தென்னிலங்கை மக்களின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிஞர் - செய்ஹ் யெஹ்யா அல்-யமானி ரஹிமஹுல்லாஹ் (ஹாஜியார் அப்பா)
இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிஞர்களில் யெமனில் இருந்த இலங்கைக்கு வந்த அறிஞர்களுக்கு பெரும் பங்கு உண்டு . அவர்களில் செய்ஹ் அஹ்மத் இப்னு முபாரக் மெளலானா ரஹிமஹுல்லாஹ், செய்ஹ் அப்துல்லா உமர் பாதிப் அல்-யமானி ரஹிமஹுல்லாஹ் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 18ஆம் நூற்றாண்டில் யெமனில் இலங்கைக்கு வந்த ஆன்மீக ஞானிகள் ஒருவராக செய்ஹ் இஸ்மாயீல் அல்-யமானி அவர்கள் அறியப்படுகிறார்கள். இவர்கள் வெலிகாமத்தில் (வெலிகம) குடியேறினார்கள். இவர்கள் இஸ்லாமிய பேரரசு காலப்பகுதியில் யெமனின் ஆளுநராக இருந்த ஸபீதிய்யி அல்-யமானி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை வழியில் செய்தினா அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியிலும், தாய் வழியில் செய்தினா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். செய்ஹ் இஸ்மாயீல் அல்-யமானி அவர்கள் தென்னிலங்கை மக்கள் "அரபி அப்பா" அறியப்படுகின்றார். ஒல்லாந்து ஆட்சியில் இறுதிப்பகுதியில் இலங்கைக்கு வந்த இவர்கள் காதிரிய்யா ஆன்மீக வழியமைப்பின் செய்ஹாக இருந்தார்கள். இலங்கையின் வெலிகாமம், திக்வெல்லை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, புத்தளம் , அக்கரைப்பற்று, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை,காத்தான்குடி, பொத்துவில், கிண்ணியா மற்றும் மன்னர் ஆகிய இடங்களில் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள். இவர்கள் கி.பி. 1846 (ஹிஜ்ரி 1262) ஆம் ஆண்டு வபாத்தானதுடன், வெலிகாமம் முஹியித்தீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் (புதுத்தெரு ஜும்ஆ பள்ளிவாசல்) அடக்கம் செய்யப்பட்டார்கள். செய்ஹ் இஸ்மாயீல் அல்-யமானி அவர்கள் மூன்று திருமணம் செய்தார்கள். அதில் முதலாவது திருமணத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற குழந்தையே செய்ஹ் யெஹ்யா அல்-யமானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஆவார்.
செய்ஹ் யெஹ்யா அல்-யமானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தென்னிலங்கை முஸ்லிம்கள் மத்தியில் "ஹாஜியார் அப்பா" என பரவலாக அறியப்படுகின்றார்கள். தென்னிலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அறிஞர்களில் ஒருவராக ஹாஜியார் அப்பா அவர்கள் அறியப்படுகிறார்கள். குறிப்பாக மாத்தறை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்தார்கள். இவர்களது தந்தையைப் போலவே இவர்களும் காதிரிய்யா வழியமைப்பின் செய்ஹாக இருந்தார்கள். மாத்தறை முஸ்லிம்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் இவர்களுக்கு பெரும் மரியாதை வழங்கினார்கள். தமது கரங்களால் புனித அல்-குர்ஆனை எழுதும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். இதனால் "கிராமன் காதிபீன்" எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்கள். இவர்களால் எழுதப்பட்ட புனித அல்-குர்ஆன் பிரதி ஒன்று இன்றும் மாத்தறை ஹாஜியார் அப்பா தைக்காவில் பாதுகாப்பட்டு வருகிறது. ஹாஜியார் அப்பா அவர்கள் ஐந்து தடவைகள் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். ஹஜ் கடமைக்காக புனித மக்காவுக்கு சென்ற வேளை பல இஸ்லாமிய அறிஞர்களை சந்தித்தார்கள். புனித மக்காவுக்குவுக்கு செல்வதற்காக இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு சென்றவேளை காயல்பட்டணத்தில் தைக்கா ஸாஹிப் வலீயுல்லாஹ் அவர்களை சந்தித்தார்கள். தைக்கா ஸாஹிப் வலீயுல்லாஹ் அவர்கள் அக்காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த இஸ்லாமிய அறிஞராக திகழ்ந்தார். ஸாஹிப் வலீயுல்லாஹ் அவர்கள் செய்கு முஸ்தபா வலீயுல்லாஹ் மற்றும் கசாவத்தை ஆலிம் புலவர் ஆகியோரின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஜியார் அப்பா அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். அவர்கள் முதலாவது மகளின் பெயர் ஆமீனா உம்மா. அவர்கள் மாத்தறை நகரில் பிரபல வியாபாரியான M.C. செய்ஹ் அப்துல் காதிர் அவர்களை திருமணம் செய்தார்கள். மாத்தறை "இஸ்ஸதீன் டவுன்" M.C. செய்ஹ் அப்துல் காதிர் அவர்களின் சொந்தக் காணியாகும். தென்னந் தோப்பாக இருந்த அவரது காணியே , பின்னர் "இஸ்ஸதீன் டவுன்" என்ற பெயரில் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. ஹாஜியார் அப்பா அவர்களது இரண்டாவது மகளின் பெயர் சித்தி கதீஜா. அவர்கள் M.C. அப்துல் ரஹ்மான் அவர்களை திருமணம் செய்தார்கள். இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு நியமிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் M.C. அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆவார். இவர்கள் 1889ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக ஆளுநர் கோர்டன் அவர்களால் நியமிக்கப்பட்டார். கொழும்பு மாநகர சபைக்கு பிரேரிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் உறுப்பினர் M.C. அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆவார். மேலும் மாநகர சபையின் முதலாவது முஸ்லிம் மாஜிஸ்திரேட் என்ற பெருமையையும் M.C. அப்துல் ரஹ்மான் அவர்களை சாரும்.
மாத்தறை முஸ்லிம்களின் ஆன்மீக மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த ஹாஜியார் அப்பா அவர்கள் ஜமாத்துல் அவ்வல் பிறை 25இல் அதாவது 1882 ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வபாத்தானார்கள். அவர்களின் ஜனாஸா ஜும்ஆ தொழுகைக்கு முன்னர் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களது ஜனாஸாவிற்கு மரியாதை செலுத்த இன மத பேதமின்றி பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டனர். ஹாஜியார் அப்பா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அன்றைய தினம் மாத்தறை நகரிலும், கடுவேகொட போன்ற அண்டியுள்ள நகரங்களிலும் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அவர்கள் தற்போது மாத்தறை ஹாஜியார் அப்பா தைக்கா அமைந்துள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இன்றைய நாள் ஹாஜியார் அப்பா அவர்களது நினைவு தினமாகும்.
தொகுப்பு: இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)








