காலி கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் !
காலியில் அமைந்துள்ள கச்சுவத்தை பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக இன்று ஞாயிற்றுக்கிழமை (19/11/2023) பிரகடணப்படுத்தப்பட்டது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது மேற்படி பள்ளிவாசல் இலங்கையின் பழமைவாய்ந்த மரபுரிமை சொத்தாக பிரகடணம் செய்யப்பட்டது.
இலங்கையில் காணப்படும் பழமைவாய்ந்த பள்ளிவாசல்களில் கச்சுவத்தை பள்ளிவாசலும் ஒன்றாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வபாத்தின் பின்னர் அவர்களது ஸஹாபாக்கள் இஸ்லாத்தின் தூதை உலகின் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் சென்றார்கள். அவ்வாறு இலங்கைக்கு இஸ்லாத்தின் தூதை எடுத்துவந்த தூதுக்குழுவுக்கு தலைவராக இருந்தவர்களே கச்சுவத்தை பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அப்துல் ரஹ்மான் வலீயுல்லாஹ் ஆவார். இவர்கள் இலங்கையில் காலடிவைக்க முன்னரே வபாத்தானதாகவும், அவர்களுடன் வந்த தூதுக்குழு அவர்களை தற்போது கச்சுவத்தை பள்ளிவாசலில் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஹிஜ்ரி 22இல் (கி.பி. 642) இங்கு வருகைதந்த செய்யிதினா அபூபக்கர் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, அப்போது யெமனை ஆட்சிசெய்த மன்னரின் (கவர்ணர்) மகனான சத்ருத்தீன் அவர்களும், அவருடைய தோழர்களும் இங்கு ஏற்கனவே காணப்பட்ட மக்பராவின் அருகில் ஹிஜ்ரி 27இல் (கி.பி. 647) இந்த பள்ளிவாசலை கட்டினார்கள். அப்போது குப்பா மற்றும் மினாரா இன்றி பள்ளிவாசல் கட்டப்பட்டது.
கச்சுவத்த என்ற பெயர் ஹஜ்ஜிவத்தை என்ற பெயரின் நீட்சியாகும். அதாவது ஹஜ்ஜி தோட்டம் என்பது இதன் தமிழ் அர்த்தமாகும். இஸ்லாத்தின் அறிமுகத்தின் பின்னர் தூர கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து புனித மக்கா நகருக்கு ஹஜ் செய்வதற்காக சென்ற ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜிவத்தையில் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுத்தாகவும்
வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
சீனாவின் மிங் வம்ச அரச குடும்பத்தின் (Ming dynasty) ஆலோசகர் அட்மிரல் செங் ஹே (Zheng He)அவர்கள் சீனாவில் இருந்து ஹஜ்ஜாஜிகளை கப்பல் மூலம் கி.பி 1400ம் ஆண்டு காலப் பகுதியில் (போர்த்துக்கேயர் இலங்கை வருவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) ஹஜ்ஜிக்காக அழைத்துச் சென்ற போது காலி ஹஜ்ஜிவைத்தைக்கு வருகை தந்ததாகவும் சுதேச சிங்கள மக்களும் இலங்கை முஸ்லிம்களும் அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் சீனாவின் வரலாற்றுக்குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், காலியின் கிரிப்ஸ் பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட மும்மொழி கல்வெட்டில் செங் ஹே (Zheng He) தொடர்பாகவும், ஒரு பள்ளிவாசல் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.
மலேசிய, இந்தோனேசிய, சீன ஹஜ்ஜாஜிகள் ஹஜ்ஜூவத்தை பள்ளிவாசலில் இருந்தே இஃராம் கட்டியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அல்குர்ஆனுக்கு முதலில் தமிழில் தப்ஸீர் எழுதிய இமாமுஸ் ஸைலான் செய்ஹ் முஸ்தபா பின் பாவா ஆதம் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் ஹஜ்ஜிவத்தை பள்ளிவாசலில் இருந்தே ஹஜ் பயணத்தை ஆரம்பித்தார்கள்.
தகவல் உதவி மற்றும் படம் : Vinuka Manitha Vidanapathirana , Fazhan Nawas , Manusha Nanayakkaara , Farhan Nizamdeen
தொகுப்பு: இப்ஹாம் நவாஸ்
Nawas Fb