السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Saturday, 9 November 2024

இலங்கையில் தரீக்காக்களின் வளர்ச்சி

 



#இலங்கையில் #தரீக்காக்கள் ஆற்றிய பணிகள் மௌலவி MTM. அரீழ் (பாரி) - வெலிகாமம்


இலங்கைத் திருநாட்டிற்கு தரீக்காக்களின் செய்குமார்கள் வருகைதர முன்னரே இங்குள்ள முஸ்லிம்கள் தரீக்காக்கள் மீது பற்றும் செய்குமார்கள் மீது மதிப்பும், மரியாதையும் உடையோராகவும் விசேடமாக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதிர் அல்ஜீலானி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் மீது பேரன்பும் பெரு மதிப்பும் வைத்தோராகவும் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்க்கு இந் நாட்டின் நலா புறங்களிலும் காணப்படும் மஸ்ஜித்கள் சான்றுகளாய் விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.


அழியாத நாமம்


சன்மார்க்கத்திற்கு உயிரூட்டியவர் என்ற அர்த்தத்தைப் பொதிந்த முஹ்யித்தீன் என்ற திருப் பெயரால் அழைக்கப்படும் பள்ளிவாசல்கள் இம்மண்ணிலே நிலைத்திருக்கும் காலம் முழுவதும் அப்பெயருக்குச் சொந்தக்காரரான அஷ்ஷெயகு அப்துல் காதிர் அல்ஜீலானீ (கத்தஸல்லாஹி ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களையும் அவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட காதிரிய்யா தரீக்காவையும் மக்களின் உள்ளங்களிலிருந்து அகற்றுவது சாத்தியமற்றது எனக் கூறும் அளவுக்கு முஹ்யித்தீன் மஸ்ஜித்கள் நிறைந்து காணப்படுகின்றன.


உதாரணத்திற்கு மூன்று மாவட்டங்களை இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.


புத்தளம் மாவட்டத்திலுள்ள த்திலுள்ள மஸ்ஜித்களில் 32 மஸ்ஜித்கள் முஹ்யித்தீன் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றன. அங்குள்ள புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு, திகழி, கொத்தாந்தீவு, முதலைப்பாளி, நல்லான் தழலை, ஆலங்குடா. கரம்பை, பெருக்கு வட்டான் என எல்லா ஊர்களிலுமுள்ள பள்ளிவாசல்களை முஹ்யித்தீன் மஸ்ஜித் என்றே அழைக்கிறார்கள். மேலும் கி.பி. 1434ல் புத்தளத்தில் முஹ்யித்தீன் ஆண்டகை தர்கா நிர்மாணிக்கப்பட்டது.


(நூல் :- புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் வரலாறு)


மேற்படி தகவல் மூலம் இன்றைக்குச் சுமார் 575 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் குத்பு நாயகத்தின் அபிமானிகளாக இருந்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்கிறோம்.


இவ்வாறே மாத்தறை மாவட்டத்தில் மாத்தரை டவுண், வலஸ்முள்ள, யகஸ் முள்ள, மீயல்ல, திக்வெல்ல, வெலிகம, வெலிப்பிட்டி, பாலத்தடி, கப்புவத்தை, தங்கல்ல, போர்வை ஜும்ஆ மஸ்ஜித்கள் அனைத்துமே முஹ்யித்தின் மஸ்ஜித்என்றே அழைக்கப்படுகின்றன. (நூல்:- அஸ்ஸிராஜ் இதழ்-14)


இம்மாவட்டத்தில் மிகப்பழமை வாய்ந்த பள்ளிவாசலெனக் கருதப்படும் பாலத்தடி ஜும்ஆ மஸ்ஜித் சுமார் 700வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்டதாகக் நம்பப்படுகிறது. இதிலிருந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் இப்பகுதிகளில் வாழ்ந்தோர். முஹ்யத்தின் ஆண்டகை அவர்களின் முஹிப்பீன்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை உணரமுடிகிறது. இதுபொல் யாழ் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி, கிளிநொச்சி, மானிப்பாய், கொடிகாமம், நாச்சிக குடா, நெய்னா தீவு, வட்டக்கச்சி மஸ்ஜித்களும் சிவலை என்ற இடத்திலுள்ள தைக்காவும் முஹ்யித்தின் என்ற நாமத்தாலேயே அழைக்கப்படுகிறமை எமது தாகும்


கவனத்திகுரியதாகும். (நூல் :- யாழ் முஸ்லிம் வரலாற்றுப் பார்வை)


இவ்வாறு இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் குத்புகள் நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகையை நினைவு படுத்தும் இறையில்லங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை அந்த நாதாக்கள் மீது மக்கள் வைத்த அன்பின் அடையாளச் சின்னங்கள் என வர்ணிப்பதில் தவறில்லை.


காரணிகள்


காதிரிய்யா தரீக்காவும் அதன் ஆத்ம ஞானிகளும் இங்கு வருகை தர முன்னர் குத்பு நாயகத்தின் பெயர் நாமம் இந்நாட்டின் எல்லாப்பாகங்களிலும் எப்படி இடம் பிடித்தது என்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் காணப்படாத அக்காலத்தில் இது எவ்வாறு சாத்தியமானது என்றும் நாம் சிந்திக்கலாம்.


பின்வரும் நிகழ்வுகளை இதற்கான காரணிகளாக நாம் இனங்காணலாம்.


*ஆதம் மலையை தரிசிப்பதற்காகப் பல ஸுபிய்யாக்களும் இறை நேசர்களும் இங்கு வந்து சென்றமை.


*அராபியருடனான வர்த்தக தொடர்புகள் காணப்பட்டமை


*வர்த்தகம் நிமித்தம் இங்குவந்த அரபிகள் துறை முக நகரங்களை அண்டி குடியேற்றங்களை அமைத்துக் கொண்டமை.


*இலங்கை முஸ்லிம்கள் இந்தியாவுக்கான கல்விப் பயணங்கள் மேற்கொண்டமை.


*ஹஜ்ஜுக்கான ஒன்றுகூடல் மூலம் அரபுலக தொடர்புகள் அதிகரித்தமை


*முஹ்யித்தின் ஆண்டகையின் பாசறையில் கல்வி பெறுவதற்காக பக்தாதை நோக்கி அரபு நாடுகள் பலவற்றிலிருந்தும் மாணவர்கள் சென்றதோடு, தத்தமது நாடுகளுக்கு திரும்பி வந்ததும் அவர்களின் தரீக்காபைத் துயர்ந்து போதனையில் ஈடுபட ஆரம்பித்தமை.


*அஹ்லுபைத்தைச் சேர்ந்த பலர் இங்கு வந்து குடியேரியமை.


செய்குமார்கள் வருகை


இவ்வாறு தரீக்காக்கள்- அதன் தலைவர்கள் பற்றிய அறிமுகமும் நல்லெண்ணமும் நிலவிய சூழலில் தான் செய்குமார்கள் என அழைக்கப்பட்ட ஆத்ம ஞானிகளின் வருகை இங்கு நிகழ்ந்தது. இவர்களின் விஜயம் சுதேச முஸ்லிம்களின் கல்வி, கலாசாரம், ஆன்மீகம், வணக்கம் என எல்லாத் துறைகளிலும் எழுச்சியும் ஏற்றமும் ஏற்பட அடித்தளமிட்டது என்பதை வரலாற்று ஏடுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த வகையில் இலங்கைக்கு வந்த முக்கிய ஞானவான்களையும், அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக நோக்குவோம்.


தொடரும்...