السلام عليكم ورحمة الله وبركاته

எமது இணையத்தளத்திற்கு வருகை தந்துள்ள தங்களை அன்போடு வரவேற்கின்றோம்.எமது வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்திடுங்கள்

Thursday 6 December 2018

ஏறாவூர் கங்கை முதலி வைத்தியர் பரம்பரை

ஏறாவூர் கங்கை முதலி வைத்தியர் பரம்பரை
கண்டியைக் குண்டசாலை செல்லம் குமாரயா (Playboy king) என்ற பிரபல்யமான புனைப் பெயரைக் கொண்ட சிங்கள அரசர் அவரது 17 ஆவது வயதில் இருந்து ஆட்சி செய்துவந்தார். இவரது இயற்பெயர் வீர பராக்கிரம நரேந்திர சிங்ஹ ஆகும்.1707 ஆம் ஆண்டிலிருந்து 1739 ஆம் ஆண்டுவரையான 32 வருடங்கள் இவரது ஆட்சி நிலவியது.அக்காலத்தில் குண்டசாலையின் இளவரசர் என்று இவர் அறியப்பட்டார்.இலங்கையை ஆக்கிரமித்திருந்த டச்சுப் பேரரசுடன் சமரசம் செய்து கொண்டும், அனைத்து மதத்தவரோடும் சினேகபூர்வமான உறவை வலுப்படுத்திக்கொண்டும் இவர் தனது ஆட்சியை நிலைப்படுத்தி நடாத்தி வந்தார். இவரது தந்தை விமலதர்மசூர்ய 2 இன் மறைவையடுத்தே செல்லம் குமாரயா அரசரானார்.இந்த மன்னனுடைய மனைவி மதுரையைச் சேர்ந்த நாயக்க வம்சத்தைச் சேர்ந்த இளவரசியாகும்.
இவ்வரசனின் மனைவிக்கு சுகவீனம் ஏற்பட்டது. பலரிடம் வைத்தியம் செய்தும் பலன் கிடைக்கவில்லை. ஒரு சிறந்த முஸ்லிம் வைத்தியர் இருக்கிறார், அவரைக் கூட்டி வந்து தேவிக்கு வைத்தியம் பார்ப்போமா? என்று மந்திரி ஒருவர் அரசனிடம் கேட்டார்.
அந்த வைத்தியர் எனது மனைவிக்கு வைத்தியம் பார்க்கலாம் என்று சம்மதித்த அரசர்,அவரது மனைவியைப் பார்க்காமலும், தொடாமலும் மருந்து செய்யவேண்டும் என்ற நிபந்தைனையை விதித்தார். இந்த நிபந்தனை யூனானி மருத்துவருக்குத் தெரிவிக்கப்பட்டது.
நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அக்காலத்தில், நோயாளியின் கையைப் பிடித்து நாடியோட்டத்தை அறியாமல் நோயையோ நோயின் அறிகுறியையோ கண்டு பிடிக்க முடியாது, மருந்தும் கொடுக்க முடியாது என்று தெரிந்திருந்தும் மருத்துவர் அரசரின் நிபந்தனைக்கு உடன்பட்டார்.
வைத்தியர் அரண்மனைக்கு அழைத்துவரப்பட்டார்.அரசி ஒரு திரைக்கு அப்பாலும் வைத்தியர் இப்பாலும் இருத்தப்பட்டனர். வைத்தியர் நீண்ட நூலைக் கொடுத்து அதன் ஒரு முனையை அரசியின் கையில் கட்டிவிட்டு மறு முனையைத் தனது கைக்குத் தருமாறு சொன்னார். அரசியின் தோழிகள் அதனைச் செய்தனர்.
நூலில் நுனியை தொடுகை மூலம் பரிசோதித்த வைத்தியர், இது இரண்டு கால் மனிதரின் நாடியோட்டமல்ல நாலுகால் பிராணியின் நாடியோட்டம் போல தெரிகிறதே என்று கூறினார்.இதனைக் கேட்டவுடனே அரசரின் உத்தரவின் பேரில் திரை நீக்கப்பட்டது. வைத்தியரின் திறமையைப் பரிசோதிக்க நூலின் ஒரு முனை ஒரு பூனையின் காலில் கட்டப்பட்டிருந்தது.
யூனானி வைத்தியத்தால் தேவியின் நோய் தீர்ந்தது.அன்றிலிருந்து இந்த முகம்மத் என்ற முஸ்லிம் வைத்தியர் அரண்மனையின் பிரதான வைத்தியராக நியமிக்கப்பட்டார்.
சிறிது காலம் செல்ல இந்த யூனானி வைத்தியருக்கு அரசர் "கங்கே முதலி" என்ற சிறப்புப் பட்டத்தை (title) வழங்கினார்.
காலப்போக்கில் இந்த சிறப்புப் பட்டப் பெயரே இவர்களது குடும்பப் பெயராக நிலைபெற்றுவிட்டது. பின்னொரு காலத்தில், முஸ்லிம்கள் கண்டி அரசரின் அனுசரணையோடு மட்டக்களப்பில் குடியேறி வாழ்ந்துவந்தனர்.இவ்வாறு கண்டிய இராச்சியத்தில் இருந்து ஏறாவூரில் குடியேறியவர்களில் வரலாற்றில் பதியப்பட்ட கங்கே முதலி குடும்பமும் அடங்குகிறது.
முதலித்தம்பி என்ற முன்னாள் கிராமசேவையாளர் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் உயிர்வாழும் மூத்தவராகும்.இவரது தந்தையார் சீனிமுகம்மது ஏறாவூரின் முஸ்லிம் ஆதிகுடியேற்றப் பிரதேசமான ஒட்டுப்பள்ளி வட்டகையில் வாழ்ந்து மறைந்தார். 90 களின் நடுப்பகுதியில் இவர் தனது 90 வயதைக் கடந்து தளர்ந்து இருந்த வேளை ஏறாவூர் வரலாற்றில் அவருக்குத் தெரிந்தவை பற்றிய பதிவை பேட்டியாக எடுத்தேன். இவர் கெங்கை முதலியாரின் பேரராகும்.இவரையும் கெங்கைப் பரிகாரியார் என்றே மக்கள் அழைத்தனர்.
இஸ்மாலெவ்வை முதலியார்,சீனிமுகம்மதுவின் தந்தையாகும். இஸ்மாலெவ்வை முதலியார் கெங்கை முதலியாரின் மகனாகும். ஆறாவது தலைமுறையாக இவர் வைத்தியத்தில் ஈடுபட்டார். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இவர் கிராமத் தலைவராகப்( Village Headman) பணிபுரிந்தார்.
கீழே நிழற்படத்தில் முதலுத்தம்பியும் அவரது தந்தையார் சீனிமுகம்மது கெங்கைப் பரிகாரியாரும் காணப்படுகின்றனர்