السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 23 October 2014

ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆ என்றால் ஒன்று கூடுதல் என்று பொருளாகும். வெள்ளிக்கிழமை ளுஹர் வேளையில் ஜமாஅத்தாகத் தொழும் விஷேடத் தொழுகைக்கு ஜும்ஆத் தொழுகை என்று பெயர்.
ஜும்ஆத் தொழுகை மக்காவில் கடமையாக்கப்பட்டது. முஸ்லிம்களின் தொழுகை அங்கு குறைவாக இருந்தாலும், காபிர்களின் அச்சத்தினாலும் ஜும்ஆத் தொழுகை அங்கு நிறைவேற்றப்படவில்லை.
மதீனாவில் முஸ்லிம்களி்ன் தொகை அதிகமாக இருந்ததனாலும் பகிரங்கமாக இஸ்லாத்தின் கடமைகளை அங்கு செய்வதில் எதுவித அச்சமும் இல்லாததனாலும் நபியவர்களின் வேண்டுதலின் பிரகாரம் “நகீஉல் ஹழ்மான்“ என்ற கிராமத்தில் ஹளரத் அஸ்அத் இப்னு ஸுறாறா ரழியல்லாஹு அன்ஹு தலைமையில் முதன் முதலில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்பட்டது.
ஜும்ஆ நாளின் சிறப்பு
நாட்களின் நாயகம் வெள்ளிக்கிழமை ஆகும். கண்ணியம் பொருந்திய இந்நாள் இரு பெருநாட்களை விடவும் மேலானது என்றும் கூறப்படுகின்றது. இந்நாளில் பின்வரும் சிறப்புக்கள் உள்ளன.
* நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டார்கள்
* நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் பூமிக்கு இறக்கப்பட்டார்கள்
* நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தௌபா அங்கீகரிக்கப்பட்டது.
* இதே நாளில் வபாத்தானார்கள்.
* துஆ அங்கீகரிக்கப்படும் நேரம் இதில் உண்டு.
* மறுமையின் அழிவும் இந்நாளில்தான் ஏற்படும்.
* இந்நாளில் மரணிப்பவருக்கு கப்றில் கேள்வி கணக்கு இல்லை.
* நரகவாசிகளுக்கு இந்நாளில் வேதனை இலேசாக்கப்படும்.
ஜும்ஆத் தொழுகையின் நன்மைகள்
* முஸ்லிம்கள் இறையச்சத்துடன் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர்.
* முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதனால் பகை அகன்று நட்பு வளரும்.
* வசதி உள்ளவர் ஏழைகளுக்கு உதவும் வாய்ப்புக் கிடைக்கின்றது
* சிறியவர் பெரியவர்களைக் கண்ணியப்படுத்தவும் பெரியவர்களுக்கு சிறியவர்கள் இரக்கம் காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
* கதீபின் உபதேசத்தைக் கேட்டு இறையச்சத்தை வளர்க்க வாய்ப்பேற்படுகின்றது.
* ஜும்ஆ நாளில் துஆ அங்கீகரிக்கப்படும் ஒரு நேரம் உண்டு. அந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
* வெள்ளிக்கிழமை ஒன்று கூடுதல் நல்ல பண்புகளை வளர்ப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்கள்
* அதிகமாக திருக்குர்ஆன் ஓத வேண்டும்.
* திக்று, ஸலவாத்து அதிகம் ஓத வேண்டும்.
* அதிகமாக தௌபாச் செய்ய வேண்டும். துஆக்கள் கேட்க வேண்டும்.
* தர்மம் செய்ய வேண்டும்.
* பெற்றோர், ஸாலிஹீன்கள், உலமாக்கள், வலிமார்கள் உள்ளிட்டவர்களை ஸியாரத் செய்ய வேண்டும்.
ஜும்ஆ கடமையானோர்
பருவமடைந்த உள்ளூரில் தங்கியிருக்கும் (முகீம்) ஆண்கள்மீது கடமையாகும். பெண்கள், சிறுவர்களுக்கு ஜும்ஆக் கடமையில்லை.
ஜும்ஆவின் நிபந்தனைகள்
* ஜமாஅத்தாக நிறைவேற்றல் (தனித்து தொழ முடியாது) முதல் ரகாஅத் முழுவதும் ஜமாஅத் நிறைவேற்ற வேண்டும். இரண்டாம் ரக்அத்தில் றுகூவுக்குப் பின் வந்து சேருபவர் நான்கு ரக்அத் தொழ வேண்டும்.
* நாற்பது பேர் ஒன்று கூட வேண்டும். இவர்கள் சூறத்துல் பாத்திஹாவை தவறில்லாமல் திருத்தமாக ஓதக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
* ஊர் வாசிகளாகவும், ஆண்களாகவும் இருக்க வேண்டும்.
* குத்பா ஆரம்பத்திலிருந்து தொழுகை முடியும்வரை நாற்பது பேர் இருக்க வேண்டும்.
* ளுஹர் நேரத்தில் நடைபெற வேண்டும்.
* இரண்டு குத்பாக்களுக்கு பின்பு தொழுகை நடைபெற வேண்டும்.
* ஓர் ஊரில் ஒரு ஜும்ஆத்தான் நடக்க வேண்டும். இடநெருக்கடி, தெலை தூரம், அச்சம் இருந்தால் தேவைக்கேற்ப கூட்டலாம். பாடசாலை விடுதிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களில் நடத்தப்படும் ஜும்ஆக்கள் மேற்கூறியவைகளில் அடங்கவில்லை எனில் ஜும்ஆ நிறைவேறாது. சிறையிலுள்ளோர் வெளியில் செல்ல முடியாதிருப்பதால் அவர்கள் சிறையிலேயே ஜும்ஆ நடத்தலாம் என்று “பிங்யா“ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
* குறைந்தளவு எண்ணிக்கையைக் கொண்ட சிற்றூரில் சூறத்துல் பாத்திஹாவை திருத்தமுடன் ஓதத் தெரிந்தவர்கள் 40 பேர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் ஜும்ஆவுடன் ளுஹரும் தொழ வேண்டும்.
* பல சிற்றூர்கள் அடுத்தடுத்து மிக நெருக்கமாகப் பக்கத்திலிருந்தாலும் வழக்கத்தில் தனித்தனியான ஊர் என்று சொல்லப்படுமானால் அப்படியான ஒவ்வொரு ஊரிலும் ஜும்ஆ நடத்தலாம் என்று “இஆனா“ என்ற நூலில் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.
* ஒருவனுக்கு இரு ஊர்களில் மனைவி மக்கள் சமமாக இருந்தால் அவர் ஜும்ஆ நேரம் இருக்கும் ஊராகக் கணிக்கப்படுவார். சொத்துக்கள் வியாபாரம் ஓர் ஊரிலும் குடும்பம் வேறு ஊரிலும் இருந்தால் குடும்பங்கள் இருக்கும் ஊரையே கணிக்கப்படும்.
குத்பாக்களின் பர்ளுகள்
01. அல்ஹம்துலில்லாஹ் என்று ஆரம்பித்தல் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெயர் கூறி ஸலவாத் மொழிய வேண்டும்.
02. நபியவர்களின் பெயரில் சொல்லப்படும் ஸலவாத்தில் அண்ணலாரின் பெயர் கூறப்பட வேண்டும். தவிர ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்று கூறல் ஸலவாத் கூறுவது செல்லுபடியாகாது. தற்காலத்தில் அநேகமான கதீப்மார்கள் இதனைக் கவனத்தில் கொள்ளாமல் “ஸல்லல்லாஹு அலைஹி“ என்றே ஸலவாத் கூறுகின்றனர். உலமாக்களும் ஏனையோர்களும் இது விடயத்தில் செய்யும் மௌனத்ததால் குத்பா பாழாகி விடுகின்றது.
03. ஊசிக்கும் பிதக்குவல்லாஹி என்று வருகை தந்தோருக்கும் தக்வாவைக் கொண்டு வஸிய்யத்து செய்ய வேண்டும்.
(இம்மூன்றும் இரண்டு குத்தபாக்களிலும் இடம்பெற வேண்டும்)
04. இரு குத்பாக்களில் ஒன்றில் கருத்துப் பொதிந்த ஒரு ஆயத்தை ஓதல்.
05. இரண்டாம் குத்பாவில் முஃமின்களுக்காக இஸ்திஹ்பார் பாவ மன்னிப்பு தேடல்.
இரு குத்பாக்களின் நிபந்தனைகள்
01. நாற்பது பேர் குத்பாவை செவிமடுத்தல்.
02. குத்பா அறபு மொழியில் அமைதல்.
03. நின்று கொண்டு குத்பா ஓதல்.
04. சிறு, பெருந் தொடக்குகளையும், நஜீஸ்களையும் விட்டும் தூய்மையாக இருத்தல்.
05. மானத்தை மறைத்தல்.
06. இரு குத்பாக்களுக்கிடையில் சிறிது உட்காருதல்.
07. குத்பாக்களின் இரு பர்ளுகளுக்கிடையிலும் குத்பாவுக்கும், தொழுகைக்கும் இடையிலும் தொடர்ச்சியைப் பேணுதல்.
குத்பாவின் உபதேசம் நீண்டிருந்தாலும் தொடர்ச்சி முறியாது. ஆனால், உபதேசம் செய்யாமல் தொடர்ச்சி நீளுவது தொடர்ச்சியை முறிக்கும்.
பர்ளுகளை மட்டும் சுருக்கமாக ஓதி இரண்டு ரக்அத் தொழும் நேரம் தொடர்ச்சியுடன் அதிகமான நேரமாகும். அதனால்தான், இரு குத்பாக்களுக்கிடையில் சுருக்கமாக அமர்வது, குத்பா முடிந்ததும் இகாமத் சொன்னதும் விரைவாக தொழுகையை ஆரம்பிப்பதும் கடமையாகும்.
சிலர் குத்பா முடிந்து இகாமத் கூறப்பட்ட பின்பு உபதேசிப்பது விளம்பரம் செய்வது வரிசைகளை சீர்செய்வது போன்றவற்றில் அதிக நேரத்தை கழித்தால் குத்பா வீணாகிவிடக் கூடிய ஆபத்து உண்டு. கதீபும் ஏனையவர்களும் இது விடயத்தில் கவனம் கொள்ளல் வேண்டும்.
குத்பாக்களின் சுன்னத்துக்கள்
01. குத்பாவின் பர்ளுகளை ஒழுங்கு முறைப்படி செய்தல்.
02. ஆட்சியாளர்கள், முஸ்லிம் படைகள், குடிமக்கள் உள்ளிட்டோர்களுக்கு வெற்றியும் நலமும் வேண்டியும் பிரார்த்திப்பது.
03. கதீப் பள்ளிக்குள் நுழையும்போது வாசலிலிருப்போருக்கும் மிம்பரில் ஏறும் முன் இருப்போருக்கும் மிம்பரில் ஏறிய பின் பள்ளியில் கூடி இருப்போருக்கும் ஸலாம் கூறல்.
04. முஅத்தி்ன் கதீபுக்கு முன்னாள் வலப்பக்கமாக நின்று கொண்டு அதான் ஒலித்தல்.
05. கதீப், ஒரு தடி அல்லது வாள் போன்றதை இடது கையால் ஊன்றியவராக அங்குமிங்கும் திரும்பாது ஆடாது, அசையாது கம்பீர தோற்றத்துடன் பவ்வியமாகவும் பக்தியுடனும் குத்பா ஓதுதல்.
06. இரு குத்பாக்களுக்கிடையில் “குல்குவல்லாஹு“ சூறா ஓதும் அளவு உட்காருதல்.
07. குத்பாவை அழகாகவும், தெளிவாகவும் மரியாதை மிகுந்த நல்வார்த்தைகளைக் கொண்டும் அமைத்துக் கொள்ளல்.
08. குத்பாவை இஸ்திஃபாரைக் கொண்டு நிறைவு செய்தல்.
09. கதீப் மிம்பரில் ஏறும் முன், முஅத்தின் ஜமாஅத்தினரை நோக்கி இமாம் குத்பா ஓதும்போது அமைதியாக இருக்குமாறு கூறுவது, இமாம் குத்பா ஓதும்போது உனது சகோதரனைப் பார்த்து பேசாதீர்! என்று கூறினாலும் குத்பாவின் பலனை இழந்துவிடுவீர்! என்ற ஹதீதை ஓதுதல்.
10. கதீப் குத்பா ஓதும்போது கதீபைப் பார்ப்பது.
11. ஜும்ஆத் தொழுகையில் சூறத்துல் ஜும்ஆ அல்லது சூறத்துல் முனாபிக்கீன் அல்லது சூறத்துல் அஃலா, சூறத்துல் ஙாஸியா போன்றவற்றை ஓதுதல்.
ஜும்ஆத் தொழுகைக்குப் பின்
தொழுது முடிந்து காலைப் பிரிக்க முன் சூறத்துல் பாத்திஹா, இக்லாஸ், பலக், நாஸ் ஆகியவற்றை ஏழு முறை ஓதினால் அவரது குற்றங்கள் மன்னிக்கப்படும். அல்லாஹ்வையும் அவனது திருத்தூதரையும், ஈமான் கொண்டோர் எண்ணிக்கையளவு நன்மை வழங்கப்படும் என்றும் மறு ஜும்ஆ வரும்வரை எதுவித தீயவைகளும் அணுகாது என்றும் தீனுக்கும், துன்யாவுக்கும் பாதுகாப்பு இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், “அல்லாஹும் யாஹைய் யாஹமீது, யா முப்திஉ, யா முஈது, யா ரஹீமு, யாவதூத் அங்னினி, பிஹலாலிக, அன்ஹறாமிக வபிதாஅதிக அன்மஃ ஸியதிக வபிபழ்லிக அம்மன் சிவாக“ என்ற துஆவை ஜும்ஆ நாளில் 70 விடுத்தம் ஒதினால் மறு ஜும்ஆ வருமுன் செல்வம் அவனைத் தேடி வரும்.
மேற்படி துஆவை கணக்கற்ற முறையில் ஒருவர் ஓதுவதை வழக்கமாக்கி்க் கொண்டால் அவர் அறியாத புறத்திலிருந்தும் செல்வம் அவரைத் தேடி வரும் என்று இமாம் அபூதாலிப் மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
இலாஹி வஸ்து லில் பிர்தௌஸி
அஹ்லா வலா அக்வா அலா நாரில் ஜஹீமி
ஃபஹப்லி ஸல்லத்தி வஃபிர்துனூபி
ஃபஇன்னா ஃஙாபிறுத் தன்பில் அழீமி
என்ற கவிதையை ஜும்ஆவுக்குப் பின் ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்வாராயின் நிச்சயம் அவர் இஸ்லாத்திலேயே மரணி்ப்பார் என்று குத்புர் ரப்பானி இமாம் அப்துல் வஹாபுஸ் ஸஃறானனி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
ஆதாரம் : யஃங்யா, பக்கம் - 84
ஜும்ஆத் தொழுகை

ஜும்ஆத் தொழுகை