السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 23 October 2014

வுழு‘வின் சிறப்பு.

வுழு‘ தொழுகையின் நிபந்தனைகளில் மிக முக்கியமான ஒன்று. வுழு செய்யாமல் தொழுதால் - தொழுகை நிறைவேறாது.
“சிறுதொடக்கு ஏற்பட்டு வுழு செய்யாதவரை உங்களில் எவருடைய தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.“
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி, முஸ்லிம்

“வுழு ஈமானில் பாதியாகும்“ - நபிமொழி.
வுழு உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டுமே சொந்தமானதா? என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு காணப்பட்டாலும், ‘மறுமையில் வுழுவின் காரணத்தினால் கை, கால் வெளுத்தவர்கள்‘ என்ற சிறப்பு இந்த சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தம் என்பதில் அபிப்பிராய பேதமில்லை.

வுழு செய்வதால் சிறுபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. முஃமினான அடியான் வுழு செய்தால் அவன் கண்களால் பார்த்த (சிறு) பாவங்கள் அனைத்தும் முகத்தைக் கழுகும்போது அந்நீரோடு (முகம் கழுகும்) நீரின் இறுதித்துளியோடு நீங்கி விடுகின்றன.
இரு கரங்களைக் கழுகும்போது கரங்கள் செய்த (சிறு) பாவங்கள் அந்நீரோடு நீங்கி விடுகின்றன. இரு கால்களையும் கழுகவும்போது கால்களால் நடக்கும்போது செய்த (சிறு) பாவங்கள் நீரோடு நீங்கி விடுகின்றன. (அதனால்) பாவங்களிலிருந்து அவன் தூய்மை பெறுகிறான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்லிம்

ஒரு முஃமினான அடியான் வுழு செய்யும்போது வாய் கொப்பளித்தால் அவனது வாயிலிருந்து பாவங்கள் நீங்கி விடுகின்றன. நாசிக்கு நீர் செலுத்தினால் மூக்கினால் ஏற்பட்ட பாவங்கள் அகன்று விடுகின்றன.
முகத்தைக் கழுகினால் முகத்திலுள்ள (சிறு) பாவங்கள் இமைகளுக்குக் கீழுள்ள பாவங்கள் நீங்கி விடுகின்றன.
கரங்களைக் கழுகினால் நகத்திற்குக் கீழுள்ள பாவங்கள் உட்பட கையினால் ஏற்பட்ட (சிறு) பாவங்கள் நீங்கி விடுகின்றன.
தலையை மஸ்ஹு செய்தால் காது உட்பட தலையிலுள்ள (சிறு) பாவங்கள் நீங்கி விடுகின்றன.
பின்னர் தொழுகைக்கும் பள்ளிக்கும் அவன் நடக்கும் நடை நபிலாக அவனுக்கு ஆகிவிடுகிறது - நபிமொழி.
நூல் : முஅத்தா

யாராவது அழகுற (பூரணமாக) வுழு செய்தால் அவரது நகத்திற்கு அடியிலுள்ள பாவங்கள் உட்பட உடலிலுள்ள எல்லா (சிறு) பாவங்களும் நீங்கி விடுகின்றன.
மற்றொரு அறிவிப்பில்,
உதுமான்ரலியல்லாஹு அன்ஹு வுழு செய்துவிட்டு சொன்னார்கள். “எனது இந்த வுழுவைப் போன்றே ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழுச் செய்வதை என் கண்களால் பார்த்தேன்.“
யாராவது இவ்வாறு வுழுச் செய்தால் அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
பள்ளிக்காக அவர் நடந்து செல்வதும், அவரது தொழுகையும் அவருக்கு நபிலாக ஆகிவிடுகின்றன.
அறிவிப்பவர் : உத்மான் இப்னு அfப்பான் ரலியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்லிம்

நான் அறியாமைக் காலத்தில் வாழ்ந்தவன். மக்கள் வழிகேட்டில் வாழ்ந்தனர். சிலை வணக்கத்தால் அவர்களுக்கு எப்பயனும் இல்லை என எண்ணினேன் அப்போது மக்காவில் ஒரு மனிதர் நற்சேதிகளை கூறுவதாக அறிந்து வாகனம் ஏறி அவரது சமூகம் சென்றேன்.
அப்போது ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். “நபி அவர்களே! வுழுபற்றி தாங்கள் கூறியதை எனக்கும் சொல்லுங்கள்“ என்றேன். (அண்ணலார் கூறினர்)
“உங்களில் யாரும், வுழு செய்து வாய்கொப்பளித்து நாசிக்கு நீர் செலுத்தி - அவரது வாயிலிருந்தும், நாசியிலிருந்தும், முகத்திலிருந்தும் (சிறு) பாவங்கள் வெளியேறியே அல்லாது இல்லை“
அல்லாஹ் இட்ட கட்டளைப்படி முகத்தைக் கழுகினால் அவர் முகத்தின் (சிறு) பாவங்கள் நீருடன் தாடியின் ஓரம் வழியாக நீங்கி விடும்.
தன் இரு கரங்களையும் முழங்கை உட்பட கழுகினால் அவரது விரல்கள் வழியாக பாவங்கள் நீங்கி விடுகின்றன.
தலைக்கு மஸ்ஹு செய்தால் தலையின் பாவங்கள் ரோமத்தின் வழியாக நீருடன் நீங்கி விடுகின்றன.
காலைக் கழுகினால் கால் விரல்கள் வழியாக நீருடன் அதன் (சிறு) பாவங்கள் வெளியாகி விடுகின்றன.
பின்னர் எழுந்து தொழுது இறைவனைப் புகழ்ந்து அவனுக்கு தகுதியான இலட்சணங்களால் ஸ்தோத்திரம் செய்து, தனது உள்ளத்தை (அல்லாஹ் அன்றி வேறு எண்ணமின்றி) அவனுக்காக தூய்மைப்படுத்தினால் சகல (சிறு) பாவங்களையும் விட்டு நீங்கி அன்று பிறந்த பாலகனைப் போன்று ஆகி விடுகின்றான்.
அறிவிப்பவர் : அம்று இப்னு அபஸத் அஸ்லமீ ரழியல்லாஹு அன்ஹு


நூல் : முஸ்லிம்
(அல் முஹிப்புர் றஸூல்)

வுழுவின் சட்டம்

வுழுவின் சட்டம்