السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Wednesday, 7 January 2026

பல்கீஸ் ராணி


 ஸுலைமான் நபியின் அரண்மனையில் ஸபஃ தேசத்தின் ராணி நுழைந்தபோது, கெண்டைக் கால்களுக்கு மேல் தமது ஆடையை உயர்த்திய செயலை குர்ஆன் பதிவு செய்துள்ளது.


குர்ஆன் பதிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த செயலா அது?


ஆம். அவர் அரண்மனைக்குள் நுழைந்தபோது, அங்குள்ள கண்ணாடித் தரையை ஓடும் நீர் என்று கருதினார். அதனால் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே, தன்னிச்சையாகவும், தற்செயலாகவும் கெண்டைக் கால்கள் வரை தமது ஆடையை உயர்த்தினார்.


ராணியின் குணத்தையும் உன்னத ஒழுக்கத்தையும் குர்ஆன் இங்கே பதிவு செய்கிறது. 


உடல் வனப்பை வெளிப்படுத்துவதற்காக ஸுலைமான் நபியை அவர் அணுகவில்லை. மாறாக, அறிவாற்றலுடன் அணுகினார்.


தமது தோற்றத்தையும் வசீகரத்தையும் நம்பி அவர் அங்கே வரவில்லை. மாறாக, தமது அரசியல் சக்தியை நம்பி வந்தார்.


பகட்டுக்காகவோ அலங்காரத்துக்காகவோ அவர் அங்கே வரவில்லை. மாறாக, வலிமையான ஓர் உரையாடலுக்காக வந்தார்.


இருப்பினும், அரண்மனை மீதான ஈர்ப்பு ஒரு கண நேரம் அவரை திசை திருப்பியது. இதனால் தன்னை அறியாமலேயே அவர் தன் ஆடையை சற்று உயர்த்தினார்.


அது கண்ணாடி மாளிகையின் தரை என்று அவரிடம் கூறப்பட்டபோது, ஸுலைமான் (அலை) அவர்களின் மகத்துவத்தை அவர் உணர்ந்தார். உடனே கூறினார்:


"என் இறைவனே! (இன்றுவரை) எனக்கு நானே கொடுமை புரிந்துகொண்டிருந்தேன். இனி நான் ஸுலைமானுடன் சேர்ந்து அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கு அடிபணிகிறேன்”. (27:44)


இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னரே அவருடைய ஆடை எப்படி இருந்தது என்பதை அல்குர்ஆன் இங்கே விவரிக்கிறது.


அடக்கமும், வெட்கமும் மிக்கதாகவும், ஆடம்பரத்தை வெறுப்பதாகவும், கெண்டைக் கால்கள் வரை மறைக்கப்பட்டதாகவுமே இருந்துள்ளது.


பெண்களின் இயல்பு நிலையே அடக்கம்தான். கெண்டைக் கால்களுக்கு மேல் ஆடையை உயர்த்துவது ஒழுக்கமின்மை, வெட்கமற்ற செயல்.


ஆபத்தும், அருவருப்பும் ஏற்படும்போது நடைபெறும் தன்னிச்சையான தற்செயல்.


ஆனால், இன்று..?


பல பெண்கள் கெண்டைக் கால்களுக்கு மேல் உயர்த்தியவாறுதான் ஆடை அணிகிறார்கள். அது ஆபத்துக்காகவோ, அதிர்ச்சிக்காகவோ அல்ல. 


மாறாக அழகு, ஃபேஷன், கலாச்சார மோகத்தால் ஈர்க்கப்பட்டு செய்கிறார்கள். அதுதான் நாகரிகம், முன்னேற்றம் என்று நம்புகிறார்கள்.


அடக்கமும் நாணமும் பெண்களுக்கே உரித்தான ஓர் உள்ளுணர்வு. அதுதான் இயற்கையானது! அதுதான் அழகானது!


அதுதான் நீடித்து நிற்கும் அலங்காரமே தவிர, ஆடையை உயர்த்துவது அல்ல!


✍️ நூஹ் மஹ்ழரி

08.01.2026