السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 15 November 2023

சேர் முகம்மது மாக்கான் மாக்கார்


 சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களும் பேராதனைப் பல்கலைக்கழக பள்ளிவாசலும்  


சேர் முஹம்மத் மகான் மாகார் இலங்கையின் புகழ்பெற்ற மாணிக்கக்கல் வர்த்தகர். கொழும்பு வெஸ்லி கல்லூரியில் பாடசாலைக் கல்வியைப் பூர்த்திசெய்தார். பின்னர் குடும்ப வர்த்தகமான மாணிக்கக் கல் வர்த்தகத்தில் ஈடுபட்டார். இவரது மாணிக்கக் கல் வர்த்தகம் பிரித்தானிய அரசகுடும்பத்திலும், உஸ்மானிய கிலாபத்திலும் பிரபலம்பெற்றிருந்தது. 1909ம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் 7ம் எட்வர் அவர்களால் பிரித்தானியாவுக்கு வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். 


அவரது சேவைகளை அறிந்த உஸ்மானிய கிலாபத்தின் சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களை கொழும்பு நகரின் துருக்கிக்கான 'கொன்ஸல் ஜெனரலாக' “Consul General”    நியமித்தார். கொன்ஸல் ஜெனரலாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு 28 வயது. இந்த பதவிக்கு கிழக்கு உலகில் இருந்து நியமிக்கப்ட்ட முதலாவது நபர் முஹம்மத் மகான் மாகார் ஆவார். 1903ம் ஆண்டு முதல் 1915ம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். துருக்கியையும் - மதீனா நகரையும் இணைக்கும் ஹிஜாஸ் ரெயில்வே Hijaz Railway திட்டத்திற்கு இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நிதி திரட்டி ஸ்தான்பூல் நகருக்கு அனுப்பிவைத்தார். 1907ம் ஆண்டில் துருக்கி வெளிவிகார அமைச்சரிடம் இந்தநிதி  கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு 12 புதிய சோனகத் தெருவில் இடம்பெற்றது. 


சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்கள் அவரது தாயாரும் முஸ்லிம் பெண்களின் கல்வியில் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அவரது தாயார் ஆமீனா உம்மா மாகான் மாகான் அவர்களே காலி பஹ்ஸதுல் இப்றாஹீமிய்யா அரபுக்கல்லூரியை ஸ்தாபித்தார்கள். இலங்கை முஸ்லிம் பெண்களின் கல்வியை மேம்படுத்த நீதியரசர்  அக்பர் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தார். கொழும்பு 12 பாதிமா மகளிர் கல்லூரியையும் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் செலவுலேயே நிர்மாணிக்கப்பட்டது. மனிங் அரசியல் திருத்தத்தின் கீழ் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு 1924ம் ஆண்டில் தெரிவுசெய்யப்ட்டார். 


இலங்கை முஸ்லிம்கள் தனி இனம் அல்ல என்று பிரித்தானியாவின் Royal Society of Londonஇல் வாதாடிய  Sir பொன்னம்பலம் ராமநாதனின் வாதங்களை முறியடிக்க சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் மூலம் ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டு பொன் ராமநாதனின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை நியாயமற்றவை என்று நிறுவினார். 


போராதனை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் சேர் முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் சொந்தப் பணத்தில் இருந்து நிர்மாணிக்கப்பட்டதாகும். போராதனை பல்கலைக்கழகத்தில் கற்ற முஸ்லிம் பெண் மாணவியருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து புலமைப்பரிசில்களை வழங்கினார். முஹம்மத் மாகான் மாகார் அவர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் பிரித்தானியாவின் மன்னரும் எலிசெபத் மகாராணியாரின் தந்தையுமான மன்னர் 6ம் ஜோர்ஜ் அவர்கள் ' Sir'     பட்டம்  knighthood வழங்கி  கௌரவித்தார் சேர் முஹம்மத் மகான் மாகார் அவர்களின் மூத்தத மகன் அஜ்வாத் மாகான் மகார் அவர்கள் இலங்கையின் முதலாவது மருத்துவத்துறை பேராசிரியர் ஆவார். 


முஹம்மத் மகான் மாகார் அவருக்கு துருக்கி அரசாங்கம் எபந்தி என்ற பட்டத்தையும் வழங்கிகௌரவித்தது. அவர் பயன்படுத்திய இராஜதந்திர உடை கொழும்பு 08 கிங்ஸி வீதியில் அமைந்துள்ள துருக்கி தூதரகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.


https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0767WipX6MVbv6YWuProzvTaam2pU4mWs22kkhCohMWBr8pKoGf2vzB8bwKb96viJl&id=100064695969099&mibextid=Nif5oz