السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Friday, 22 November 2024

மஹப்பத்தின் பொருளும், அதன் எதார்த்தமும் (8)

 

மஹப்பத்தின் பொருளும், அதன் எதார்த்தமும்

=========✍️=========

அரபு மூலம் : அஷ்ஷிபா

இமாம், காழி இயாழ்

றஹ்மத்துள்ளாஹிஅலைஹி

     தமிழில் : தொடர் : [8]

கலீபத்துல் காதிரி, அல்ஹாஜ், மௌலவி பாஸில் ஷெய்கு   

  ஏ.எல்.பதுறுத்தீன் ஷர்கி, பரேலவி, ஸூபி, நக்ஷ்பந்தி. 

==================

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களை நேசிப்பதன் பொருள், அதன் எதார்த்தம் பற்றிய விளக்கத்திலும்; அல்லாஹுத்த ஆலாவை மஹப்பத் வைப்பது இன்னும், அவனுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மஹப்பத் வைப்பதற்கான விளக்கம் (தப்ஸீர்) என்ன? என்பதிலும் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன;


இதுதொடர்பான அவர்களின் சொற்றொடர்கள் அதிகம் இருக்கின்றன, ஆயினும், எதார்த்தமான கூற்றுக்களில் கருத்து வேறுபாடு இல்லை, நிலைகளிலும், விதங்களிலும் நிச்சயமாக கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன;


"மஹபத்" என்பது, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதற்குரிய பெயர் என்று ஹளறத் சுப்யானுத்தௌரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள், இவர்களின் இக் கூற்று அல்லாஹுத்தஆலாவின் பின்வரும் கூற்றைத் தழுவியது போன்றுள்ளது.


قل ان كنتم تحبون الله فا تبعوني يحببكم الله  


நேசரே கூறுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்வதாயின், என்னை பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்வான். 3-31 


நபிகள் நாயகம் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பதன் பொருள், அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை புரிவதை கடமையாக்கி கொள்வதாகும், இன்னும், சுன்னத்திற்கு எதிரானவர்களை அழிப்பது, சுன்னத்தைப் பின்பற்றுவது, சுன்னத்திற்கு எதிரானதை அஞ்சுவது என்று சில அறிஞர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


நேசரைப் பற்றி எப்போதும் நினைவு கூறிக் கொண்டே இருப்பதற்குரிய பெயர் தான் "முஹப்பத்" என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர், நேசரின் மீது உயிரை அர்ப்பணம் செய்வது தான் "மஹபத்" என்றும், நேசரிடம் வைத்துக் கொள்ளும் காதலுக்கான பெயர் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.


 மற்றும் சிலர் மஹபத் என்பது மனதால் ரப்பின் நோக்கத்திற்கு நேர்பாடான செயலைச் செய்வது; அதாவது, அவன் விரும்புவதை விரும்புவது, அவன் வெறுப்பதை வெறுப்பது என்கின்றனர், நேசரின் விருப்பத்திற்கு நேர்பாடானதின் பக்கமாக மனம் சாய்வதற்குரிய பெயர் என்று வேறு சிலர் கூறுகின்றனர்;


மேற்கூறப்பட்ட அதிகமான சொற்றொடர்கள் மஹப்பத்தின் பலனைப் பற்றி சுட்டிக்காட்டுகின்றதேயன்றி, அதன் எதார்த்தத்தின் பக்கமாக சுட்டிக் காட்டவில்லை.


மஹப்பத்தின் எதார்த்தம் ஒரு மனிதனின் இயல்புக்கு நேர்ப்பாடானதில் அவரின் மனம் ஈர்க்கப்படுவதைக் குறிக்கும், அவரின் பக்கம் மனம் ஈர்க்கப்படுவதை அடைந்து கொள்வதன் மூலம் இன்பம் கிடைக்கும், அழகிய வண்ணமான கோலங்களை பார்ப்பதைப் போன்று, இனிய இராகங்களைக் கேட்பது போன்று, சுவையான ஊண், குடிப்புகளைச் சுவைப்பது போன்று ஒவ்வொரு ஆரோக்கியமான சுபாவமும் அதற்கு நேர்பாடானதில் ஈர்க்கப்படுகின்றது.


அல்லது, புத்தியின் அகப்புலன்களால் மனதிலுள்ள அதியுயர் கருத்துக்களை கிரகிப்பதன் மூலம் அந்த ஆனந்தத்தைப் பெற்றுக்கொள்கின்றது. உலமாக்கள், ஸாலிஹீன்கள், ஆரிபீன்கள் உள்ளிட்டவர்களை நேசிப்பதில் கிடைக்கும் இன்பத்தைப்போல், இவர்களின் வாழ்க்கை புனிதமானது, சிறப்பானது என்பது பிரசித்தி பெற்றது, இவர்களின் செயல்கள் விரும்பத்தக்கது,


 ஏனெனில், இந்த விடயத்தில் பூரணமான மனிதனின் சுபாவம் இந்த கருமங்களின் பக்கமே சாய்ந்திருக்கின்றது, எதுவரையெனில், ஒரு கூட்டத்தின் மீதுள்ள நேசத்தின் காரணமாக மற்றும் ஒரு கூட்டத்தின் துவேஷம், பிரிவினை வந்து சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, இன்னும், ஒரு கூட்டத்தைப் பாதுகாப்பதன் மூலம் அடுத்தவர்களின் உரிமைகளை எல்லை தாண்டுவதுமுண்டு; அதாவது, அவரின் நேசத்தினால் நாடு துறப்பு, மானபங்கம் ஏற்படுவது, உயிரிழப்பு சேதம் ஏற்படுவது உள்ளிட்டுவை நடப்பதுமுண்டு.


அல்லது, அவரின் நேசம் அவரின் (மன இச்சையைச் சாய்ந்து) அவரின் சுயநலத்திற்காகவே இருக்கும், அதாவது, அவரின் உபகாரம் உதவிகள் உள்ளிட்டவை காரணமாக அவரின் சுபாவம் அவருக்கு நேர்பட்டதாக ஆகிவிடும், ஏனெனில், மனித சுபாவங்கள் தனக்கு உபகாரம் செய்தவருக்கு நேர்பட்டதாகவும், அவரை நேசிக்கக் கூடியதாகுமே படைக்கப்பட்டுள்ளது.


இந்த எதார்த்தத்தை நீ புரிந்து கொண்டிராயின், இந்த அழகிய கோலங்கள், கருத்தியல் பூரணங்கள், கடமைப்பட்ட உபகாரங்கள் உள்ளிட்ட நேசத்திற்கான காரணங்களின் கண்ணோட்டத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விடயத்தில் கூர்ந்து சிந்தனை செய்து பாருங்கள்!


 ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கருத்தியல் ரீதியான இம்முன்று காரணங்களிலும் நேசம் வைப்பதற்குரிய தகுதியின் மொத்த சேகரமாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் கசடறத் தெரிந்து கொள்வீர்கள்!


 அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பூரணம், நற்குணங்கள், அகவியல் சிறப்புக்கள் பற்றி முதல் பாகத்தில் மேலதிகமான எந்த விளக்கத்திற்கும் தேவையில்லாத விதத்தில் மிகத் தெளிவாக விளக்கம் கூறியுள்ளோம்.  


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தங்களுடைய உம்மத்தின் மீது சொரிந்த உபகாரங்கள், அருள்பாலிப்புக்கள் உள்ளிட்டவை முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, அல்லாஹ் தன்னுடைய அழகிய பண்புகளிருந்து இரக்கத்தையும், கருணையையும் அன்னாருக்கு வழங்கி, அதன் மூலம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மத்தின் மீது இரக்கமாயிருந்ததும், அவர்களுக்கு அருள் பாலித்ததும், அவற்றின் மூலமாக எவ்வாறு அவர்களின் நல்வழிப்படுத்தினார்கள்; எவ்வாறு அவர்கள் மீது பரிவு காட்டினார்கள்; அவர்களின் காரணமாக அவர்களை நரகத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதெல்லாம் முன்னர் கூறப்பட்டுள்ளன.


ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களோடு இரக்கமாகவும் (ற ஊபாகவும்) கருணையாகும் (றஹீமாகவும்) இருப்பதோடு அகிலங்களுக்கு அருள் பாலிப்பவராகவும் (றஹ்மதுன் லில் ஆலமீனாகவும்) இருக்கின்றார்கள், அன்னார் நற்செய்தி கூறுபவர்(பஷீர்)ஆகவும்; அச்சமூட்டி எச்சரிப்பவர் (நதீர்) ஆகவும், அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனின் பக்கமாக அழைப்பவராகவும் இருக்கின்றார்கள், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத் 

தஆலாவின் திருவசனங்களை ஓதி காண்பித்தார்கள், அவர்களை பரிசுத்தப்படுத்தினார்கள், இன்னும், அவர்களுக்கு வேதத்தையும், ஹிக்மத்தையும் கற்றுக் கொடுத்தார்கள்; அல்லாஹ்வின் திரு சன்னிதானத்தின் பக்கம் சேர்த்து வைக்கும் நேரிய வழியில் (ஸிராத்துல் முஸ்தகீமில்) வழி காட்டினார்கள்; இன்னும், இதுவல்லாத்தையும் புரிந்தார்கள் என்பதெல்லாம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன.


 ‌எனவே, முஸ்லிம்களுக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபகாரத்தை மிகைத்த சிறப்பும், கண்ணியமான உபகாரத்தையும் விட வேறு உபகாரம் வேறு என்னதான் இருக்கிறது? பிரயோஜனம் என்ற ரீதியில் அனைத்து முஸ்லிம்களிலும் பரவலாக அதிகம் காணப்படும் றஸூலுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபகாரத்தை மிகைத்த ஒன்று வேறு என்ன இருக்கின்றது?


 ஏனெனில், அவர்கள்தான் அவர்களின் நல்வழிக்கான வழியாக விளங்கினார்கள், அறியாமை என்ற வழிகேட்டிலிருந்து அவர்களை அவர்கள்தான் வெளியேற்றினார்கள், அண்ணலார் தான் இருலோகத்தின் கண்ணியமான வெற்றியின் பக்கமாக அழைப்பவர்களாக இருந்தார்கள்; தங்களுடைய றப்பின் நெருக்கத்திற்கு இடை துணையாகவும், பரிந்துரை செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள், இன்னும், அவர்கள் தரப்பிலிருந்து றப்பிடம் பேசுகின்றவர்களாகவும் உள்ளார்கள், அன்னார் தான் அவர்களுக்கான சாட்சியாகும், அவர்களின் நிரந்தரமான நிலைப்பாட்டிற்கும், முடிவில்லாத அருட்பாக்கியத்திற்கும் காரணமானவர்கள்.


ஸஹீஹான ஹதீதுகளில் நாம் ஏற்கனவே கூறியது போன்று ஷரியத்தின் அடிப்படையில் எதார்த்தமாக நேசம் வைப்பதற்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் தகுதி மிக்கவர்கள் என்பது இப்போது உங்களுக்கு திட்டவட்டமாக தெரிய வந்திருக்கும், நாம் இப்போது கூறியது போன்று வழக்கம், இயல்பு என்று அடிப்படையில் கூட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் தான் நேசம் வைப்பதற்கு தகுதியானவர்கள் என்பதும் புரிந்து இருக்கும்; ஏனெனில், அன்னாரின் உபகாரங்கள் பொதுமையானதாகும்; இவ்வுலகில் ஒரு விடுத்தம் அல்லது இருவிடுத்தம் உபகாரம் செய்த மனிதனை சொற்பமான காலத்தில் துன்பம் விளைவிக்கும் அழிவிலிருந்தும், குறைந்த வேளையில் தடைபடும் நஷ்டத்திலிருந்தும் பாதுகாப்பவராக இருந்தால், அவரை மனிதன் இயல்பாகவே நேசிக்கின்றார்; இதற்கு முற்றிலும் மாற்றமாக ஒருபோதும் முற்றுபெறாத அருட்பாக்கியங்களை அள்ளிச்செரிப்பவர், ஒருபோதும் அழிந்து போகாத நரகத்தின் வேதனையிலிருந்து பாதுகாப்பவர்தான் நேசம் வைப்பதற்கு மிக்க தகுதியானவர்ளாகும்.


நல்ல பண்புகளைக் கொண்டுள்ள அரசரை, அல்லது நன்நடத்தையில் பிரபலமான அதிகாரியை; அல்லது தூரத்திலிருக்கும் அறிவிலும், நற்குணத்திலும் பெயர் பெற்ற காழியை இயல்பாகவே மனிதன் நேசிக்கிறான்; அப்படியாயின், இந்த நற்குணங்கள் யாவும் சாயுச்சிய நிலையில் கொலு வீற்றிருக்கும் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அதிகமதிகம் நேசம் வைப்பதற்கு தகுதி மிக்கவர்களாகும்; சுபாவம் அவர்களில் தான் ஈர்க்கப்படுகிறது, 


எந்த ஒரு நபரும் அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சடுதியாகக் கண்டால், திடுக்கிடுவார், அண்ணாரை நன்கு அறிந்து பழகியவர் பார்த்தாராயின், அண்ணாரை நேசிப்பார் என்று அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் திட்டவட்டமாக கூறினார்கள்; அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக சில ஸஹாபாக்கள் பார்வையை அன்னாரின் பக்கமாக திருப்புவதில்லை என்பதை ஏற்கனவே நாம் கூறியுள்ளோம்.