السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Sunday, 21 January 2024

மெளலவி அப்துல் ஹமீத் பாகவி

Videos click here
 
தமிழ் உலகில் முதன் முதலில் திருமறைக் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்த அறிஞர் #ஷெய்க்_அப்துல்_ஹமீது_பாகவி பற்றிய‌ 

சிறு குறிப்பு..! 


திருமறைக் குர் ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெற‌வில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா...? 

ஆம் அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள்.


அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் ஷெய்க் அப்துல் ஹமீது பாகவி அவர்கள்.26.11.1876 ஆம் ஆண்டு பிறந்த அறிஞர் அவர்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேலூர் 

#பாக்கியாத்துஸ்_ஸாலிஹாத்_அரபிக்_கல்லூரியில் சேர்ந்து முதல் அணியில் மெளலவி பட்டம் பெற்றவராவார். 

அப்போது அவருக்கு வயது 17 ஆகும். 


மத்ரஸாவில் ஆரம்பக் கல்வியைத் தொடரும் சிறுவயதில் இருந்தே அல்லாஹ்வின் வேதத்தை மொழி பெயர்க்க வேண்டுமெனும் அவா அவரிடம் காணப்பட்டது.1906ம் ஆண்டு மெளலவி பட்டம் பெற்றவுடன் சுயமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.அந்தத் தொழிலின் மூலம் கிடைத்த வருமானத்தில் 

#இஸ்லாமிய_நூல்_பிரசுரச்_சங்கம் எனும் பெயரில் ஒரு அச்சகத்தை நிறுவினார்கள். அந்த அச்சகத்தின் மூலம் பல இஸ்லாமிய நூற்களை வெளியிட்டார்கள். 


1926ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் திகதி ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆனை தமிழாக்கம் செய்யும் உயர்ந்த பணியைத் துவக்கினார்கள். மூன்றாண்டு காலம் இடைவிடாத உழைப்பின் பின்னர் திருக்குர்ஆன் முதல் பாகத்தின் மொழி பெயர்ப்பு அரபி மூலத்துடனும் விரிவுரையுடனும் 19.02.1929ம் ஆண்டு வெளி வந்தது. 


தான் மொழி பெயர்த்த குர்ஆனை எடுத்துக் கொண்டு மவ்லவி அப்துல் ஹமீது அவர்கள் எல்லா அரபி மத்ரஸாக்களும் பிரயாணம் செய்தார்கள்.தனது மொழி பெயர்ப்பில் பிழை இருந்தால் சொல்லுங்கள் என ஒவ்வொரு மத்ரஸாவையும் நிர்ப்பந்தித்தார்கள். 


திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு வரலாற்றில், இப்படி ஒரு பரந்த முயற்சி நடந்ததாக நான் அறியவில்லை.  

"தமிழுக்கு வேதத்தை மொழி மாற்றம் செய்யக் கூடாது" எனும் மெளட்டீகத்தில் வாழ்ந்த அன்றைய உலமாக்கள்,மவ்லவி அவர்களின் தியாகத்தையும்,தூர நோக்கையும் கண்டு வியந்து போனார்கள் என்றே சொல்லலாம். 


ஆனாலும் ஆலிம்களின் சதியும் பொறாமையும் அவரைத் தொடரவே செய்தன‌.அதன் பயனாக அவர்களின் மொழியாக்கத்தின் முதல் பாகம் வெளியிடப்பட்ட பிறகு,சமுதாயம் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் வகையில் "இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்" எனும் அவர்களின் அச்சகம் செயலிழந்து போனது. அறிஞர் அவர்களுக்கு அன்றைய அறிவிலிகள் "வஹ்ஹாபி" எனும் பட்டப் பெயரைச் சூட்டி அவர்களைத் தூற்ற ஆரம்பித்தார்கள்.(இஸ்லாமிய கருத்துப் புரட்சி செய்யும் நன்மக்கள் இவ்வாறு தூற்றப்படுவது வழக்கமானது) 


தாம் மேற்கொண்ட அறப்பணியை நிறைவுக்குக் கொண்டு வருவதில் அவர்கள் எண்னற்ற சோதனைகளைச் சந்தித்தார்கள். 1938ம் ஆண்டு வரை தமிழக உலமாக்கள் தக்க காரணமின்றி அவர்களின் தர்ஜுமா பணியை எதிர்த்து வந்தார்கள்.  


இந்தக் கால கட்டத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்த மார்க்க அறிஞர் அப்துல் காதிர் ஹழரத் என்பவர்,பாகவி அவர்களை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று நிஜாம் மன்னரின் மாமனாராகிய

#நவாப்_நஸீர்_யார்_ஜங்_பஹாத்தூருக்கு அறிமுகப்படுத்தினார்.நவாப் ஸாஹிபின் பரிந்துரையால் மொழி பெயர்ப்பு மீண்டும் வெளிவரத்துவங்கியது. 


தனது மொழி பெயர்ப்புப் பணிக்கு பணம் தேவைப்பட்ட பொழுது அப்துல் ஹமீது மவ்லவி அவர்கள் இலங்கைக்கு வந்து தன்னந்தனியாக வசூல் செய்ய ஆரம்பித்தார்கள்.அந்நாட்களில் கொழும்பு மாநகரில் வணிகப் பிரமுகராகவும் வழக்கறிஞருமாகத் திகழ்ந்த 

#என்_எம்_எம்_ஹனீபா அவர்கள் இதற்கான முழுத் தொகையையும் கொடுத்திட முன் வந்தார்கள்.(அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்குவானாக) 


அதன் பயனாக பாகவீ அவர்களின் தமிழாக்கம் முப்பது ஜுஸ்உகளும் "தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்" எனும் பெயரில் முழுமையாக வெளி வர ஆரம்பித்தது. 

தர்ஜமாவுக்கு எதிராக ஆரம்பத்தில் போர் கொடி தூக்கியவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.பின்னர் மொத்த சமுதாயமும் மொழி பெயர்ப்பை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது. 


கடுமையாக எதிர்த்த உலமாக்கள் அவர்களின் மொழி பெயர்ப்பை விலை கொடுத்து வாங்கி வாசிக்க ஆரம்பித்தார்கள். தனது 17ம் வயதில் அல்லாஹ்வின் வேதத்தை தமிழாக்கம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்ட அப்துல் ஹமீது பாகவி அவர்களின் ஆசை அன்னார் 70 வயதை அடைந்து விட்ட பொழுதே முழுமையாக நிறைவேறியது. 


சுப்ஹானல்லாஹ்...! 

அன்னாரின் இடை விடாத முயற்சியும், தஃவாக் களத்தில் சோதனைகளைக் கண்டு அசராத தைரியமும் எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது. 


பாகவி அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்காக அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு அவரே மொழி பெயர்த்த தர்ஜமாவுக்கு அவரே வசூல் செய்து அவரே பிரிண்ட் பண்ணி அவரே விற்ற அந்த முயற்சியும் புரட்சியுமானது மொழியாக்கத்துறையில் ஒரு சாதனையாகவே பார்க்கப்பட வேண்டியதாகும். 


இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமும் இருக்கின்றது. அதாவது இன்று "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனும் வார்த்தைக்கு "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்" என அதிகமானோர் அர்த்தம் செய்வதை நாமனைவரும் நன்கறிவோம். உலமாக்கள் உட்பட யாரும் இதில் விதி விலக்கில்லை.ஆனால் இந்த அழகிய மொழி பெயர்ப்பை முதன் முதலில் செய்தவர் மவ்லவி அப்துல் ஹமீது பாகவீ அவர்கள் தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். 


தனது வாழ்நாளை அல்லாஹ்வின் வேதத்தை மொழியாக்கம் செய்வதிலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஐம்பது லட்சம் மக்களுக்கு அந்த மொழி பெயர்ப்பைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதிலும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த அந்தப் பேரறிஞரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.


Information:-

Islam is the way of life(Face Book Page)