السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 28 February 2024

காலம் மாறலாம்

 

காலம் மாறலாம், காட்சிகளும் மாறலாம்,தெரிந்துகொள்வோம் 

================================


யெமென் அரசர்களில் ஒருவரான வாயில் பின் ஹஜர் அல்ஹழ்ரமி நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்கிறார். யெமெனில் விட்டு வந்திருக்கும் நிலத்திற்கு ஈடாக ஒரு நிலப்பகுதியை அவருக்கு நபிகளார் பரிசாக வழங்கினார்கள்.


அந்த நிலம் எங்கே உள்ளது? என்பது குறித்து வழிகாட்ட, முஆவியா (ரலி) அவர்களை நபிகளார் கூடவே அனுப்பி வைத்தார்கள். அப்போது முஆவியா (ரலி), செருப்பு அணிவதற்குக்கூட வசதியின்றி கடும் ஏழ்மையில் இருந்தார்.


வாயில் ஒட்டகத்தில் பயணிக்க, முஆவியா (ரலி) அருகே நடந்து வருகிறார். இருவருக்கும் நடந்த உரையாடல்...


முஆவியா (ரலி): "ஒட்டகத்தின் பின்னால் என்னையும் அமர வையுங்களேன்''.


வாயில்: "அரசர்களின் பின்னால் அமரும் அளவுக்கு உமக்குத் தகுதி இல்லை''.


முஆவியா (ரலி): "எனில், உமது செருப்பையாவது தாரும்''. 


 வாயில்: "அரசர்களின் செருப்பை அணியும் அளவுக்கு உமக்குத் தகுதியும் இல்லை. வேண்டுமெனில், ஒட்டகத்தின் நிழலில் நடந்து வாரும்''.


காலம் மாறியது. காட்சியும் மாறியது.


தேசத்தின் கலீஃபாவாக முஆவியா (ரலி) மாறுகிறார். வாயிலுக்கு அப்போது 80 வயதிருக்கலாம். முஆவியாவைச் சந்திக்க நாடி சிரியாவுக்கு வருகிறார் வாயில். அவையில் நுழைகிறார். அரியணையில் அமர்ந்து இருந்த முஆவியா (ரலி) எழுந்து வந்து, வாயிலை வரவேற்று, தன்னுடைய அரியணையில் அமர வைத்தார். 


ஒட்டகத்தின் நிழலில் நடக்கச் சொன்ன நிகழ்வை நினைவூட்டி, "அந்த முஆவியாதான் நான்'' என்றார். பின்னர் வெகுமதிகள் வழங்கினார்.


கட்டுப்படுத்த முடியாமல் வழிந்தோடிய கண்ணீர் துளிகளினூடாக வாயில் கூறினார்: "வேண்டாம்! என்னைவிட தகுதி வாய்ந்தவருக்கு இதைக் கொடுங்கள். இருந்தாலும் உமது பொறுமையைப் பார்த்தபின் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்... அந்த நாள் மீண்டும் திரும்பி வந்தால், உம்மை எனது தோள்களில் சுமப்பேன்''.


இங்கே செழிப்பும் நீடிப்பதில்லை. ஏழ்மையும் நீடிப்பதில்லை. பொறுப்பும் நீடிப்பதில்லை. பதவியும் நீடிப்பதில்லை.


எனவே, சுற்றியுள்ள மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்! ஏனெனில், உலகம் நிற்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது. நிலமை எப்போதும் ஒரேபோன்று இருப்பதில்லை.


ஆட்சிகள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால் இஸ்லாமிய சகோதரத்துவம்.. மாறவே மாறாது! மாறவும் கூடாது!!


"காலத்தை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம் (குர்ஆன் 3:140)


நூஹ் மஹ்ழரி 

Nooh Mahlari