கண்ணியம், கௌரவம் வழங்குவதில் சஹாபாக்களின் நடைமுறை
=========✍️=========
அரபு மூலம் : அஷ்ஷிபா
இமாம், காழி இயாழ்
றஹ்மத்துள்ளாஹிஅலைஹி
தமிழில் : தொடர் : [6]
கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு
ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி.
==================
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு கண்ணியம், கௌரவம்; மகத்துவம் வழங்குவதில் ஸஹாபாக்களின் வழக்கத்தை விளக்கும் ஹதீஸ்கள் அடியில் வருகின்றன,
ஹளறத் அம்றுப்னு ஆஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை மிகைத்த ஒரு நேசர் எனக்கு எவருமே இல்லை, அன்னாரை விட மகத்தான ஒருவர் என் கண்ணில் படவுமில்லை; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் மாட்சிமையின் காரணத்தால், நிறைந்த கண்ணால் அன்னாரை என்னால் பார்க்க முடியவில்லை; அன்னாரை வர்ணித்துக் கூறுமாறு எவராவது என்னிடத்தில் வேண்டிக் கொண்டால், அது என்னால் முடியாது! ஏனெனில், அன்னாரை நான் கண்ணிறையப் பார்க்கவில்லை என்று கூறினார்கள்.
ஸஹி முஸ்லிம் கிதாபுல் ஈமான் பாகம் 1 பக் 112
ஹளறத் அனஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு கூறுகின்றார்கள்,
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (வீட்டிலிருந்து) ஸஹாபாக்களில் முஹாஜிர்கள், அன்சாரிகள் இருக்கும் சபைக்குள் வந்தார்கள்; அச்சபையில் ஹளரத் அபூபக்கர், ஹளறத் உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்களும் கூடவே இருந்தார்கள்; இவ்விருவரையும் தவிர்த்து வேறு எவரும் கண்ணியத்தின் காரணமாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்கவில்லை. இவர்கள் இருவரும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவ்விருவரையும் பார்த்தார்கள்; இருவரும் பரஸ்பரம் முறுவலித்துக் கொண்டார்கள்.
சுனன் திர்மிதி கிதாபுல் மனாகிப் பாகம் 5 பக்கம் 273
ஹளறத் உஸாமா பின் ஷரீக் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களிடம் வந்தேன், அன்னாரைச் சூழ ஸஹாபாக்கள் இருந்தார்கள்; அவர்கள் தலைக்கு மேல் பறவைகள் இருப்பது போன்று இருந்தது,.
சுனன் அபூதாவூத் கிதாபுத் திப்பு பாகம் -4 பக்கம் -192 ,193.
இன்னும், றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் பண்பின் விடயத்தில் பின்வரும் ஹதீதும் இடம் பெறுகின்றது,
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசினால், ஸஹாபாக்கள் தங்களின் தலையை கவிழ்த்திருப்பார்கள்; அவர்களின் தலைக்கு மேல் பறவைகள் இருப்பது போன்றிருக்கும்.
ஹளறத் உர்வத் இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
நான் (ஹுதைபியா உடன்படிக்கையின் போது) குறைஷிகளின் தலைப்பிலிருந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த போது, ஸஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு அதி உச்ச மரியாதை செய்வதை ப்பார்த்தேன், அன்னார் வுழுச் செய்தால், எஞ்சிய நீரைப் பெற்றுக் கொள்வதற்காக விரைகின்றார்கள்; வுழுச் செய்து எஞ்சிய நீரை அல்லது உறுப்புக்களிலிருந்து கொட்டுகின்ற சொட்டு நீரைப் பெற்றுக் கொள்வதற்கு சண்டை போடக்கூடிய அளவு நெருக்கமாகின்றனர்; அன்னார் உமிழ்ந்தால், அல்லது, மூக்குச்சீறினால், விரைவாக அதை கையில் தாங்கி தங்களின் முகத்திலும், உடலிலும் தேய்த்துக் கொள்கிறார்கள்; அன்னாரின் திருமேனியிலிருந்து ஏதும் ஒரு முடி உதிர்ந்தால், விரைந்து சென்று அதை பெற்றுக் கொள்கின்றார்கள்; ஏதும் ஒரு கட்டளையிட்டால், விரைந்து அதை செயல்படுத்துகின்றார்கள்; பேசும்போது அன்னார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் தங்களின் சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கின்றார்கள்; மரியாதையின் நிமித்தம் அன்னாரின் திருமுகத்தை உற்று நோக்காதிருக்கின்றனர்;
குறைஷிகள் பக்கம் இவர் திரும்பிச் சென்ற போது குறைஷிகளே! நான் பாரசீக மன்னன் கிஸ்ராவிடம் சென்று இருக்கிறேன், இன்னும், நான் ரோம் நாட்டு அரசர் கைசரிடமும் சென்றிருக்கிறேன்; இன்னும், அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷியிடமும் சென்றிருக்கின்றேன்; இறைவன் மீது ஆணையாக! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் அவருக்குச் செய்யும் கண்ணியத்தை ஒத்த கண்ணியத்தை எந்த ஒரு அரசவையிலும் நான் கண்டதில்லை; அவரை ஒருபோதும் கைவிடாத; துரோகமிளைக்காத சமுகத்தையே திட்டமாக நான் கண்டேன் என்று கூறினார்.
ஸஹீஹுல் புகாரி : கிதாபுஸ்ஸுறூத் பாகம் 3 பக்கம் 171
ஹளறத் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்,
(ஹஜ்காலத்தில் மினாவில்) ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் முடி மழிக்கப்படும் போது ஸஹாபாக்கள் அங்குமிங்கும் வட்டமிட்டு கொண்டிருப்பதை கண்டேன், ஒவ்வொருவரும் நபிகளாரின் திருமுடி பூமியில் விழாது எவராவது ஒருவரின் கரத்தில் விழவேண்டும் என்று நாடினார்கள்;
ஸஹி முஸ்லிம்: கிதாபுல்
பழாயில் பாகம் 3 பக்கம் 1812
இத்தொடரில் இப்படியும் ஒரு நிகழ்வு இருக்கிறது,
ஹளறத் உதுமான் இப்னு அப்பான் ரலியல்லாஹு தஆலா அன்ஹுவை ஹுதைபியாக் காலத்தில் மக்காவுக்கு அனுப்பிய போது, ஹளறத் உதுமான் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கஃபாவை தவாபு செய்வதற்கு குறைஷிகள் அனுமதித்தார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தவாபு செய்யும் வரை நான் ஒருபோதும் தவாஃப் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள்.
தலாயிலுன் நுபுவ்வத் பைஹகி பாகம் 4 பக்கம் 135
ஹளறத் தல்ஹா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது,
ஸஹாபாக்களில் அறிவு குறைந்த ஓர் அஃராபியிடம் இந்த ஆண்களில் தங்களுடைய நேர்ச்சையை நிறைவேற்றிக் கொண்டவர்கள் யார்? என்று றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்குமாறு கூறினார்கள், ஏனெனில், ஸஹாபாக்கள் உச்ச மரியாதையின் காரணமாக அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேள்வி கேட்க அஞ்சிக் கொண்டிருந்தார்கள்; அந்த அஃராபி அதனை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதற்கு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதில் கூறாமல் அதை புறக்கணித்து விட்டார்கள்; இதற்குள் ஹளரத் அபூ தல்ஹா ரலியல்லாஹு தஆலா அன்ஹு அங்கே வந்தார்கள்; அந்த நேரத்தில் இதோ இவரும் நேர்சையை நிறைவேற்றியவர்களுள் ஒருவர் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
சுனன் திர்மிதி : கிதாபுல் மனாகிப் பாகம் 5 பக்கம் 308,309
ஹளறத் கைலா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீதில் பின்வருமாறு உள்ளது,
இரு தொடைகளையும் வயிற்றில் சேர்த்து இரு கையாலும் இரு கால்களையும் பின்னிக்கொண்டு இருந்த நிலையில் நான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்தேன், அன்னாரின் மகத்துவத்தின் காரணமாக எனக்கு நடுக்கம் ஏற்பட்டது.
ஹளறத் முஙீறா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீதில் பின்வருமாறு வருகின்றது,
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் அண்ணார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசல் கதவை நகத்தால் தட்டுவார்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதையாவது கேட்கலாம் என்று இருந்தாலும் அச்சத்தின் காரணமாக பல வருடங்கள் அதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று ஹளறத் பர்ராஉ இப்னு ஆஸிப் றழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.
உலூமுல் ஹதீது : பக்கம் 198