மௌலவி எம். ஏ. எம் அஸ்மிகான் (முஅய்யிதி)
றஜப் மாதம் பிறை இருபத்தி ஏழில் நோற்கப்படும் நோன்புக்கே மிஃறாஜ் நோன்பு எனப்படுகிறது. ஹதீஸ்களில் மிஃறாஜ் நோன்பு என நேரடியாக கூறப்படாவிட்டாலும் றஜப் மாதம் பிறை 27ல் நோன்பு நோற்கும் படி பல ஹதீஸ்கள் கூறப்பட்டுள்ளன. மக்கள் அது மிஃறாஜ் இடம்பெற்ற நாளாக இருப்பதால் அதனை மிஃறாஜ் நோன்பு என அழைக்கின்றனர்.
அபூ ஹுரைரா றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
யார் றஜப் மாதம் இருபத்தி ஏழாவது நாள் நோன்பு நோற்கிறாரோ அவருக்கு அல்லாஹு தஆலா 60 மாதங்கள் நோன்பு நோற்ற நன்மையை எழுதுகிறான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
இந்த ஹதீஸை இமாம் அபூ மூஸா அல் மதீனி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவர்களது 'பழாயிலுல்லயாலி வல் அய்யாமி' என்ற நூலில் ஷஹ்ர் இப்னு ஹவ்ஸப் வாயிலாக பதிவு செய்திருப்பதாக அல் ஹாபில் இறாகி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தஹ்ரீஜுல் இஹ்யா (2:209)ல் கூறியிருக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஹஸனுன் லிதாதிஹீ தரத்தைச் சார்ந்த ஆதாரபூர்வமான ஹதீஸாகும் என அபூ உமர் அஸ்ஸுலைமானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியிருக்கிறார்கள்.