السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday 22 October 2014

கழாத் தொழுகை

                                                 
வேண்டுமென்று தொழுகையை விட்டவர் அத் தொழுகையை கழாச் செய்ய வேண்டியதில்லை. என்ற ஒரு வாதம் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது. இவ்வாதத்தை முதன் முதலில் முஸ்லிம்கள் மத்தியில் புகுத்தியவர் ழாஹிரிய்யாக் கொள்கையைப் பின்பற்றிய இப்னு ஹஸ்மு என்பவராகும். 
இவர் ஒரு ஹதீஸ் கலை வல்லுனர். ஹதீஸ் துறையில் இவருக்கு திறமை உண்டு. அதனை எவரும் மறுக்கவில்லை. ஆனால் அகீதா, பிக்ஹ் போன்ற துறைகளில் இவர் முரண்பாடான விளக்கத்தைக் கொண்டிருந்தார். எல்லாம் தனக்குத் தெரியும் என்ற தோரணையில் இவர் எழுதி வந்தார். இவர் எவருக்கும் புரியாத மொழியில் எழுதுவார். இதனால் இவர் ஒரு ஆபத்தான பேர் வழி! இவரைப் பின்பற்றுவது கூடாது. ஹஜ்ஜாஜின் வாளைவிட இவர் எழுத்து ஆபத்தானது என்றெல்லாம் அறிஞர்கள் இவரைப் பற்றி எச்சரித்தனர்.

இவருக்குப் பின் இவர் விட்டுச் சென்ற குறை மாத சிசுவான வழி கேட்டு வாதங்களையும், பிழையான சட்டங்களையும் தூக்கி தத்தெடுத்து வளர்த்தவர் இப்னு தைமியா ஹர்ரானி ஆவார். இதன் பின் இவர் நிழலாக வளர்ந்த இவரின் மாணவரான இப்னுல் கையூம் இதற்கு ஒத்தணம் வழங்கினார்.

இப்னு தைமியாவிற்கும் அவர் சார்ந்த கொள்கைகளுக்கும், அவரின் சம காலத்தில் வாழ்ந்த பேரறிஞர்கள் தக்க பதில்களை சுடச் சுட வழங்கினார்கள். இதனால் இப்னு தைமியாவும், அவர் தம் சீடர்களும் முதுகு நிமிர்ந்து நெஞ்சுயர்த்தி தங்கள் வாதங்களை மக்கள் மயப்படுத்த முடியாமல் திணறினர்.

இப்னு தைமியா என்பவர் திமஷ்கில் தோன்றிய சிறந்த அறிஞராக நாற்பது வயது மதிக்கப்பட்டார். 40வயது வரை இப்னு தைமியா மக்களால் போற்றப்படுகின்ற அறிஞராகவும், பயனுள்ள நூற்களின் ஆசிரியராகவும், பாராட்டுக்குரிய ஹதீஸ்கலை மேதையாகவுமே கணிக்கப்பட்டார்.

40 வயது தான்டியதுதான் தாமதம் இப்னு தைமியாவின் தலை விதி மாறியது. இதன் பின் இவரின் எழுத்துக்களும் பேச்சுக்களும், தீர்ப்புக்களும் அதுவரை அவர் கூறியதற்கும் முஸ்லிம் அறிஞர்களின் ஒட்டு மொத்த தீர்ப்புக்கும் முரணானதாகவோ காணப்பட்டது. எல்லோராலும் போற்றப்பட்ட இவர் எவருக்கும் வேண்டப்படாதவராக மாறிவிட்டார். இதனால் இவரின் பிந்திய கால வாழ்வு சிறையிலேயே கழிந்தது.

இப்னு தைமியாவின் தீர்ப்பும், கோட்பாடும் முஹம்மட் இப்னு அப்துல் வஹாபி நஜ்தி தோன்றும் வரை கணக்கில்லாத ஒன்றாகவே இருந்தது. இவர் இப்னு சுஊதின் அதிகாரத்துடனும், பிரித்தானிய அரசின் பின் பலத்துடனும் குற்றுயிராகக் கிடந்த இப்னு தைமியாவின் சிற்றாக்கங்களுக்கும், தீர்ப்புக்களுக்கும் புத்துயிர் வழங்கினார்.
சவூதி அரேபியாவில் எண்ணை வளம் கண்டு பிடிக்கப்பட்ட பின் ஏழை நாடாக இருந்த சவூதி அரேபியா செல்வந்த நாடாகியது. இச் செல்வத்தை மூலதனமாக்கி வஹாபிஸ சித்தாக்கங்களை உலகு பூராகவும் பரப்புவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர். இந்த முடிவில் உதித்ததுதான் மதீனா இஸ்லாமிய பல்கழைக்கழகமாகும்.

மதீனா இஸ்லாமிய பல்கழைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசு என்ற போர்வையில் அதிக தொகையை அள்ளி இறைத்தனர். பணத்திற்கு ஆசைப்பட்டவர்கள் அங்கு படையெடுத்தனர். பணம் பாதாளம் வரை பாய்ந்தது. உண்மை முஸ்லிமாக வாழ்ந்தவர்கள் சிறந்த மார்க்கப் பற்றுள்ளவர்களிடம் ஓதிப்பட்டம் பெற்றவர்கள். இஸ்லாத்தை இடித்துத் தள்ளும் சண்ட மாருத பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, உஸ்த்தாதுமார்களாக மாறினார்கள் இவ்வாறு,
சவூதியில் முளைத்த வஹாபிஸ நச்சு பிரசாரத்தில் தங்களைப் பறிகொடுத்தவர்களால்தான் வேண்டு மென்று விடுபட்ட தொழுகையைக் கழாச் செய்ய வேண்டியதில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

தமிழகத்திலும், இலங்கையிலும் வழி கெட்ட வஹாபிசம் அறிமுகமாகியிருந்தம் விடுபட்ட தொழுகையை களாச் செய்ய வேண்டியதில்லை. என்ற கோஷம் முன்வைக்கப்படவில்லை. விடுபட்ட தொழுகைகளைக் களாச் செய்ய வேண்டும் என்றே கூறி வந்தனர். களாத் தொழுதும் வந்தனர். இது ஒரு பிரச்சனையாக அப்போது இருக்கவில்லை.

தற்காலத்தில் தமிழகத்திலும், இலங்கையிலும் இப்னு தைமியாவின் சாக்கடைவாதங்களுக்கும், வஹாபிஸ நச்சுக் கோட்பாடுகளுக்கும் உயிர் கொடுத்து ஊரையும், நாட்டையும் நாசப்படுத்தியவர்கள் பீ,ஜே குழுவினராகும். ஆரம்பத்தில் பீ.ஜே என்பவரை ஆசிரியராக கொண்டு வெளி வந்த நஜாத் என்ற இதழ் மூலமாகவே தமிழ் நாட்டில் வஹாபிசம் பெருமளவு அறிமுகமானது.

வேண்டுமென்று விடுபட்ட தொழுகையைக் களாச் செய்ய வேண்டியதில்லை. என்ற வாதத்தை பீ.ஜே என்பவர் 1987, 06ம் மாத நஜாத் இதழில் எழுதினார். 1987,06,01ம் திகதி நஜாத்தில் வந்த இக்கட்டுரைக்கு 1987,06,15ல் தமிழகத்திலிருந்து நாம் வெளியிட்ட வஸீலா மாதமிருதழில் 'விடுபட்ட தொழுகைகளை தொழ வேண்டியதில்லை நஜாத்தின் நவீன அறிவுரை'; என்ற தலைப்பில் சுடச் சுடப் பதில் கொடுத்தோம்.
இதற்கு பீ.ஜே சாஹிபாலோ, அவர்கள் சஹாக்களாலோ இது வரை பதில் கொடுக்கப்படவில்லை. பெண்கள் சியாரத் செய்யக் கூடாது. என்று பீ.ஜே சாஹிபு எழுதிய கட்டுரைக்கு அப்போது நாம் காட்டிய விளக்கத்தை 18 ஆண்டுகள் கழித்து ஒப்புக் கொண்டது போன்று களாத் தொழுகை பற்றிய நமது விளக்கத்தையும் ஏற்கும் காலம் மிகத் தூரமில்லை. 

மௌளவி பீ.ஜெய்னுலாப்தீன் என்பவர் களாத் தொழ வேண்டியதில்லை என்பதற்கு முன் வைத்த ஆதாரம் என்ன? என்பதையும் அதற்கு அவர் கொடுத்த விளக்கத்தையும் பாருங்கள!;.
எவனுக்கு அஸர் தொழுகை தவறி விட்டதோ அவனுக்கு பொருளும், குடும்பமும் தவறி விட்டது போன்றாகும். என்பது நபி மொழி
அறிவிப்பவர் - இப்னு உமர் றழி
நூல்கள் - புகாரி, முஸ்லிம்

ஆரம்ப காலத்தில் களாச் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. நபிஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும், தோழர்களும் அவ்வாறு களாவாக்கிருக்கின்றனர்.பின்னர் இவ் அனுமதியை அல்லாஹ் ரத்துச் செய்து விட்டான் அதற்கான ஆதாரம் வருமாறு

அகழ் போரின் போது (அகழ் போரில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக) லுஹர், அஸர், மஃரிப் ஆகிய தொழுகைகளை உரிய நேரத்தில் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும், தோழர்களும் தொழவில்லை. இஷh நேரத்தில் வரிசைக்கிரமாக பாங்கு இகாமத்துடன் அத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
இந் நிகழ்ச்சி திருக்குர்ஆனில் 02:239 வசனம் இறங்கு முன்னர் நடைபெற்றது என்று அபூ ஸயீது றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஹதீதுக் கருத்து)
நூற்கள். அஹ்மது நஸயீ. அந் நஜாத் 1987, ஜூன்.

பீ.ஜே கூறுவது போன்று அபூ ஸயிது றழியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கும் ஒரு ஹதீஸ் நஸயியில் கிடையவே கிடையாது. மேலும் திருக் குர்ஆனில் 02:239ம் வசனம் இறங்குவதற்கு முன்பு களாவாக்கும் அனுமதியிருந்தது. என்பதும் பீ.ஜேவின் அண்டப் புழுவாகும். துணிந்து பொய் கூறுவது பீ.ஜேயின் இரத்தத்தில் ஊறிய ஒன்று.
களாத் தொழுகை பற்றி ஹதீஸ், சட்டக்கலை அறிஞர்களின் தீர்ப்பு என்ன? என்பதைப் பார்க்கு முன் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படை விளக்கம் என்ன? என்பதை தெரிந்து கொள்வது பயனுள்ளதாக அமையும். என்று நினைக்கின்றேன்.

ஷரீஅத்தில் ஒரு விடயம் கடமை (வாஜிபு) ஆவதற்கான நிபந்தனை பூரணமானதன் பின், அதனை விடுவதற்கான தடை வராவிட்டால், அதனை நிறைவேற்ற வேண்டியது அவரின் கடமையாகும். இதில் மாற்றுக் கருத்து கிடையாது. கடமையான விடயம் நேரம், காலம் குறித்ததாக இருப்பின், அந் நேரத்தில் அல்லது அக்காலத்தில் நிறைவேற்றினால் அவரின் கடமை அல்லது பொறுப்பு நீங்கிவிடும்.

நிர்ப்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் வேண்டுமென்று குறித்த நேரத்தில் அக்கடமையை நிறைவேற்றத் தவறினால் பிற்படுத்திய குற்றம் ஏற்படுவதுடன் அவர் மீதுள்ள பொறுப்பும், கடமையும் நீங்கிவிடாது, மனிதன் குற்றம் செய்யும் இயல்புள்ளவன் என்பதை அல்லாஹூத்தஆலா நன்கறிவான். அதனால் அவன் அருளையும், பொருத்தத்தையும் அடியான் பெறுவதற்குரிய வழியை அவன் ஏற்படுத்தியுள்ளான். பாவம் என்ற வியாதியை நீக்க வல்ல மருந்தாக தௌபாவையும், இஸ்திஃபாரையும் ஆக்கினான். அவன் மீதுள்ள கடமையிலிருந்;து நீங்குவதற்கு அதாஃ என்பதற்குப் பதிலாக களாவையும் ஏற்படுத்தினான்.

இந்த அடிப்படை விளக்கத்தை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சஹீஹான ஹதிதுகள் மிகத் தெளிவான விளக்கத்தை நமக்குத் தந்துள்ளன. இது தொடர்பான பிரச்சனைகளுக்கான விடையை நேரடியாகவும், கியாஸ் அடிப்படையிலும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். காரணம், இது தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வை முஸ்லிம் சமுகத்திலிருந்து தீர்வாக எடுக்க வேண்டும் என்ற நோக்கிலாகும்.

ஒரு மனிதர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லமவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதுரே எனது தாய் மரணித்து விட்டாள்! அவர் மீது ஒரு மாத நோன்பு நிறைவேற்றப்படாமல் உள்ளன. அவருக்காக நான் அதைக் களாச் செய்யலாமா? என்று கேட்டதற்கு ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு மிகக் தகுதியானதாகும். என்று விடை பகர்ந்தார்கள்.
அறிவிப்பவர் - ஹளரத் இப்னு ஹப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூமா
நூல் - புகாரி ஷரீப்

ஜூஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து எனது தாய் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டாள்.

ஆம் அவருக்காக நீர் ஹஜ் செய்யலாம் உன் தாயின் மீது கடன் இருந்தால் அதை நீர் நிறைவேற்ற மாட்டீரா? அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள், கடனை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்தான் பொருத்தமானவன் (முதலில் அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுவதற்கு முற்படுத்த வேண்டும்)
அறிவிப்பவர் - ஹளரத் இப்னு ஹப்பாஸ் றழியல்லாஹூ அன்ஹூமா
நூல் - புகாரி ஷரீப்

இதே கருத்தை ஒத்த பல அறிவிப்புக்கள் முஸ்லிம், ஸூனன் அபூதாவூத், திர்மிதி, நஸஈ உள்ளிட்ட ஹதீதுக் கிரந்தங்களில் பதிவாகியுள்ளன. நேரம் குறித்துக் கடமையாக்கப்பட்டுள்ள வணக்கங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் அது அவர் மீதுள்ள அல்லாஹ்வின் கடன் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மனிதனுக்கு செலுத்த வேண்டிய பொருளாதார கடன் போன்றே இக் கடனும் உண்டு என ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள். மனிதனிடம் பட்ட கடனை உடன் செலுத்த வேண்டியது கடமை என்றும், அக் கடனை இறுக்கும் வரை அக்கடன் தன்னை விட்டும் நீங்காது என்பதை நன்கு அறிந்தவர்களிடம் கூறிவிட்டு முதலில் தீர்க்கப்பட வேண்டியது அல்லாஹ்வின் கடனாகும். என்று அதன் முக்கியத்துவத்தையும் கூறியுள்ளார்கள். அத்துடன் அதனை நிறைவேற்றுங்கள் என்று களாச் செய்வதை கட்டளையாகவும் கூறியுள்ளார்கள். கடன் நிறைவேற்றப்படுவதில் உடலினால் மட்டும் செய்யப்படும் நோன்பு போன்ற வணக்கத்தையும், உடலும், பொருளும் சேர்ந்த ஹஜ் போன்ற வணக்கத்தையும் நபியவர்கள் பிரிக்கவில்லை. இரண்டும் நிறைவேற்றப்பட வேண்டிய கடன் என்று கூறினார்கள்.

இதிலிருந்து கியாஸ் ஒரு சட்ட மூலாதாரம் என்பதற்கும், மனிதன் அனுபவத்தை வைத்து அனுபவத்திற்கு அப்பால் உள்ளதை விளங்கப்படுத்துவதும் சிறந்த முறை என்பதற்கும் இந்த ஹதீதை ஆதாரமாக அறிஞர்கள் எடுத்துக் கொண்டனர்.
நோன்பு உடலினால் மட்டுமே செய்யும் வணக்கம், இவ் வணக்கத்தை உரிய காலத்தில் நிறைவேற்றுவது கடமை. தவறினால் அது அல்லாஹ்வி;ன் மீதுள்ள கடனாக இவர் பொறுப்பிலிருக்கும். கடன் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ்வின் கடனே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என சஹீஹான ஹதீதுகள் மிகத் தெளிவாக குறிப்பிடுகின்றன.

புத்தியுள்ள பருவமெய்திய ஒருவர் வேண்டுமென்று தொழுகையை விட்டால் அத்தொழுகையை உடன் களாச் செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான ஆதாரம் பின்வரும் சம்பவத்தில் உள்ளது.

ஒரு தினம் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சஹாபாக்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். இரவின் பெரும் பகுதியை கடந்து சென்ற பின் தங்குவதற்கான இடத்தை அடைந்தார்கள். எங்களை ஸுபஹ் தொழுகைக்கு எழுப்பும் பொறுப்பை எடுத்துக் கொள்பவர் யார்? என திரு நபியவர்கள் கேட்டதற்கு, பிலால் றழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டார். ஆயினும் தூக்கம் எல்லோரையும் ஆட்கொண்டது. எல்லோருக்குமே ஸூபஹூத் தொழுகை களாவாகிவிட்டது. 

காலையில் விழித்தெழுந்த பின் அனைவரையும் வுழுச் செய்யுமாறு பணித்தார்கள். பின் முஅத்தின் அதான் கூறினார். ஸூபஹூவின் சுன்னத்தான இரு ரகாஅத்துக்களையும் வழக்கமாகத் தொழுபவர்கள், இரண்டு ரகாஅத்துக்கள் ஸூபஹின் சுன்னத்தையும் தொழுதார்கள். பின்னர் எல்லோரையும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் களாவாகத் தொழுவித்தனர்.

இச் செயல் சஹாபாக்களுக்கு பெரும் கவலையைக் கொடுத்தது. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லமவர்களுக்கு இதனால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இதனால் அவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள், அவர்களைப் போன்று நமது நிலையும் அமையுமா? என்று அஞ்சினார்கள்.

ஷரீஅத்தில் குற்றம் செய்வதற்குரிய தண்டனையாக கப்பறா முறை நடைமுறையில் இருப்பதை அறிந்த சஹாபாக்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லமவர்களிடம் விரைந்து சென்று நாங்கள் செய்த இத்தவறுக்கான கப்றா - குற்றப் பரிகாரம் என்ன? என்று கேட்டனர். யாராவது தொழுவதை மறந்தால், அல்லது தொழாமல் உறங்கினால் அது பற்றிய நினைவு வந்ததும் தொழுது கொள்ளவும், அது தவிர வேறு கப்பறா கிடையாது. என்று விடை பகர்ந்தார்கள்.
ஆதாரம் - புகாரி முஸ்லிம்.

முஸ்லிமில் வரும் மற்றுமொறு அறிவிப்பில் உங்களில் ஒருவர் தொழாமல் தூங்கினால், அல்லது அதை மறந்தால் அது பற்றிய நினைவு வந்ததும் தொழுது கொள்ளவும் என்னை நினைப்பதற்காகவே தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்று அல்லாஹூத்தஆலா கூறியுள்ளான். அதாவது,

தொழுகையிலும், தொழுகையைக் கொண்டும் அலலாஹ்வை திக்று செய்வதுதான் தொழுகையின் முக்கிய நோக்கமாகும், நீங்கள் தொழுகையை அதன் நேரத்தில் தொழத் தவறினால், அல்லாஹ்வின் நினைவு உங்களுக்கு தவறி விட்டது. ஆதலால் நீங்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதற்காக தொழுகையைக் களாச் செய்யுங்கள். நீங்கள் செய்யும் களாவானது உரிய நேரத்தில் தொழுதது போன்றாகிவிடும்.
அதற்கு அதனை களாச் செய்வது தவிர வேறு கப்பறா கிடையாது என்பதன் பொருள் தூக்கத்தால், மறதியால், மதிமயக்கத்தால், தொழுகை தப்பிப் போனால் கப்பாறா கொடுத்துத் தீர்க்குமளவு குற்றமாகாது. அத் தொழுகையைக் களாச் செய்வதுததான் அதற்கு கப்பாறாவாகும்.

தொழுகையை வேண்டுமென்று பிற்படுத்தியவர் தூக்கம், மறதி போன்றவற்றால் தொழுகையைத் தவற விட்டவர் போன்று தொழுகையைக் களாச் செய்தல் வேண்டும். அத்தோடு இவர் மீது தொழுகையைப் பிற்படுத்தியதற்கான குற்றம் இருக்கும். இதற்கு அவர் தௌபாச் செய்தல் அதாவது, மனம் வெதும்பிக் கவலைப்பட்டு இதன் பின் இக் குற்றத்தைச் செய்யமாட்டேன் என்று மன உறுதி கொள்ளல் வேண்டும். தௌபா இவர் குற்றத்திற்கு கப்பாறாவாக அமையும்.

தூக்கம், மறதி உள்ளிட்ட காரணத்தால் தொழுகையை விட்டவருக்கு களாச் செய்வது மட்டுமே கடமை! ஆனால் வேண்டுமென்று தொழுகையை விட்டவர் மீது களாவும், தௌபாவும் கடமையாகும். தூக்கம், மறதி ஆகிய காரணத்தால் தொழுகையை விட்டவர் தொழுகையைக் களாச் செய்ய வேண்டும் என்றுதான் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள். வேண்டுமென்று தொழுகையை விட்டவர் களாச் செய்ய வேண்டும் என்று கூறவில்லையே! அப்படிக் கடமையெனில் நபியவர்கள் கூறியிருப்பார்களே! என்று வாதிக்கும் முட்டாள்களைப் பார்த்து: நாம் கேட்கின்றோம்.

பெற்றோரைப் பார்த்து 'சீ' என்று கூறாதீர்கள் என்று திருக் குர்ஆன் கூறுகின்றது. அடிப்பது, கன்னத்தில் ஓங்கி அறைவது பற்றிக் கூறவில்லை. ஆதலால்'சீ 'என்று மட்டும் சொல்லாமல் ஏனையவைகளைத் தாராளமாகச் செய்யலாமா?

களாத் தொழுகைபற்றி ஹதீது, சட்டக்கலை அறிஞர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
எவனுக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவனது பொருளும் குடும்பமும் தவறி விட்டது போன்றாகும். என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி, முஸ்லிம்

மேற் கண்ட ஹதீதுக்கு புகழ் பெற்ற ஹதீஸ்க்கலை மேதையான ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் புகாரி சரீபுக்கு எழுதிய புகழ் பூத்த விரிவுரையான பத்ஹூல் பாரியில் இவ்வாறு வரைகின்றார்கள்.
தொழுகையைக் களாவாக்கியவனுக்கு இரண்டு வகையான நஷ்டங்கள் உண்டு. என்ற எச்சரிக்கை இந்த ஹதீஸ் மூலமாக இருக்கின்றது.
01. உரிய வேளையில் தொழுவதால் கிடைக்கும் நன்மை
02. உரிய நேரத்தில் தொழாமல் விட்டதற்கான தண்டனை
உலகம் அற்பமானது கொஞ்சம் அமல் உலகின் மூலம் கிட்டும் அதிக நண்மையை விட மேலானது. என்ற விளக்கமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, என்று ஹாபிழ் அப்துல் பர்ரு அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆதாரம் - பத்ஹூல் பாரி
பாகம் -02, பக்கம் 171

சஹி முஸ்லிமுக்கு சிறப்பான விரிவுரை எழுதிய இமாம் நவவி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.
தவறிப் போன தொழுகையைக் களாச் செய்வது வாஜிப், தூக்கம், மறதி போன்ற காரணத்தால், தப்பினாலும் சரி, அல்லது காரணமின்றி தப்பினாலும் சரி காரணத்துடன் இருப்பதால் தூக்கத்தைப்பற்றி ஹதீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரணத்துடன் தப்பிய தொழுகையை நிறைவேற்றுவது வாஜிபு எனில், காரமிண்றி தவறியதை களாச் செய்வது கண்டிப்பாக கடமையாகும். இது தாழ்ந்ததைக் கொண்டு கடுமையானதின் மீது எச்சரிக்கையாகும்..
ஆதாரம் - ஷறஹூ முஸ்லிம்
பாகம் 01, பக்கம் 238

புகாரி ஷரீபுக்கு எழுதப்பட்ட விரிவுரைகளுல் சிறப்பான இடத்தை வகிக்கும் உம்ததுல் காரி என்ற நூலில் இமாம் பதுறுதீன் ஜனி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதுகின்றார்கள்.
வேண்டு மென்று தொழுகையைக் களாவாக்கினால் அதை நிறைவேற்றுவது வாஜிபு, பெரும்பாலான அறிஞர்களின் கூற்று இதுவாகும். தாவுது ளாஹிரியும் மிகச் சொற்பமான சிலரும் கழாச் செய்ய வேண்டியதில்லை என்கின்றனர். இக் கருத்து தவறானதாகும்.
ஆதாரம் உமத்துல் காரி
பாகம் 02, பக்கம் 608

அன்று ளாஹிரியாக்கள் கூறியதற்கு இன்றைய வழிகெட்ட வஹாபிகள் முலாம் பூச முனைகின்றனர். இது இவர்களின் புதுக் கண்டு பிடிப்பல்ல. மக்களைக் குழப்புவதற்கு எடுத்துக் கொண்ட ஓர் ஆயுதம் மாத்திரமே!
வழி கேடர்கள் காலத்துக்கு காலம் பழையதுகளைக் கிண்டியெடுத்து சந்தியில் காயப்போடுகின்றனர். அதிலிருந்து பரவும் வைரஸ் கிருமிகள் பலவீனமான ஈமான் கொண்டோரைப் பாதித்துள்ளது, ஆதலால் வைரஸ் கிருமிகள் தொற்றிக் கொள்ளாமல் இருக்க மத்ஹபு என்ற தற்காப்பு அங்கியை அணிந்து கொள்ளுங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்!
புஷ்றா இதழ் 35 நவம்பர்/டிசம்பர் 2009
கலீபதுல் காதிரி மௌலவி பாஸில் ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்
(Moulavi HMM Yoosuf Musthafi Eravur)
(Moulavi HMM Yoosuf Musthafi Eravur)