற ஹதீஸ் கிரந்தம் தொகுத்து முடிப்பதற்கு ஏறத்தாள 16 வருடங்கள் சென்றது.எந்த அளவு பேணுதலாக இக்கிரந்தத்தை தொகுத்தார்கள் என்றால் இமாம் புகாரி ரஹ்மஹுல்லாஹ் சொல்கிறார்கள்
ما وضعت في كتابي ( الصحيح ) حديثا الا اغتسلت قبل ذلك صليت ركعتين
என்னுடைய இந்த கிதாபில் ஒரு ஹதீஸை எழுதுவதென்றால் குளித்து இரண்டு ரக்கஅத் தொழுது விட்டுத்தான் எழுதுவேன் என்று சொல்கிறார்கள்...
என்றால் 7275 ஹதீஸ்களையும் எழுத முன் குளித்து வுழு செய்து இரண்டு ரக்கஅத் தொழுத பின் தான் எழுதுவார்கள் என்றால் எவ்வளவு பேணுதலாக இக்கிரந்தத்தை தொகுத்து இருக்க வேண்டும்..
அதனால் தான் எல்லா இமாம்களாலும் ஏகோபித்த முடிவாக இப்புவியில் அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆனுக்கு அடுத்த படியாக மிகச் சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகுப்பு என்றால் அது ஸஹீஹுல் புகாரி என்று சொல்கிறார்கள்..
எனவே சிலரின் தவறான வாதங்கள் ஸஹீஹுல் புகாரியில் பலஹீனமான ( ழயீபான ) 20 ம் மேற்பட்ட ஹதீஸ் இருக்கு என்று சொல்கிறார்கள்..மட்டுமல்ல ஏற்றுக்கொள்ள முடியாத இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்களும் உண்டு என்று சொல்கிறார்கள்..(உதாரணமாக சூனியம் பற்றிய ஹதீஸ் அஜ்வா பேரீத்தம் பழம் பற்றிய ஹதீஸ்) இன்னும் பல..
காரணம் இந்த ஹதீஸ்கள் பகுத்தறிவுக்கு முரணாகவும் ஷரீஅத்திற்கு முரணாகவும் இருக்கிறது என்ற சப்பைக்கட்டு வேற....
இவர்களுக்கு சவாலாகவே சொல்கிறேன் ஸஹீஹுல் புகாரியில் ஒரு ஹதீஸ் ழயீப் (பலஹீனம்) அல்லது மவ்ழூஃ ( இட்டுக்கட்டப்பட்டது) என்பதை நிரூபித்துக்காட்டுங்கள் பார்க்கலாம்..ஒரு நிபந்தனை யாரோ சொல்வதை எல்லாம் எடுத்துக்கொண்டு தனக்கு தெரிந்ததை மட்டும் வைத்து பேசக்கூடாது..அறபியிலும், எல்லாக் கலைகளிலும் குறிப்பாக ஹதீஸ் கலையிலும் நல்ல திறமை உள்ளவர் வரலாம்.வாயல் எப்போதும் திறந்தே இருக்கும்..
சரி விடயத்திற்கு வருவோம்.மேற்கூறிய ஹதீஸ் புத்திக்கும் ஷரீஅத்திற்கும் முரணாக இருக்கிறதே!!
ஒரு நபி எப்படி மவ்த்தை வெறுப்பார்..?
மலக்கின் வேலை அல்லாஹ் என்ன சொன்னானோ அதை அப்படியே செய்ய வேண்டும் எந்த மாறுதலும் செய்ய முடியாது அப்படி இருக்க மலகுல் மவ்த் ஹழ்ரத் இஸ்ராயீல் அலைஹிஸ் ஸலாம் எப்படி உயிரைக் கைப்பற்றாமல் அடி வாங்கிவிட்டு திரும்பிப் போவார்..?இது ஷரீஅத்திற்கு மாற்றமே!!
வந்தவர் மலகுல் மவ்த் என்பதை மூஸா அலைஹிஸ் ஸலாம் எப்படி அறியாமல் இருந்தார்..?
இதுவே இந்த ஹதீஸின் விமர்சனங்கள்..அதனால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது..
ஹதீஸ் என்பதும் வஹீ தான் என்பதை ஏற்கனவே தெளிவு படுத்தினோம்..லிங்க் கீழே 👇
https://m.facebook.com/story.php?story_fbid=953846502981880&id=100050696177320&mibextid=Nif5oz
அதே சமயம் வஹீயை மறுக்க முடியாது.அப்படி மறுத்தால் அவர் காபிர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர் ஆவார்..
குறிப்பாக ஸஹீஹுல் புகாரியின் ஹதீஸை மறுத்தால் அதற்கு என்று தனி தீர்ப்பு உண்டு..எனவே ஹதீஸும் வஹியாக இருக்க வஹியும் வஹியும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளுமா என்றால் வஹியுடன் வஹி முரண்படவும் மாட்டாது...
உறுதியான (கதஇய்யத்தான) ஆதாரமான தெளிவான ஒரு ஹதீஸ் #புத்திக்கு முரண்படவும் மாட்டாது..
என்பதை இப்னு தைமியா தெளிவாகவே தன்னுடைய #தர்உ_தஆருழில்_அக்லி_வன்நக்லி
درء تعارض العقل والنقل
என்ற கிதாபில் சொல்லிக்காட்டுகிறார்..
11 பாகங்களைக் கொண்ட அருமையான கிதாப்.எதிர் கொள்கையானாலும் சரி இக் கிதாபுகளையும் படித்துப் பாருங்கள் நிறைய விடயங்கள் அறிந்து கொள்ளலாம்..
இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரோடு முற்றும்....
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர்
+94 77 444 77 57
Wednesday, 3 January 2024
வஹியுடன் வஹி முரண்படுமா..?? தொடர் 02
தொடர் 01 ல் நாம் இரண்டு விதமான வஹியைப் பார்க்கப் போகிறோம் என்று சொன்னேன்..அதன் லிங்க் கீழே
1- அல் குர்ஆன் இது #வஹியுன்_மத்லுவ்வுன்
( وحي متلو )
2- அல் ஹதீஸ் ( அஸ் சுன்னா) இது #வஹியுன்_ஙைரு_மத்லுவ்வுன்
( وحي غير متلو )
இதன் சுருக்கம் அல் குர்ஆனும் அல் ஹதீஸும் #வஹி #இறை_செய்தி #இறை_தூது என்பதே!! இரண்டுமே வஹி என்றால் ஒன்றுக்கொண்று மோதிக்கொள்ளுமா..?வஹியுடன் வஹி முரண்படுமா..? என்பதே தலைப்பின் கேள்வி...
#வஹியுன்_மத்லுவ்வுன்_என்பது அல் குர்ஆன் இறை வேதம் இது அல்லாஹ்வின் தூது இறை செய்தி வஹி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..
இந்த வசனத்தைப் பாருங்கள்
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوٰى
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.
(சூரத்து அந் நஜ்ம் - 3)
اِنْ هُوَ اِلَّا وَحْىٌ يُّوْحٰىۙ
அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.
(சூரத்து அந் நஜ்ம் - 4)
இந்த இரண்டு வசனமும் வஹி என்பது இரண்டு வகை என்பதை தெளிவாக காட்டுகிறது..
1- அல்லாஹ்வால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அல் குர்ஆன்..இடத்துக்கு ஏற்றவாறு சூழ் நிலைகளைக் கவனித்து நேரடியாகவும்,ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வழியாகவும்,மணி ஓசை போன்ற அமைப்பிலும் இவ்வாறு பல ரூபங்களில் வஹி இறங்கியது.ஓதிக்காண்பிக்கப்பட்டது.மட்டுமல்ல இதை ஓதினால் நண்மையும் உண்டு.அதனால் தான் அல் குர்ஆனை #வஹியுன்_மத்லுவ்வுன்_என்று சொல்லப்படும்..
2- மேற்கூறியது போன்று அஸ் சுன்னா இதுவும் வஹிதான் என்பதை மேற்கூறிய வசனம் ( சூரத்து அந் நஜ்ம் - 3,4 ) எடுத்துச் சொல்கிறது..நன்றாக சிந்திக்கவும் புலப்படும்..
இப்போது இந்த வசனத்தைப் பாருங்கள்
بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَاَنْزَلْنَاۤ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ
தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.
(சூரத்து அந் நஹ்ல் - 44)
அல்லாஹ்வின் மூலம் கொடுக்கப்பட்ட வஹியான அல் குர்ஆனை #மக்களுக்கு_தெளிவுபடுத்துவதற்காக அருளப்பட்டது அனுப்பப்பட்டார்கள்...
எனவே தான் நேரடியாக கொடுக்கப்பட்டது #வஹியுன்_மத்லுவ்வுன்_என்றும் கொடுக்கப்பட்ட அவ்வஹியை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்தவேண்டும்..அல்லாஹ் என்ன சொல்கிறான் அவர்கள் மனோ இச்சைப்படி எதையும் பேசமாட்டார்கள்.பேசினால் அது வஹிதான் என்று அல்லாஹ் சொல்கிறான்.அதனால் தான் அல் ஹதீஸ் ( அஸ் சுன்னா) .என்பது #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன்_என்று அல்லது #வஹியுன்_மர்விய்யுன் என்று சொல்லப்படுகிறது..
எனவே அல் குர்ஆனுக்கும் கட்டுப்பட வேண்டும் அஸ் சுன்னாவுக்கும் கட்டுப்பட வேண்டும்...இரண்டுமே வஹி தான்..
இரண்டுமே வஹி என்பதை அல்லாஹ் சொல்லும் #திக்ர் ( ذكر ) என்ற வார்த்தையில் புரிந்து கொள்ளலாம்..மேற் கூறிய வசனத்திலும் அவ் வார்த்தை உண்டு அதே போல் இவ்வசனத்தைப் பாருங்கள்
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(சூரத்து அல் ஹிஜ்ர் - 9)
#சுருக்கமாகவும்_தெளிவாகவும்_சொல்வதென்றால்
أخبر تعالى أن كلام نبيه صلى الله عليه وسلم كله وحي
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேச்சு எல்லாமே #வஹி என்று அல்லாஹ் சொல்கிறான்..
والوحي بلا خلاف ذكر
வஹி என்பது எந்த மாற்றுக்கருத்துமே இல்லாமல் அது #திக்ர்_என்று அல்லாஹ் சொல்கிறான்..
والذكر محفوظ بنص القرآن
#திக்ரை_அல்லாஹ் பாதுகாப்பதாக நேரடியாகவே #நஸ்ஸாகவே அல்லாஹ் கூறுகிறான்..
அல்லாமா இமாம் இப்னு ஹஸ்ம் அல் அந்துலிஸி ( ஹிஜ்ரி 384. - 456 ) ரஹ்மஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய #அல்_இஹ்காம்_பீஃ_உஸூலில்_அஹ்காம்
( الإحكام في أصول الأحكام )
என்ற நூலில் பாகம் 01 பக்கம் 98 ல் சொல்லிக்காட்டுகிறார்கள்..
மேற் கூறிய ஏனைய விளக்கங்களும் அதே கிதாப் அதே பாகம் 01 பக்கம் 96 ல் 11 வது பாடத்தில் இடம் பெருகிறது...
அருமையான 8 பாகங்களைக் கொண்ட கிதாப்..கிதாபை படியுங்கள் இன்னும் நிறைய விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்...
எனவே அல் குர்ஆனும் அல் ஹதீஸும் ( அஸ் சுன்னா) இறை செய்தி இறை தூது வஹி தான் என்பதை அல் குர்ஆனின் மூலமே தெளிவாகிறது..அதனால் வஹியோடு வஹி ஒரு பொழுதும் மோதாது..வஹியுடன் வஹி முரண்படாது..
என்றால் புகாரி முஸ்லிம் இரு பெரும் கிரந்தங்களில் வரக்கூடிய ஹதீஸ் அதாவது உயிரைக் கைப்பற்ற இஸ்ராயீல் அலைஹிஸ் ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் போன சமயம் அறைந்தார்களாம்...கண் வெளியே வந்ததாம்...
வாருங்கள் அடுத்த தொடரில் ....
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர்
வஹியுடன்_வஹி_முரண்படுமா.??
தொடர் 01
முரண்பாடுகளை தவிர்ப்பதென்றால் முதலில் மார்க்க கல்வியை சரி வர ஆய்வுக்குட்படுத்தி கற்க வேண்டும்..நாம் அறிந்தது தான் மார்க்கம் நமக்கு தெரிந்தது தான் மார்க்கம் என்ற நிலை வருமானால் அங்கே குழப்பத்திற்கு பஞ்சமில்லை..
#முதலாவது வஹியைப் பற்றி அறிய வேண்டும்..
வஹி என்பது #இறைதூது #இறைசெய்தி இது வார்த்தையின் கருத்து..வெறுமனே வார்த்தையின் கருத்தை மட்டும் சொன்னால் தெளிவாக புரிந்து கொள்ளலாமா..?என்றால் முடியவே முடியாது..
இங்கு இரண்டு விதமான வஹியை பார்க்கப் போகிறோம்.
1- அல் குர்ஆன் இது #வஹ்யுன்_மத்லுவ்வுன் (وحي متلو )
2- அல் ஹதீஸ் (அஸ் சுன்னா) இது #வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன் ( وحي غير متلو )
இவை இரண்டையும் பார்க்க முன் வஹி இறைசெய்தியை இரண்டு விதமான கருத்துக்களில் நோக்கலாம்...
1- வஹியிற்கு குறிப்பான கருத்து..அதாவது இது நபிமார்களுக்கும் ரஸுல்மார்களுக்கும் மட்டுமே அந்த இறை செய்தி வரும். இது எல்லோரும் அறிந்தது...
2- வஹியிற்கு பொதுப்படையான கருத்து..அதாவது நபிமார்கள் அல்லாத மனிதர்களுக்கும் வரும் இதற்கு #இல்ஹாமிய்யத் இறை ஞான உதிப்பு என்று சொல்லப்படும்..அல்லது #அர்ருஃயஸ்_ஸாலிஹா நல்ல கனவின் மூலம் வரும் இவைகள் எல்லாம் வஹியின் பொதுப்படையான கருத்தில் அடங்கும்..
இவைகளை சற்று விரிவாக்கினால்
1-#வஹ்யுன்_நுபுவ்வத்_வர்ரிஸாலத்
( وحي النبوة والرسالة )
ஆதாரம் ..
اِنَّاۤ #اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْ بَعْدِهٖ #وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
(சூரத்துன் நிஸா - 163)
2- #வஹ்யுல்_இல்ஹாம்
( وحي الإلهام )
இறை ஞான உதிப்பு...ஆதாரம்
#وَاَوْحٰى رَبُّكَ اِلَى النَّحْلِ اَنِ اتَّخِذِىْ مِنَ الْجِبَالِ بُيُوْتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُوْنَۙ
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
(சூரத்து அந் நஹ்ல் - 68)
#وَاَوْحَيْنَاۤ_اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَ لْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِىْ وَلَا تَحْزَنِىْ اِنَّا رَآدُّوْهُ اِلَيْكِ وَجٰعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ
நாம் மூஸாவின் தாயாருக்கு: “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
(சூரத்து அல் கஸஸ் - 7)
3- #வஹ்யுல்_இஷாரா
(وحي الإشارة )
சைக்கினை மூலம் வஹி வரும் ..ஆதாரம்..
فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ #فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
(சூரத்து மர்யம் - 11)
4- #வஹ்யுத்_தக்தீர்
( وحي التقدير )
ஆதாரம்..
فَقَضٰٮهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِىْ يَوْمَيْنِ #وَاَوْحٰى_فِىْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا وَزَ يَّـنَّـا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَحِفْظًا ذٰ لِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ
ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
(சூரத்து புஸ்ஸிலத் - 12)
இப்படி அல்லாஹ் #வஹிதான் அறிவித்தான்...இன்னும் நிறைய உண்டு வஹியைப் பற்றி எழுதுவதென்றால் மாதக்கணக்கில் எழுதலாம் அவ்வளவு விரிவான விஷயம்.. ..பதிவு நீண்டு செல்கிறது என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்..
எனவே இவைகளை எல்லாம் தெரிந்தால் தான் நம் #தலைப்பின் தெளிவை இலகுவாக அறிந்து கொள்ளலாம்...
இன்னும் தலைப்பிற்குள் நுழையவில்லை..
எனவே அடுத்த தொடரில் மேற்கூறிய
#வஹ்யுன்_மத்லுவ்வுன்_வஹ்யுன்_ஙைரு_மத்லுவ்வுன் விபரத்தைப் பார்க்கலாம்....அங்கு தலைப்பிற்கு உட்படும் ஹதீஸ் வந்துவிடும்...
தொடரும்...
மௌலவி நிஸ்வர் பாதிபி காதிரி ஏறாவூர்
அரஞ்ஞர் அராபி பாஷா
எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 1883 ஜனவரி 10 ஆம் திகதி அஹ்மட் ஒராபி பாஷாவும் அவருடன் இருந்தவர்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை அறிஞர் சித்தி லெப்பை, வாப்புச்சி மரிக்கார் உள்ளிட்ட பலரும் துறைமுகத்திற்குச் சென்று வரவேற்றனர்.
எகிப்தின் தலைநகருக்கு 80 கிலோ மீற்றர்தூரத்தில் அமைந்திருக்கும் சகசிக் கிராமத்தில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் 1841 மார்ச் 31 ஆம் திகதி பிறந்த அஹமட் ஒராபி பாஷா ஆரம்பக் கல்வியை கிராமப் பாடசாலையில் நிறைவு செய்ததோடு, 1849 இல் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இணைந்து இடைநிலை மற்றும் உயர்கல்வியை நிறைவு செய்தார். அதேநேரம் 20 வயது இளைஞனாக இருக்கும் போது இராணுவத்தில் இணைந்த இவர், தம் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தியதன் பயனாக குறுகிய காலத்தில் லெப்டினன்டாகப் பதவி உயர்வு பெற்றார்.
என்றாலும் இவர் தலைமையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1882 இல் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக இவரும் இவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு கடும் பாதுகாப்புடன் 1882.12.28 இல் எஸ்.எஸ்.மரியட்ஸ் என்ற கப்பலில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் இலங்கையை வந்தடைந்த சமயம் இந்நாடும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டே இருந்தது. ஆனால் இவரது நலன்களில் அன்றைய பிரித்தானிய பாராளுமன்றம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அதனால் இந்நாட்டுக்கான பிரித்தானிய ஆளுநர் அவரை நன்கு உபசரித்தார்.
இலங்கையை வந்தடைந்த ஒராபி பாஷாவும் அவருடன் இருந்தவர்களும் தற்போது லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்திருக்கும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அறிஞர் சித்தி லெப்பை, ஓராபி பாஷாவுடன் நட்புறவைப் பேணலானார். இதன் பயனாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் சித்தி லெப்பையின் முயற்சிகளுக்கு ஒராபி பாஷா பக்கபலமானார். இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பதில் ஒராபி பாஷாவும் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் நவீன கல்வியை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை உணர்ந்த சித்திலெப்பை, ஒராபி பாஷா போன்றோர் இணைந்து, 'முஸ்லிம் கல்விச் சங்கம்' என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி கல்வி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் பயனாக அறபு மொழி, இஸ்லாமிய மார்க்கக் கல்வியுடன் மேல்நாட்டுக் கல்வியையும் கற்பிக்கும் நோக்கில் கொழும்பு சோனகத் தெருவில் சித்தி லெப்பையினால், 'அல்மத்ரஸதுல் கைரிய்யதுல் இஸ்லாமிய்யா' எனும் பெயரில் முதலாவது பாடசாலை 1884 இல் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை பின்னர் ஹமீதிய்யா ஆங்கிலப் பாடசாலை என மாற்றம் பெற்றது.
இந்தப் பாடசாலையை ஆரம்பிப்பதற்காக ஒராபி பாஷா ரூ. 100.00 ஐ அன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதே பாடசாலைதான் தற்போது ஹமீத் அல் ஹுஸைனி பாடசாலையாக விளங்குகிறது. இதன் பின்னர்தான் அல்மத்ரஸத்துல் ஸாஹிரா என்னும் தற்போதைய கொழும்பு ஸாஹிராக் கல்லூரி 1892.08.22 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் அங்குரார்ப்பணக் கூடத்திற்கும் ஒராபி பாஷா தலைமை தாங்கியுள்ளார்.
இவர் இலங்கையில் தங்கியிருந்த காலம் முழுவதும் ஸாஹிராக் கல்லூரிக்கு அடிக்கடி விஜயம் செய்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமூட்டினார்.
அதேநேரம் கண்டிக்கு விஜயம் செய்த ஒராபி பாஷா அங்கும் சித்தி லெப்பையுடன் இணைந்து முஸ்லிம்களின் கல்விக்கு ஊக்கமளித்தார். இந்நிலையில் கண்டியில் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை நிறுவப்பட்டு அதற்கு அறிஞர் சித்திலெப்பையின் சகோதரி முத்து நாச்சியார் ஆசிரியையாக கடமையாற்றினார். அத்தோடு மேலும் சில இடங்களிலும் பெண்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டு ஒத்துழைப்புகளை நல்கியவர் ஒராபி பாஷா. நாடு கடத்தப்பட்ட நிலையில், 1883 முதல் 1901 வரையான 18 வருடங்கள் இங்கு தங்கியிருந்த காலத்தில் இவர் இலங்கைக்கும் இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கும் அளித்துள்ள பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் 1983 இல் தபால் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
அதேநேரம் ஒராபி பாஷா இலங்கையின் மேம்பாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்புகள் குறித்து ஆராய்ந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூலில் அவர் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்புகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
எகிப்தின் ஆட்சியாளராக இரண்டாவது கதீவ் அப்பாஸ் பதவியேற்றதும் ஒராபி பாஷாவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு, தாயகம் திரும்பவும் அனுமதியளித்தார்.
அதற்கேற்ப ஒராபி பாஷா தமது 61 வயதில் அதாவது 1901 ஒக்டோபர் 01 ஆம் திகதி எகிப்து திரும்பினார். அதனைத் தொடர்ந்து 1911 செப்டம்பர் 21 ஆம் திகதி இறப்பெய்தும் வரையும் அவர் எகிப்திலேயே வாழ்ந்தார்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்தும் கூட, இந்நாட்டு மக்களின் கல்வி மறுமலர்ச்சிக்குப் பங்களிப்பு செய்து வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படும் மனிதர் என்ற அந்தஸ்தை ஒராபி பாஷா பெற்றுக் கொண்டுள்ளார்.
௮ல்லாஹும்ம இஃபிரலஹு வரஹம்ஹு
கழுகுகள் கற்றுத் தரும் பாடம்
குழந்தை வளர்ப்பு தொடர்பில் கழுகுகள் நமக்குக்கற்றுத் தரும் புதிய பாடம்...
திருமணமாக இருக்கும் ஆண் பெண்ணுக்கும்,
கணவன் மனைவிக்கும்,
தாய் தந்தைக்குமான செய்தி இது...
ஒரு பெண் கழுகு தன் குஞ்சுகளுக்கு தந்தையாக ஆண் கழுகை எப்படி தேர்ந்தெடுக்கின்றது என்பது தெரியுமா?
பெண் கழுகு குச்சியொன்றை எடுத்து உயரமாகப் பறந்து வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். அதைச் சுற்றி சில ஆண் கழுகுகள் ஒன்று சேரும்.
அப்போது பெண் கழுகு குச்சியை கீழே வீசும்.
ஆண் கழுகுகளோ குச்சி தரையில் விழுவதற்கு முன்பே அதைப் பிடிக்க முயலும். அதில் ஒரு கழுகு குச்சியை எடுத்து வந்து பெண் கழுகிடம் ஒப்படைக்கும்.
ஆனால் பெண் கழுகு குச்சியை மீண்டும் மீண்டும் கீழே எறியும். எந்த ஆண் கழுகு சோர்வடையாது குச்சியை தொடர்ந்தும் எடுத்து வருகின்றதோ அந்த ஆண் கழுகைத்தான் தனது ஜோடியாக தேர்ந்தெடுக்கும்.
அது ஏன் அப்படி செய்கின்றது? நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.
பின்னர் இரண்டு கழுகுகளும் தங்கள் கூட்டினை உயரமான இடத்தில் அமைக்கும். பொதுவாக வலுவான, கரடுமுரடான கிளைகளிலிருந்து கூடு கட்டப்படும்.
ஆனால் பெண் கழுகு முட்டையிடுவதற்கு முன்பு இரண்டு கழுகுகளும் தங்கள் உடலில் மென்மையான இறகுகளைப் பிடுங்கி கூட்டை சூழ வைத்து விடும். காரணம் குஞ்சுகள் பொரிக்கும் போது கூடு மென்மையாகவும் சூடாகவும் இருக்கும்.
குஞ்சு பொரித்த பிறகு இரண்டு கழுகுகளும் தங்கள் குஞ்சுகளை மழை,வெயிலில் இருந்து தங்கள் உடல் மற்றும் இறக்கைகளால் பாதுகாக்கும். குஞ்சுகள் வளரும் வரை உணவு கொண்டு வந்து கொடுக்கும்.
குஞ்சுகளின் இறகுகள் முழுமையாக வளர்ந்தவுடன் தந்தை கழுகு கூட்டின் விளிம்பில் அமர்ந்து, கூட்டை மூடியிருந்த அனைத்து இறகுகளையும் அகற்றிவிடும். அந்த வலுவான கரடுமுரடான கிளைகள் மட்டும் எஞ்சியிருக்கும்.
தாய் கழுகோ உணவு கொண்டுவர சென்று விடும். ஆனால் இந்த முறை எப்போதும் செய்தது போல் கூடுகளுக்கு உணவைக் கொண்டு வராது கூடு இருக்கும் இடத்தில் இருந்து சற்று தூரத்தில் நின்று தனியாக மிகவும் மெதுவாக சாப்பிடத் தொடங்கும். இது குஞ்சுகளின் பசியைத் தூண்டும். உடனே இளம் கழுகுகள் கூட்டில் இருந்து வெளியேறி பறந்து வர முயற்சிக்கும். ஆனால் குஞ்சுகளுக்கு பறக்க தெரியாததனால் கீழே விழுந்து விடும். இப்போதுதான் தந்தை கழுகின் வேலை வருகின்றது. கீழே விழும் குஞ்சுகளை தனது முதுகில் சுமந்து வந்து மீண்டும் கூட்டுக்குள் வைக்கும். மீண்டும் மீண்டும் குஞ்சுகள் தாயிடம் செல்ல முயற்சித்து கீழே விழும். தந்தை கழுகும் மீண்டும் மீண்டும் குஞ்சுகளை காப்பாற்றும்.
இவ்வாறுதான் சிறிய கழுகுகள் பறக்கக் கற்றுக் கொள்கின்றன.
இங்கிருந்து ஏன் பெண் கழுகு தன் குஞ்சுகளுக்காக தியாகம் செய்யும் ஆண் கழுகினை தந்தையாக தேர்வு செய்கின்றது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.
இதில் எமக்கு மிகப்பெரும் படிப்பினை உள்ளது.
பிள்ளைகள் வளர்ந்து வரும்போது அவர்களது வாழ்க்கையில் தைரியம், தன்னம்பிக்கை என்பவற்றை வழங்குவதுடன் சறுக்கி விழும்போதும், வழிதவறும் போதும் அவர்களை வழிப்படுத்தி ஆளாக்குவது தந்தையின் மீதுள்ள பாரிய பொறுப்பாகும்.













