السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 7 January 2026

திருக்குர்ஆன் விளக்கம் 15

 


*திருக்குர்ஆன் விளக்கம்* 

••••••••••••••••••••••••••••••••

மௌலவி, பாஸில், *ஏ, எல், பதுறுத்தீன்,* ஷர்க்கி, பரேலவி, ஸூபி, காதிரி, நக்ஷபந்தி.

•••••••••••••••••••••••••••••••••

              தொடர்: 15

              --------------


اولئك الذين اشتروا الضللة بالهدي فما ربحت 

 تجارتهم وما كانوا مهتدين .


2- 16. இவர்கள் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை வாங்கிக் கொண்டுள்ளனர், அவர்களின் வியாபாரம் இலாபம் தராது ! அவர்கள் நேர்வழி பெறவுமில்லை; 

••••••••••••••••••••••••••••••••••


தொடர்பு: 


இதற்கு முன் முனாபிக்குகளின் சில செயல்களைப் பற்றி விளக்கப்பட்ட பின், இந்த அறிவிலிகள் தங்களைப் புத்திசாலிகளாகக் கருதிக் கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டது, இப்போது அதை மிகச்சிறந்த உதாரணத்தின் மூலமாகக் கூறி அவர்களுக்கு நன்கு புரியவைக்கப்படுகின்றது, 

 அல்லது,இவ்வாறும் கூறலாம்,


முந்திய திருவசனங்களில் முனாஃபிக்குகளின் கேடுகள் விளக்கப்பட்டன, இங்கு அதன் முடிவு கூறப்படுகின்றது, ஒரு வியாபாரிக்கு அவரின் வியாபாரத்தின் தவறுகளைச் சுடடிக்காட்டிய பின், உமது மூலதனத்தோடு உமது வியாபாரம் திவாலாகி விட்டது என்று கூறுவது போன்றுள்ளது, 

 

இறங்கிய காரணம்: 

-------------

 தூய எண்ணத்தில் ஈமான் கொண்ட பின், காபிராகிப் போனவர்கள் விடயதில் அல்லது, ஆரம்பத்திலிருந்து வேதங்களைப் படித்து அதில் குறிக்கப்பட்ட இறுதி நபியின் சிறப்புக்களைப் படித்து ஈமான் கொண்டிருந்த யஹூதிகள் மீது இறங்கியது; இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் நபியாக வருகை தந்த போது அன்னாரை மறுத்து சிலர் வெளிப்படையாக காபிரானார்கள்,


 ;சிலர் முனாஃபிக்குகள் விடயத்தில் இறங்கியதுஎன்கின்றனர், 

;அல்லது அவர்களுக்கு தெளிவான புத்தி வழங்கப்பட்டு, தக்க ஆதாரமும் நிறுவிக் காட்டியும் அறிவு ரீதியாகவும், நியாயத்தோடும் நடந்து கொள்ளாமல் முரண்டு பிடித்து வழிகெட்ட அனைத்துக் காபிர்கள் விடயத்தில் இறங்கியது என்கின்றனர். 


அந்தக் கூட்டம் اؤلئك என்பது,ஒன்றைச் சுட்டிக்காட்டும் பெயர்ச்சொல்(சுட்டுப் பெயர்) முஸ்லிம்களை விட்டும் அன்னியமாகிப் போன முனாபிக்குகளின் பண்புகளை இவ்வாறு குறிப்பிட்டுக் கூறப்படுகின்றது, கற்பனையில் இருக்கும் பொருட்களைக் குறித்து சுட்டிக்காட்டியும் கூறப்படுவதுண்டு, இங்கு முஸ்லிம்களை விட்டும் தரத்தில் வெகுதூரம் விலகிச் சென்றவர்களை ச்சுட்டிக்காட்டப்படுவதால்தான் தூரத்தைக்குறிக்கும் اؤلئك என்ற சொல் கையாளப்பட்டுள்ளது, 


ஒரு விடயத்தில் விருப்பமின்மை மறுவிஷயத்தில் ஆர்வம் காட்டுவதற்கு اشتراء என்ற சொல்லைப் பாவிப்பது முண்டு, ஏனெனில், நேரிய வழியில் செல்வதும், ஈமானை ஏற்றுக்கொள்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் அடிப்படையான பர்ழாகும், காபிர்களும், முனாபிக்குகளும் ஷைத்தானின் வழிகேட்டைக்கற்றுக்கொண்டு அந்தக் கடமையை விட்டுவிட்டனர், ஆகவேதான் ஹிதாயத்தை விட்டு விட்டு வழி கேட்டை தேர்வுசெய்து கொண்ட இந்த மக்களை கொடுக்கல், வாங்கல் செய்தவர்கள் என்ற உதாரணத்தின் மூலம் விளக்கிக் கூறப்படுகின்றது, 


வழிகேடு الضللة என்பதற்கு பல பொருட்கள் உள்ளன.


 1- அநியாயம் செய்தல்,


2- நடுநிலை தவறி தீவிரமாகவும், தாழ்ந்தும் செல்லல், 


3- நேர்வழியைத் தொலைத்து வழிதவறல்,


இங்கு மார்க்கத்தைத் துறந்து மார்க்க மற்றவைகளைத் தேர்வு செய்வதைக் குறிக்கும், இதற்குப் பெயர்தான் வழிகேடாகும்,  

 இந்த ضللة என்ற சொல்லை நபிமார்கள் விடயத்தில் பாவிக்கப்பட்டால், தெய்வீகக் காதலில் ஈர்ப்புப் கொண்டவர், ஒன்றில் கவரப்பட்டவர் உள்ளிட்ட பொருளைக்கொடுக்க வேண்டும், 


 நபிமார்களை வழிகேடர்கள் என்று கூறுவது கொடிய குற்றமும் , வழிகேடுமாகும், இது தொடர்பாக " "நபிமார்களின் பரிசுத்தம் " என்ற தலைப்பில் தனியான ஒரு நூலை நாம் எழுதி சமூகவலைத்தளங்களில் முழுமையாகப் பதிவு செய்துள்ளோம் 


நேர்வழி هداية என்பதற்கான விரிவான பொருளை பாத்திஹா சூறத்தின் விளக்கத்தில் கூறியுள்ளோம்.


وَمَا كَانُوا مُهْتَدِين


என்பதற்கு இரண்டு பொரூளைக்கூறமுடியும், 


1- அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த வியாபாரத்தைப் பற்றி அறியாதவர்களாக இருந்துள்ளார்கள். ஆகவேதான் , சம்பாதிப்பது எப்படி என்ற அடிப்படையே இவர்களின் கையை விட்டும் போய்விட்டது, அப்படியிருக்க இலாபம் எப்படி வரும், ?


2- இவர்கள் இந்த வியாபாரத்தில் வழிகாட்டுதலை ப் பெறவில்லை, 

ஏனைய வியாபாரங்களில் உற்சாகத்தோடு காரியம் ஆற்றுகின்றனர், இந்த வியாபாரத்தில் முழு வெற்றியடைவதற்குப் பதிலாக அடிப்படை மூலதனத்தை யே இழந்து திவாலாகிவிட்டார்கள்.


இத்திருவசனத்தின் சாரம் வருமாறு,


மனிதனுக்கு அறிவு அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது. நல்லதும், கெட்டதும் அவர்களுக்கு முன்னால் இருக்கின்றன; தனது அறிவைப் பாவித்து நல்லதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; தீயதிலிருந்து தவிந்திருக்க வேண்டும், இந்த முனாஃபிக்குகள் தங்களுக்குள் தீய குணங்களை உருவாக்கி எதார்த்தமான சத்திய ஒளியை அணைத்து விட்டு நிரந்தர சோதனைக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர்;


தவ்ஹீதின் கலிமாவை உலகாயுதத்தைச் சம்பாதிக்கும் கருவியாக ஆக்கிக் கொண்டனர், மறுமையின் நிஃமத்துக்களுக்கு முன்னால் இவை அற்பமாகும்; ஆனாலும், புத்தியையும், தவ்ஹீதுக்குரிய கலிமாவையும் உலகத்திற்காகவே செலவழித்து அதில் மகிழ்ச்சியு மடைந்து கொண்டனர் , 


;;இவர்கள் விலைமதிப்பற்ற இரத்தினத்தைக் கொடுத்து கூளாங்கல்லை வாங்கியவர்கள் போன்று ஆகிவிட்டனர்; பெறுமதி மிக்கதை கொடுத்து பெறுமதி இல்லாத அற்பத்தனமானதைப் பெற்றுக் கொண்டனர்; இவர்கள் வாணிபத்தின் அடிப்படை கோட்பாட்டிலிருந்து விலகி திவாலாகிப்போன அபாக்கியவான்களாவார்கள்.


( தற்காலத்திலும் இவர்களை ஒத்த ஒரு ஆன்மீகம் பேசுவதாகக்கூறிக்கொள்ளும் ஒரு கூட்டம் இருக்கின்றது, இவர்கள் கலிமாத்தைய்யிபாவை தங்களின் ஆடம்பர வாழ்வுக்கும் , பொருளீட்டுவதற்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர், நேர்வழி இதுதான் என்பதை அறியாமல் உலகாயுதக் கவர்ச்சியில் மோகம் கொண்டு அலைகின்றார்கள். இதன் மோகத்தால் நேர்வழியை யும், வழி கேட்டையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத மூடர்களாகிவழிகெட்டார்கள்.) 


பயன்'


இத்திரு வசனத்திலிருந்து بيع تعاطي பரிமாற்ற வியாபாரம் ஆகும் என்பது தெரியவருகின்றது, அதாவது, வாயால் மொழியாமல் வாங்கிக் கொள்வது, மார்க்கத்தில் ஏதாவது பொருளை வாங்குவது 


முனாபிக்கீன்கள் வாயால் கொடுக்கல் , வாங்கல் பற்றி எந்த வார்த்தையையும் மொழியாமல்ஹிதாயத்தை விட்டுவிட்டு வழி கேட்டைத் தேர்வு செய்து கொண்டனர், இதை திருக்குர்ஆன் " வாங்குதல் " என்று கூறுகின்றது, இதனால், ஒருவர் பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கியதை விற்றவர் பொருந்திக் கொண்டால் , வியாபாரம் கூடிவிடும் என்பதை புரிந்து கொள்கின்றோம், 


எவராவது ஒருவர் மிகப்பெரிய உலகியல் பிரயோசனங்களைத் துறந்துவிட்டு சாதாரண மார்க்க ப் பயனை அடைவாராயின், அவர் வெற்றிக்குரிய வியாபாரியாவார், இதற்கு மாற்றமாக நடப்பவர் முட்டாள்! இந்த உலகத்தின் ஒட்டுமொத்த பயன் ஆகிறத்திற்கு முன் தூசாகும்.


எவராவது ஒருவர் மார்கரீதியான காரியத்தை முகஸ்த்துதிக்காக காரியமாற்றுபவன் அறிவீனன், இவன் முனாபிக்குகளைப் போன்று மக்களை திருப்திப் படுத்த திருக்கலிமாவை மொழிபவனாவான்.ஏனெனில்மார்க்க விடயத்தில் அல்லாஹ்வையும், இன்னும் றஸூலையும் திருப்திப்படுத்தும் மார்க்க விடயங்கள்தான் பெறுமதியானவை,  


எவன் சுன்னத்தானவையை நிறைவேற்றிக் கொண்டு வாஜிபான, பார்ழானவையில் பராமுகமாக இருப்பானாயின், அவனும் முட்டாளாவான்; 


சிலர் அதிகளவில் வழீபாக்கள்,அவ்றாதுகளை ஓதுவார்கள்; கந்தூரி; ஸியாறம் உள்ளிட்டவையில் ஆர்வம் காட்டுவார்கள்; ஆனால், கடமையான தொழுகை, ஸக்காத்; நோன்பு உள்ளிட்டவையில் கவனமில்லாமல் இருப்பார்கள்; இவர்களும் கடுமையான குற்றவாளியாவார்கள்;

( தப்ஸீர் றூஹுல்பயான்).


 கடமையான தொழுகை விதையைப்போன்றது, நபில்கள் அதன் பயனாகும், விதையைத் தவிர்த்துவிட்டு பயனை எதிர்பார்ப்பவன் எப்படி புத்திசாலியாக இருப்பான்?,எனவே,கடமையை விட்டு விட்டு உபரியானதைச் செய்பவன் புத்திசாலியாக ஒருபோதும் 

இருக்க மாட்டான்.


நிர்பந்தத்தில் செலவு செய்யும் நற்காரியத்திற்குக்கூலி கிடைக்க மாட்டாது, ஒரு மனிதன் மன விருப்பத்தோடும், மகிழ்ச்சியாகவும் செய்யும் போது தான் நன்மை கிடைக்கும், .

 முனாபிக்குகள் கலிமாவையும், தொழுகையையும் நிர்பந்தத்தால் செய்த காரணத்தால்தான் அவற்றிலிருந்து எந்தவிதமான பயனையும் அவர்களால் பெற முடியவில்லை. 


விருப்பம் இபாதத்திற்குரிய உப்பாகும் ;சூரியனும், சந்திரனும் நிர்பந்தத்தால் சுற்றுகின்றன; ஆகவே ,அவற்றிற்கு எவ்வித பயனும் கிடையாது!


ஸூபிஸ விளக்கம்: 


மனிதனுக்கு இரண்டு ஹிதாயத்துக்கள் அவசியமாகும்


1- ஆலம் அர்வாஹில் கிட்டிய இயற்கையான வழிகாட்டல், (فطرة) இந்த வழிகாட்டலில்தான் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கின்றது,


2- உலகத்தில் கிடைக்கும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் உறவினால் முயன்று சம்பாதித்துக்கொள்ளும் ஹிதாயத் 


ஒருமனிதன் இவ்விரண்டு ஹிதாயத்துக்களையும் இந்த உலகத்தில் பெற்றுக்கொள்வானாயின், அவனுக்கு ஒளிக்கு மேல் ஒளிதான், ஒருவர் இரண்டாவது ஹிதாயத்தை இழந்தால், முதல் ஹிதாயத் அவருக்கு வீண், சூரியனும், கண்ணொளியும் சேர்ந்து பிரயோசனத்தை வழங்குகின்றன, சூரியன் ஒளியைக் கொடுத்து, கண்ணில் ஒளி இல்லையாயின், , அவரால் எதையும் பார்க்கமுடியாது,


கண்ணில் ஒளியிருந்து , மற்றுமொரு ஒளியைப்பெற்றுக்கொள்ள வில்லையாயின், அவர் இருட்டில்தானிருப்பார், அவரும் பார்வையை இழந்தவராவார்,


 இந்த முனாபிக்குகளுக்கு இயற்கையான முதல் ஹிதாயத் இருந்தும், முஸ்தபா மாநபியின் ஒளியிலிருந்து விலகியிருந்ததார்கள், இந்த இயற்கையான ஹிதாயத்தைத் தவிர்த்துவிட்டு வழிகேட்டை எடுத்துக்கொண்டார்கள், ஆகவே , இந்த வியாபாரத்தில் வெற்றியில்லை.