போர்த்துக்கேயருக்கு எதிரான கடற்போரில் இலங்கை மன்னன் மாயாதுன்னைக்கு உதவிய ஷாஹூல் ஹமீத் வலியுல்லாஹ்வின் கப்பற்படை....!
=====================================
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் நாடுகாண் கடல்ப்பயணங்களிலும் பிறநாடுகளில் தமது காலணித்துவத்தை நிலைநாட்டுவதிலும் கடும் தீவிரமாக இருந்தனர். மேலும் இவர்கள் பிரதான கடல்வழிப் பயணப்பாதைகளை ஆக்கிரமித்து முழுமையாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனித்தனர்.
அக்காலத்தில் கப்பலோட்டுவதிலும் கடல்தாண்டிய வர்த்தக வாணிபங்களிலும் இஸ்லாமியர்களே முதன்மையானவர்களாக இருந்தார்கள். போர்த்துக்கேயரினால் முக்கிய கடல்வழிப்பயணப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது இஸ்லாமியர்களுடைய கப்பற்பயணங்களும் கடல்தாண்டிய வர்த்தக வாணிபங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதன் போது பாரத நாட்டில் வாழ்ந்த தெற்காசியாவின் ஆத்ம ஜோதி, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் வலியுல்லாஹ் அன்னவர்கள் போர்த்துக்கேயரின் அத்துமீறல்களை எதிர்கொள்வதற்காக கப்பலோட்டுவதில் நிபுணத்துவமும் போர்த்திறனும் வாய்ந்த மிகச்சிறந்த கடற்படையொன்றை உருவாக்கி வைத்திருந்தார்கள்.
இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆட்சியின் போது கோட்டையை நிர்வகித்த 6 ஆம் புவனேகபாகு மன்னன் போர்த்துக்கேயருடன் நட்புக் கொண்டிருந்தான். இதேவேளை சீதாவாக்கையை நிர்வகித்த மாயாதுன்னை மன்னனோ போர்த்துக்கேயருடன் கடும் பகைமை கொண்டிருந்தான். இதன்போது சீதாவக்கை இராஜ்ஜியத்தின் மன்னன் மாயாதுன்னை, திடீரென படையெடுத்து கோட்டை இராஜ்ஜியத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு கோட்டே ரஜமஹா விஹாரையில் வைக்கப்பட்டிருந்த புத்தபெருமானின் புனித தந்ததாதுவை எடுத்துக்கொண்டு சீதாவாக்கை மீண்டான். அக்காலத்தில் புத்தபெருமானின் புனித 'தந்த தாது' எனப்படுகிற புனித பல்/உடல்பகுதி எந்த இடத்தில் இருக்குமோ அங்கு தான் ஆட்சி அதிகாரம் அல்லது உத்தியோகபூர்வ ஆட்சி இருக்கும் என்பது ஐதீகமாகும். இதனால் அச்சமடைந்த 6 ஆம் புவனேக பாகு மன்னன் போர்த்துக்கேயரின் பாதுகாப்பை நாடினான்.
கோட்டை நிர்வாக மன்னன் போர்த்துக்கேயரிடம் பாதுகாப்புக் கோரியிருப்பதனை கேள்வியுற்ற சீதாவாக்கை மன்னன், போர்த்துக்கேயரினால் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சி தமக்கு உதவி வழங்குமாறு இந்தியாவின் கேரளாவில் இருந்த சாமோரியன்ஸ் எனப்படுகிற சாமுத்திரியர்களுக்கும், தமிழ்நாட்டின் நாகூரிலிருந்த ஷாஹூல் ஹமீத் வலியுல்லாஹ் அன்னவர்களின் கப்பற்படைக்கும் தகவல் அனுப்பினான்.
நாகூர் ஆண்டகை ஷாஹுல் ஹமீத் வலியுல்லாஹ்வின் கடற்படைகளுக்கு குஞ்சலி மரைக்காயர்கள் தளபதிகளாக இருந்தனர். "மரைக்காயர்கள்" என்போர்கள்தான் கடல்போக்குவரத்தில் கப்பல்களை அல்லது மரக்கலங்களை இயக்குபவர்களாக இருந்தார்கள். மாயாதுன்னை மன்னன் போர்த்துக்கேயருக்கு எதிராக தமக்கு உதவி புரியுமாறு கோரி அனுப்பிய தகவல் நாகூர் ஆண்டகையவர்களுக்கு கிடைத்ததும் நாகூர் ஆண்டகையின் கப்பற்படைகள் இலங்கையின் சிலாபம் கடற்பகுதிகளுக்கு விரைந்தன. அங்கு போர்த்துக்கேயக் கப்பல்களுடன் போர்தொடுத்து அவை தாக்கி அழிக்கப்பட்டன. இலங்கை மன்னன் மாயாதுன்னை போர்த்துக்கேயரிடமிருந்து நாகூர் ஆண்டகையின் கடற்படையினரால் பாதுகாக்கப்பட்டான்.
போர்த்துக்கேயருக்கு எதிரான கடற்போரில் நாகூர் ஆண்டகை ஷாஹுல் ஹமீத் வலியுல்லாஹ்வின் கடற்படை வீரர்களில் ஒருவர் உயிர்த்தியாகம் செய்தார். அவரது ஜனாசா சிலாபத்தில் அடக்கம் செய்யப்பட்டது மேலும் அவரது அடக்கஸ்தலம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. இது சிங்கள வரலாற்றாசிரியர்கள் தொகுத்த ஆதாரபூர்வமானதொரு வரலாறு ஆகும்.
தற்போது இந்தியாவின் நாகூரில் 467வது முறையாகவும் இலங்கையின் கல்முனையில் 202வது முறையாகவும் தீன் கொடியேற்றி ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகமவர்களின் நினைவுகள் கொண்டாடப்பட்டு வருகின்ற வேளையில் இப்பெரியார், இலங்கையில் போர்த்துக்கேயருக்கு எதிரான சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்திருப்பதனை எண்ணி இலங்கைவாழ் முஸ்லிம்கள் அனைவரும் இத்தருணத்தில் பெருமை கொள்வோம்.
-A.S.M. முஜாஹித்