எகிப்திலிருந்து நாடு கடத்தப்பட்டு 1883 ஜனவரி 10 ஆம் திகதி அஹ்மட் ஒராபி பாஷாவும் அவருடன் இருந்தவர்களும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தனர். அவர்களை அறிஞர் சித்தி லெப்பை, வாப்புச்சி மரிக்கார் உள்ளிட்ட பலரும் துறைமுகத்திற்குச் சென்று வரவேற்றனர்.
எகிப்தின் தலைநகருக்கு 80 கிலோ மீற்றர்தூரத்தில் அமைந்திருக்கும் சகசிக் கிராமத்தில் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் 1841 மார்ச் 31 ஆம் திகதி பிறந்த அஹமட் ஒராபி பாஷா ஆரம்பக் கல்வியை கிராமப் பாடசாலையில் நிறைவு செய்ததோடு, 1849 இல் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இணைந்து இடைநிலை மற்றும் உயர்கல்வியை நிறைவு செய்தார். அதேநேரம் 20 வயது இளைஞனாக இருக்கும் போது இராணுவத்தில் இணைந்த இவர், தம் திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தியதன் பயனாக குறுகிய காலத்தில் லெப்டினன்டாகப் பதவி உயர்வு பெற்றார்.
என்றாலும் இவர் தலைமையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 1882 இல் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக இவரும் இவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் கைது செய்யப்பட்டு கடும் பாதுகாப்புடன் 1882.12.28 இல் எஸ்.எஸ்.மரியட்ஸ் என்ற கப்பலில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இவர்கள் இலங்கையை வந்தடைந்த சமயம் இந்நாடும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டே இருந்தது. ஆனால் இவரது நலன்களில் அன்றைய பிரித்தானிய பாராளுமன்றம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அதனால் இந்நாட்டுக்கான பிரித்தானிய ஆளுநர் அவரை நன்கு உபசரித்தார்.
இலங்கையை வந்தடைந்த ஒராபி பாஷாவும் அவருடன் இருந்தவர்களும் தற்போது லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்திருக்கும் இடத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அறிஞர் சித்தி லெப்பை, ஓராபி பாஷாவுடன் நட்புறவைப் பேணலானார். இதன் பயனாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொடுக்கும் சித்தி லெப்பையின் முயற்சிகளுக்கு ஒராபி பாஷா பக்கபலமானார். இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு பங்களிப்பதில் ஒராபி பாஷாவும் ஆர்வம் காட்டினார்.
இந்த நிலையில் நவீன கல்வியை முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் அவசியத்தை உணர்ந்த சித்திலெப்பை, ஒராபி பாஷா போன்றோர் இணைந்து, 'முஸ்லிம் கல்விச் சங்கம்' என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கி கல்வி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன் பயனாக அறபு மொழி, இஸ்லாமிய மார்க்கக் கல்வியுடன் மேல்நாட்டுக் கல்வியையும் கற்பிக்கும் நோக்கில் கொழும்பு சோனகத் தெருவில் சித்தி லெப்பையினால், 'அல்மத்ரஸதுல் கைரிய்யதுல் இஸ்லாமிய்யா' எனும் பெயரில் முதலாவது பாடசாலை 1884 இல் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை பின்னர் ஹமீதிய்யா ஆங்கிலப் பாடசாலை என மாற்றம் பெற்றது.
இந்தப் பாடசாலையை ஆரம்பிப்பதற்காக ஒராபி பாஷா ரூ. 100.00 ஐ அன்று அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதே பாடசாலைதான் தற்போது ஹமீத் அல் ஹுஸைனி பாடசாலையாக விளங்குகிறது. இதன் பின்னர்தான் அல்மத்ரஸத்துல் ஸாஹிரா என்னும் தற்போதைய கொழும்பு ஸாஹிராக் கல்லூரி 1892.08.22 இல் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் அங்குரார்ப்பணக் கூடத்திற்கும் ஒராபி பாஷா தலைமை தாங்கியுள்ளார்.
இவர் இலங்கையில் தங்கியிருந்த காலம் முழுவதும் ஸாஹிராக் கல்லூரிக்கு அடிக்கடி விஜயம் செய்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமூட்டினார்.
அதேநேரம் கண்டிக்கு விஜயம் செய்த ஒராபி பாஷா அங்கும் சித்தி லெப்பையுடன் இணைந்து முஸ்லிம்களின் கல்விக்கு ஊக்கமளித்தார். இந்நிலையில் கண்டியில் முதல் முஸ்லிம் பெண்கள் பாடசாலை நிறுவப்பட்டு அதற்கு அறிஞர் சித்திலெப்பையின் சகோதரி முத்து நாச்சியார் ஆசிரியையாக கடமையாற்றினார். அத்தோடு மேலும் சில இடங்களிலும் பெண்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டு ஒத்துழைப்புகளை நல்கியவர் ஒராபி பாஷா. நாடு கடத்தப்பட்ட நிலையில், 1883 முதல் 1901 வரையான 18 வருடங்கள் இங்கு தங்கியிருந்த காலத்தில் இவர் இலங்கைக்கும் இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கும் அளித்துள்ள பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் 1983 இல் தபால் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.
அதேநேரம் ஒராபி பாஷா இலங்கையின் மேம்பாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்புகள் குறித்து ஆராய்ந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். அந்நூலில் அவர் முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டுக்கு அளித்துள்ள பங்களிப்புகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
எகிப்தின் ஆட்சியாளராக இரண்டாவது கதீவ் அப்பாஸ் பதவியேற்றதும் ஒராபி பாஷாவுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டதோடு, தாயகம் திரும்பவும் அனுமதியளித்தார்.
அதற்கேற்ப ஒராபி பாஷா தமது 61 வயதில் அதாவது 1901 ஒக்டோபர் 01 ஆம் திகதி எகிப்து திரும்பினார். அதனைத் தொடர்ந்து 1911 செப்டம்பர் 21 ஆம் திகதி இறப்பெய்தும் வரையும் அவர் எகிப்திலேயே வாழ்ந்தார்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்தும் கூட, இந்நாட்டு மக்களின் கல்வி மறுமலர்ச்சிக்குப் பங்களிப்பு செய்து வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படும் மனிதர் என்ற அந்தஸ்தை ஒராபி பாஷா பெற்றுக் கொண்டுள்ளார்.
௮ல்லாஹும்ம இஃபிரலஹு வரஹம்ஹு