السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday, 7 December 2023

செல்லுமிடமெங்கும் சிறப்பு

 




இன்றைய வாசிப்பில் ஆச்சரியமளித்த செய்தி, உலக சுற்றுலா பயணியான இப்னு பதூதா 7 ஆண்டுகள் இந்தியாவில் நீதிபதியாக  இருந்தார் என்பது.


உலக சுற்றுலா பயணியான இப்னு பதூதா தில்லிக்கு வந்த போது அப்போதைய தில்லியின் அரசர் முஹம்மது பின் துக்ளக் அவரை வரவேற்று சிறப்புச் செய்த்தோடு நிற்காமல் தனது நீதிபதியாகவும் அவரை நியமித்தார். இப்னு பதூதா 7 ஆண்டுகள் இந்தியாவின் நீதிபதியாக இருந்தார். 


அதில் ஒரு சோதனை ஏற்பட்டது. இப்னு பதூதா மரியாதை நிமித்தமாக சந்தித்த ஒருவர் அரசுக்கு எதிரான சதிகாரராக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் இப்னு பதூதாவும் சிறையில் அடைக்கப்பட்டார்.  அரசர் முஹம்மது பின் துகளக்கிடமிருந்து அல்லாஹ்வை தவிர வேறு யாரும் தன்னை காப்பாற்ற முடியாது என்றுணர்ந்து இப்னு பதூதா ஒர் வார காலம் நோன்பிருந்தார்.  அவரது பிரார்த்தனை வீண் போகவில்லை. சதிகாரர்களை தூக்கிலிட்ட அரசர் துக்ளக். இப்னு பதூதாவை விடுதலை செய்து அவருக்கு வெகுமதிகளை அள்ளிக் கொடுத்து சீனாவிற்கு தூதராக அனுப்பி வைத்தார். 


இப்னு பதூதாவின் அறிவாளுமைக்கு கிடைத்த வெகுமதி அது.  உலகை காணும் ஆவல் கொண்ட இப்னு பதூதாவுக்கு சிறை வாழ்க்கைக்குப் பிறகு தூதர் பதவி  சீனாவை காணும் வாய்ப்பு என இரண்டு லட்டுக்களை திண்ணும் பேறு கிடைத்தது. 


அவர் சீனாவுக்கு பயணப் பட்ட கப்பல் இடையில் உடைந்து போனது. மீணவர்களின் உதவியுடன் தப்பித்த இப்னு பதூதா மாலத்தீவுக்கு சென்று சேர்ந்தார். அங்கும் அவருக்கு நீதிபதி பதவி வழங்கப்பட்டது. 


அவர் பயணம் செய்த ஒவ்வொரு பகுதியிலும் அவரை ஆதரித்து அவருக்கு தமது பெண்களை மணமுடித்துக் கொடுத்து தங்களுடனேயே வைத்துக் கொள்ள அப்பகுதி மக்கள் ஆசைப்பட்டனர்.  அவர் இன்னொரு இடத்திற்கு புறப்பட்டு விடாதவாறு தடுக்க முயன்றிருக்கின்றனர்.   


இந்த தகவல்களின் பின்னணியில் மேலும் இப்னு பதூதாவை துலாவிச் செல்வது இனிய வாசிப்பு பயணமாக இருந்தது.


இப்னு பதூதா வின் பெயர் முஹம்மது. பதுதா என்பது அவரது தாயாரின் பெயர். மொரோக்கோவில் பிறந்த அவர் 21 வயதில் ஹஜ்ஜுக்காக பயணித்து வந்த போது உலகம் முழுவதையும் காணும் ஆவல் பிறந்த்து. ஹஜ்ஜை முடித்துக் கொண்ட பிறகும் இரண்டு ஆண்டுகள் மக்காவில் தங்களி அங்கு வரும் மக்களிடம் உலக விவரங்களை அறிந்து கொண்ட அவர் இஸ்லாமிய அரசர்களை காண அங்கிருந்து அப்படியே புறப்பட்டார். 24 வருடங்களுக்குப் பிறகு தனது தாய் நாட்டிற்கு திரும்பினார். 


இதற்கிடையில் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் ஏராளம் எனில் அவருக்கு கிடைத்த மரியாதைகளும் தாராளம். 

இத்தனைக்கும் காரணம் அவரது கல்வி தாகம். மொரோக்கோவிலேயே நீதிபதிகள் குடும்பத்தை சார்ந்த அவர் மாலிக்கி மத்ஹபின் மிகச் சிறந்த விற்பன்னர்களில் ஒருவராக இருந்தார்.  “ஒவ்வொரு நாளும் அறிவைத் தேடிப் பயணிப்பது வாழ்க்கையின் அடிப்படை கடமை என்று அவர் போதனை செய்தார். அதற்கேற்பவே அவர் காணச் சென்ற நிலப்பகுதிகள் ஒவ்வொன்றை பற்றியும் நுணுக்கமான செய்திகளை சேகரித்தார். 


அவர் பயணித்த. சேகரித்த செய்திகளை அப்போதே அவர் எழுதி வைக்க வில்லை. ஊருக்கு திரும்பிய பிறகு வாழ்வின் ஓய்வுப் பொழுதில் அவரது மாணவர் முஹம்மது பின் அல் ஜுஸா அல் குர்னத்தியுக்கு 11000 நாட்கள், 44 நாடுகளில்  75,000 மைல்கள் தான்பயணம்   சென்ற நாடுகளைப் பற்றிய நினைவுகளைத் துல்லியமாக கூறினார். அதை அவர் பதிவு செய்தார். 

அந்த நூலின் பெயர் تُحفة النُّظار في غرائب الأمصار وعجائب الأسفار என்பது இப்போது பிரபலமாக ரிஹ்லத்து இப்னு பதூதா என்று அழைக்கப்படுகிறது. ஸ்பெயினில் உள்ள  El Escorial  தொள் பொருள் கூடத்தின் அந்நூலின் கையேட்டு பிரதி ஒன்று இப்போதும் இருக்கிறது.

 

கற்றோருக்கு செல்லுமிட மெங்கும் சிறப்பு என்பதற்கு சான்றாக கூற முஹம்மது பின் பதூதாவும் பொருத்தமான ஒருவர்.


(புகைப்படத்தில் இப்னு பதூதாவின் பயணப்பாதை.  இப்னு பதூதாவின் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை. இது அவரது இறப்பிற்கு பிறகு 500 வருடங்கள் கழித்து எகிப்தில் லியோன் பென்னட் என்பவர் வரைந்த ஓவியம். )