السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Tuesday 18 August 2015

முத்தவல்லிக்கு வந்ததே கோபம் …!



இன்று இறையில்லங்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை எண்ணிப் பார்க்கும்போது வருந்தாமல் இருக்க முடியாது.
அரபிக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது நகைச்சுவையாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். அது சிரிப்புக்குரிய நிகழ்ச்சியாக மட்டுமல்ல, சிந்தனைக்குரியதாகவும் விளங்கியது.
வெளியூர் பயணி ஒருவர் பள்ளிவாசலுக்குத் தொழ வந்தாராம். தொழுது முடித்ததும் தாம் கொண்டு வந்த பையை மறதியாக வைத்துவிட்டுப் போய்விட்டார். சிறிதுநேரம் கழித்து நினைவு வந்தவராக வேகமாகப் பள்ளிக்குத் திரும்பி வந்து பார்த்தார். பையைக் காணவில்லை. பக்கத்தில்தான் முத்தவல்லியின் (பள்ளிவாசல் தலைமை நிர்வாகியின்) வீடு. அவருடைய வீட்டிற்குச் சென்று நிலைமையை விளக்கி பையைப் பார்த்தீர்களா? என்று விசாரித்தார் அந்தப் பயணி.
முத்தவல்லிக்கு வந்ததே கோபம் …! பயணிக்கு பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே இருந்த மனைவியை அழைத்தார்.
“அடியே ! நான் எத்தனை வருஷமா இந்த பள்ளிக்கு முத்தவல்லியா இருக்கேன்?” “பத்துப் பதினைஞ்சு வருஷமா இருக்கீங்க. அதுக்கென்ன இப்போ…?” “இந்தப் பத்துப் பதினைஞ்சு வருஷத்தில் ஒரு முறையாவது நான் பள்ளிவாசலுக்குப் போய் நீ பார்த்திருக்கிறாயா?”
“அந்தப் பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கலியே !”
இப்பொழுது முத்தவல்லி பயணியின் பக்கம் திரும்பி ஒரு பார்வை பார்த்தார். அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பயணி அமைதியாகத் திரும்பி விட்டாராம்.
இந்த நிகழ்ச்சி நகைச்சுவையை மட்டுமல்ல, நடைமுறையையும் எடுத்துக்காட்டுகிறதல்லவா?
காதர்