கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் பேரால் இட்டுக்கட்டப்படும் அபாண்டங்கள்.
➖➖➖➖➖➖➖➖➖➖
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ்,
மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி,
பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
➖➖➖➖➖➖➖➖
கௌதுலுல் அஃழம் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்களுடைய பெயரால் சில முட்டாள்கள் பல கறாமத்துகளை அவிழ்த்து விட்டுள்ளனர், இவற்றை காலாகாலம் மக்களுடைய பேச்சில் எவ்வித பகுப்பாய்வுமில்லாமல் பேசப்பட்டும் பரப்பப்படும் வருகிறது
குத்துபுல் அக்தாத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் சையதுனா இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அர்வாஹுகள் இருந்த கூடையிலிருந்து ஒரு றூஹை பிடுங்கி எடுத்தார்கள் என்பதும் அவற்றில் ஒன்றாகும்.
இந்த சம்பவம் அறிவில்லாத சில ஆலிம்களாலும் அவர்களை நம்பி பின்பற்றுகின்ற பலராலும் காலாகாலம் பேசப்பட்டு வருகின்றது, இதற்கு எவ்வித ஆதாரத்தையும் தக்க நூல்களிலிருந்து இவ்வாறு கூறுவோர் இதுவரை முன்வைத்ததில்லை.
இந்த சம்பவம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எவ்வகையிலும் ஒவ்வாத முட்டாள்தனமான கூற்று என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத்தின் ஹிஜ்ரி 14-ம் நூற்றாண்டின் முஜத்தித் என்றும், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம் என்றும் போற்றப்படுகின்ற அஃலா ஹஜரத் இமாம் அஹ்மது றிழா கான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் மேற்படி சம்பவம் பற்றி ஒருவர் கேள்வி கேட்டதற்கு பின்வருமாறு பதில் கூறியுள்ளார்கள்.
ڑنجبیل ارواح چین لینا خرافات مخترعہ جہال سے ہے سیدنا عزرائیل علیہ الصلوۃ السلام رسول ملائکہ سے ہے اور رسل ملائکہ اولیا بشر سے بالاجماع افضل تو مسلمانوں کو ایسے اباطیل واہیہ سے احتراز لازم واللہ الہادی الی سبیل الرشاد
فتاوی رضوی
418-419- 28
றூஹுகளின் கூடையிலிருந்து றூஹுகளை பிடுங்கி எடுப்பது மூடநம்பிக்கைகளை இட்டுக் கட்டும் மூடர்களின் வேலையாகும்,
மேலும் மலக்குகளிலுள்ள தூதர்கள் மனிதர்களிலுள்ள வலிமார்களை விட இஜ்மாஃவின்படி சிறப்பானவர்கள், எனவே,
இப்படியான கவைக்குதவாத வீணான கதைகளிலிருந்து முஸ்லிம்கள் தவிர்ந்திருப்பது அவசியமாகும்.
அல்லாஹ் நேரிய வழியில் வழிகாட்டுகின்றான்.
ஆதாரம்: பதாவா றிஸ்வியா
பாகம்:28, பக்கம் 418-19
உண்மை இவ்வாறு தெளிவாக இருக்க எவ்வித ஆதாரமும் இல்லாமல் அடிப்படையான விளக்கமுமில்லாமல் கதைகளை கட்டுவதும், அதை நம்பி மற்றவர்களை குறை கூறுவதும், அவர்களுக்கு வழி கேட்டு பட்டம் சூட்டுவதும் கண்டிக்கத்தக்கது.
மார்க்கத்தில் கருத்து வேறுபாடுள்ள கிளைச்சட்டங்களிலும், வரலாற்று நிகழ்வுகளிலும் ஒருபோதும் வழிகேடு வருவதில்லை.
அகீதாவில் திட்டவட்டமான விடயங்களில் மாறுபாடுபடும் பொழுது தான் வழிகேடு வரும் வழிகேடு எது என்பதனை மார்க்க அறிவில்லாதவர்கள் தீர்மானிக்கின்ற ஒரு விடயம் அல்ல!
கற்றறிந்த பெரும் மேதைகள் கூட இது விடயத்தில் தனது இயலாமையை விளங்கி ஒதுங்கி இருப்பதைத்தான் வரலாற்றில் பார்க்கிறோம்.
ஆனால் இப்பொழுது மார்க்கத்தில் அனுபவமோ அறிவோ இல்லாத சில மூட கூட்டங்கள் மார்க்கத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர், இவ்வாறு மார்க்கத்தை மூடர்கள் கையிலெடுப்பது இறுதி நாளின் அடையாளம் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்,
ஆகவே, இவ்வாறான வீண் விளையாட்டில் இறங்கி மார்க்கத்தை பொழுது போக்காக்கி அறிவில்லாமல் வழிகேட்டு முத்திரை குத்தி தன்னை வழிகேட்டிலாக்கிக் கொள்ளாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.